You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை: உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு?
2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து 48 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்த ஆண்டு, இந்தத் தொடர் விளையாட்டின் அடிப்படையில் மட்டுமன்றி, பரிசுத் தொகையின் அடிப்படையிலும் வரலாறு படைத்துள்ளது.
பிஃபா மொத்தம் 871 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை நிர்ணயித்துள்ளது, இதுவரை நிர்ணயிக்கப்பட்டதிலேயே இது தான் மிக அதிக தொகையாகும்.
பிஃபா ஆரம்பத்தில் 727 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்தது, இது 2022 கத்தார் தொடரை விட 50% அதிகமாகும்.
இருப்பினும், ஏப்ரல் மாதத்தில், பிஃபா பங்கேற்பு மற்றும் தயாரிப்புக்கான தொகையை உயர்த்தியதன் மூலம், மொத்த பரிசுத் தொகை 871 மில்லியன் டாலராக உயர்ந்தது.
செயல்திறன் அடிப்படையில் வெகுமதி
பரிசுத் தொகையானது செயல்திறன் அடிப்படையிலான வெகுமதிகள் மற்றும் செயல்திறன் சாரா நிதி உதவி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.
செயல்திறன் அடிப்படையிலான வெகுமதிகள் பின்வருமாறு: (அடைப்புக் குறிக்குள் இந்திய ரூபாய் மதிப்பில் பரிசுத்தொகை தோராயமாக தரப்பட்டுள்ளது. )
- சாம்பியன்: 51 மில்லியன் டாலர் (481 கோடி ரூபாய்)
- இரண்டாம் இடம்: 34 மில்லியன் டாலர் (321 கோடி ரூபாய்)
- மூன்றாம் இடம்: 30 மில்லியன் டாலர் (283 கோடி ரூபாய்)
- நான்காம் இடம்: 28 மில்லியன் டாலர் (264 கோடி ரூபாய்)
- 5 முதல் 8 ஆம் இடம்: 20 மில்லியன் டாலர் (189 கோடி ரூபாய்)
- 9 முதல் 16-வது இடம்: 16 மில்லியன் டாலர் (151 கோடி ரூபாய்)
- 17 முதல் 32-வது இடம்: 12 மில்லியன் டாலர் (114 கோடி ரூபாய்)
- 33 முதல் 48-வது இடம்: 10 மில்லியன் டாலர் (95 கோடி ரூபாய்)
உலகக்கோப்பையில் ஒரு அணி எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறதோ, அதற்கேற்ற அளவில் வெகுமதி கிடைக்கும்.
ஒவ்வோர் அணிக்கும் எவ்வளவு தொகை கிடைக்கும்?
உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான வெகுமதிகள் வழங்கப்படும், அவற்றை ஒவ்வொரு அணியும் நிச்சயமாகப் பெறும்.
- தயாரிப்பு நிதி: ஓர் அணிக்கு 2.5 மில்லியன் டாலர் (சுமார் 23 கோடி ரூபாய்)
- குழுவின் பங்களிப்பு: 16 மில்லியன் டாலர் (சுமார் 151 கோடி ரூபாய் )
அதாவது, ஒவ்வோர் அணியும் குறைந்தபட்சம் 12.5 மில்லியன் டாலர் (114 கோடி ரூபாய் ) பெறும் என்பது தான் இதன் பொருள். இதில் 10 மில்லியன் டாலர் (95 கோடி ரூபாய்) தகுதிக் கட்டணமும் அடங்கும்.
போட்டிக்கு முன்னதாக அணியின் பயிற்சி முகாம்கள் மற்றும் பயணச் செலவுகளை ஈடுகட்ட ஆயத்த நிதி வழங்கப்படுகிறது.
அணியின் செலவுகளை ஈடுகட்ட உதவுவதையும், டிக்கெட் விற்பனையை அதிகரிப்பதையும் ஃபிஃபா "அணிப் பங்களிப்புகள்" என வரையறுக்கிறது.
உலகக் கோப்பையை விளையாடுவதற்கான பயணம், ஏற்பாடுகள் மற்றும் அலுவலகப் பணிகள் போன்ற செலவினங்களில், பணக்கார நாடுகள் மற்றும் குறைந்த பொருளாதார வளமுள்ள நாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இதன் நோக்கம்.
முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்பு
மூன்று நாடுகள் இணைந்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
மூன்று நாடுகளில் உள்ள 16 நகரங்களில் 104 போட்டிகள் நிறைவடைந்த பிறகு, உலகக் கோப்பையை வெல்வது யார் என்பதை உலகம் அறிந்துகொள்ளும்.
மூன்று முறை உலகக் கோப்பையை நடத்திய உலகின் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெற்றுள்ளது.
இதற்கு முன்னர், மெக்சிகோ 1970 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை தொடரை நடத்தியிருந்தது.
இந்ததொடரில், உலகெங்கிலும் இருந்து 48 அணிகள் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முந்தைய ஏழு உலகக் கோப்பைகளிலும் உலகின் தலைசிறந்த 32 அணிகள் பங்கேற்றிருந்தன.
600 கோடி பேர் பார்வையிடுவார்கள் என ஃபிஃபா மதிப்பீடு
இந்த முறை, உலகெங்கிலும் இருந்து கூடுதலாக 16 நாடுகளுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த உலகக் கோப்பையில் நடத்தப்பட்ட 64 போட்டிகளை விட கூடுதலாக போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த முறை குறைந்தது 600 கோடி பார்வையாளர்கள் இந்தப் போட்டிகளைக் காண்பார்கள் என்று ஃபிஃபா மதிப்பிட்டுள்ளது.
அதாவது ஃபிஃபா மதிப்பீட்டின்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையை விட, கூடுதலாக 100 கோடி பார்வையாளர்கள் இந்தப் போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள்.
உலகக் கோப்பையின் 23வது பதிப்பில், கேப் வெர்டே, குராசோவா, ஜோர்டான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் அறிமுகமாகியுள்ளன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு