ஆக்ரி ராஸ்தா: பாக்யராஜ் இந்தியே தெரியாமல் அமிதாப்பை இயக்கி பெருவெற்றி கண்ட திரைப்படம்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இயக்குநர், நடிகர் பாக்யராஜ் நேரடியாக இயக்கிய முதல் இந்தித் திரைப்படம் 1986இல் வெளியான 'ஆக்ரி ராஸ்தா'. அமிதாப் பச்சன், ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர். அமிதாப்புக்கு தந்தை- மகன் என இரட்டை வேடங்கள்.

வழக்கமாக இந்தி சினிமாக்களில் 'ஆங்கிரி யங் மேன்' என்ற கோபக்கார இளைஞன் கதாபாத்திரங்களுக்கு பெயர்போன அமிதாப் பச்சனுக்கு, இதில் கோபக்கார இளைஞன், கோபக்கார முதியவன் என இரு கதாபாத்திரங்கள். எனவே இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை.

இன்னும் சொல்லப்போனால், பாக்யராஜ் இயக்கிய 3 இந்தித் திரைப்படங்களில் வெற்றி பெற்ற ஒரே திரைப்படம் இது மட்டும் தான்.

ஆனால், இந்தப் படத்தை இயக்கும்போது இயக்குநர் பாக்யராஜுக்கு இந்தி மொழி தெரியாது.

"எனக்கு இந்தி தெரியாது, அமிதாப்புக்கு தமிழ் தெரியாது. இடையில் இருந்தது ஆங்கிலம் மட்டுமே. நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேச, சைகையில் சொல்ல என ஒருவாறு கதையைச் சொன்னேன். அமிதாப் முழுதாக கேட்டுவிட்டு, நல்ல கதை எனக் கூறினார்," என ஒரு நிகழ்வில் விவரித்திருப்பார் பாக்யராஜ்.

'ஆக்ரி ராஸ்தா'

'ஆக்ரி ராஸ்தா' திரைப்படத்திற்கு முன்பே பாக்யராஜின் பெயர் இந்தி திரையுலகத்தில் மிகப் பிரபலமாகவே இருந்தது. குறிப்பாக பாக்யராஜின் மௌன கீதங்கள் (1981) திரைப்படம், 'ஏக் ஹி ஃபுல்' என்ற பெயரில் ஜிதேந்திரா நடிக்க ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.

அதேபோல 'அந்த ஏழு நாட்கள்' (1981) திரைப்படமும், 'வோ சாத் தீன்' (1983) என்ற பெயரில் அனில் கபூர் நடிக்க வெளியாகி வெற்றி பெற்றது.

இதையெல்லாம் தாண்டி முந்தானை முடிச்சு (1983) திரைப்படத்தின் ரீமேக்கான 'மாஸ்டர்ஜி' (1985) பெற்ற வெற்றி பாக்யராஜின் பெயரை மும்பை திரையுலக வட்டாரங்களில் பிரபலப்படுத்தியது.

1985இல் பாரதிராஜா இயக்கத்தில் கமல், ராதா, ரேவதி நடிப்பில் வெளியான 'ஒரு கைதியின் டைரி' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருந்தார் பாக்யராஜ்.

இந்தத் திரைப்படம் தான் இந்தியில் 'ஆக்ரி ராஸ்தா' என ரீமேக் செய்யப்பட்டது.

ஆனால், முதலில் இந்தத் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு பெரிய நம்பிக்கை இருக்கவில்லை என ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருப்பார் பாக்யராஜ்.

"காரணம், எனது திரைப்படங்கள் அங்கு ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றிருந்தாலும் அவை அனைத்தும் குடும்ப படங்கள். அமிதாப் ஒரு மாஸ் ஹீரோ. எனவே என்னால் ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுக்க முடியுமா என அவர் நினைத்தார். அப்போது பார்த்திபன் தான் என்னுடைய உதவி இயக்குநர். நானும் அவரும் சேர்ந்து எப்படியோ அவருக்கு காட்சிகளைப் புரிய வைத்து திரைப்படத்தை எடுத்தோம்," என்று பேசியிருப்பார் பாக்யராஜ்.

'ஆக்ரி ராஸ்தா' திரைப்படத்தின் கதை எளிமையானது தான். டேவிட் டி'கோஸ்டாவின் (அமிதாப் பச்சன்) மனைவி மேரி, அரசியல்வாதி சதுர்வேதியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொள்கிறார். சதுர்வேதி, காவல் அதிகாரி சஹாய் மற்றும் மருத்துவர் வர்மா ஆகியோர் இணைந்து, இந்த மரணத்திற்கு டேவிட் தான் காரணம் எனப் பொய் சாட்சியம் அளித்து அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கின்றனர். சிறைக்குச் செல்லும் முன், தனது மகன் ஜேம்ஸை ஒரு குற்றவாளியாக வளர்க்கும்படி நண்பர் மகேஷிடம் டேவிட் கூறுகிறார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகும் டேவிட், அந்த மூவரையும் கொல்லத் திட்டமிடுகிறார். ஆனால், மகேஷ் அவரது மகனை 'விஜய்' என்ற பெயரில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியாக வளர்த்துள்ளதை டேவிட் அறிகிறார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. திட்டமிட்டபடி சஹாய் மற்றும் வர்மாவை டேவிட் கொலை செய்கிறார்.

விசாரணையின் மூலம் தனது உண்மையான பெற்றோர் குறித்தும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் விஜய் அறிந்துகொள்கிறார்.

இறுதிக்கட்டத்தில், சதுர்வேதியைக் கொல்ல முயலும் டேவிட்டை, ஒரு காவல் அதிகாரியாக தனது கடமையைச் செய்வதற்காக விஜய் துப்பாக்கியால் சுடுகிறார். கீழே விழும் டேவிட், இறப்பதற்கு முன் சதுர்வேதியைச் சுட்டுக்கொல்கிறார்.

அமிதாப்- பாக்யராஜ் இடையேயான விவாதம்

'விஜய்'- பாலிவுட்டில் இந்தத் திரைப் பெயர் அமிதாப் பச்சனுக்காகவே மிகவும் புகழ் பெற்றது. சஞ்சீர், டான், ஷக்தி, அக்னீபத் என அமிதாப்பின் பல 'ஆங்கிரி யங் மேன்' கதாபாத்திரங்களின் பெயர் விஜய் தான்.

'ஆக்ரி ராஸ்தா' படப்பிடிப்பின்போது தனக்கும்- அமிதாப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்தும் ஒரு நேர்காணலில் பதிவு செய்திருப்பார் பாக்யராஜ்.

"கதைப்படி, தந்தை எனத் தெரியாமல் மகன் அமிதாப், தந்தையுடன் ஆங்கிலத்தில் தர்க்கம் செய்ய வேண்டும். அந்தக் காட்சிக்கு ஏன் ஆங்கிலம் தேவை என்றால், மகன் பிறப்பதற்கு முன், தாய்தான் தந்தை அமிதாப்பிற்கு ஆங்கிலம் கற்றுக்கொடுப்பார். அப்போது நான் ஒருநாள் உன் மகனை விட நன்றாக ஆங்கிலம் பேசுகிறேன் பார் என அமிதாப் சவால் விடுத்திருப்பார். பின்னர் மனைவி இறந்துவிட, பல ஆண்டுகள் கழித்து அவரது கல்லறையைப் பார்வையிட தந்தை அமிதாப் வருவார்."

"அப்போது அங்கு ஒரு குற்றவாளியைப் பிடிக்க அங்கு வரும் மகனுக்கும் தந்தைக்கும் ஆங்கிலத்தில் விவாதம் நடக்கும். இறுதியில் பேசி ஜெயித்து விட்டு, மனைவி கல்லறைக்கு வந்து, பார்த்தாயா நான் தான் ஆங்கிலத்தில் பேசி ஜெயித்தேன் என தந்தை சொல்ல வேண்டும். ஆனால், அமிதாப் ஆங்கிலத்தில் பேச முடியாது எனக் கூறிவிட்டார்" என கூறியிருப்பார் பாக்யராஜ்.

"இவ்வளவு பெரிய வசனங்களை ஆங்கிலத்தில் பேசினால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்களுக்குப் புரியாது என அவர் கூறினார். இறுதியில் நான் பிடிவாதமாக இருக்க ஆங்கிலத்தில் பேசி நடிக்க ஒப்புக்கொண்டார். திரைப்படம் வெளியான பிறகு, 'பாக்யராஜ் நீங்கள் சொன்னது தான் சரி, இதில் மொழி முக்கியமில்லை, உணர்வுகள் தான் முக்கியம் எனப் புரிந்துகொண்டேன் எனக் கூறினார்," என அந்த நேர்காணலில் கூறியிருப்பார் பாக்யராஜ்.

அதேபோல நடிகர் அமிதாப் பச்சனும் 'ஆக்ரி ராஸ்தா' திரைப்படம் குறித்து ஒரு இந்தி வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது, "80களில் நான் நடித்த ஆக்ஷன் திரைப்படங்கள் அனைத்தும் எனக்காக வெற்றி பெற்றன என்றும், ஆனால் 'ஆக்ரி ராஸ்தா' திரைப்படம் மட்டும் பாக்யராஜின் திரைக்கதைக்காக வெற்றி பெற்றது என்றும் என் மனைவி ஜெயா பச்சன் கூறினார்." எனப் பேசியிருப்பார்.

புதிய கிளைமாக்ஸ்

இதில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 'ஒரு கைதியின் டைரி' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் வேறு, 'ஆக்ரி ராஸ்தா'-வின் கிளைமாக்ஸ் வேறு.

"தமிழில் எடுக்கும்போது நான் சொன்ன கிளைமாக்ஸை எங்கள் டைரக்டர் (பாரதிராஜா) எடுக்கவில்லை. பட்ஜெட் அதிகமாகும் என விட்டுவிட்டார். ஆனால் இந்தியில் எடுத்தபோது நான் நினைத்த கிளைமாக்ஸ் தான் எடுப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கு அந்தக் காலத்தில் 5 முதல் 6 லட்சம் ரூபாய் செலவானது. ஆனால் திரைப்படத்தின் வெற்றி எனக்கு நிறைவு அளித்தது," என பாக்யராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

'ஒரு கைதியின் டைரி'-யில் 'சத்ரபதி சிவாஜி சிலை' போல வேடமிட்டு தந்தை கதாபாத்திரம் தனது எதிரியைக் கொல்ல முயற்சிப்பது போல கிளைமாக்ஸ் இருக்கும். 'ஆக்ரி ராஸ்தா'-வில் பாதாள சாக்கடைக்குள் இறுதி சண்டைக் காட்சிகள் நடப்பது போல படமாக்கப்பட்டிருக்கும்.

'ஆக்ரி ராஸ்தா' விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை அமிதாப் பச்சனின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக 'ஆக்ரி ராஸ்தா' பாலிவுட் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு