கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய கும்பல் - பணம் எங்கே?

கோவை ரூ.1.06 கோடி கொள்ளை, 4 பேர் கைது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தங்க நகைகள் வாங்குவதற்காக கோவை வந்த ஆந்திர மாநில வியாபாரியிடமிருந்து ரூ.1.06 கோடி பணத்தை கொள்ளையடித்த கும்பல் உளுந்தூர்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று பேரை தேடி வருவதாகவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் விரைவில் மீட்கப்படும் என கோவை காவல் ஆணையர் கண்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தங்களது கடைக்காக கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து தங்க நகைகளுக்கான ஆர்டர்களை கொடுத்துள்ளார்

இந்நிலையில் நேற்று நகைகள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துக்கொண்டு ரங்கசாமி கோவைக்கு வந்துள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, ரூ.1.06 கோடியை எடுத்துக்கொண்டு பேருந்தில் வந்த அவர் லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே இறங்கி, அங்கிருந்து கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் கோவைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கொள்ளை நடந்த லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தப் பகுதி
படக்குறிப்பு, கொள்ளை நடந்த லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தப் பகுதி

''அப்போது திடீரென வெள்ளை நிற காரில் வந்த முன்பின் தெரியாத நான்கு நபர்கள் அவரை தள்ளி விட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் பந்தய சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.'' என காவல்துறை கூறியுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவங்கினர்.

சிசிடிவி காட்சிகள் மூலம் தேடுதல்

வழிப்பறி நடந்த இடம் முதல் கும்பல் தப்பிச் சென்ற பாதை வரையிலான சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதேபோல், முக்கிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை அடையாளம் கண்ட காவல்துறையினர், அந்த வாகனம் சென்ற பாதையைத் தொடர்ந்து கண்காணித்தனர். திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பிற மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய வாகன் சோதனை
படக்குறிப்பு, காவல்துறையினர் நடத்திய சோதனை
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் இக்கும்பல் பிடிபட்டுள்ளது.

இதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் உளுந்தூர்பேட்டை சென்று கைது செய்யப்பட்டவர்களை கோவைக்கு அழைத்து வந்தனர். பிடிபட்ட நான்கு பேரிடமும், பந்தய சாலை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிடிபட்டவர்களின் பின்னணி மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்படாத நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள், அடையாளங்களை தற்போது வெளியிட இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை பிபிசி தமிழிடம், பணத்தைப் பறித்துச் சென்ற நபர்கள் உளுந்தூர்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்

விசாரணை முடிவடைந்த பின்னர் வழிப்பறி சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ரூ.1.06 கோடி வழிப்பறி குறித்து கோவை பந்தய சாலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
படக்குறிப்பு, வழிப்பறி குறித்து கோவை பந்தய சாலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

'டோல்கேட்டை தவிர்த்த கொள்ளையர்கள்'

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுங்க சாவடிகளில் கேமரா இருப்பதால், வேறு சாலைகளை பயன்படுத்துவார்கள் என்பதை முன்கூட்டியே கள்ளக்குறிச்சி எஸ்.பி கணித்ததால் பிடிபட்டுள்ளனர் என டிஎஸ்பி அசோகன் கூறினார்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன், "ஒவ்வொரு டோல்கேட்டிலும் தனி சிறப்பு படைகள் அமைத்து ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் புறவழிப் பகுதியில் இருக்கும் துணைச் சாலைகளிலும் ஆங்காங்கே காவலர்கள் குழு நிறுத்தப்பட்டது. அதேபோல் நான் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள தக்கா பகுதியில் காத்திருந்தேன். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் டோல்கேட் மார்க்கமாக செல்லாமல், தக்கா பகுதி வழியாக சென்று விழுப்புரத்தில் செல்ல இருந்தனர். தக்கா பகுதியில் நாங்கள் இருந்ததால் அவர்களை உடனடியாக சுற்றி வளைத்து பிடித்தோம். இதற்கான திட்டமிடுதலை எங்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி ஷஹ்னாஸ் வழங்கியிருந்தார்" என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு