அமெரிக்காவில் 41 ஆண்டு சிறையில் இருந்த மரண தண்டனை கைதிக்கு 71 வயதில் 'புதிய ஆதாரத்தால்' நடந்த திருப்பம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜார்ஜ் ரைட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்காவில் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, 41 ஆண்டுகள் மரண தண்டனை கைதியாக இருந்த நபர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிதாக ஆய்வு செய்யப்பட்ட டிஎன்ஏ ஆதாரங்கள் அவருக்கும் அந்தக் குற்றத்துக்கும் தொடர்பு இருப்பதை நிரூபிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 71 வயதாகும் டக்ளஸ் ஸ்டீவர்ட் கார்டர், 1985-ஆம் ஆண்டு உட்டா மாகாணத்தில் ஈவா ஓலெசனை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தான் நிரபராதி என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். தான் கையெழுத்திட்ட வாக்குமூலம் வற்புறுத்திப் பெறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகள் தவறாக செயல்பட்டதாகக் கூறி, உட்டா மாகாண உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், நீதிபதி திங்கள்கிழமை கார்டருக்கு பிணை வழங்கினார். பிணையில் இருக்கும் காலத்தில் அவர் ஜிபிஎஸ் கண்காணிப்பு சாதனத்தை அணிந்திருக்க வேண்டும்.
உட்டா மாகாணத்தின் புரோவோ நகரில் உள்ள தனது வீட்டில் 1985 பிப்ரவரியில் ஓலெசன் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, பின்னர் தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அந்தப் பகுதியின் காவல்துறைத் தலைவரின் உறவினர்.
சிகாகோவைச் சேர்ந்த கார்டர், கொலை நடந்த சமயத்தில் உட்டாவில் தனது தாயுடன் வசித்து வந்தார்.
கொள்ளையின்போது ஓலெசனை கார்டர் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
வேறொரு வழக்கில் தன்னைச் சந்தேகநபராக காவல்துறையினர் கருதுவதாக நினைத்த கார்டர், உட்டாவிலிருந்து தப்பிச் சென்றார்.
இறுதியில், டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். அங்கு விசாரணையின்போது அவர் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டார். பின்னர், அந்த வாக்குமூலம் வற்புறுத்திப் பெறப்பட்டது என்று அவர் கூறினார்.
குற்றம் நடந்த இடத்துடன் கார்டரைத் தொடர்புபடுத்தும் எந்தவொரு நேரடி ஆதாரமும் இல்லாதபோதிலும், அவர் அளித்த வாக்குமூலம் மற்றும் கொலை குறித்து கார்டர் தங்களிடம் பெருமையாகப் பேசியதாகக் கூறிய இரு சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடுவர் குழு அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
ஆனால், 2011-ஆம் ஆண்டு அந்த இரு சாட்சிகளும் தங்களை நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளிக்குமாறு கூறியதாகத் தெரிவித்தனர்.
மேலும், காவல்துறையினர் தங்களுக்கு பணமும் பரிசுகளும் கொடுத்ததாகவும், கார்டருக்கு எதிராக சாட்சியம் அளிக்காவிட்டால் நாடு கடத்தப்படுவோம் என்று மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு உட்டா மாகாண உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
கறுப்பினத்தைச் சேர்ந்த கார்டருக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு வெள்ளையர் தப்பிச் செல்வதை சாட்சிகள் பார்த்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஓர்லா ஓலெசனைக் குற்றத்துடன் தொடர்புபடுத்தும் ஆதாரத்தை விசாரணை அதிகாரி ஒருவர் மறைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கணவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் அளவுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணையை முன்னெடுத்திருந்ததாகவும், ஆனால் காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அவர்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கார்டரின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
2009-ஆம் ஆண்டு உயிரிழந்த ஓலெசனின் கணவர், தனது மனைவி வீட்டில் இறந்து கிடந்ததைக் கண்டதாகக் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.
ஓலெசனின் உடலில் இருந்த கத்திக்குத்துக் காயங்கள், அவர்களது சமையலறையில் இருந்த கத்தியால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அந்தக் கத்தி அவரது உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. துப்பாக்கி சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வின் முடிவுகள் வெளியானதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அதில், கதவின் கைப்பிடியில் இருந்த ரத்தம் மற்றும் கத்தியின் கைப்பிடியில் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணுப் பொருள் ஆகியவற்றுடன் கார்டரின் டிஎன்ஏ பொருந்தவில்லை எனத் தெரியவந்தது.
எனினும், ஓலெசனின் குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாகவே கார்டர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற பிணை விசாரணையின்போது, ஈவா ஓலெசனின் மருமகள் தெரசா ஓலெசன், கார்டரை விடுவிப்பது குறித்து தங்கள் குடும்பத்தினருக்கு "தீவிரமான கவலைகள்" இருப்பதாகத் தெரிவித்தார். புதிய விசாரணை நடைபெறும் வரை அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"நிச்சயமாக, டிஎன்ஏ ஆய்வில் உறுதியான பொருத்தம் கிடைக்கும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவர் அங்கு இல்லை என்று அதற்கு அர்த்தமில்லை," என்று டிஎன்ஏ ஆய்வு குறித்து ஓலெசன் கூறினார்.
ஆனால், கார்டர் தரப்பு வழக்கறிஞர் நீல் ஹாமில்டன், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"உட்டா மாகாண அரசின் விருப்பப்படி நடந்திருந்தால், விசாரணையில் நடந்த முறைகேடுகளை நாங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தூக்கிலிடப்பட்டிருப்பார்," என்று அவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































