இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி

ஆர்கா சுப்ரீம் - உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அவகாடோ ரகமாகும்.

பட மூலாதாரம், Cottanad Plantations

படக்குறிப்பு, இந்தியாவில் அவகாடோவுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.
    • எழுதியவர், பிரீத்தி குப்தா
    • பதவி, பிபிசி
    • இருந்து, Mumbai
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அவகாடோ என்பதற்கான சந்தை கிட்டத்தட்ட இல்லாத நிலையிலேயே இருந்ததாக மது போபையா நினைவுகூர்கிறார்.

அப்போது மரங்களில் இருந்து பழுத்துப் பழங்கள் கீழே விழுந்து, நாய்களால் உண்ணப்பட்டன. அதனால், அவகாடோவுக்கு "நாய்ப்பழம்" என்ற விரும்பத்தகாத பெயரும் இருந்ததாக அவர் கூறுகிறார்.

கடந்த 26 ஆண்டுகளாக இந்தியத் தோட்டத் துறையில் பணியாற்றி வரும் போபையா, தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள கோட்டநாடு பிளாண்டேஷன்ஸ் நிறுவனத்தின் குழு மேலாளராக உள்ளார். அந்நிறுவனம் கோகோ, ரப்பர், காபி, மசாலாப் பொருட்கள் மற்றும் அவகாடோ உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகிறது.

"நாங்கள் ஒருபோதும் அவகாடோவை முக்கியப் பயிராக வளர்க்கவில்லை. காபித் தோட்டங்களுக்கு நிழல் தரும் மரமாகவே அதை அறிமுகப்படுத்தினோம். பின்னர்தான் அது லாபகரமான தொழிலாக மாறக்கூடும் என்பதை உணர்ந்தோம்," என்று அவர் கூறுகிறார்.

2011-ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தோல் பராமரிப்புக்காக அவகாடோவைப் பயன்படுத்துவதாக கூறியதுதான் திருப்புமுனையாக அமைந்தது என போபையா தெரிவிக்கிறார்.

"ஒரே இரவில் அதன் விலை இரட்டிப்பானது. அதன் பிறகும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே சென்றது," என்று அவர் கூறுகிறார்.

அதிகரித்த தேவைக்கு ஏற்ப கோட்டநாடு நிறுவனம் தற்போது 40 ஏக்கர் பரப்பில் அவகாடோ மரங்களை வளர்த்து வருகிறது. கடந்த ஆண்டு 10 முதல் 15 டன் வரை பழங்கள் அறுவடை செய்யப்பட்டன. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அதை 40 முதல் 50 டன் வரை உயர்த்தும் இலக்கை நிறுவனம் கொண்டுள்ளது.

இந்தப் பயிரிடலில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாக போபையா கூறுகிறார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"தென் ஆப்பிரிக்க நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பிறகு, அவகாடோ பயிரிடும் முறையை முழுமையாக மாற்றினோம். தற்போது உயர்த்தப்பட்ட பாத்திகள், அதிக இடைவெளி மற்றும் வேறுபட்ட நடவு முறைகளைப் பயன்படுத்துகிறோம். ஏனெனில், அவகாடோ மரங்களின் வேர்கள் நோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை," என்று அவர் விளக்குகிறார்.

இந்திய விவசாயிகள் அவகாடோ உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக உள்ளன.

"சந்தையை ஆய்வு செய்தபோது, தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதை கண்டறிந்தோம். இந்தியா ஆண்டுதோறும் சுமார் 15,000 டன் அவகாடோவை இறக்குமதி செய்கிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி 8,000 முதல் 9,000 டன் மட்டுமே உள்ளது," என்று இந்தியாவின் அவகாடோ துறையை ஊக்குவித்து வரும் மணிலால் பள்ளியத் கூறுகிறார்.

இது விவசாயிகளுக்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்று அவர் கருதுகிறார். குறிப்பாக பாரம்பரியப் பயிர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இது முக்கியமான மாற்றுப் பயிராக இருக்க முடியும் என்கிறார்.

"காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் காபி மற்றும் மிளகு சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் தங்கள் பயிர் வகைகளைப் பல்வகைப்படுத்துவது அவசியமாகியுள்ளது," என்று அவர் கூறுகிறார்.

ஆர்கா சுப்ரீம் - உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அவகாடோ ரகமாகும்.

பட மூலாதாரம், Hunger Inc. Hospitality

உள்ளூர் அவகாடோவில் என்ன பிரச்னை?

இந்தியாவில் அவகாடோவுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அந்தத் தேவை எப்போதும் உள்நாட்டில் விளைவிக்கப்படும் பழங்களுக்கானதாக இருப்பதில்லை.

"இந்தியாவில் விளைவிக்கப்படும் அவகாடோவின் தரம் மேம்பட்டு வருகிறது. உள்ளூர் ரகங்களில் சிறப்பாகப் பயிரிடும் விவசாயிகளும் உள்ளனர். ஆனால், பருவநிலை மற்றும் எந்தப் பகுதியில் அது விளைவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, அதன் தரத்திலும் கிடைக்கும் அளவிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன," என்கிறார் ஹங்கர் இன்க் ஹாஸ்பிட்டாலிட்டி குழுமத்தின் தலைமை சமையல் கலைஞர் ஹுசைன் ஷாஹ்சாத்.

மும்பையில் வெரோனிகாஸ், தி பாம்பே கேன்டீன் உள்ளிட்ட நான்கு உணவகங்களை இந்தக் குழுமம் நடத்தி வருகிறது.

"இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு வகையான அவகாடோக்களை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். ஆனால், தற்போது இறக்குமதி செய்யப்படும் அவகாடோக்கள்தான் சுவை, பதம், அளவு மற்றும் பழுக்கும் தன்மை ஆகியவற்றில் எங்களுக்குத் தேவையான சீரான தரத்தை வழங்குகின்றன," என்று அவர் கூறுகிறார்.

எனினும், உணவுத் துறையில் உள்ள பலரைப் போலவே, உள்ளூரில் விளையும் பொருட்களையே வாங்கிப் பயன்படுத்த அவர் விரும்புகிறார்.

"உள்ளூரில் விளையும் பொருட்களின் தரம் மேம்படும்போது, அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாங்கள் எப்போதும் ஆர்வத்துடன் ஆராய்கிறோம். இந்திய விவசாயத்தை ஆதரிப்பதும், உள்நாட்டு உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதும் எங்களது உணவு அணுகுமுறையின் முக்கியமான பகுதியாகும்," என்று அவர் கூறுகிறார்.

ஆர்கா சுப்ரீம் - உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அவகாடோ ரகமாகும்.

பட மூலாதாரம், Ajay Rajput

இறக்குமதி செய்யப்படும் அவகாடோ பழங்களின் தரத்துக்கும் சீரான தன்மைக்கும் இணையாக உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவது இந்திய தொழில்முனைவோர் சிலரின் இலக்காக உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்தோ-இஸ்ரேல் அவகாடோ நர்சரியின் நிறுவனர் ஹர்ஷித் கோதா தொழில் குறித்து அறிந்துகொள்வதற்காக இஸ்ரேலில் ஒரு மாதம் தங்கி பயிற்சி பெற்ற பிறகு, 2021-ஆம் ஆண்டு அவர் நர்சரி தொழிலைத் தொடங்கினார்.

அதன்பிறகு, அவரது தொழில் வேகமாக வளர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சுமார் 18,000 அவகாடோ செடிகளை கோதா வழங்கியுள்ளார்.

அவர் விற்பனை செய்யும் அனைத்து நாற்றுகளும் ஹாஸ், பிங்கர்டன் உள்ளிட்ட சர்வதேச ரகங்களைச் சேர்ந்தவை.

"இஸ்ரேலில் சுமார் 13,000 ஹெக்டேர் பரப்பில் அவகாடோ பயிரிடப்படுகிறது. எட்டு மாதங்கள் கிட்டத்தட்ட மழையே பெய்யாத ஒரு சிறிய நாட்டில் இது நடக்கிறது. அதனால்தான், இஸ்ரேலின் அவகாடோ சாகுபடி தொழில்நுட்பம் உலகிலேயே மிகவும் மேம்பட்டதாக உள்ளது," என்று கோதா கூறுகிறார்.

வணிக ரீதியிலான அவகாடோ தோட்டத்தை அமைத்து உற்பத்தியைத் தொடங்குவது எளிதான காரியமல்ல. இந்தியாவில் பாரம்பரியமாக அவகாடோவை மற்ற பயிர்களுக்கு நிழல் தரும் வகையில் அவற்றுக்கு இடையே நடவு செய்து வந்த முறையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

"ஒரு முறையான வணிகத் தோட்டத்தை அமைக்கும்போது, மரங்களை எவ்வாறு கிளை வெட்டுவது என்பது குறித்த நுட்பங்களைத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு மரம் ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் 25 அடி உயரம் வரை வளரக்கூடும். 25 அடி உயரத்தில் இருந்து பழங்களை அறுவடை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று கோதா கூறுகிறார்.

எனவே, தொழிலாளர்கள் எளிதாக அறுவடை செய்யும் உயரத்தில் மரங்களை வைத்திருக்க, கிளைகளைத் தீவிரமாக வெட்டிக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, அவகாடோ மரத்தால் எளிதில் தானாகவே மகரந்தச் சேர்க்கை செய்துகொள்ள முடியாது. பழங்கள் கிடைக்க, இரண்டு வெவ்வேறு ரகங்களைச் சேர்ந்த அவகாடோ மரங்களை ஒன்றுக்கொன்று அருகில் நடவு செய்ய வேண்டும். ஒரு ரகம் பெண் பூவாகத் திறந்திருக்கும் அதே நேரத்தில், மற்றொரு ரகம் ஆண் பூவாக இருந்து மகரந்தத்தை வெளியிட வேண்டும்.

"ஒரு விவசாயி இந்த நடவு விகிதத்தில் தவறு செய்துவிட்டால், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் மரங்கள் பழங்களை உற்பத்தி செய்யாது. அதிக மகசூல் தரும், அதிக லாபம் ஈட்டும் அவகாடோ தோட்டத்துக்கும், பார்ப்பதற்கு சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பலனளிக்காத தோட்டத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம் இந்தத் தாவரவியல் அம்சம்தான்," என்று கோதா கூறுகிறார்.

ஆர்கா சுப்ரீம் - உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அவகாடோ ரகமாகும்.

பட மூலாதாரம், IIHR, Bengaluru

படக்குறிப்பு, ஆர்கா சுப்ரீம் - உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அவகாடோ ரகமாகும்.

'அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம்'

பிரபலமான வெளிநாட்டு ரகங்களைப் பயன்படுத்துவது இந்தியாவின் அவகாடோ துறையை நவீனப்படுத்துவதற்கான ஒரு வழியாக உள்ளது. மற்றொரு வழி, இந்தியாவில் பல தலைமுறைகளாக வளர்ந்து வரும் அவகாடோ மரங்களையே மேம்படுத்துவது.

"இந்தியாவில் உள்ள அவகாடோ மரங்களின் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு வீட்டின் பின்புறத்திலும் வளர்க்கப்படும் மரமும் மரபணு ரீதியாக வேறுபட்டதாக உள்ளது," என்கிறார் பெங்களூருவில் உள்ள ஐசிஏஆர்-இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி கணேசன் கருணாகரன்.

"அதனால்தான் இந்தியச் சந்தைகளில் தரம் மாறுபடும் பல்வேறு வகையான பழங்கள் கலந்த நிலையில் கிடைக்கின்றன. நம்பகமான வணிகச் சந்தையை உருவாக்க வேண்டுமெனில், தரப்படுத்தப்பட்ட ரகங்கள் அவசியம்," என்று அவர் கூறுகிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக இனப்பெருக்கத் திட்டத்தில் பணியாற்றி வரும் அவர், இந்தியாவில் உள்ள உள்ளூர் மரங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு புதிய அவகாடோ ரகங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளார்.

"ஆயிரக்கணக்கான பெயரிடப்படாத, வெவ்வேறு வகையான மரங்களுக்கு பதிலாக, சீரான தன்மையுடனும் அதிக மகசூலுடனும் நல்ல தரமான பழங்களை வழங்கக்கூடிய நடவுப் பொருட்களை விவசாயிகளுக்கு வழங்குவதே எங்களது நோக்கம்," என்கிறார் கருணாகரன்.

அடையாளம் தெரியாத அல்லது நோய்த்தொற்று கொண்ட செடிகளை விற்பனை செய்யும் கட்டுப்பாடற்ற நர்சரிகள் குறித்தும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

"விவசாயிகள் தங்களுக்குத் தெரியாமலேயே நோய்த்தொற்றுள்ள செடிகளை வாங்கிவிடக்கூடும். ஆரம்பத்தில் அந்த மரங்கள் ஆரோக்கியமாகத் தோன்றலாம். ஆனால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவை திடீரென பட்டுப்போகலாம். இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்," என்று அவர் கூறுகிறார்.

சவால்கள் இருந்தபோதிலும், அவகாடோ சாகுபடிக்கு மாறுவதில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த ஷிஜு செபாஸ்டியன் அவகாடோ சாகுபடியைத் தொடங்கிய ஆரம்பகால விவசாயிகளில் ஒருவர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பண்ணையில் இரண்டு ஏக்கர் நிலத்தை அவகாடோ சாகுபடிக்காக ஒதுக்கினார்.

"விவசாயிகள் அவகாடோ பயிரிடத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலும், விளைபொருளை விற்பனை செய்வதற்கான உறுதியான சந்தையும் தேவை," என்கிறார் அவர்.

இந்த ஆண்டு தனது தோட்டத்தில் இருந்து 3,500 கிலோ அவகாடோவை அறுவடை செய்கிறார். அவை அனைத்தும் பெங்களூரு நகரில் விற்பனை செய்யப்படுகின்றன.

"அவகாடோ ஒருபோதும் உங்களை ஏமாற்றாது. இது மிகவும் அன்பான, அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம். இப்போது எனக்கும் இந்தப் பழத்தின் மீது காதல் வந்துவிட்டது. மேலும் மூன்று ஏக்கரில் அவகாடோ மட்டுமே பயிரிடத் திட்டமிட்டுள்ளேன்," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு