அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் சீனாவிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?

    • எழுதியவர், டாம் லாம்
    • பதவி, பிபிசி மானிடரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சீனா தனது அணு ஆயுதக் கையிருப்பு மற்றும் உத்தி குறித்து வெளிப்படைத்தன்மையற்ற நாடாக செயல்பட்டு வருகிறது.

தனது அணு ஆயுதக் கொள்கை முதன்மையாகத் தற்காப்புக்கானது என்பதே அதன் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அது தனது "முதலில் பயன்படுத்த மாட்டோம்" என்ற கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தையில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை சீனா நிராகரித்தும் வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் மதிப்பீடுகளின் படி, சீனா 2023 மற்றும் 2025-க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 புதிய அணு ஆயுதங்களைச் சேர்த்து வந்தது. இருப்பினும், கடந்த ஆண்டில் அது சுமார் 20 ஆகக் குறைந்துள்ளது.

சீனாவின் அணுசக்தி உத்தி குறித்த இரண்டு பகுதிகள் கொண்ட தொடரை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். அதன் முதல் பகுதியை நீங்கள் தற்போது படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மேற்கத்திய ஊடக அறிக்கைகளின் படி, சீனா தனது ஏவுகணை சைலோ அமைப்பையும் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

அதன் நோக்கம், தனது "இரண்டாவது தாக்குதல்" திறனை , அதாவது பழிவாங்கும் அணுசக்தி தாக்குதல் திறனை மேம்படுத்துவதாகும்.

ஏவுகணை சைலோ என்றால் நிலத்தடியில் கட்டப்பட்ட ஒரு ஏவுகணை ஏவுதள வசதி ஆகும்.

இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் , நடுத்தர தூர ஏவுகணைகள் அல்லது இடைநிலை தூர ஏவுகணைகளை சேமிப்பதற்கும் ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

சீனா தனது அணுசக்தி திறனை வெளிப்படுத்துவதில் எந்தவொரு தயக்கத்தையும் காட்டவில்லை. 2024 ஆம் ஆண்டில், பசிபிக் பெருங்கடலில் ஆயுதங்கள் இல்லாத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ஏவி சீனா சோதித்தது.

மேலும், இரண்டாம் உலகப் போரின் வெற்றி ஆண்டைக் குறிக்கும் வகையில் 2025 இல் நடத்தப்பட்ட அணிவகுப்பில் அது முதன்முறையாக தனது "அணுசக்தி முப்படையை" காட்சிப்படுத்தியது.

இதில் தரை, கடல் மற்றும் வான் வழியாக அணு ஆயுதங்களைச் செலுத்துவதற்கான அமைப்புகள் அடங்கும்.

தனது அணுசக்தி கொள்கை குறித்து சீனா கூறுவது என்ன?

சீனா தனது அணு ஆயுத இருப்பு பற்றிய அதிக தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவதில்லை.

தனது அணுசக்திக் கொள்கை "நிலையானது, சீரானது மற்றும் நடைமுறைக்குரியது" என்று அது அதிகாரப்பூர்வமாகக் கூறி வருவதோடு, இது முதன்மையாக தற்காப்புக்கு தேவையானது என்றும் விவரிக்கிறது.

சீனா தனது அணு ஆயுதங்களை எப்போதும் குறைந்தபட்ச அளவிலேயே, அதாவது நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே வைத்திருப்பதாகக் கூறுகிறது.

மேலும், தான் ஒருபோதும் அணு ஆயுதப் போட்டியில் பங்கேற்றதில்லை என்றும், உலகளாவிய மூலோபாய சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் அது வலியுறுத்துகிறது.

தனது அணு ஆயுதக் கிடங்கை வேகமாக விரிவுபடுத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்ற ஊகம் மற்றும் பிரச்சாரம்" என்று கூறி சீனா நிராகரிக்கிறது.

சீனா தனது "முதலில் பயன்படுத்தக் கூடாது" என்ற கொள்கையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

அணு ஆயுதங்களை "முதலில் பயன்படுத்தக் கூடாது" என்ற ஒரு முன்னெடுப்பை சீனா 2024 இல் அறிமுகப்படுத்தியது. இது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை நோக்கிய ஒரு நடைமுறை நடவடிக்கை என்று அது விவரித்தது.

மற்ற அணுசக்தி நாடுகளையும் முதலில் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையை ஏற்குமாறு சீனா வலியுறுத்தியதுடன், அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் அல்லது பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்த மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில் அத்தகைய நாடுகள் இணைய வேண்டும் என்றும் முன்மொழிந்தது.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமெரிக்கா விடுத்த முன்மொழிவுகளை சீனா தொடர்ச்சியாக நிராகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (START) பிப்ரவரி மாதத்தில் காலாவதியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்றன.

சீன அதிகாரிகள் இந்த கோரிக்கைகளை "நியாயமற்றவை, தேவையற்றவை மற்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவை" என்று விவரித்துள்ளனர்.

உலகில் உள்ள பெரும்பாலான அணு ஆயுதங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டுமே வைத்துள்ளன, எனவே, ஆயுதக் குறைப்புக்கான முதன்மைப் பொறுப்பு இவ்விரு நாடுகளிடமே உள்ளது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேற்கத்திய அறிக்கைகள் என்ன சொல்கின்றன?

வெளிப்படைத்தன்மையற்ற போக்கு சீனாவிடம் இருந்தபோதிலும், மேற்கத்திய நிபுணர்கள் சமீபத்திய ஆண்டுகளில் அணுசக்தித் திறன்கள் வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வருவதை கவனித்துள்ளனர்.

சர்வதேச பாதுகாப்பு அமைப்பான சிப்ரி (SIPRI)-யின் 2026 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2026 ஜனவரி நிலவரப்படி சீனாவிடம் தோராயமாக 620 அணு ஆயுதங்கள் இருந்தன. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 600 ஆக இருந்தது.

சிப்ரியின் கூற்றுப்படி, சீனா 2023 மற்றும் 2024-க்கு இடையில் தனது இருப்பை 90 அணு ஆயுதங்களாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 2024 மற்றும் 2025-க்கு இடையில் 100 அணு ஆயுதங்கள் அதிகரிக்கப்பட்டன.

இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மிக வேகமான வளர்ச்சியாகும், இருப்பினும் இப்போது அதன் வேகம் சற்றே குறைந்துள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் 2024 ஆம் ஆண்டு அறிக்கை, 2030 ஆம் ஆண்டிற்குள் சீனாவிடம் 1,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று, இந்த எண்ணிக்கை 2035 ஆம் ஆண்டிற்குள் 1,500 ஐ எட்டக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தது. இருப்பினும், இந்த மதிப்பீடு 2024 ஆம் ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.

2030 ஆம் ஆண்டிற்குள் சீனாவிடம் 1,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருந்தாலும், இந்த எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தற்போதைய அணு ஆயுத இருப்பில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் என்றும் சிப்ரி தெரிவித்துள்ளது.

இருப்பினும், நாட்டின் வட பகுதியில் உள்ள மூன்று பெரிய சைலோ களங்களில் சீனா நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது என்றும், தற்போது கிழக்கு மலைப்பகுதியில் தோராயமாக 30 புதிய ஏவுகணைத் தளங்களை உருவாக்கி வருகிறது என்றும் சிப்ரி கவலை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் வெளியான ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை, சீனாவின் வடமேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கின் பாலைவனத்தில் பிரம்மாண்டமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இங்கு 80-க்கும் மேற்பட்ட ஏவுதளங்கள், வலுவான பதுங்குகுழிகள் மற்றும் எண்கோண வடிவ கட்டளை மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள், நிலத்தடி ஏவுதளங்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் நகரும் ஏவுகணைகள் ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கும் நோக்கம் கொண்டவை.

இது சீனாவின் பதிலடி அணுசக்தி தாக்குதல் அல்லது "இரண்டாவது தாக்குதல்" திறனை கணிசமாக வலுப்படுத்துவதைக் காட்டுகிறது.

அணுசக்தி திறன்களின் செயல்விளக்கம்

மேற்கத்திய தரவுகள் குறித்து சீனாவின் அரசு ஊடகங்கள் பெரும்பாலும் கருத்து தெரிவிப்பதில்லை என்றாலும், சீனா சமீபத்திய ஆண்டுகளில் தனது அணுசக்தி திறன்களை வெளிப்படுத்தி வந்துள்ளது.

உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில், சீனா பசிபிக் பெருங்கடலில் ஆயுதங்கள் இல்லாத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ஏவியது, 1980 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்து மிகக் குறைந்த தகவல்களையே வழங்கிய போதிலும், டிஎஃப்-31ஏஜி ஏவுகணையானது ஹவாய் தீவுகளுக்கு தென்கிழக்கே 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கியதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த ஏவுகணை மொத்தம் 12,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து சென்றது.

இதன் தாக்குதல் திறன் எவ்வளவு அதிகம் என்றால், இது தென் துருவம், ஒட்டுமொத்த ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய நகரங்களைச் சென்றடையக் கூடியது என்று ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சீன ராணுவ நிபுணர் டு வென்லாங் கூறுகையில், இந்தச் சோதனை ஒரு மூலோபாய செய்தியை அனுப்புவதற்காக நடத்தப்பட்டது என்றும், இது சீனாவின் வலுவான தளவாட மற்றும் வரைபடத் திறன்களை நிரூபிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், சீனாவின் ஏவுகணைகள் எந்தவொரு வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பையும் ஊடுருவ முடியும் என்ற நம்பிக்கை சீனாவுக்கு உள்ளது என்றும் அந்த நிபுணர் கூறினார்.

அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் செய்தித்தாள், அணுசக்தி முக்கூட்டமைப்பை சீனாவின் "மிகப்பெரிய மூலோபாய சக்தி" என்று வர்ணித்தது.

இதற்கிடையில், தைவான் ராணுவ ஆய்வாளர்கள் இந்தச் சோதனையை வேறு ஒரு கோணத்தில் பார்த்தனர், மக்கள் விடுதலை ராணுவத்திற்குள் ஊழலுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரத்தில் இது நிகழ்ந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், ராக்கெட் படையின் பல மூத்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வந்தனர்.

ஜப்பானுக்கு எதிரான வெற்றியின் 80-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் 2025 இல் நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில், சீனா முதன்முறையாக தனது "அணுசக்தி முப்படையை" காட்சிப்படுத்தியது.

சீன ஊடகங்கள் இதனை "மூலோபாய சக்தியின் மிகப்பெரிய ஆயுதம்" என்று விவரித்தன.

இந்த முப்படையில் வான், கடல் மற்றும் தரை வழியே ஏவப்படும் அணுசக்தி ஏவுகணைகள் அடங்கியிருந்தன.

இவற்றில் ஜேஎல் தொடர் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்குச் செல்லும் திறன் கொண்டவை) மற்றும் தரைவழி ஏவுகணைகளான டிஎஃப்-31 (DF-31) மற்றும் டிஎஃப்-61 (DF-61) ஆகியவை அடங்கும்.

இது தவிர, டிஎஃப்-5சி (DF-5C) என்ற புதிய திரவ எரிபொருளால் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணையும் காட்சிப்படுத்தப்பட்டது, இதன் தாக்குதல் திறன் ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பரவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு