14வது பிரசவத்தில் மரணம்: காதல் சின்னத்தில் மறைந்துள்ள மும்தாஜின் வலி நிரம்பிய கதை

    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ஜூன் 17, 1631 அன்று, தக்காணத்தின் (தென்னிந்தியா) முகலாயத் தலைமையகமான பர்ஹான்பூரின் கடுமையான கோடை வெப்பத்தில், ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் அன்பிற்குரிய ராணியான மும்தாஜ் மஹால், பதினான்காவது முறையாகப் பிரசவ வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் ஒன்றாக வாழ்ந்த 19 ஆண்டுகளில், இந்த அரச தம்பதியருக்கு ஏற்கனவே பதிமூன்று குழந்தைகள் பிறந்திருந்தன, அவர்களில் ஏழு பேர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.

உயிரோடு இருந்த ஆறு குழந்தைகளில் ஜஹான் ஆரா மூத்தவர் ஆவார். அப்போது அவருக்கு 17 வயது. பிரசவத்தின் போது ஜஹான் ஆரா தனது தாயாருடன் இருந்தார்.

அரச மருத்துவர்களும் அங்கு இருந்தனர். 17 வயதான ஜஹான் ஆரா, ஏற்கனவே தனது தாயாருக்குப் பல பிரசவங்களின் போது உதவியிருந்தார்.

ஆனால் இந்த முறை, பதினான்காவது குழந்தை பிறக்கும் சமயத்தில் ஏதோ ஒன்று தவறாக நடந்தது.

சுப்ரியா காந்தி தனது 'அரியணை ஏறாத பேரரசர்: முகலாய இந்தியாவில் தாரா ஷிகோ' (The Emperor Who Never Was: Dara Shikoh in Mughal India) என்ற புத்தகத்தில், புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர் காலனின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட முகலாய மருத்துவர்கள், மனித உடலை நான்கு திரவங்கள் அல்லது கூறுகளின் கலவையாகக் கருதினர் என்றும், அவர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியம் என்பது இந்த கூறுகளின் பரஸ்பர சமநிலையைச் சார்ந்தது என்றும் எழுதியுள்ளார்.

அதன்படி , மும்தாஜ் உடலில் இந்தச் சமநிலை மிக வேகமாக சீர்குலைந்து கொண்டிருந்தது.

30 மணி நேரப் பிரசவ வலிக்குப் பிறகு, மும்தாஜ் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதுடன், அவரது நிலைமை வேகமாக மோசமடையத் தொடங்கியது.

நவீன மருத்துவத்தில் 'பிரசவத்திற்குப் பிறகான ரத்தப்போக்கு' , அதாவது பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு என்று அழைக்கப்படும் ஒரு சிக்கலுக்கு அவர் ஆளாகியிருக்கலாம்.

வலியால் துடித்த மும்தாஜ், ஷாஜஹானை அழைக்குமாறு ஜஹான் ஆராவிடம் கேட்டார்.

துக்கத்தில் மூழ்கிய பேரரசர் உடனடியாக வந்து மும்தாஜின் படுக்கைக்கு அருகில் அமர்ந்தார்.

மற்ற குழந்தைகளால் அவரை வந்தடைய முடியவில்லை, ஆனால் பேரரசரிடம் தனது குழந்தைகளையும் தாயையும் அவரது பொறுப்பில் ஒப்படைப்பதாக மும்தாஜ் கூறினார்.

அதன் பின்னர், மும்தாஜ் தனது 38 ஆவது வயதில் காலமானார்.

அன்பு நிறைந்த வாழ்க்கை

ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் மஹால் ஆகியோரின் திருமணம் 1612 இல் நடைபெற்றது. ஷாஜஹான் அப்போது இளவரசர் குர்ரம் என்றும், மும்தாஜ் மஹால் அர்ஜுமந்த் பானு பேகம் என்றும் அறியப்பட்டனர்.

திருமணம் நடந்த சில காலத்திலேயே, இளவரசர் குர்ரம், அர்ஜுமந்த் பானு பேகத்திற்கு 'மும்தாஜ் மஹால்' என்ற பட்டத்தை வழங்கினார்; இதற்கு 'அரண்மனையின் மிகச் சிறந்த பெண்மணி' என்று பொருளாகும்.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, மும்தாஜ் மஹால் மற்றும் ஷாஜஹானின் திருமண வாழ்க்கை அன்பு மற்றும் பரஸ்பர பாசம் நிறைந்ததாக இருந்தது.

1628 இல் அரியணை ஏறிய பிறகு, ஷாஜஹான் மும்தாஜ் மஹாலுக்கு 'பாட்ஷா பேகம்', 'மலிகா-ஏ-ஜஹான்', 'மலிகா-ஏ-ஜமானி' மற்றும் 'மலிகா-ஏ-ஹிந்துஸ்தான்' ஆகிய பட்டங்களை வழங்கியதோடு, அவருக்கு அனைத்து வகையான வசதிகளையும் நன்மைகளையும் வழங்கினார்.

அலிசன் பேங்க்ஸ் ஃபைண்ட்லி எழுதிய "நூர் ஜஹான்: முகலாய இந்தியாவின் பேரரசி" (Nur Jahan: Empress of Mughal India) என்ற புத்தகம், ஷாஜஹான் அர்ஜுமந்த் பானுவுடனான தனது திருமணத்திற்கு முன்பும் பின்பும் தலா ஒரு முறை என மேலும் இரண்டு திருமணங்களை செய்து கொண்டார் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த முதலாவது மற்றும் மூன்றாவது திருமணங்கள் அரசியல் கூட்டணிகளுக்காகச் செய்யப்பட்டவை என்றும், அவை ஒவ்வொன்றிலும் தலா ஒரு குழந்தை பிறந்தது என்றும் அரசவை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

"ஆனால் வேறு எந்த அரசியின் அரண்மனையும் 'காஸ் மஹால்' போல பிரமாண்டமாக இருக்கவில்லை. மும்தாஜ் மஹால் அங்கு தான் ஷாஜஹானுடன் வசித்து வந்தார்.

தூய தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த அரண்மனையில் பன்னீர் நீரூற்றுகள் இருந்தன."

"முகலாய பேரரசரின் ஒவ்வொரு மனைவிக்கும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. மிக அதிக தொகையாக ஆண்டுக்கு பத்து லட்சம் (ஒரு மில்லியன்) ரூபாயை ஷாஜஹான் மும்தாஜ் மஹாலுக்கு வழங்கினார். கூடவே, அவருக்குப் பெரும் லாபம் தரக்கூடிய பல சொத்துகளும் வழங்கப்பட்டன."

மும்தாஜ் மஹால் அரசாங்க விவகாரங்களிலும் சரி, தனிப்பட்ட விஷயங்களிலும் சரி, ஷாஜஹானின் நெருங்கிய தோழியாகவும் நம்பகமான ஆலோசகராகவும் இருந்தார்.

வால்டிமர் ஹேன்சன் தனது 'மயில் சிம்மாசனம்' (The Peacock Throne)என்ற புத்தகத்தில், மும்தாஜ் மஹால் தனது அத்தையான நூர் ஜஹானைப் போலவே, பேரரசருடன் அந்தரங்க மற்றும் பொது நீதிமன்றங்கள் இரண்டிலும் உடன் சென்றார் என்று எழுதியுள்ளார்.

"அவர் ஒரு திரைக்குப் பின்னால் இருப்பார், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தால், பிறர் பார்வையில் படாதவாறு ராஜாவின் முதுகில் தன் கையை வைப்பார். அவரது பரிந்துரையின் பேரில், அவர் தனது எதிரிகளை மன்னிப்பார் அல்லது அவர்களின் மரண தண்டனையைக் குறைப்பார்."

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஷாஜஹான் அவருக்கு அரச முத்திரையை வழங்கியிருந்தார், இது அரச கட்டளைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்பட்டது. அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது.

மும்தாஜ் மஹால் அரசியல் அதிகாரத்தை விரும்பவில்லை, ஆனால் ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவுவதற்காகத் தனது அசாதாரண செல்வாக்கை அவர் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார்.

வரலாற்றாசிரியர் சுப்ரியா காந்தியின் கூற்றுப்படி, மும்தாஜ் மஹாலின் முத்திரையைக் கொண்ட ஒரு ஆணை இன்றும் உள்ளது, அதில் அவர் காந்தேஷின் மராத்தி பேசும் மாவட்டமான எரண்டோல் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

"அவர் புதிய தேஷ்முக் (சதர்) கனோஜியை அவரது பதவியில் உறுதிப்படுத்துவதோடு, ரயத்துகளின் (குடிமக்களின்) நலனைக் கவனித்து, அவர்கள் பேரரசருக்கு நன்றியுடன் இருக்கும்படி செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த உத்தரவு அநேகமாக அரசியால் பிறப்பிக்கப்பட்ட எண்ணற்ற அதிகாரப்பூர்வ ஆணைகளில் ஒன்றாக இருக்கலாம். அவரது விசுவாசமான உதவியாளரான சதி-உல்-நிசா அவளது முத்திரையைத் தாங்குபவராக நியமிக்கப்பட்டார்."

"சதி-உல்-நிசா பெண்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பார், மும்தாஜ் மஹால் அவற்றை பேரரசரின் கவனத்திற்குக் கொண்டு செல்வார். மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளிலும் அரசி பரிந்துரைகளைச் செய்து, பெரும்பாலும் ஷாஜஹானிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுத் தந்தார்."

அரசவை வரலாற்றாசிரியர்கள் அவர்களுடைய பாசத்தையும் உறவையும் மிகவும் அசாதாரணமானதாகக் கருதியுள்ளனர். அரச தம்பதிகளைப் பற்றி வழக்கமாகப் பேணப்படும் எச்சரிக்கைகளைத் தாண்டி, இருவருக்கும் இடையே இருந்த ஆழமான உணர்ச்சி மற்றும் திருமண பந்தத்தை அவர்கள் விரிவாக விவரித்துள்ளனர்.

மும்தாஜ் மஹால் ஷாஜஹானின் ஆரம்பகால போர்களின் போதும், பின்னர் அவரது தந்தை ஜஹாங்கீருக்கு எதிரான கிளர்ச்சியின் போதும் அவருடன் சென்றார்.

பர்ஹான்பூரிலும் கூட, ஒரு கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகப் பேரரசர் இருந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவிலேயே அரசியின் பிரமாண்டமான மற்றும் அலங்கரிக்கப்பட்ட கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.

மிகப்பெரிய அதிர்ச்சி

மும்தாஜ் மஹால் தனது பதினான்காவது பிரசவத்தின் போது காலமானார், ஆனால் அந்தப் பெண் குழந்தை உயிர் பிழைத்தது.

அக்குழந்தைக்கு "ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்" என்று பொருள்படும் 'கௌஹர் ஆரா' என்று பெயரிடப்பட்டது.

ஷாஜஹானின் பிள்ளைகளும் பெரும் துயரத்தை அனுபவித்திருக்க வேண்டும் என்றாலும், பேரரசரின் துயரத்தைப் பற்றியே ஷாஜஹானின் வரலாற்றாசிரியர்கள் அதிக விவரங்களை வழங்கியுள்ளனர்.

ஷாஜஹானின் அரசவை வரலாற்றாசிரியரான அப்துல் ஹமீத் லாகோரி 'பாட்ஷானாமா' என்ற நூலில், "பெருமூச்சுகளின் வெப்பமும் கண்ணீரின் ஈரப்பதமும், அதுவரை இருளின் முகத்தையே பார்த்திராத சூரியனைப் போன்ற பேரரசரின் இதயக் கண்ணாடியைத் துருப்பிடிக்கச் செய்து மங்கலாக்கியது." என்று எழுதியுள்ளார்.

மும்தாஜ் மஹாலின் மரணத்திற்குப் பிறகு, பேரரசர் வெள்ளை நிற உடை அணிந்தார். இளவரசர்கள், அரசவையினர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் துக்க ஆடைகளை அணிந்தனர்.

ஒரு வாரத்திற்கு, ஷாஜகான் ஜன்னலுக்கு வெளியே தோன்றவோ அல்லது எந்த அரச கடமைகளிலும் கலந்துகொள்ளவோ ​​இல்லை.

அவரது மனைவியின் மரணத்திற்கு முன்பு, அவரது தலையில் இருபது நரை முடிகள் கூட இல்லை, ஆனால் விரைவில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. நீண்ட நாட்களாக அவரால் தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தனது 16 ஆவது வயதில், தாரா ஷிகோ தனது தாயார் மும்தாஜ் மஹால் தப்தி நதிக்கரையில் உள்ள ஜைனாபாத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டார்.

ஷாஜஹான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த கல்லறைக்குச் சென்றார், தாரா ஷிகோவும் அவரது சில சகோதரர்களும் அநேகமாக அவருடன் சென்றிருக்கலாம்.

மன்னரின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் "அவரது நிழல் அந்த கல்லறையின் மீது விழுந்த உடனே, அவரது கண்ணீரின் ஈரப்பதம் கல்லறையை சென்றடைந்தது" என்று கவிஞர் கலீம் எழுதியுள்ளார்.

ஆனால் வரலாற்றாசிரியர் சுப்ரியா காந்தியின் கூற்றுப்படி, பர்ஹான்பூர் மும்தாஜ் மஹாலின் இறுதி ஓய்விடமாக இருக்க வேண்டும் என்று ஷாஜஹான் ஒருபோதும் நினைக்கவில்லை.

ஆக்ராவில் உள்ள யமுனை நதிக்கரையில் உள்ள ஒரு அழகான இடத்தின் மீது அவரது கவனம் இருந்தது.

"இந்த நிலத்தை ஷாஜஹான் தனது அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜா ஜெய் சிங்கிடமிருந்து பெற்றார், அதற்கு ஈடாக அரச சொத்துகளிலிருந்து நான்கு பிரமாண்டமான கட்டடங்களை அவருக்கு வழங்கினார்."

டிசம்பர் 1631-இல், மும்தாஜ் மஹாலின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது, அவரது மகன் ஷுஜா அவளது சவப்பெட்டியுடன் ஆக்ராவிற்குச் சென்றார். சதி-உல்-நிசாவும் அவர்களுடன் சென்றார்.

இறுதி ஊர்வலம் செல்லும் வழியெங்கும் நாணயங்களையும் உணவையும் விநியோகித்ததாகச் சுப்ரியா காந்தி எழுதுகிறார். ஆக்ராவை அடைந்ததும், பிறர் பார்வையில் படாமல் பாதுகாப்பதற்காகக் கல்லறைக்கு மேல் ஒரு சிறிய குவிமாடம் கட்டப்பட்டது.

மனம் உடைந்த ஷாஜஹான் பின்னர் ஒரு பிரமாண்டமான நினைவிடத்தைத் திட்டமிடத் தொடங்கினார், அதற்கு அவர் 'தாஜ்மஹால்' என்று பெயரிட்டார். ஷாஜஹானுக்கு அவரது இளமைக் காலம் முதலே கட்டடக்கலையில் ஆர்வம் இருந்தது.

பிரெஞ்சு ரத்தின வியாபாரியான ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியரின் பயணக் குறிப்பின்படி, இந்தத் திட்டத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் ஆயிரம் யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

தாஜ்மஹாலின் பணிகள் 22 ஆண்டுகள் தொடர்ந்தன, அதன் செலவு அந்த காலத்திலேயே ஐம்பது லட்சம் ரூபாயை எட்டியது, இதனால் முகலாய கருவூலம் பெருமளவில் காலியானது.

ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டுவதில் மிகவும் மூழ்கியிருந்ததால், சுல்தானியத்தின் மற்ற விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று ஈவா பெர்னாண்டஸ் டெல் காம்போ எழுதியுள்ளார்.

1658 இல், ஔரங்கசீப் தனது தந்தையிடமிருந்து (ஷாஜஹான்) அதிகாரத்தைக் கைப்பற்றி, தனது சகோதரர்களையும் கொன்றார்.

ஷாஜஹான் ஆக்ரா கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் 1666-இல் இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டிருந்தார்.

கருங்கற்களால் கல்லறை கட்ட திட்டமிட்டிருந்த ஷாஜஹான்

ஷாஜஹான் தனது துயரத்தை பிரதிபலிக்கும் வகையில், கருங்கற்களால் தனக்காகவும் ஒரு கல்லறையை கட்ட திட்டமிட்டிருந்தார் என்றும், அது தாஜ் மஹாலுடன் ஆற்றின் மீது பாலம் மூலம் இணைக்கப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த யோசனை முதன்முதலில் 1665ஆம் ஆண்டின் பிரெஞ்சு பயணி ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியரின் எழுத்துகளில் விவாதிக்கப்பட்டது.

ஷாஜகான் தனது சொந்தக் கல்லறையைக் கட்டத் தொடங்கியதாகவும், ஆனால் அவரது மகன் ஔரங்கசீப்பால் அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால் அது நிறைவடையவில்லை என்றும் அந்த எழுத்துகள் குறிப்பிட்டன.

இருப்பினும், பெருமளவிலான நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்றாசிரியர்களும் இதை வெறும் வதந்தி என்றே கருதுகின்றனர்.

தாஜ் மஹாலில் உள்ள ஷாஜஹானின் கல்லறை மும்தாஜ் மஹாலின் கல்லறையைப் போலச் சரியாக மையப்பகுதியில் இல்லாமல், அதற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.

இந்தத் சீரற்ற அமைப்பு, ஒருவேளை ஷாஜஹானின் கல்லறை வேறு எங்காவது கட்டப்படவிருந்ததோ என்று சிலரை முடிவு செய்யத் தூண்டியுள்ளது.

இருப்பினும், தாஜ் மஹால் மும்தாஜ் மஹாலுக்காக மட்டுமே கட்டப்பட்டது, அதே சமயம் ஷாஜஹான் அவரது மரணத்திற்குப் பிறகு மும்தாஜுடன் அடக்கம் செய்யப்பட்டார். எனவேதான், அவரது கல்லறை மையப்பகுதியில் இல்லாமல் தள்ளி அமைந்துள்ளது.

தாஜ்மஹால் 1648-ல் கட்டி முடிக்கப்பட்டது என்றும், "ஒருவேளை வேறு திட்டம் இருந்திருந்தால், அதற்கான உறுதியான சான்றுகள் இருந்திருக்கும். அதேபோல் சமகால பாரசீக வரலாற்றாசிரியர்களும் அதைக் குறிப்பிட்டிருப்பார்கள், ஆனால் அவர்கள் மௌனம் காக்கிறார்கள்" என்றும் ஆர். நாத் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.

தாஜ்மஹாலும் குழந்தை பிறப்பும்

'மெட்ராஸ் கூரியர்' பத்திரிகையின்படி, தாஜ்மஹால் காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது, ஆனால் உண்மையில் அது மகப்பேறு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்.

"ஷாஜஹானின் அனைத்து மனைவிகளிலும் மும்தாஜ் மஹால் தான் அவருக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தார். நடைமுறை ரீதியாகப் பார்த்தால், அவர் ஷாஜஹானுக்காகப் பதினான்கு முறை கர்ப்ப கால வலியைத் தாங்கினார். மும்தாஜ் மஹால் அவரது திருமண வாழ்க்கையின் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பமாகவே இருந்தார். இந்த பதினான்கு கர்ப்பங்களில், ஏழு குழந்தைகள் (மூன்று மகள்கள் மற்றும் நான்கு மகன்கள்) மட்டுமே உயிர் பிழைத்தன, மேலும் பதினான்காவது குழந்தையின் பிறப்புதான் மும்தாஜ் மஹாலின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது."

"மும்தாஜ் மஹால் பிரசவத்தின்போது ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளால் காலமானார்".

ஆனந்த் குமார் தனது 'காதலின் நினைவுச் சின்னம் மற்றும் மகப்பேறு மரணத்தின் அடையாளம்' என்ற கட்டுரையில், மும்தாஜ் மஹாலின் தொடர்ச்சியான மற்றும் பலமுறை நிகழ்ந்த கர்ப்பங்கள் அவரது ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்தன என்றும், இறுதியில் அவரது மரணத்தில் முடிவடைந்தன என்றும் எழுதியுள்ளார்.

"மறுபுறம், பதினேழாம் நூற்றாண்டில் ஸ்வீடனில், ராணி உல்ரிகா எலினோரா பிரசவ மரணங்கள் என்ற பிரச்னைக்குத் தீர்வு காணப் பல தீர்வுகளை அறிமுகப்படுத்தினார். அவர் முதலாவது மகப்பேறு மருத்துவப் பள்ளியை நிறுவியதோடு, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு பெண்களுக்கு மகப்பேறு மருத்துவத்தில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார்."

பதினேழாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசில் பிரசவத்திற்குப் பிறகான அதிகப்படியான ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை, ஆனால் பிரசவத்தின் போதோ அல்லது அதற்குப் பிறகோ பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது என்றும், அதிகப்படியான ரத்தப்போக்கு அதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் மருத்துவ வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

முகலாயர் காலத்தில் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மிகவும் சிறப்பாக இருந்தன. ஐரோப்பிய பயணிகளும் வரலாற்றாசிரியர்களும் கூட இதைக் குறிப்பிட்டுள்ளனர்.

தாஜ் மஹாலுக்காகச் செலவழிக்கப்பட்ட மகத்தான செல்வத்தில் ஒரு சிறிய பகுதியையாவது மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான ஒரு மருத்துவமனையைக் கட்டுவதற்குச் செலவிட்டிருந்தால், அது காதலின் அடையாளமாக மாறியது மட்டுமன்றி, பிரசவம் தொடர்பான சிக்கல்களால் பல நூற்றாண்டுகளாக இளம் வயதிலேயே இறந்து போகும் எண்ணற்ற சாதாரண மும்தாஜ் மஹால்களின், அதாவது பெண்களின் உயிரையும் காப்பாற்றியிருக்கும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அதாவது, தாஜ் மஹால் காதலின் அழியாத அடையாளமாக மட்டும் நிலைத்திருக்காமல், பெண்களின் வாழ்வின் சின்னமாகவும் மாறியிருக்கும் என்பது தான் இதன் பொருள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு