சிறுமியை கடத்திச் சென்று இன்ஸ்டா மூலம் பெற்றோருக்கு சவால் விட்ட இளைஞர் - தவறான ஒரு மிஸ்ட் காலால் சிக்கியது எப்படி?

சிறுமியைக் கடத்தி இன்ஸ்டாகிராம் மூலம் பெற்றோருக்கு சவால்விட்ட இளைஞர் - மிஸ்டுகால் மூலம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆந்திர மாநிலம் குண்டூரில் சிறுமியை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஹரியாணா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்தது. 'முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள்' என சந்தேக நபர் சிறுமியின் பெற்றோரிடம் சவால்விட்ட நிலையில் சிறுமி தவறுதலாக மேற்கொண்ட ஒரு செல்போன் அழைப்பால் அவர் சிக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? தொடர்ந்து இருப்பிடம் மற்றும் செல்போனை மாற்றி வந்த நபரை காவல்துறை பிடித்தது எப்படி? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குண்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தது.

சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர் திருமனா விஷ்னுதேஜா பிபிசியிடம் விளக்கினார்.

"மூன்று மாதங்கள் கழித்தும் சிறுமியைக் கண்டுபிடிப்பதில் ஏன் தாமதம் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் சிறுமியின் இருப்பிடத்தை விரைவாக கண்டுபிடிக்குமாறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், "சிறுமியைக் கண்டுபிடிக்க காவல் துறை தீவிரமான விசாரணை நடத்தி வந்தனர். மூத்த அதிகாரிகள் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். இந்தத் தகவல் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது." என்றார்

எனினும் செப்டம்பர் 4-ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் வகுல் ஜின்டால் தெரிவித்தார். முழுமையான தகவல்கள் செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் மூத்த அதிகாரி, இந்த வழக்கு பதியப்பட்ட பட்டாபிபுரம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஷ்வர்லு மற்றும் பாபட்லா மாவட்டத்தில் உள்ள பர்சூர் காவல்துறை ஆகியோரிடம் பிபிசி பேசியது. இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் பகிர்ந்த தகவல்கள் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது.

பணம் மற்றும் நகையுடன் வீட்டைவிட்டுச் சென்ற சிறுமி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குண்டூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவரின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாபட்லா மாவட்டத்தின் பர்சூரைச் சேர்ந்த ஷேக் ஜான் சாய்தா இன்ஸ்டாகிராம் மூலம் அந்தச் சிறுமியிடம் அறிமுகமாகியுள்ளார். சில காலமாக குண்டூரில் வசித்து வந்த சாய்தா பைக் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக கைப்பேசி மூலம் அந்தச் சிறுமியிடம் பேசி வந்துள்ளார்.

"அப்போது அவரிடம் பொய்களைக் கூறி ஜூன் 9-ஆம் தேதி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்," என வெங்கடேஷ்வர்லு பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜூன் 9-ஆம் தேதி டியூஷன் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமி துணிக்கடைக்குச் செல்வதாக தனது பாட்டியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்த தங்கம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய வெங்கடேஷ்வர்லு, "அந்தச் சிறுமி கடைக்கு வராததால் அவரது தந்தை அந்தப் பகுதியில் தேடியுள்ளார். அதன் பின்னர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் விளைவாக காவல்துறையும் அன்று இரவு தீவிரமாகத் தேடியுள்ளது. சிறுமியின் கைப்பேசி சமிக்ஞை (சிக்னல்) பட்டாபிபுரம் அருகே வந்ததால் அதனை சுற்றிய அனைத்து இடங்களிலும் தேடினார்கள்."

"அடுத்த நாள் காலை சிறுமியின் கைப்பேசி அருகில் உள்ள ஒரு பூங்காவில் கிடைக்கப்பெற்றது. ஆனால் அவரின் இருப்பிடம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் செல்போனை இங்கு விட்டுவிட்டு சென்றார் என நினைத்து அவர் காணாமல் போனதாக ஜூன் 10-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தோம்." என்றார்.

சிறுமியை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை

ஜூன் 10-ஆம் தேதிக்குப் பிறகு அந்தச் சிறுமியைக் கண்டறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெங்கடேஷ்வர்லு கூறுகிறார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வகுல் ஜின்டால் சிறுமியைக் கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தார்.

சிறுமியின் பெற்றோருடன் இணைந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமான தேடுதலை மேற்கொண்டனர். பர்சூர், நெல்லூர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் பாலக்காடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினர்.

அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்ததை சிசிடிவி காட்சிகள் காண்பித்தன. அங்கிருந்து பாலக்காடு ரயில் நிலையம் வந்த அவர்கள் பின்னர் செகந்தராபாத் செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர். அங்கிருந்து பெகும்பேட்டை ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அதன்பிறகு, அந்தப் பெண் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிவது கடினமாகியுள்ளது.

அந்தச் சிறுமி வீட்டிலிருந்து கிளம்பியபோது அதிக அளவிலான பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாலும் சந்தேக நபர் அவ்வப்போது கைப்பேசியை மாற்றிக் கொண்டு வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்ததாலும் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவது கடினமாக இருந்தது என காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பெற்றோர் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

சிறுமியைக் கடத்தி இன்ஸ்டாகிராம் மூலம் பெற்றோருக்கு சவால்விட்ட இளைஞர் - மிஸ்டுகால் மூலம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், HC.AP.NIC.IN

படக்குறிப்பு,

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் ஜூன் 10-ஆம் தேதியே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மூன்று மாதங்கள் கழித்தும் காவல்துறையினர் சிறுமியைக் கண்டறியவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த மனு செப்டம்பர் 3 அன்று நீதிபதிகள் பட்டு தேவானந்த் மற்றும் துஹின் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமி இருக்கும் இடம் இன்னும் கண்டறியப்படவில்லை என அரசு வழக்கறிஞர் திருமனா விஷ்னுதேஜா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை தலைவர் சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததாகவும் காணாமல் போன வழக்கு கடத்தல் வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இந்தத் தகவல்களை ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வு சிறுமியைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு உடனடியாக சிறுமியைக் கண்டுபிடிக்கவும் உத்தரவுகளைப் பிறப்பித்தது என விஷ்னுதேஜா தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாய்தா ஹரியாணா மாவட்டத்தில் கர்னல் நகரில் வைத்து செப்டம்பர் 4-ஆம் தேதி, ஆதாவது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தற்கு அடுத்த நாள் கைது செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறுமியைக் கடத்தி இன்ஸ்டாகிராம் மூலம் பெற்றோருக்கு சவால்விட்ட இளைஞர் - மிஸ்டுகால் மூலம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், ugc

படக்குறிப்பு, சந்தேக நபர் அவ்வப்போது கைப்பேசிகளையும் சிம் கார்டுகளையும் மாற்றிக்கொண்டிருந்ததால், அவரைப் பிடிப்பது கடினமாக இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சிறுமியின் பெற்றோரிடம் சவால் விட்ட சாய்தா

குற்றம் சாட்டப்பட்ட ஜான் சாய்தா அவ்வப்போது கைப்பேசிகளையும் சிம் கார்டுகளையும் மாற்றி வந்ததால் அவர் எங்கு இருக்கிறார் என்று அறிவது கடினமாக இருந்துள்ளது. அந்த சமிக்ஞைகளின் அடிப்படையில் காவல்துறை அங்கு சென்றால் அவர்கள் அங்கிருந்து சென்றுவிடுவார்கள்.

ஒரு வாரம் முன்பு இன்ஸ்டாகிராம் வாயிலாக சிறுமியின் பெற்றோருக்கு ஜான் சாய்தா குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

"'முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள்' என அவர் சவால்விட்டுள்ளார். வியாழன் இரவு சிறுமியின் தாய்க்கு அதே இன்ஸ்டா கணக்கிலிருந்து ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. சிக்னல் ஹரியாணாவின் கர்னல் பகுதியிலிருந்து வருவது தெரிந்த உடன் நாங்கள் உடனடியாக அங்கு சென்றோம். அங்குள்ள காவல்துறையினர் நன்றாக ஒத்துழைத்தனர். அப்போது வீட்டில் மறைந்திருந்த சாய்தாவைக் கைது செய்தோம்," என்று அந்த அதிகாரி விளக்கினார்.

'ஹரியாணாவில் வாடகை வீடு எடுத்து தங்கினர்'

இந்த மூன்று மாதங்களில் அந்தச் சிறுமியுடன் வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற சாய்தா 15 நாட்களுக்கு முன்பு கர்னல் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி மற்று இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வேண்டிய அனைத்து பொருட்களையும் வாங்கியுள்ளனர்.

"வியாழன் இரவு அந்தச் சிறுமி தவறுதலாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மிஸ்டு கால் கொடுத்துள்ளார். ஆனால் அது தான் எங்களுக்கு அடிப்படையான தகவலாக அமைந்தது," என்று சிறப்பு புலனாய்வு குழுவைச் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அந்த நபர் சிறுமியுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பழகி வந்தது குடும்பத்தினருக்குத் தெரிந்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சூழலில் சாய்தாவின் தாய் மற்றும் சகோதரியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியைக் கடத்தி இன்ஸ்டாகிராம் மூலம் பெற்றோருக்கு சவால்விட்ட இளைஞர் - மிஸ்டுகால் மூலம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், ugc

படக்குறிப்பு, குண்டூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வகுல் ஜின்டால்

சாய்தா மீது உள்ள வழக்குகள்

கர்னலில் உள்ள சாய்தாவின் வீடு மது பாட்டில்கள் மற்றும் சிகரெட்டுகளால் நிரம்பியிருந்ததாகவும் அவர் மீது கடந்த காலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பர்சூர் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கர்னல் பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து ஃபலூடா விற்பதாகவும் அந்த அறிமுகத்தின் மூலமே சாய்தா அங்கு வந்ததாக நம்பப்படுவதால் அந்தக் கோணத்திலும் விசாரணை நடப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

அந்தச் சிறுமியின் தந்தையிடம் பேச பிபிசி மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை. சாய்தாவின் குடும்பத்தினர் காவல்துறை விசாரணையில் இருப்பதால் அவர்களிடம் பேசுவதும் சாத்தியப்படவில்லை. அவர்களைத் தொடர்புகொள்ள முடியும் போது அவர்களின் விளக்கம் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு