'அதீத செல்போன் பயன்பாட்டால் கை, கால்கள் செயலிழக்கும் அபாயம்' - மருத்துவர் கூறுவது என்ன?

செல்போன் பயன்பாடு, கழுத்து வலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சண்முகப்ரியா செல்வராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சமீப காலங்களில் கழுத்து வலி ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தால் 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தசை-எலும்பு மண்டலம் சார்ந்த வலிகளில், 8.2% முதல் 90% வரையிலானவை கைப்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாட்டினால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில், ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் மாணவர்களில் 84% பேர் தசை-எலும்பு மண்டலம் சார்ந்த வலியை அனுபவித்ததாகவும், பெரும்பாலானோருக்கு கழுத்துப்பகுதியே வலியால் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

அதோடு அதிக அளவிலான செல்போன் பயன்பாடு கை மற்றும் விரல் பிடிப்பு வலிமையைக் குறைப்பதோடு ஒட்டுமொத்த கை செயல்பாட்டையும் பாதிப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அதிகரித்த செல்போன் பயன்பாடு மற்றும் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது உண்மையில் என்னென்ன உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கும் என்பது குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்களை இந்தக் கட்டுரையில் விரிவாக்கப் பார்க்கலாம்.

1. மொபைல் பயன்பாட்டால் என்ன பாதிப்பு?

செல்போன் பயன்பாடு, கழுத்து வலி
படக்குறிப்பு, நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் விஸ்வநாதன்

பதில்: மனித உடல் அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நான்கு கால்களில் நடந்த நிலையிலிருந்து, படிப்படியாக இரு கால்களில் நடக்கும் வகையில் பரிணமித்தது. இந்த மாற்றத்தின் விளைவாக, உடலின் முழு எடையும் இடுப்பு, முழங்கால், கணுக்கால் மூட்டுகள் வழியாக நேரடியாக முதுகெலும்பிற்கு பரிமாறப்படுகிறது.

அதேபோல, தலையின் எடையையும் கழுத்து எலும்புகள் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. சுற்றுப்புறத்தை கவனிக்கும் தேவைக்காக கழுத்து மற்றும் தலை தொடர்ந்து அசைவுக்கு உட்பட்டு இயங்குவதால், காலப்போக்கில் அது தேய்மானத்திற்கு உள்ளாகிறது.

குறிப்பாக, மொபைல் போன் மற்றும் கணினி பயன்பாட்டின்போது நீண்ட நேரம் குனிந்திருக்கும் பழக்கம், கழுத்து மற்றும் முதுகெலும்பு மீதான சுமையை பன்மடங்கு அதிகரிக்கும். முதுகெலும்பு மற்றும் கழுத்தெலும்பு மூட்டுகளுக்கு இடையே அமைந்துள்ள முதுகெலும்புத் தட்டுகள், அதிக பயன்பாட்டால் படிப்படியாக தேய்மானத்திற்கு உள்ளாகிறது.

தலையின் இயல்பான எடை ஐந்து கிலோகிராம் மட்டுமே என்றாலும், கழுத்தை முன்னோக்கி வளைக்கும்போது அதன் மீதான உயிரியக்கவியல் சுமை 27 கிலோகிராம் வரை அதிகரிக்கக்கூடும். கழுத்து எலும்புகளைச் சுற்றியுள்ள தசைகளே தலையை நிலையாகத் தாங்கி வைத்திருக்கின்றன. தலையை முன்னோக்கி வளைக்கும் ஒவ்வொரு முறையும் இந்தத் தசைகள் மீதான அழுத்தம் கணிசமாக அதிகரிக்கிறது.

இந்தத் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாக கழுத்தில் விறைப்புத்தன்மை ஏற்படுவதுடன், அந்த வலி கைகள் வரை பரவக்கூடும். ஊசி குத்துவது போன்ற உணர்வு மற்றும் உறுப்புகள் மரத்துப் போகும் நிலையும் ஏற்படலாம்.

கழுத்துப் பகுதியில் ஒவ்வொரு மட்டத்திலும் தனித்தனி நரம்புகள் வெளியேறுகின்றன, எந்த நரம்பு அழுத்தத்திற்கு உள்ளாகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் மாறுபடும். இந்நிலை புறக்கணிக்கப்பட்டால், கைகள் மற்றும் விரல்களின் இயல்பான செயல்பாட்டில் மந்தநிலை ஏற்படலாம்.

2. அதிக நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் என்ன?

செல்போன் பயன்பாடு, கழுத்து வலி

பட மூலாதாரம், Perawit Boonchu/Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பதில்: செல்போனை ஒரே நிலையில் இருந்தபடி நீண்ட நேரம் பயன்படுத்துவது மற்றும் நீண்ட நேரம் ஒரே இருக்கையில் அமர்ந்து பணிபுரியும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் உட்பட பலரும், ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் ஒருமுறை எழுந்து சிறு நீட்சி பயிற்சிகள் (stretches) செய்ய வேண்டும்.

தொடர்ந்து அமர்ந்திருக்கும்போது உடல் எடையின் அழுத்தம் இடுப்பு, முழங்கால், கணுக்கால் மூட்டுகளுக்குப் பதிலாக நேரடியாக இடுப்புப் பகுதி முதுகெலும்பு (lumbar spine) பகுதியில் குவிகிறது. இதன் காரணமாக இடுப்புப் பகுதி தண்டுவட வட்டு விலகல் (lumbar disc prolapse) எனப்படும் நிலை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

இந்நிலை தீவிரமடையும் பட்சத்தில், முதுகிலிருந்து கால்கள் வரை வலி பரவுதல், கால்கள் மரத்துப் போதல், கால் விரல்கள் மற்றும் பாதங்களை அசைப்பதில் பலவீனம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். மிகவும் தீவிரமான நிலையில், சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் தொடர்பான கட்டுப்பாடு கூட பாதிக்கப்படலாம்

இதேபோல், கழுத்துப் பகுதியில் நரம்புப் பாதிப்பு தொடர்ந்தால், நரம்புத்தண்டு மீதே அழுத்தம் ஏற்பட்டு, பக்கவாதம் (paralysis) மற்றும் சிறுநீர்-மலம் கழித்தல் கட்டுப்பாடு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

3. கழுத்து வலிக்கும் வேலைக்கும் உள்ள தொடர்பு?

பதில்: கழுத்து வலிக்கு தொழில்சார் வெளிப்பாடு ஒரு முக்கியப் பங்களிப்பாளராக உள்ளது எனக் கூறும் சர்வதேச மருத்துவ மற்றும் மருந்தியல் ஆராய்ச்சி இதழின் ஆய்வறிக்கை, மேசையில் அமர்ந்தபடியே செய்யும் வேலை மற்றும் காட்சித் திரைகளை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்களிடம் கழுத்து வலி பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது.

"கணினிகள் மற்றும் டிஜிட்டல் சார்ந்த பணிகள் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், குறைந்த இயக்கம் மற்றும் குறைவான புத்துணர்ச்சி இடைவேளைகளை ஊக்குவிக்கிறது. தொடர்ச்சியான கழுத்து வளைவு அல்லது முன்னோக்கிய குனிந்த நிலை, கழுத்து முதுகெலும்பில் தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன."

"இது கழுத்து நீட்டு தசைகள் மற்றும் சுற்றியுள்ள மென்மையான திசுக்களின் மீதான தேவையை அதிகரித்து, சோர்வு மற்றும் அதிக சுமையின் சுழற்சியை உருவாக்குகிறது. தொடர்ச்சியான அழுத்தம் தசை சமநிலையின்மை, குறைக்கப்பட்ட உடலமைவு உணர்வு, மாற்றப்பட்ட கழுத்து உயிரியக்கவியல் மற்றும் சிதைவு மாற்றங்களுக்கு பங்களித்து, இறுதியில் நாள்பட்ட வலி மற்றும் விறைப்பாக வெளிப்படுகிறது," என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

4. ரீல்ஸ்களால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

செல்போன் பயன்பாடு, கழுத்து வலி

பட மூலாதாரம், Xavierarnau/Getty Images

பதில்: நவீன வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ள மொபைல் போன், குறிப்பாக ரீல்ஸ் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு, கழுத்து ஆரோக்கியத்திற்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் விஸ்வநாதன்.

"தொடர்ந்து குனிந்த நிலையில் திரையைப் பார்ப்பதால், இயல்பாக லார்டோடிக் (lordotic) வளைவில் அமையவேண்டிய கழுத்து எலும்பு, படிப்படியாக கிஃபோடிக் (kyphotic) எனப்படும் கூன் நிலைக்கு மாறுகிறது. இதனால் கழுத்து விறைப்பு, தசை பிடிப்பு, கைகளுக்குப் பரவும் வலி மற்றும் விரல்களில் பலவீனம் ஏற்படலாம்.

இதைத் தடுக்க, ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் முன், பின், இடம், வலம் திருப்புதல் மற்றும் சாய்த்தல் ஆகிய ஆறு அடிப்படை அசைவுகளை உள்ளடக்கிய கழுத்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்."

5. தடுப்பதற்கான வழிகள் என்ன?

பதில்: முதுகுவலி ஏற்படுவதற்கு முன்பே, வயிறு மற்றும் முதுகெலும்பைச் சுற்றியுள்ள தசைகளை (paraspinal muscles) பலப்படுத்தும் அடிப்படை பயிற்சிகளை பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

தரையில் உள்ள பொருள்களை எடுக்கும்போது முதுகை வளைக்காமல், முழங்கால்களை மடக்கி நேராக குனிந்து எடுக்குமாறு பரிந்துரைக்கிறார் மருத்துவர் விஸ்வநாதன்.

"அமரும் நாற்காலியின் வகை, கை வைக்கும் நிலை, கணினித் திரையின் உயரம் ஆகியவை இயல்பான பார்வைக் கோட்டில் அமையுமாறு பார்த்துக் கொள்ளும் பணிச்சூழலியல் (ergonomics) முறைகள், முதுகுத் தண்டு மற்றும் கழுத்து ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கைகளின் நிலை சரியாக இல்லாத பட்சத்தில் கார்பல் டன்னல் நோய்க்குறி (carpal tunnel syndrome) எனப்படும் நிலையும், கழுத்து தொடர்ந்து வளைந்த நிலையில் இருந்தால் செர்விகல் ஸ்பாண்டைலோசிஸ் (cervical spondylosis) எனப்படும் கழுத்து தேய்மான நோயும் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் விஸ்வநாதன்.

செல்போன் பயன்பாடு, கழுத்து வலி

பட மூலாதாரம், Catherine Falls Commericial/Getty Images

அதேபோல பொதுவாக பலரும் பழக்கமாகக் கொண்டுள்ள கழுத்தில் "சொடுக்கு" எடுக்கும் செயலை நிபுணர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தலை மற்றும் கழுத்துக்கு இடையேயான மூட்டில் இது நரம்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக சலூன்களில் வழங்கப்படும் தலை மசாஜின்போது கழுத்தை திடீரென மடக்கும் நடவடிக்கைகளும், ஏற்கெனவே ஆரம்பக்கட்ட ஸ்பாண்டிலோசிஸ் (early spondylosis) என்கிற கழுத்து தேய்மான நிலையில் உள்ளவர்களுக்கு நிலைமையை மோசமாக்கக்கூடும்.

குழந்தைகளுக்கு, எலும்பு வளர்ச்சி இன்னும் முழுமையடையாத காரணத்தால், இத்தகைய அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

6. கழுத்து வலியைப் புறக்கணிப்பதால் என்ன ஆபத்து?

நரம்பு பாதிப்பை புறக்கணித்து விட்டால், அது படிப்படியாக நரம்பு இயங்குதன்மையை இழக்க வழிவகுக்கும். இதன் விளைவாக தோள்பட்டை மற்றும் முழங்கை பகுதிகளில் நிரந்தர பலவீனம் ஏற்படக்கூடும்.

தொடர்ந்து அமர்ந்து பணிபுரியும் (sedentary) பணியாளர்கள், ஒவ்வொரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து நீட்சிப் பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலமும், பணிச்சூழலியல் விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும், மொபைல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் முதுகுத்தண்டு மற்றும் கழுத்து ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரியும் பணியாளர்களிடையே முதுகுவலி, கழுத்து வலி மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற உடல்நல பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரியான உடல் நிலைப்பாடு, தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் இவற்றைத் தடுக்க முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு