சிங்கப்பூரில் இந்தியர்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு - என்ன நடக்கிறது?

சிங்கப்பூரில் இந்தியர்கள் மீது இனவெறிப் பேச்சு, நேபாள வெள்ளம், ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாளத்தைத் தாக்கிய பெருவெள்ளம், அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சிங்கப்பூரிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இயற்கை பேரிடருக்குப் பிறகு, எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் பாரபட்சம் அல்லது வெறுப்புணர்வு வளர்வதை அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டின் பிரதமரும் மூத்த அமைச்சர்களும் கண்டிப்பான தொனியில் கூறியுள்ளனர்.

நேபாள வெள்ளத்தில் 1,355 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னும் காணவில்லை.

காணாமல் போனவர்களில் சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவர்.

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்; இவர்களில் பெரும்பாலோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர்.

இந்திய வம்சாவளியினர் மற்றும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' தொடர்பான விவகாரங்களால் சிங்கப்பூர் பிரதமரும் மூத்த அமைச்சர்களும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

முழு விவகாரம் என்ன?

நேபாளத்தில் சிங்கப்பூர் குடிமக்கள் 9 பேர் காணாமல் போனதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இனவெறி மற்றும் அந்நியர் மீதான வெறுப்புணர்வு (xenophobia) கலந்த பதிவுகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் இதனை "அருவருப்பானது" என்று சாடியதுடன், இத்தகைய கருத்துகளை நீக்குமாறு சமூக ஊடகத் தளங்களைக் கேட்டுக்கொண்டார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"பல கருத்துகள் மிகவும் மோசமாக இருந்ததால் அவற்றை நீக்க வேண்டியிருந்ததாக ஊடகங்கள் என்னிடம் கூறின. இந்தக் கருத்துகள் அனைத்தும் சிங்கப்பூரர்களால் தான் பதிவிடப்பட்டனவா என்று எனக்குத் தெரியாது; ஆனால், இந்தக் கருத்துகள் மோசமானவை மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்," என்று சண்முகம் கூறினார்.

"இந்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு நான் காவல்துறையிடம் கேட்டுள்ளேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போன சிங்கப்பூர் குடிமக்கள் குறித்து இணையத்தில் வெளியான இனவெறிக் கருத்துகளுக்குச் சண்முகம் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த செய்தி நிறுவனமான சிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் குறிப்பிட்ட கருத்துகளில், "இல்லை, அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல," "இங்கே இந்திய முகங்களை மட்டுமே பார்க்கிறேன். கிளம்பிவிடுங்கள். மீட்புப் பணியை நிறுத்துங்கள்," மற்றும் "அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத் தெரிகிறார்கள், செயற்கை நுண்ணறிவு அவர்களை எப்படி அடையாளம் காணும்?" என்பன போன்றவை அடங்கும்.

இருப்பினும், "இன வேறுபாடின்றி சிங்கப்பூர் குடிமக்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு சிலரால் ஒட்டுமொத்த சூழலும் கெட்டுப்போவதை நாம் அனுமதிக்கக்கூடாது," என்றும் சண்முகம் கூறினார்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் மீது இனவெறிப் பேச்சு, நேபாள வெள்ளம், ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம்

ஏர் இந்தியா விவகாரத்திலும் வெறுப்புப் பேச்சு

இந்தியர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகள் நேபாள வெள்ள விவகாரத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை; ஏர் இந்தியா விவகாரத்திலும் அத்தகைய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களிடமிருந்து (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட) புதிய மூலதனத்தைத் திரட்ட முயல்வதாக வெளியான செய்திகள், இணையத்தில் "இந்தியர்களுக்கு எதிரான மற்றும் இனவெறி கலந்த கருத்துகளின்" புதிய அலைக்கு வித்திட்டதாக சண்முகம் கூறினார்.

இந்த காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் "பாம்பு, கறி, பரோட்டா மற்றும் பில்லி சூனியம்" போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சிஎன்ஏ தகவலின்படி, டெமாசெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உயர் நிர்வாகத்தினருக்கு எதிராகவும் இனவெறி கலந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. டெமாசெக் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது; தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

சண்முகம் இதுகுறித்துக் கூறுகையில், "தலைமை நிர்வாக அதிகாரி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஏர் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்று பேசப்படுகிறது. இவர்களைப் பொறுத்தவரை, அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே அவர் செய்த குற்றமாகத் தெரிகிறது; ஆனால் உண்மையில், நம்மைப் போலவே அவரும் ஒரு சிங்கப்பூர் குடிமகன். இது மிகவும் மோசமான மற்றும் அவமதிப்பான செயலாகும்," என்றார்.

கடந்த மாதம் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்றில், சாதனை அளவிலான வருடாந்திர இழப்பைச் சந்தித்த சில மாதங்களிலேயே, ஏர் இந்தியா நிறுவனம் தனது உரிமையாளர்களான டாடா சன்ஸ் மற்றும் எஸ்.ஐ.ஏ. ஆகியவற்றிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் நிதியுதவியைக் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கடந்த வாரம் கூறுகையில், "ஏர் இந்தியாவிடமிருந்து வரும் கூடுதல் மூலதனத்திற்கான எந்தவொரு கோரிக்கையையும், குழுமத்தின் பிற மூலதனத் தேவைகள் மற்றும் ஏர் இந்தியாவின் வணிக உத்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிர்வாகக் குழு கவனமாகப் பரிசீலிக்கும்," என்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் என்ன கூறினர்?

சிங்கப்பூரில் இந்தியர்கள் மீது இனவெறிப் பேச்சு, நேபாள வெள்ளம், ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரும் இந்த இனவெறி கருத்துகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரும் இந்த இனவெறி கருத்துகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமைதனது ஃபேஸ்புக் பதிவில், "நாம் வலுவாக விவாதங்களை மேற்கொள்ளலாம்; அது அவசியமும் கூட. ஆனால், நியாயமானதாகத் தோன்றும் வாதங்களை ஒரு சாக்காகக் கொண்டு, எந்தவொரு சமூகத்திற்கும் எதிராகப் பாரபட்சத்தையோ அல்லது அந்நியர் மீதான வெறுப்புணர்வையோ வளர்க்க நாம் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது," என்று எழுதியுள்ளார்.

அத்தகைய சிந்தனை சிங்கப்பூரின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்றாலும், அதை வெறும் "சாதாரண இணைய உரையாடல்கள்" என்று புறக்கணித்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இத்தகைய நடத்தைகள் தடுக்கப்படாவிட்டால், அவை சாதாரணமாகிவிடக்கூடும்; இது சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையின்மையை அதிகரித்து, நம்மை மேலும் பிரித்துவிடும்," என்று வோங் எழுதினார்.

இது குறித்துத் தனது அமைச்சரவை சகாக்களுடன் கலந்துரையாடியதாகவும், அதனால்தான் சண்முகம் இதுகுறித்துப் பேசியதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் அடையாளம் "வெளிப்படையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும்" இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"நமது பின்னணி எதுவாக இருந்தாலும், நமது விழுமியங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் ஏற்றுக்கொண்டால், நாம் இந்த நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். "இதுதான் நமது தேசிய உறுதிமொழியின் பொருள், பெரும்பாலான சிங்கப்பூர் குடிமக்கள் இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்."

கோவிட்-19 பெருந்தொற்றின் போதும், சிங்கப்பூர்-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீதான விவாதத்தின் போதும் அந்நியர் வெறுப்பு மற்றும் இனவெறி உணர்வுகள் எவ்வாறு தீவிரமடைந்தன என்பதைச் சுட்டிக்காட்டி, சிங்கப்பூர் இதற்கு முன்பும் இதுபோன்ற பதற்றங்களை எதிர்கொண்டுள்ளது என்று வோங் கூறினார்.

முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் தனது முகநூல் பக்கத்தில், "நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் பல குடும்பங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று எழுதியுள்ளார்.

"இது போன்ற ஒரு நேரத்தில், நமது அணுகுமுறை பரிவு மற்றும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, நமது இந்திய சமூகத்திற்கு எதிராக இனவெறிக் கருத்துக்களும் வெறுப்புப் பேச்சுகளும் கூறப்படுவதைக் காண்பது மிகவும் வருத்தமளிக்கிறது."

"இனப் பாரபட்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் முயற்சிகள் எப்போதும் இருக்கும்," என்று முன்னாள் பிரதமர் லூங் குறிப்பிட்டுள்ளார்.

"இனமும் மதமும் எப்போதும் நமது சமூகத்தில் பிளவுகளுக்கு ஒரு காரணமாக இருக்க முடியும். எனவே, நமது பரஸ்பர புரிதலை வலுப்படுத்தவும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் நாம் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்." என்று அவர் எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு