கவின் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகை ரத்து - என்ன நடந்தது?

கவின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

குற்றப் பத்திரிகையை எதிர்த்து இருவர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. "இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்ற குரல்களும் எழுந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 2025 ஜூலை மாதம், சுர்ஜித் என்கிற இளைஞரால் கவின் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் திருநெல்வேலி காவல்துறை விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

சுர்ஜித்தின் சகோதரியை கவின் காதலித்து வந்ததாகவும் அது பிடிக்காததால் சுர்ஜித் அவரைக் கொலைச் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி, மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

அவர்கள் இருவரும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்கில் அவர்களும் சந்தேக நபர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

இந்தக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி, அவர்களது உறவினர் ஜெயபால் ஆகிய நால்வரும் சந்தேக நபர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை ரத்து செய்யுமாறு இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

கவின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

தாய் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

முன்னதாக இருவரும் காதலிப்பது பற்றித் தகவல் தெரிந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி 2016-2017 ஆண்டுகளில் கவினின் தாயை அழைத்து எச்சரித்ததாகவும் அதன் பிறகு 2018 - 2019 ஆண்டுகளில் மீண்டும் எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் நடந்த அன்று தகவல் கிடைத்தவுடனே தனது மகளுக்கும் உறவினர் ஜெயபாலுக்கும் அழைத்து அவர் தகவல் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தந்தை மீதான குற்றச்சாட்டு என்ன?

சுர்ஜித்தின் தந்தை சரவணன் 2018 - 2019 ஆண்டுகளில் தனது மகளை எச்சரித்ததாகவும் கவினிடம் செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார்.

  • கடந்த 2023ஆம் ஆண்டு கல்லிடைக் குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்றைப் பெற்று போலியான பதிவெண்ணுடன் சுர்ஜித்திடம் வழங்கியுள்ளார்.
  • கொலைச் சம்பவம் நடந்த அன்று அந்தத் தகவலை கிருஷ்ணகுமாரிக்கு அழைத்து தெரிவித்துள்ளார்.
  • கொலை நடந்த இடத்திற்குச் சென்று கவினின் சாதி பற்றி காவல்துறைக்குத் தவறான தகவல் அளித்துள்ளார்.
  • தனது உறவினர் ஜெயபாலுக்கு அழைத்து சுர்ஜித்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
கவின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
படக்குறிப்பு, சுர்ஜித்

அதோடு, கொலைச் சம்பவம் நடந்த பிறகு மூவரும் சந்தித்துக் கொண்டதாகவும் கவினின் உடை, செல்போன், வாகனத்தின் போலியான பதிவெண் ஆகியவற்றை அப்புறப்படுத்திவிடுமாறும், சுர்ஜித்தின் பெற்றோர் அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல்துறையின் இறுதி அறிக்கையில் அதற்கான உறுதியான சான்றுகள் இல்லை என்றும் அனுமானத்தின் அடிப்படையிலே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும் வாதிட்டார்.

கொலைச் சம்பவம் நடைபெற்ற பிறகு மூவரும் ஓரிடத்தில் சந்தித்ததாக காவல்துறையின் இறுதி அறிக்கையில் இருந்ததாகவும் மூவரின் செல்போன் எண்களும் ஒரே டவர் வரம்பில் இருந்ததாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாகத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவைக் கடுமையாக எதிர்த்துள்ளார். விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மனுதாரர்கள் மீது தீவிரமான சந்தேகத்தை எழுப்புவதாகவும் வாதிட்டதாக நீதிமன்றத்தின் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள அவதானிப்புகள் பிற சந்தேக நபர்கள் மீதான விசாரணையின் மீது எந்தத் தாக்கமும் செலுத்தக்கூடாது என்றும் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையின்போது மனுதாரர்களின் பங்கு குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் விசாரணை நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடரலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம். குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே குற்ற அறிக்கையை 'ரத்து' செய்வது 'தவறான முன்மாதிரி' ஆகும்" என்றார்.

"தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்," என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விசாரணையில் தாக்கம் செலுத்தலாம் என்று கூறும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தமிழ்நாடு அரசு இதை எதிர்ப்பு உச்ச நீதிமன்றத்த்ல் மேல்முறையீடு செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு