ஜப்பானிய பெண்ணை கடத்தி அமெரிக்க ராணுவ வீரரை மணமுடிக்க நிர்பந்தித்த வட கொரியா

பட மூலாதாரம், Hitomi Soga
ஆகஸ்ட் மாதத்தின் இதமான மாலைப் பொழுதில், ஜப்பானின் சாடோ தீவில் 19 வயதான ஹிட்டோமி சோகாவின் வாழ்க்கை முழுதாக மாறியது.
அவர் தனது தாயுடன் மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். பின்னர், இருவரும் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
திடீரென, பின்னால் இருந்து வந்த மூன்று ஆண்கள் அந்தப் பெண்களைக் கடத்தினர்.
"எங்கள் வாய் மீது ஏதோ ஒன்று வைக்கப்பட்டது. எங்கள் தலை மீது ஒரு வகையான பையும் போடப்பட்டது" என்று சோகா நினைவுகூருகிறார்.
அடுத்த சில நாட்கள் குழப்பமான நிலையில் கழிந்தன.
கடற்கரையிலிருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் ஒரு வேகப் படகிலும், பின்னர் ஒரு பெரிய கப்பலிலும் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கருதுகிறார்.
தனது தாயுடன் பேசுவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார் சோகா. தனது தாயை தாராளமானவர், புத்திசாலி மற்றும் அன்பானவர் என்று சோகா நினைவுகூருகிறார்.
"அவருடன் கடைசி வார்த்தைகளைக்கூட என்னால் பரிமாறிக்கொள்ள முடியவில்லை"என்கிறார் சோகா.
சில நாட்களுக்குப் பிறகு, அவரது கண்கள் திறக்கப்பட்டபோது, "இது ஜப்பான் இல்லை" என அவர் நினைத்துள்ளார்.
1970கள் மற்றும் 1980களில் வட கொரியாவால் ரகசியமாக அரசு ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட சோகா, வட கொரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அடுத்த 24 ஆண்டுகளை அவர் அங்கேயே கழிக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், National Police Agency, Japan
அரசு ஆதரவுடன் நடைபெற்ற கடத்தல் சம்பவங்கள்
வட கொரிய அதிகாரிகள், கடத்தப்பட்டவர்களை 'உயிருடன் இருக்கும் பாடப்புத்தகங்கள்' என்று அழைக்கப்படும் வகையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக ஒரு கோட்பாடு கூறுகிறது. இதன் மூலம் உளவாளிகள் ஜப்பானிய மொழியையும், அந்நாட்டு மக்களின் நடத்தையையும் கற்றுக்கொண்டு, பின்னர் ஜப்பானுக்குள் ஊடுருவ முடியும் எனக் கருதப்பட்டது.
1977 முதல் 1983 வரையிலான காலகட்டத்தில் கடத்தப்பட்டதாக குறைந்தது 17 பேரை ஜப்பான் அடையாளம் கண்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.
'நான் குறிவைக்கப்பட்டேனா அல்லது இது தற்செயலாக நடந்ததா என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியவில்லை' என்கிறார் சோகா.
முதல் இரண்டு ஆண்டுகள், அவர் ஒரு ராணுவ முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
தனது தாய் எங்கே இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை. தன்னை ஏன் அழைத்துச் சென்றார்கள் என்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் ஒருபோதும் கேட்கவில்லை. தனக்கு உண்மை சொல்லப்படாது என்பதை சோகா உணர்ந்திருந்தார்.
"நான் ராணுவ முகாமுக்கு வெளியே சென்று வானத்தைப் பார்ப்பேன். நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு, ஜப்பானில் இருக்கும் என் குடும்பத்தை நினைத்து அழுவேன். அவர்களை மீண்டும் எப்போது பார்க்கப் போகிறேன் என்று நினைப்பேன்"என்கிறார் சோகா.
அச்சம் மற்றும் தனிமைக்கு மத்தியிலும், ஒருநாள் தான் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள அவர் முயன்றார்.
"அந்த நம்பிக்கையை நான் எப்போதும் என் இதயத்தில் வைத்திருந்தேன். இவை அனைத்தும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்ற சிறிய நம்பிக்கை இருந்தது. அது ஒருபோதும் என்னைவிட்டு விலகவில்லை"என்று சோகா கூறுகிறார்.

பட மூலாதாரம், National Police Agency, Japan
இறுதியாக, 1980ஆம் ஆண்டு சோகா அந்த ராணுவ முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு இதுவரை அறிமுகமே இல்லாத ஒருவரை அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது.
அந்த நபர் சார்லஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்.
1965ஆம் ஆண்டு அவர் வட கொரியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
வட கொரியாவின் இரண்டு மிகப்பெரிய எதிரி நாடுகளான ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை தம்பதியாக வெளிப்படையாகக் காட்டுவது, வட கொரியாவுக்கு பயனுள்ள பிரசாரமாக இருந்தது.
"நாங்கள் முதன்முதலில் சந்தித்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அது மிகவும் மழை பெய்து கொண்டிருந்த நாள். நான் மிகவும் கவலையாகவும் பதற்றமாகவும் உணர்ந்தேன்" என்கிறார் சோகா.
திருமணத்தில் தனக்கு எந்தத் தேர்வும் இல்லாத போதிலும், சோகா தனது கணவர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அவர்களுக்காக ஜென்கின்ஸ் பொம்மைகளையும், சில மரச்சாமான்களையும் செய்து கொடுப்பார்.
'அது இயல்பாகவே நடந்தது. எங்கள் குழந்தைகள் பிறந்த காலம் தான் என் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான காலம். அவர் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருந்தார். அவர்களை உண்மையிலேயே கவனித்துக் கொண்டார். அதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்திருந்தது' என்று சோகா நினைவுகூருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அந்தத் தம்பதிக்கு முறையான ஊதியத்துடன் கூடிய வேலை எதுவும் இல்லை. வட கொரிய ஆட்சியின் கடுமையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பின் கீழ், அவர்கள் தங்களது நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்பதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன.
சோகா, தான் அடிக்கடி காய்கறிகளை வளர்ப்பதில் நேரத்தைச் செலவிட்டதாகக் கூறுகிறார்.
"கச்சேரிகள் இல்லை, திரையரங்குகள் இல்லை. பொழுதுபோக்காகச் செய்வதற்கு எதுவுமே இல்லை. ஒவ்வொரு நாளும் அச்சமும் கவலையும் இருந்தது. ஆனால் என் குடும்பத்தினர் என்னைச் சுற்றி இருந்ததால், அதில் எனக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்தது"என்கிறார் சோகா.
2002ஆம் ஆண்டு, சோகா கடத்தப்பட்ட உண்மை உலகுக்குத் தெரியவந்த போது, அவர்களின் அன்றாட வாழ்க்கை திடீரென மாறியது.
ஜப்பான் மற்றும் வட கொரியா இடையிலான உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உச்சி மாநாட்டின்போது, அப்போதைய அதி உயர் தலைவர் கிம் ஜோங்-இல், ஜப்பான் கடத்தப்பட்டதாக நம்பிய 17 பேரில் 13 பேரை கடத்தியதை ஒப்புக்கொண்டார்.
அவர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோகாவின் தாய் மியோஷி எப்போதாவது வட கொரியாவுக்குள் நுழைந்தாரா என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
இதற்குப் பின்னர், சோகா குறுகிய கால பயணமாக ஜப்பானுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார் என்பதை அறிந்துகொண்டார்.
"ஜப்பானில் இருக்கும் என் குடும்பத்தினரை நான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. ஒருவேளை என் தாயையும் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நினைத்தேன்"என்கிறார் சாகா.

பட மூலாதாரம், Getty Images
வட கொரியாவில் தனது கணவர் மற்றும் மகள்களிடம் விடைபெற்ற சோகா, ஜப்பானுக்குச் செல்லும் விமானத்தில் ஏறினார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது கூடத் தெரியாமல், அவரது வருகைக்காகக் காத்திருந்த சகோதரி மற்றும் தந்தையைச் சந்திக்கச் சென்றார் சோகா.
"நாங்கள் மீண்டும் சந்தித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவிய போது, அனைவரும் அழுதுகொண்டே இருந்தோம்" என்கிறார் சோகா.
சோகா ஜப்பானிலேயே தங்க முடிவு செய்தார். தனது கணவர் மற்றும் மகள்களை மீண்டும் சந்திக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது.
ஜப்பானுக்குப் பயணம் செய்தால் அமெரிக்க ராணுவத்தால் தான் கைது செய்யப்படலாம் என்று அவரது கணவர் சார்லஸ் அஞ்சினார்.
இறுதியாக, பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிரிக்கு உதவியது மற்றும் ராணுவத்திலிருந்து தப்பியோடியது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவர், 30 நாள் தண்டனையில் 25 நாட்களை அனுபவித்தார்.
அதன் பின்னர், 2004ஆம் ஆண்டு அந்தக் குடும்பம் சாடோ தீவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட்டது.
"என் மகள்கள் இதற்கு முன்பு சாடோ தீவுக்குச் சென்றதே இல்லை என்றாலும், அது அவர்களின் தாயின் சொந்த ஊர் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது" என்கிறார் சோகா.

பட மூலாதாரம், Getty Images
ஜென்கின்ஸ் 2017ஆம் ஆண்டு ஜப்பானில் உயிரிழந்தார். அதன் பின்னர், ஜப்பானில் இருந்து கடத்தப்பட்ட அனைவரையும் மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரத்தில் சோகா தனது முழு ஆற்றலையும் செலுத்தினார்.
வட கொரியாவில் இன்னும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு "ஒவ்வொரு நாளும் முக்கியமானது" என்கிறார் சோகா.
கடத்தப்பட்டவர்களில் ஒருவரான தன் தாய் மியோஷி விஷயத்தில் மட்டும் அவர் நம்பிக்கையை கைவிட மறுக்கிறார்.
தான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு, தனது தாய் எங்கு இருந்தாலும் அவருக்கு உத்வேகம் அளிக்கும் என்று சோகா நம்புகிறார்.
பிபிசி உலக சேவையின் 'அவுட்லுக்' நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
இச்செய்தியை எழுதியவர்: பெக்கா ஜான்ஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































