சிந்து நதிநீர் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கூறிய கருத்து - இந்தியாவின் நிலைப்பாடு சர்ச்சையாவது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவுடன் எந்தவிதமான 'மோதலையோ' அல்லது 'சர்ச்சையையோ' பாகிஸ்தான் நாடவில்லை என்றாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் நீர் வளங்களைத் தடுத்து வைக்கும் எந்தவொரு முயற்சியும் 'போர் நடவடிக்கையாக' கருதப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை 'இந்தியா ஒருதலைப்பட்சமாக ரத்து செய்வதற்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை; சர்வதேச சட்டத்திலும் இதற்கு இடமில்லை' என்று கூறினார்.

இஷாக் தாரின் இந்த புதிய அறிக்கை குறித்து இந்தியா இதுவரை எந்தவொரு எதிர்வினையையும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றம் சாட்டிய இந்திய அரசு, அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை நாடியது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது.

ஆனால் இந்தத் தீர்ப்பை நிராகரித்த இந்தியா, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்ந்து இடைநிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.

பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியாவின் சிந்து நதிநீர் ஒப்பந்த இடைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் நீரைத் தடுக்கவோ அல்லது திசைதிருப்பவோ இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் 'போர் நடவடிக்கையாக' கருதப்படும் என பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

பாகிஸ்தான் 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முழுமையாக நிறுத்தும்' வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்தி வைக்கப்பட்டே இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூன் 5 அன்று தெரிவித்தார்.

இஷாக் தார் என்ன சொன்னார்?

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக்குழுவின் அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், பாகிஸ்தான் தற்போதும் அதே நிலைப்பாட்டில்தான் உறுதியாக உள்ளது என்றும், 'தங்களின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை நாடு உறுதி செய்யும்' என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், 'மாறுபட்ட கருத்துகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இருதரப்புப் பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதையே பாகிஸ்தான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. இருப்பினும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள நீர் உரிமைகளைப் பறிப்பதற்கான எந்தவொரு முயற்சியும், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பின் மீது ஆழமான மற்றும் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும்' என்றார்.

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் அரசுப் பிரதிநிதிகள் தவிர, பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பாகிஸ்தானின் சிந்து நதி நீர் ஆணையத் தலைவர் சையத் முகமது மெஹர் அலி ஷா, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியத் தரப்பு அதிகாரியிடம் நான்கு முறை கடிதம் எழுதியும், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் என்பது 'தொழில்நுட்பப் பிரச்னை'அல்ல, மாறாக அதுவொரு 'மூலோபாய அச்சுறுத்தல்' என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்

பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் பேசியபோது, "2025 ஏப்ரல் முதல் பாகிஸ்தான் கடுமையான கவலைகளை ஏற்படுத்தக்கூடிய தொடர்ச்சியான பல நடவடிக்கைகளைக் கண்டுள்ளது. செனாப் மற்றும் ஜீலம் நதிகளிஃன் நீர்வரத்தில் திடீரென ஏற்படும் அசாதாரண ஏற்ற இறக்கங்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் ஆகியவை இதில் அடங்கும்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "சர்வதேச எல்லைகளைக் கடந்து செல்லும் நதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்தல், பகிரப்பட்ட நீர் வளங்களை ஆயுதமாகப் பயன்படுத்துதல், மோதல் பாதையைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மீறுதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை இது வெறும் சட்டரீதியான விவாதம் மட்டுமல்ல என்று குறிப்பிட்ட அவர், "தண்ணீர் என்பது 25 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாகும். நமது விவசாயம், பாதுகாப்பு, மின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை தடையற்ற நீர்வரத்தைச் சார்ந்தே உள்ளன" என்றார்.

நதிகளின் பாதுகாப்பு என்பது 'நமது தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது' என்று இஷாக் தார் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில்,"மோதல் சூழலை உருவாக்குவதிலிருந்தும், பகிரப்பட்ட நீர் வளங்களைச் சர்ச்சைக்கான கருவியாக மாற்றுவதிலிருந்தும், எங்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது ஆகியவற்றை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் முழு தீவிரத்துடன் அறிவுறுத்துகிறோம்" என்றார்.

நதிகள் மீதான இந்தியாவின் திட்டங்கள்

இந்தியா சமீபத்தில் 'செனாப்-பியாஸ் இணைப்புச் சுரங்கப்பாதை' திட்டத்தை அறிவித்திருந்தது, இதன் கீழ் செனாப் நதியிலிருந்து சுமார் 19 லட்சம் ஏக்கர் அடி தண்ணீரை இந்தியாவின் பியாஸ் கால்வாய் அமைப்பை நோக்கித் திருப்ப முடியும்.

இத்திட்டத்திற்காக நிறுவனங்களிடமிருந்து இந்தியா ஒப்பந்தப்புள்ளிகளையும் கோரியுள்ளது.

மே 22 அன்று, பாஜக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: 'சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகு, இப்போது இறுதியாக இந்தியா தனது மேற்கு நதிகளின் திறனை நீர்மின் உற்பத்தி, நீர் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்.'

பாஜகவின் இந்த பதிவின்படி, இந்தச் சுரங்கப்பாதை 8.7 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும், இது சந்திரா நதியிலிருந்து உபரித் தண்ணீரை பியாஸ் நதியை நோக்கித் திருப்பிவிடும்.

இமாச்சலப் பிரதேசத்தில் இச்சுரங்கப்பாதையை அமைப்பதற்காக, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான தேசிய நீர்மின்சக்தி கழகம் (NHPC) கடந்த மாதம் ஒப்பந்தப்புள்ளி ஒன்றை வெளியிட்டது.

இந்தச் சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேசத்தின் 'கோக்சர்'பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இந்திய செய்தி முகமையான ஏஎன்ஐ வழங்கிய தகவலின்படி, செனாப்-பியாஸ் இணைப்புத் திட்டம் 2620 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேச ஆளுநர் கவிந்தர் குப்தாவும் இத்திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டம் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்தது என்றும், இதன் மூலம் நாடு தனது நீர் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும் என்றும் கூறியிருந்தார்.

ஏஎன்ஐ தகவலின்படி, சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் குப்தா, 'செனாப்-பியாஸ் இணைப்புச் சுரங்கப்பாதை திட்டம் தேசிய நலனுக்கான ஒரு முக்கியமான படியாகும். இந்தியாவின் தண்ணீர் முதலில் அதன் மக்கள் மற்றும் மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய திட்டங்கள் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல்கள் என்று கூறி, பாகிஸ்தான் இப் பிரச்சினையைத் தொடர்புடைய தீர்ப்பாயத்திற்கு (Tribunal) கொண்டு சென்றுள்ளது.

மறுபுறம், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தியாவின் நீர் வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் சில வாரங்களுக்கு முன்பு கூறுகையில், 'இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது, பிரதமர் மோதி இந்த முடிவை எடுத்ததில் இருந்து, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட செல்லாமல் இருக்க சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.

மேலும் "பிரதமரின் அறிவுறுத்தலின்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவே இந்த விவகாரத்தை நேரடியாகக் கண்காணித்து வருவதுடன், இதனைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்" என்றும் சி.ஆர். பாட்டீல் கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு