You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"திமுக செய்ததையே தவெக செய்கிறது" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடப்பது என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜூன் 11 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
"திருப்பரங்குன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலையே தொடரும்" என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியுள்ள நிலையில், கெடுபிடிகள் காரணமாக பதற்றசூழலில் திருப்பரங்குன்றம் உள்ளதாக தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
தி.மு.க அரசின் பாதையையே த.வெ.க அரசு பின்பற்றுவதாகக் கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தை நடத்தியுள்ளன.
மதுரை மாநகரில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து, பல்வேறு சர்ச்சைகள் அணிவகுத்தன.
திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் கோவிலும் வலதுபுறத்தில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் அமைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தின்போது மலையின் மீதுள்ள தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என, இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்பதற்கு அரசு மறுத்துவிட்டது. 'இது நீதிமன்ற அவமதிப்பு' என, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராம.ரவிக்குமார் தொடர்ந்தார். இதனை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் உள்பட 6 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பளித்தது.
'அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பூதம்'
அந்த தீர்ப்பில், 'தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆகம விதிகளில் இடமில்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை அரசு அதிகாரிகளும் தர்காவும் தவறிவிட்டது' எனக் கூறியது.
'குறிப்பிட்ட நாளில் தூணில் விளக்கு ஏற்றுவதை அனுமதித்தால் பொதுஅமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரசு அஞ்சுவது ஆபத்தானது' என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
'சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சம் என்பது ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்துக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பூதம்' என, தீர்ப்பில் நீதிபதிகள் சாடியிருந்தனர்.
'சமூகங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை மத்தியஸ்தம் மூலமாக தீர்ப்பதற்கான பாலமாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்' எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
மேலும், 'திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் சட்டப்படியே எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டனர்.
அந்தவகையில், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், 'மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம். எத்தனை பேர் அனுமதிக்கப்படலாம் என்பதை தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்' எனத் தீர்ப்பளித்தனர்.
'100 ஆண்டு நடைமுறை'
இந்தநிலையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் உள்பட 6 பேர் தொடர்ந்த வழக்கு கடந்த 22 ஆம் தேதி நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "இரு தரப்பினரும் அமர்ந்து பேசி தீர்வை எட்டச் செய்யலாம். இதை ஏன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் பரிசீலிக்கக் கூடாது?" எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நடைமுறையை தொடர்வதா அல்லது புதிய நடைமுறையைத் தொடர்வதா என முடிவெடுக்க வேண்டியுள்ளது" எனக் கூறினார்.
அப்போது தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜூன் 11 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை த.வெ.க அரசு தாக்கல் செய்துள்ளது.
'போதுமான அளவு பரிசீலிக்கவில்லை' - மேல்முறையீட்டு மனு
மனுவில், திருப்பரங்குன்றம் மலை, பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டத்தின்கீழ் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக உள்ளதாக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்றுவதன் மூலம் பாறையில் செதுக்கப்பட்ட எளிதில் உடையக் கூடிய பாறை குகைகள், கல்வெட்டுகள் மற்றும் இயற்கையான நிலப்பரப்பு ஆகியவை சேதமடையக் கூடும் என்றும் கூட்ட நெரிசல் மற்றும் சட்டம்-ஒழுங்கு சிக்கலை உருவாக்கலாம் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாரம்பரியம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான கவலைகளை உயர் நீதிமன்றம் போதுமான அளவு பரிசீலிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனு மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளது.
'தி.மு.க பாணியில் த.வெ.க அரசு'
"தீபம் ஏற்றலாம் என இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக, கடந்த தி.மு.க அரசு கூறியது. ஆனால், அந்த மனு முறையாக பதிவு செய்யப்படவில்லை" என்கிறார், வழக்கறிஞர் நிரஞ்சன். இவர் இந்து அமைப்புகள் சார்பாக வாதாடி வருகிறார்.
"இன்னும் சில மாதங்களில் கார்த்திகை தீபம் வந்துவிடும். தீபம் ஏற்றுமாறு இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை அப்போது அரசு அமல்படுத்த வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சைக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி விளக்கம் அளித்த தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தொடர வேண்டும் என விரும்புகிறார்கள். அரசின் கொள்கையும் அதுதான்" எனக் கூறியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை பெரும்பாலான மக்கள் விரும்புவதாகக் கூறிய அவர், "மதவாத சக்திகள் உள்ளே வருவதை நூறு சதவீதம் அனுமதிக்க மாட்டோம்" எனப் பதில் அளித்தார்.
அமைச்சரின் பேச்சுக்கு எதிராக பிரதான வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான பரமசிவம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கருத்து கூறியுள்ளார். மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் அமைச்சர் பேசியுள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
'இதனை அனுமதித்தால் நீதிமன்றங்களின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு வாய்ப்புள்ளதால் அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என மனுவில் கூறியுள்ளார்.
"மலையின் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உண்ணாவிரதம், கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டோம்" எனக் கூறுகிறார், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " கடந்த ஆட்சியில் முருக பக்தர்களின் கோரிக்கையை ஏற்காமலும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமலும் தி.மு.க அரசு தவறு செய்தது. அதே தவறை தற்போதைய த.வெ.க அரசும் செய்கிறது" என அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து, மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கடந்த 21 ஆம் தேதியன்று மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
'இடிந்துவிழும் நிலையில் தர்கா'
உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப், "நீதிமன்றத்தை நம்பித்தான் தர்கா நிர்வாகம் உள்ளது" எனக் கூறினார்.
"தீபம் ஏற்றுவது தொடர்பாக சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், தர்கா கட்டடத்தில் விரிசல் விழுந்து அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன" என அவர் தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
பல ஆண்டுகளாக தர்காவில் இடிதாங்கி பொருத்துவது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மலைக்கு வரும் பக்தர்களுக்கு எதாவது நேர்ந்துவிடும் என்ற அச்சத்திலேயே நாட்களைக் கடத்துவதாகக் கூறும் அல்தாஃப், "தர்காவுக்கு வரும் வழியில் நெல்லித்தோப்பு பகுதியில் கொட்டகை உள்ளது. அதுவும் முறையாக இல்லை" என்கிறார்.
"பல ஆண்டுகளாக தர்காவில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசு அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.
'தொடரும் பதற்ற சூழல்'
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர் மலையில் உள்ள தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தும் நோக்கில் ஆடு, கோழி ஆகியவற்றுடன் மலைக்குச் செல்ல முயன்றார்.
அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, "மலையில் ஆடு, கோழியைப் பலியிட அனுமதியில்லை" எனக் கூறினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இருந்த நவாஸ்கனி உள்ளிட்டோர் ஆய்வு நடத்துவதற்காக மலைக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த படிக்கட்டில் அசைவ உணவைச் சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகவே, திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இதன் விளைவாக, தர்காவுக்கு செல்லும் பாதையில் தடுப்பரண் அமைத்து காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் அல்தாஃப், "காவல்துறையின் கெடுபிடிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பக்தர்கள் கொண்டு செல்லும் உணவுகளை பரிசோதித்த பிறகே அனுப்புகின்றனர்" என்கிறார்.
தற்போதுவரை பதற்ற சூழலிலேயே திருப்பரங்குன்றத்தை வைத்துள்ளதாகக் கூறிய அவர், "மக்களைக் காவல்துறை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தர்காவுக்கு வருகிறவர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகளைக் கேட்கின்றனர்" எனக் கூறினார்.
மலை தொடர்பான சர்ச்சைகள் குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சரும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏவுமான சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டது.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை கடைபிடிக்க விரும்புகிறோம். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளோம்" எனக் கூறினார். தர்கா நிர்வாகிகளின் கோரிக்கை குறித்துக் கேட்டபோது, "விரைவில் பதில் அளிக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு