தமிழில் மம்முட்டி நடிப்பில் ரசிகர்கள் மனதில் நிற்கும் 10 கதாபாத்திரங்கள்

பட மூலாதாரம், Mammootty/x
- எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்த நடிகர் மம்முட்டியின் நிஜப்பெயர் முகமது குட்டி. மலப்புரம் மாவட்டத்தில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய மம்முட்டி சினிமா ஆர்வம் காரணமாக நடிக்க வந்தார்.
1971ல் வெளியான அனுபவங்கள் பாலிச்சகள்' ("சிதைந்த அனுபவங்கள்") என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
1980-களின் தொடக்கத்தில், 'மேளா' (1980; "நியாயம்"), 'அகிம்சா' (1981; "அகிம்சை"), 'யவனிகா' (1982; "திரை"), ' ஈ நாடு ' (1982; "இந்த நிலம்"), மற்றும் ' படயோட்டம் ' (1982; "போர் அணிவகுப்பு") போன்ற மலையாள மொழித் திரைப்படங்களில் முக்கியத் துணைப் பாத்திரங்களில் நடித்தார்.
1983-ஆம் ஆண்டு அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. அவர் நடித்த விசா, 'சந்த்யாக்கு விரிஞ்ச பூவு' ("அந்திப் பொழுதில் மலர்ந்த மலர்")' கூடேவிடே?' ("உன் கூடு எங்கே?") 'பின் நிலவு' ("தேயும் நிலவொளி"), 'ஆ ராத்திரி' ("அந்த இரவு"), மற்றும் 'இனியேன்கிலும்' ("குறைந்தபட்சம் இப்பொழுது") போன்ற படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார் . ஆரம்ப காலத்தில் மம்முட்டிக்கு சின்ன வேடங்கள், துணை கதாபாத்திரங்களே கிடைத்தன.
1984-ஆம் ஆண்டில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெற்றன.
அதிராத்ரம் (1984; "இரவின் மரணம்"), அடியோழுக்குகள் (1984; "உள்நீரோட்டங்கள்").'யாத்ரா' (1985; "பயணம்") நியூ டெல்லி ' (1987), 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு 'ஜாக்ரதா: சிபிஐ டைரி பாகம் II ' ( மலையாளத்தில் ஜாக்ரதா என்றால் "எச்சரிக்கை" என்று பொருள்), ஒரு வடக்கன் வீரகதாவில் ( வீரத்தின் வடக்கதை ) படங்கள் வெற்றி படங்கள் ஆயின.
மலையாளம் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 425க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். ஒரு வடக்கன் வீரகதா படத்துக்காக முதல் தேசிய விருதையும், "பொந்தன் மாடா" மற்றும் "விதேயன்" என்ற திரைப்படங்களுக்காக மீண்டும் "தேசிய விருதையும் அவர் வென்றார். "டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்" திரைப்படத்திற்காக மூன்றாவது தேசிய விருதையும் பெற்றார்.
இந்த மாதம் பிரம்மயுகம் படத்துக்காக 4வது தேசியவிருதை பெற உள்ளார். இப்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்று மம்முட்டிக்கு 75வது பிறந்தநாள்.
தமிழில் 20க்கும் அதிகமான படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் இன்னும் மக்கள் மனதில் நிற்கும் 10 கதாபாத்திரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Mammootty/x
1) தேவா (தளபதி)
மணிரத்னம் இயக்கத்தில் தளபதி வெளியாகி 35 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் மம்முட்டி நடித்த தேவா கேரக்டர் இன்றும் மனதில் நிற்கிறது.
மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கேரக்டரின் தாக்கம்தான் அந்த கேரக்டர். அவர் மீது அன்பு வைத்திருக்கும் கர்ணன் மாதிரியான ரோலில் சூர்யா என்ற கேரக்டரில் ரஜினி வருவார்.
தாதாவாக நடித்து இருந்தாலும் காட்டு கத்தல், அதீத நடிப்பு அந்த கேரக்டரில்அவர் வெளிப்படுத்தவில்லை. அப்படிப்பட்ட தாதா கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதிதாக தெரிந்தது. இயக்குநர் ஜோஷியின் குட்டேட்டன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த மம்முட்டி முதலில் தளபதி படத்தை மறுத்ததாகவும், மணிரத்னம் போன்ற இயக்குநர் படத்தை தவற விடக்கூடாது என்று ஜோஷி சொல்லி நடிக்க வைத்ததாகவும் தகவல்.
இன்றைக்கு நட்பின் அடையாளமாக தேவா, சூர்யா கேரக்டர் பார்க்கப்படுகிறது. ரஜினியை பார்த்து 'தேவராஜன் உத்தமன் இல்லை. ஆனா நியாயம் ஒன்னு இருக்கு என்று சொல்லும் இடத்திலும், தனது மனைவியிடம் 'இவன் சூர்யா, என் கூட பிறந்தவன், என் தளபதி' என பெருமையாக சொல்லும் சீன்களிலும் அவர் நடிப்பு பளீச்சிடும்.

பட மூலாதாரம், GV Films
2) அழகப்பன் (அழகன்)
மனைவியை இழந்த ஹோட்டல் அதிபர், நான்கு குழந்தைகளின் தந்தை அழகப்பன் கேரக்டர். ஆனால், அவரை கீதா, பானுப்பரியா, மதுபாலா என 3 பெண்கள் காதலிப்பார்கள்.
தனக்கே உரிய மாறுபட்ட, சிக்கலான திரைக்கதையில் கே. பாலசந்தர் இயக்கிய படம். தலைப்புக்கு ஏற்ப, அவ்வளவு அழகாக இருப்பார் மம்முட்டி. சற்றே மலையாள வாடையுடன் டயலாக் பேசியிருந்தாலும் அதை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
சங்கீத ஸ்வரங்கள் பாடலும், துர்தர்ஷன் நிகழ்ச்சி முடிந்து , மீண்டும் தொடங்கும் வரை மம்முட்டியும், பானுபிரியாவும் விடியவிடிய போனில் பேசிக்கொண்டிருக்கும் காட்சியும் அவ்வளவு பிரபலமானது.
"ஓட்டல் அதிபராக ரவா உப்புமா பற்றி அவரை பேசும் காட்சியும், அழகா இருக்கிறவங்க பேரு அழகன் இல்ல, அன்பா இருக்கிறவங்க பேருதான் அழகன்" என்ற வசனமும் மம்முட்டியை ரசிகர்கள் கொண்டாட வைத்தது.
3) திருப்பதி (ஆனந்தம்)

பட மூலாதாரம், super good films
திருப்பதி பிரதர்ஸ் என்ற மளிகை கடை நடத்தும் மூத்த அண்ணன் திருப்பதி கேரக்டரில் மம்முட்டி வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.
இயக்குநர் லிங்குசாமியின் முதல் படம். அவர் சொந்த வாழ்க்கையை தழுவி எடுத்த படம் என்பதால், அந்த கேரக்டருக்கு அவ்வளவு உயிர் கொடுத்து இருந்தார்.
அதை உணர்ந்து அண்ணனாக, மிகவும் பாசிட்டிவான, நல்ல மனிதனாக, வியாபாரியாக மம்மட்டி நடித்து இருந்தார். கிளைமாக்சில் வீட்டை விட்டு எல்லாரும் பிரியும்போது கிளிசரின் போடாமலே, அந்த கேரக்டராக மாறி மம்முட்டி அழ, அதை கவனித்து தானும் அழுததாக இயக்குநர் லிங்குசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
4) மேஜர்பாலா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)

பட மூலாதாரம், V. Creations
ஐஸ்வர்யா ராயை காதலிக்கும் கேரக்டர். ஆனால் அவரை விட வயது அதிகமானவர், ராணுவப் பணியில் ஒரு காலை இழந்தவர். குடித்துக் கொண்டே இருப்பவர். இப்படி மாறுபட்ட கேரக்டரில் மம்மட்டியை நடிக்க வைத்தார் ராஜிவ் மேனன்.
அந்த படத்தில் அஜித், அப்பாஸ் என மற்ற இரண்டு நடிகர்கள் இருந்தாலும் மம்முட்டி கேரக்டர் பேசப்பட்டது.
முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பார்த்திபன், அர்ஜூனின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. அவர்கள் நடிக்க முடியாமல் போகவே மம்முட்டி கதைக்குள் வந்தார். காணாமல் போன ஸ்ரீவித்யாவை ஒரு ஒட்டலில் அவர் கண்டுபிடிக்கும் வாழைப்பூ வடை காட்சி இன்றும் பிரபலம். "எல்லாம் இந்த அழகும், இளமை இருக்கும் வரை தான், அப்புறம் திரும்பி பார்க்க ஆள் இருக்காது" என்று ஐஸ்வர்யாராயிடம் பேசும் காட்சி டச்சிங்.
ஐஸ்வர்யா ராய் காதலை சொல்லும்போது கருணையும், காதலையும் போட்டு குழப்ப கூடாது என சொல்லிவிட்டு அவர் ஷட்அப் சொல்லும் சீன் உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.
5) அமுதன் (பேரன்பு)
டீன் ஏஜ் மகளின் தந்தை, அதிலும் அந்த சிறுமி மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டமாற்றுத்திறனாளி. பாசக்கார அப்பாவாக அந்த பெண்ணை எப்படி வளர்க்கிறார். எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாக சொல்லியிருப்பார் ராம்.
மகள் வீட்டுக்கு துாரமான சமயத்தில், தாய் ஸ்தானத்தில் 'சானிட்டரி பேடு' மாட்டிவிடும் ஒரு சீனில் அவரை தவிர வேறு யாரும் நடிக்க சம்மதித்து இருக்கமாட்டார்கள்.
அந்த படத்தில் அவர் நடித்திருந்த கேரக்டரை, நடிப்பை பார்த்தவர்கள் ரியல் மெகாஸ்டார் என கொண்டாடினர்.
6) ராசு படையாச்சி (மறுமலர்ச்சி)

பட மூலாதாரம், Pangaj Productions
ஒரு மலையாள நடிகரால் தமிழக கிராமத்து தலைவராக நடிக்க முடியுமா? அந்த நெட்டிவிட்டி செட் ஆகுமா என பலரும் சந்தேகப்படலாம். அதை முடியும் இந்த படத்தில் நிரூபித்தார் மம்முட்டி.
குணவாசன் கிராமத்து தலைவராக இருந்தாலும் மன்னிப்பு கேட்பார், அடிவாங்குவார், கடைசியில் அன்புதான் சிறந்தது என நிரூபிப்பார். மம்முட்டி நடித்த சிறந்த கிராமத்து படங்களிலு இதகூமு ஒன்று. பாரதி இயக்கியிருந்தார். மம்முட்டி, தேவயானி சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வளவு யதார்த்தமாக இருக்கும.
7) கே.சி.ராஜா (மெளனம் சம்மதம்)

பட மூலாதாரம், K. C. Film Combines
நிஜ வாழ்க்கையில் வக்கீலான மம்முட்டி, சினிமாவிலும் அந்த கேரக்டரில் நடித்த படம். தமிழில் அவருக்கு முதல் படம். மது இயக்கினார்.
கோர்ட் ரூம் டிராமா, இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் ஹீரோயின் அமலாவின் சகோதரர் ஜெய்சங்கரை ஒரு கொலை வழக்கில் இருந்து காப்பாற்றுகிற வக்கீலாக அவர் வருவார். மம்முட்டி - அமலா காதல் காட்சிகள் பேசப்பட்டன.
இளையராஜா இசையில், புலமைப்பித்தன் வரிகளில், ஜேசுதாஸ் பாடிய கல்யாண தேன்நிலா காய்ச்சாத பால் நிலா என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றது இந்த படத்தில் தான். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த பாடலை ரசித்து பாடினார் மம்முட்டி.
8) சேதுபதி (மக்களாட்சி)
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் மம்முட்டி நடித்த அரசியல் படம். ஒரு சாதாரணமான குற்றவாளிக்கு லாரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைக்க, அதை வைத்து எப்படி மாநிலத்தின் முதல்வர் ஆகிறார் என்ற கரு.
"இப்படி வாழ்க... ஒழிக...ன்னு கோஷம் போட்டு வாழ்க்கையைத் தொலைக்காதீங்க. ஒரு தலைவனைக் கண்மூடித்தனமா நம்பி நாட்டை ஒப்படைக்காம, சிந்திச்சு தெளிவா ஓட்டு போடுங்க" என்பது உட்பட படம் முழுக்க லியாகத் அலிகான் வசனங்களில் அனல் பறக்கும்.
அன்றைய அரசியல் நிலையை, அரசியல் தலைவர்களை சகட்டுமேனிக்கு கிண்டலடித்த படம். நக்கல், நையாண்டி கலந்த மம்முட்டியின் நடிப்பு, அவர் கட்சி தொடங்கும், முதல்வர் ஆகும் காட்சிகள் அன்றைக்கு அவ்வளவு பிரபலம்
9) கார்மேகம்
ராணுவத்தில் இருந்து சொந்த கிராமம் திரும்பும் மம்முட்டி, அந்த ஊரில் அட்டகாசம் செய்யும் ராதாரவியை எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் அவர் தனது தந்தை என தெரியவர, பாசத்தை மீறி போராடுகிறார்.
ராதாரவி பண்ணையில் அடிமைகளாக இருப்பவர்களை மீட்க நினைக்கிறார். கடைசியில் தந்தையை கார்மேகம் கொல்வதாக படம் முடியும். எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார்.

பட மூலாதாரம், S. S. R. Movies
10)கண்ணன் (எதிரும் புதிரும்)
துாள், கில்லி போன்ற படங்களை இயக்கிய தரணி இயக்கிய படம். மாவட்ட ஆட்சியராக மம்முட்டி வருவார். இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையும், அவர்களுக்கு இடையேயான மோதல்களும், அதிரடி திருப்பங்களும் இப்படத்தின் கதைக்களம். மம்முட்டி,நெப்போலியன் சம்பந்தப்பட்ட சீன்கள் ரசிக்கப்பட்டன.
நாம் சாமிக்கும், சத்தியத்துக்கும் கட்டுப்பட்டுவன் என்று மம்முட்டி பேசும் வசனம் பிரபலம்.
மம்முட்டி பற்றி இயக்குநர் ராம் கருத்து
பேரன்பு பட அனுபவம் குறித்தும் நடிகர் மம்முட்டி குறித்தும் பிபிசி தமிழிடம் இயக்குநர் ராம் பேசுகையில் '' நடிகர் மம்முட்டியை வெளியே கோபக்காரர் என்பார்கள். என்னை பொறுத்தவரையில் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. நான் பார்த்தவர் அப்படிப்பட்டவர் அல்ல, அதற்கு நேர் மாறானவர். அவர் மிகச்சிறந்த மனிதர், நண்பர், நடிகர். இன்றுவரை நான் போன் செய்தால் ஒரே காலில் எடுத்து பேசக்கூடிய பந்தா இல்லாத பண்பாளர். அதேபோல், சக கலைஞனை, மற்றவர்களை பாராட்டுகிற மனம் படைத்தவர்.
பேரன்பு படத்தில் ஒரு கண்ணாடி முன்பு நின்று பார்ப்பார். அதில் அவர் நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். ஒருத்தரை பார்த்து நாம் ஏன் இன்னொருவர் மாதிரி இல்லை என நினைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என கேட்பார். அந்த பாப்பா மாதிரி நடித்து பார்ப்பார். அந்த சீன் சான்சே இல்லை. அப்புறம், மாற்றுதிறனாளியான தனது மகளுக்கு சானிட்ரி பேடு மாட்டிவிடுகிற சீன், திருநங்கையை திருமணம் செய்கிற காட்சியில் மறுப்பு சொல்லாமல் நடித்தார்." என்றார்.
மேலும் பேசிய அவர், "மலையாளத்தில் கூட தன்பாலின ஈர்ப்பாளராக நடித்தார். ஒரு பெரிய ஹீரோ இப்படி நடிப்பது கஷ்டம். ஆனால், அவர் முன்னோக்கி சிந்திக்க கூடியவர். மலையாளத்தில் பலதரப்பட்ட கேரக்டர்களில் அவர் நடித்து இருக்கிறார். தினமும் நாமும், உலகமும் முன்னோக்கி செல்ல வேண்டும் என தனது படைப்புகளிலும் நினைக்கிறார். அதுதுான் மம்முட்டியின் அடையாளம் என்பேன். அதற்கான மனம் அவரிடம் இருக்கிறது. கதையின், காட்சியின் தன்மை உணர்ந்து சிக்கலான காட்சிகளில் நடிக்கிறார்.
தன்னால் ஒரு விஷயம் மக்களிடம் போய் சேர வேண்டும் என நினைப்பதால் இப்படிப்பட்ட சீன்களில் நடிக்கிறார். அவர் நிறைய படிக்கிறாரா என கேட்கிறார்கள். அவர் படப்பிடிப்பு தளத்தில் படிக்கமாட்டார், நடிப்பது மட்டுமே அவர் வேலை. ஆனால், நிறைய வாசிக்கிறார். வீட்டில் ஒரு லைப்ரரி வைத்து இருக்கிறார். அந்த வாசிப்பு அனுபவமும் அவரை இன்னொரு கோணத்தில் சிந்திக்க, நடிக்க வைக்கிறது. அவர் தமிழில் அவர் நடித்ததில் எனக்கு பிடித்த படம் மறுமலர்ச்சி. ''என்றார்.
ஆனந்தம் பட வசனகர்த்தா கூறியது என்ன?
ஆனந்தம் படத்தின் வசனகர்த்தா பிருந்தாசாரதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். மம்முட்டி குறித்து அவர் கூறுகையில் ''ஆனந்தம் படப்பிடிப்பின் போது தினமும் மம்முட்டியிடம் வசனம் சொல்லி கொடுப்பது, காட்சிகளை விளக்குவது என் வேலை. சென்னை, கும்பகோணம், காஞ்சிபுரத்தில் மொத்தம் 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அவர் அறைக்கு சென்று காட்சிகள் பற்றி விவரிப்பேன். அதனால், எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. எல்லா சீன்களை உடனே நடிக்கமாட்டார்.
ஒரு தடவை முகம் சிவந்து கோபப்படும் காட்சியில் சில நாட்கள் கழித்து நடிக்கிறேன் என்றார். ஏன் என்று கேட்டபோது நான் செட்டில் மற்ற நடிகர்களுடன் பழகவில்லை. அந்த குடும்பத்தில் ஒரு கேரக்டராக நான் மாறியபின், அவர்களுடன் பழகியபின் அந்த காட்சியில் நடிக்கிறேன் என்றார். மேக்கப் மூலமாக முகத்தை மாற்றாமல், அந்த கேரக்டராக மாற வேண்டும், அது நடிப்பில் நல்ல பாணி என விரும்புவார்.'' என்று கூறினார்.
மேலும் பிருந்தசாரதி பேசுகையில் "ஒரு வசனத்தை பேச மாட்டேன் என மறுத்துவிட்டார் மம்முட்டி. ஆனால், இயக்குநர் லிங்குசாமியோ அந்த வசனம் கண்டிப்பாக வேணும் என அடம்பிடித்தார். 'முதல் காதல் என்பது மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது மாதிரி என்ற அந்த வசனம் வேணாமே, நான் பேசினால் சரியாக இருக்குமா' என்றார். நான் அவரிடம் விளக்கினேன். அந்த சீனுக்கு முன்னால் தேவயானிக்கும் அவருக்குமான பாசம், மம்முட்டியின் முதல் காதல் பற்றி பேசும் காட்சி இருக்கிறது.
அதனால், இந்த வசனத்தை பேசினால் நன்றாக இருக்கும் என்றேன். அதை புரிந்துகொண்டு பட்டாம்பூச்சி வசனத்தை பேசினார். எந்த சீனனும், வசனமும் லாஜிக் ஓட இருக்கணும். கை தட்டல் வாங்குவதற்காக நடிக்க கூடாது என்பது அவர் பாலிசி. அவரை ரொம்ப இயல்பாக காட்டிய படம் ஆனந்தம் என்று மலையாள திரையுலகமே கொண்டாடியது.
காரணம், தனது வாழ்க்கை, தனது அண்ணன் தம்பி வாழ்க்கையை ஆனந்தம் படமாக எடுத்தார் லிங்குசாமி. அவரின் மூத்த அண்ணன் ராதாகிருஷ்ணன் கேரக்டர்தான் மம்முட்டியின் திருப்பதி கேரக்டர். இந்த படம் வந்தபின் அவர் பெயரும் திருப்பதியாக மாறிவிட்டது. ஊரில் அப்படிதான் கூப்பிடுகிறார்கள்' என்று சிரிக்கிறார்

பட மூலாதாரம், Super Good Films
மம்முட்டி பற்றி நடிகர் பப்லு கருத்து
அழகன் படத்தில் மம்முட்டியுடன் நடித்த நடிகர் பப்லு பிபிசி தமிழிடம் பேசுகையில் ''அழகன் படம் வந்து 35 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும், அந்த படத்தை, காட்சிகளை, பாடல்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். அதில் நான் மம்முட்டி வீட்டு வேலையாளாக நடித்து இருப்பேன்.
தலைப்புக்கு ஏற்ப உண்மையிலேலே மம்முட்டி அழகன்தான். சொன்னால் நம்ம மாட்டீர்கள், அந்த காலத்திலேயே அவர் காரில் ஆண்டனா செட் செய்து டிவி வைத்து இருந்தார். நாங்கள் அவர் காரில் ஓடும் டிவியை ஆச்சரியமாக பார்ப்போம். டப்பிங் பேச வரும்போது அவரே ஹைடெக் மைக் கொண்டு வருவார். அது ஓயர் இல்லாமல் புதுசாக இருக்கும். அழகன் படப்பிடிப்பில் நான் அனைத்து நடிகர்கள், டெக்னிஷீயன்கள் அவரை ரசித்து பார்ப்போம்.
சுருக்கமாக சொன்னால் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி இருப்பார். அனைவரிடமும் பந்தா இல்லாமல், இயல்பாக பழகுவார். அவரிடம் இருந்து ஒரு விஷயத்தை நான் கற்றுக்கொண்டேன்.
சில நடிகர்கள் ஒரு சீனில் நடிக்க ரொம்ப கஷ்டப்படுவார்கள், அதை சிக்கலாக்கி, தங்களை வருத்துவார்கள். ஆனால், மம்முட்டி ஒரு சீனை சிம்பிளாக நடிப்பார். அந்த சீனுக்கு தேவையானதை அழகாக, அளவாக நடிப்பார். எதுக்கு இவ்வளவு கஷ்டம், ஏன் தலையில் பாரத்தை துாக்கி வெச்சுக்கிடுறீங்க என்பதுபோல் அவர் நடிப்பு பாலிசி இருக்கும்.
தமிழில் அவர் பல படங்களில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் அவர் நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' படம் பார்த்தேன். அவர் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு பஸ்சில் செல்லும்போது , திடீரென பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சுந்தரம் என்ற மனிதராக மாறி, அவர் வீட்டுக்கு செல்வார். தமிழ் பேசும் கேரக்டர். கனவுக்கும், எதார்த்துக்குமான உறவை சொல்லும் கேரக்டர். அப்படி எல்லாம் யாரும் நடிக்க முடியாது'' ' என்றார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































