மும்பை முஹர்ரம் ஊர்வலத்தில் விஷ மாத்திரை விநியோகித்த நபரை இந்த இரு பெண்களும் பிடித்தது எப்படி?

    • எழுதியவர், அல்பேஷ் கர்கரே
    • பதவி, பிபிசி மராத்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மும்பை பைகுல்லா பகுதியில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது, எலி விஷம் கலந்த மாத்திரைகளை விநியோகித்த ஒருவரை 2026 ஜூன் 26 அன்று போலீசார் கைது செய்தனர்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஊர்வலத்தில், இஹ்லாம் ஹமிதி மற்றும் ருக்ஸார் சையத் ஆகிய இரண்டு பெண்களின் விழிப்புணர்வால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த வழக்கில், புனேவைச் சேர்ந்த பயாஸ் பிரேம்ஜி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 14,900 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் துத்தநாக பாஸ்பைடு என்ற நச்சு ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகள் வேதியியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தின் போது, ஊர்வலத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த இஹ்லாம் ஹமிதி மற்றும் ருக்ஸார் சையத் ஆகியோரே சந்தேகம் மேலிட மாத்திரைகளை விநியோகித்த நபரை பிடித்தனர்.

பின்னர் அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவரை ஒப்படைத்தனர். இதன் காரணமாகத் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இருவருக்கும் எப்படி சந்தேகம் ஏற்பட்டது?

2026 ஜூன் 26 அன்று மாலையில், முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அஞ்ஜீர்வாடியிலிருந்து ரஹ்மத் பாக் மயானத்தை நோக்கி ஒரு ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த ஊர்வலத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது பல்வேறு மதச் சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது.

காட்கோபர் மற்றும் பைகுல்லா பகுதிகளில் வசிக்கும் இஹ்லாம் ஹமிதி மற்றும் ருக்ஸார் சையத் ஆகிய இரண்டு பெண்கள் இந்த ஊர்வலத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

இந்த இரு பெண்களுமே படித்தவர்கள். கடந்த சில ஆண்டுகளாக சமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஹ்லாம் ஹமிதி தொழில் ரீதியாக காபி வியாபாரம் செய்து வருகிறார். அவர் மும்பையின் பைகுல்லா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, அவர் முஹர்ரம் ஊர்வலத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார்.

ருக்ஸார் சையத் மும்பையின் புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் தொழில் செய்து வருகிறார். இஹ்லாம் மற்றும் ருக்ஸார் இருவரும் தொழிகள்/

ஜூன் 26 அன்று, ஊர்வலத்தின் போது, மக்களுக்கு உதவுவதற்காக அவர்கள் குறிப்பிட்ட ஒரு மசூதியில் நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கு நடந்த ஒரு சம்பவம் அவர்கள் இருவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வர வழிவகுத்தது.

மாத்திரைப் பொட்டலத்தில் தகவல் இல்லாததால் சந்தேகம்

பிபிசி மராத்தி ஊடகத்திடம் பேசிய ருக்ஸார் சையத், "நானும் இஹ்லாமும் மசூதிக்கு வெளியே தன்னார்வலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். ஊர்வலத்தால் சோர்வடைந்த மக்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, ஒரு நபர் பெருமளவிலான மாத்திரைகளைக் கொண்டு வந்தார். இந்த மாத்திரை அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும் என்று அந்த நபர் கூறிக் கொண்டிருந்தார்.

மக்கள் அதனை 'நியாஸ்-இ-ஹுசைன்' என்று கூறி வாங்கிக் கொண்டிருந்தனர். இமாம் ஹுசைனின் நினைவாக விநியோகிக்கப்படும் பிரசாதம் அல்லது ஆன்மீகப் பொருள் போல அவை வழங்கப்பட்டன. இரவு நேரம் என்பதால், அந்த பாக்கெட்டில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது சரியாகத் தெரியவில்லை" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இஹ்லாம் ஒரு மாத்திரை பாக்கெட்டை கையில் எடுத்தார். அதில் சரியாக எதுவும் எழுதப்படவில்லை. அதனால் தான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. நாங்கள் அந்த மாத்திரையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு கருப்பு நிறப் பொடி இருந்தது. இதைப் பற்றிய தகவல்களை கூகுளில் தேட முயன்றோம், ஆனால் எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இது ஏதேனும் ஆபத்தான பொருளாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம், அது சந்தேகத்திற்குரியதாக இருந்தது" என்றார்.

இதுகுறித்து ருக்ஸார் கூறுகையில், "அந்த நபர் முன்னால் வந்தார். அவர் அங்கிருந்து கிளம்ப முயன்றபோது நாங்கள் அவரைத் தடுத்து நிறுத்தினோம். அவர் கையில் ஒரு பெரிய நீல நிறப் பை இருந்தது. அதில் பெருமளவிலான மாத்திரைகள் இருந்தன. நாங்கள் விசாரித்த பிறகு அவர் பயந்து போனார். அவருடன் மேலும் இருவர் இருந்தனர். அவர்களின் பைகளிலும் மாத்திரைகள் இருந்தன.

நான் அவரது சட்டையைப் பிடித்தேன். நாங்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். ஊர்வலத்திலும் இதைப் பற்றி அறிவிப்பு செய்து, இந்த மாத்திரைகளை வாங்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டோம். அதன்பிறகு, மற்ற தன்னார்வலர்களுடன் இணைந்து மக்களிடமிருந்து அந்த மாத்திரைகளைச் சேகரித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம்" என்றார்.

'அந்த நபர் அந்த மாத்திரைகளைத் தூக்கி எறிந்துவிட்டதாகத் தெரிகிறது'

பிபிசி மராத்தி ஊடகத்திடம் பேசிய இஹ்லாம் ஹமிதி, "அந்த நபர் மாத்திரைகளை வீசிக் கொண்டிருந்தார். தப்ரூக் (பிரசாதம்) என்பது இப்படி வழங்கப்படாது. அதனால் தான் எனக்கு சந்தேகம் வந்த து. அவர் வீசிய மாத்திரைகளில் ஒன்று எனது காலுக்கு அருகில் விழுந்தது. நான் அதைத் திறந்து பார்த்தேன். முதலில், இது ஒரு ஆயுர்வேத மருந்து என்றுதான் நினைத்தேன். ஆனால் அதன் வாசனை மிகவும் கடுமையாக இருந்தது" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "அந்த பாக்கெட்டில் சில தகவல்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் மூன்று மாத்திரைகள் எப்படி இவ்வளவு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்தது. ருக்ஸாருக்கும் சந்தேகம் வந்தது. அவர் எங்களுக்கு முன்னால் வந்தவுடன், நாங்கள் அவரைத் தடுத்து நிறுத்திப் பிடித்தோம்.

அவர், 'நான் என்ன செய்தேன்?' என்று கேட்டார். அதற்கு நாங்கள், 'காவல்துறை பதில் சொல்லும்' என்று கூறினோம். நான் அவர் கையிலிருந்த பையைப் பறித்துக்கொண்டேன். இந்த மாத்திரைகளை வாங்க வேண்டாம் என்றும், அவற்றை தன்னார்வலர்களிடமும் போலீசாரிடமும் ஒப்படைக்குமாறும் மக்களிடம் கூறினோம். இந்த முழு சம்பவமும் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது" என்றார்.

காவல்துறை விசாரணையில் தெரியவந்தது என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர் புனேயின் விமான்நகரைச் சேர்ந்த 39 வயதான ஃபயாஸ் நிசார் பிரேம்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது பிஎன்எஸ் 109, 110 மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை மண்டலம்-1 இன் காவல்துறை துணை ஆணையர் (DCP) ஜெயந்த் மீனா இதுபற்றி கூறுகையில், "ஜூன் 27 அன்று நடைபெற்ற ஊர்வலத்தின் போது மாத்திரைகளை விநியோகித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை பைகுல்லா போலீசார் கைது செய்தனர். அந்த மாத்திரைகள் வலி நிவாரணிகள் என்று அந்த நபர் கூறியுள்ளார். இருப்பினும், அந்த மாத்திரைகளில் ஒன்றை உட்கொண்ட நபருக்கு வாந்தி மற்றும் பதற்றம் போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டன." என்றார்.

காவல்துறையின் உடனடி நடவடிக்கையால் இந்த மாத்திரைகள் மேலும் விநியோகிக்கப்படுவது தடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பிரிவு 123-இன் கீழ் பைகுல்லா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஊர்வலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதற்காக தீட்டப்பட்ட சதித்திட்டம் இது என்று குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

"அந்த நபர் 50 கிலோ துத்தநாக பாஸ்பைடு மற்றும் 30,000 காலியான மாத்திரைகளை வாங்கியுள்ளார். மும்பையில் தங்கியிருந்தபடி 15 நாட்களில் அவர் இவற்றை நிரப்பியுள்ளார். வலி நிவாரணிகள் என்று கூறி அவற்றை விநியோகிக்க அவர் திட்டமிட்டிருந்தார்" என துணை ஆணையர் ஜெயந்த் மீனா தெரிவித்தார்.

நான்கு பேருக்கு மாத்திரையால் பாதிப்பு

காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு பேர் இந்த மாத்திரைகளை உட்கொண்டது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை தற்போது சீராக உள்ளது.

இந்த மாத்திரையை உட்கொண்டதால் சிவாஜிநகரைச் சேர்ந்த சல்மான் சையத் என்பவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சல்மான் சையத் கூறுகையில், "ஊர்வலத்தின் போது எனக்கு உடல் சோர்வாக இருந்ததால், அந்த மாத்திரையை வாங்கினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, எனக்கு வாந்தியும் உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. இதன் காரணமாக, அருகில் இருந்தவர்கள் என்னை சிகிச்சைக்காக ஹபீப் மருத்துவமனையில் அனுமதித்தனர்" என்றார்.

சல்மானைப் போலவே, சையத் அப்பாஸ் என்பவரும் இந்த மாத்திரையை உட்கொண்டதால் பாதிக்கப்பட்டார்.

அவர் கூறுகையில், "ஊர்வலத்தின் போது, ஒரு நபர் வைட்டமின் சி மாத்திரை என்ற கூறி இந்த மாத்திரையை எனக்குக் கொடுத்தார். இது வைட்டமின் சி மாத்திரை என்றும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைச் சாப்பிடலாம் என்றும் அவர் கூறிக்கொண்டிருந்தார். இந்த மாத்திரை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.

இருப்பினும், மாத்திரையை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே எனது உடல்நிலை மோசமடைந்தது, இதனால் நான் அருகில் இருந்த எனது காரில் அமர்ந்துகொண்டேன். அதன்பிறகு, எனது குடும்பத்தினர் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

பெண் தன்னார்வலர்களால் பெரும் சேதம் தவிர்ப்பு

பெண் தன்னார்வலர்கள் இந்தச் சம்பவம் குறித்து ஊர்வலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, காவல்துறையினரின் கவனத்திற்கும் இதைக் கொண்டு சென்றனர்.

இதற்காக காவல்துறையினர் அந்த தன்னார்வலர்களைப் பாராட்டியுள்ளனர்.

இஹ்லாம் ஹமிதி மற்றும் ருக்ஸார் சையத் ஆகியோரின் செயல் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "விழிப்புடன் இருந்த பெண்கள் அளித்த உடனடித் தகவல் காரணமாக ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

போலீசார் இந்த விஷயம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பயாஸ் பிரேம்ஜி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் இந்தச் செயலை தனியாகச் செய்தாரா அல்லது அவருடன் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, சம்பவத்திற்கு முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் இரண்டு வாரங்கள் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

அவரது பின்னணி, டிஜிட்டல் சான்றுகள் மற்றும் இதற்கான பின்னணி நோக்கம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ருக்ஸார் சையத் மற்றும் இஹ்லாம் ஹமிதி ஆகியோரின் விழிப்புணர்வு இந்தச் சம்பவத்தை சரியான நேரத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

இருப்பினும், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள துல்லியமான நோக்கம் என்ன மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மேலதிக விசாரணையில் தான் தெரியவரும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு