You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோங்லா ஒப்பந்தம்: வங்கதேசத்தில் இந்தியாவுக்கு பதிலாக சீனாவுக்கு கிடைத்த துறைமுக திட்டம் ஏன் பேசு பொருளாகிறது?
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் சீனப் பயணம் நிறைவடைந்தது. இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன, அதில் மோங்லா துறைமுகம் மற்றும் தீஸ்தாச் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டு அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில் இந்த இரு விவகாரங்கள் குறித்துத்தான் அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மோங்லா வங்கதேசத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடல் துறைமுகமாகும். இங்கு சீனா பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
உண்மையில், இந்த நிலத்தை சீனாவிற்குப் பதிலாக இந்தியாவிற்கு வழங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2025-ஆம் ஆண்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியது
தற்போது சீனாவிற்கு இந்தத் திட்டம் கிடைப்பது, வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனா ஏற்கனவே பாகிஸ்தானின் குவாடர் முதல் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி வரை பல துறைமுகங்களில் முதலீடு செய்துள்ளது.
இது தவிர, சிட்டகாங்கிலும் கூட்டாக பொருளாதார மற்றும் தொழில்துறை மண்டலத்தை மேம்படுத்துவதற்கு சீனாவும் வங்கதேசமும் ஒப்புக்கொண்டுள்ளன. அத்துடன் தீஸ்தா நதி மேலாண்மையில் உதவி வழங்குவதாகவும் சீனா உறுதியளித்துள்ளது.
தீஸ்தா நதி மேலாண்மை குறித்தும் இந்தியாவில் கவலை வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நதி இந்தியாவின் எல்லை அருகே மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் பாய்கிறது. இதில் சீனா ஈடுபடுவது இந்தியாவின் பாதுகாப்புப் பார்வையில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வங்கதேசத்துடனான வளர்ந்து வரும் ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது தரப்பிற்கும் எதிரானது அல்ல என்று இந்தியாவில் எழும் கவலைகள் குறித்து சீனா கூறியுள்ளது.
மோங்லா துறைமுகமும் இந்தியாவும்
வங்கதேசத்தின் நாளிதழான 'தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்', சீனாவின் அரசு நிறுவனம் ஒன்றுடன் மோங்லாவில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை வங்கதேசம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வெளியான செய்திகளின்படி வங்கதேச பொருளாதார மண்டலங்கள் ஆணையம் (பெஸா - BEZA) ஜூன் 25 அன்று பெய்ஜிங்கில் சாய்னா சிவில் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷனுடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மோங்லா துறைமுக பொருளாதார மண்டலம் பாகர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மோங்லா துறைமுகத்திற்கு அருகில் 110 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படும்.
இந்த நிலம் முன்னதாக இந்தியாவின் பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முயற்சி 2015-இல் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கியது.
மோங்லா துறைமுகம் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ளது, இதனால் சரக்கு போக்குவரத்தின் நேரம் குறைந்து, வர்த்தகம் மேலும் வேகமடைந்திருக்கக் கூடும்.
ஆனால் பின்னர் இந்தத் திட்டம் இந்தியாவின் கையை விட்டுப் போனது. இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெவலப்பர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியைத் தொடங்கவில்லை என்றும், இதன் காரணமாக இத்திட்டத்தை அக்டோபர் 2025-இல் பட்டியலில் இருந்து இடைக்கால அரசு நீக்கியதாகவும் பெஸா கூறியது.
முன்னதாக ஜூன் 2025-இல் டாக்கா நகரில் உள்ள சீனத் தூதரகம் அதே இடத்தில் சீன பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கான முன்மொழிவை வழங்கியது கவனிக்கத்தக்க விஷயம். இதன்பிறகு, முகமது யூனுஸின் இடைக்கால அரசு இந்தியத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக பட்டியலில் இருந்து நீக்கியது.
இது ஒரு பெரிய மாற்றம் என நிபுணர்கள் கருத்து
பெஸாவின் நிர்வாக உறுப்பினரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமது நஸ்ருல் இஸ்லாம் 'தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்' நாளிதழிடம் கூறுகையில், சீன முதலீட்டாளர்கள் மோங்லா பொருளாதார மண்டலத்தில் பெரிய அளவிலான தொழில்களைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.
சீன முதலீட்டாளர்கள் டெலிகாம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் தொழிற்சாலைகளை அமைக்க ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். அத்துடன் கிடங்குகளை உருவாக்குவதிலும் ஆர்வம் உள்ளது.
"தற்போதைக்கு, இந்த ஒப்பந்தம் அரசாங்கங்களுக்கு இடையிலான நிலையில் மட்டுமே உள்ளது. இனி சீனத் தரப்பு முதன்மைத் திட்டத்தை தயாரிக்கும். அதன் பிறகு எங்களது தொழில்நுட்ப மற்றும் பேச்சுவார்த்தைக் குழுக்கள் அதனைப் பரிசீலிக்கும், பின்னர் அடுத்தகட்ட ஒப்பந்தங்கள் நடக்கும்" என்றார் நஸ்ருல்.
வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி என்டிடிவியிடம் கூறுகையில், சீனா மற்றும் வங்கதேசத்தின் சமீபத்திய கூட்டு அறிக்கையை, ஜூன் 2024-இல் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது என்றார்.
அவரது கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டின் அறிக்கையில் மோங்லா துறைமுகத்தை நவீனமயமாக்குதல் மற்றும் தீஸ்தா நீர் மேலாண்மைத் திட்டத்தின் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மோங்லா திட்டத்தை சீனாவிற்கு ஒப்படைப்பது ஒரு பெரிய மாற்றமாகும்.
'லாஜிஸ்டிக்ஸ் இன்சைடர்' தனது செய்தியில் ''மோங்லா துறைமுக முனையத்தின் மேலாண்மை இந்தியாவின் வர்த்தக இணைப்பு மற்றும் பிராந்திய செல்வாக்கை குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்தியிருக்கக் கூடும். 2018-இல் வங்கதேசம் இந்தியாவிற்கு சிட்டகாங் மற்றும் மோங்லா ஆகிய இரு துறைமுகங்களுக்கும் போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான முழுமையான அனுமதியை வழங்கியது. இந்த நடவடிக்கையின் மூலம் இருதரப்பு வர்த்தகம் ஏற்கனவே பெரிய ஊக்கத்தைப் பெற்றிருந்தது'' என எழுதியுள்ளது.
''சீன நிறுவனங்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் 17 துறைமுகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. இவற்றில் 13 துறைமுகங்களின் கட்டுமானத்தில் அவற்றின் பங்கு உள்ளது, அதே நேரத்தில் 8 திட்டங்களில் அவற்றிற்குப் பங்கு உள்ளது. இந்த பிராந்தியத்தில் தனது பிடியைத் தக்க வைத்துக் கொள்வது சீனாவிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அதன் தோராயமாக 80 சதவீத ஆற்றல் இறக்குமதி இந்தியப் பெருங்கடல் வழியாகவே கடந்து செல்கிறது.''
''வங்கதேசம் 2016-இல் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைந்தது. பெய்ஜிங்கின் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி தனது உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். சீனா வங்கதேசத்தில் ஒரு பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது. அதன் முக்கிய திட்டங்களில் சிட்டகாங்கில் 750 ஏக்கர் பரப்பளவிலான தொழில்துறை பூங்காவின் மேம்பாடு மற்றும் சிட்டகாங் துறைமுகத்தில் சிங்கிள்-பாயிண்ட் மூரிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.''
'இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து'
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் தீஸ்தா நதியின் மேலாண்மை மிக முக்கியமான விஷயமாக இருந்தது என்று வங்கதேச பிரதமரின் அலுவலக செய்தித் தொடர்பாளர் மஹ்தி அமீன் தெரிவித்தார். இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவி வழங்குவதிலும், சாத்தியக்கூறு ஆய்வு செய்வதிலும் சீனா ஆர்வம் காட்டியுள்ளது.
"2024 கூட்டு அறிக்கையில் வங்கதேசத் தரப்பில் தீஸ்தா நீர் மேலாண்மைத் திட்டம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிறைவடையும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், இந்த பிராந்தியத்தில் சீனா சேர்க்கப்படுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகக் கருதப்படுகிறது. இந்த விஷயத்தை இந்தியா ஏற்கனவே வங்கதேச அரசுக்கு விளக்கியுள்ளது," என்றார் வீணா சிக்ரி.
பிரதமர் தாரிக் ரஹ்மான், முகமது யூனுஸ் அரசு செய்த மாற்றங்களை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார், ஆனால் இந்த நடவடிக்கை இந்திய-வங்கதேச நட்புறவை வலுப்படுத்துவதற்கான அவரது வாக்குறுதியின்படி இல்லை என்று அவர் கூறுகிறார்.
"தீஸ்தா மேலாண்மை குறித்து சீனா-வங்கதேசம் இடையே உடன்பாடு ஏற்படுவது இந்தியாவிற்கு வியப்பளிப்பதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளது. இந்திய அரசு இந்த முழு முன்னேற்றங்களையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கும்," என்று சிக்ரி கூறினார்.
உத்தி ரீதியாக முக்கியமான சிலிகுரி காரிடார் (சிக்கன் நெக்) அருகே இது அமைந்திருப்பதாலும் இந்தியா இத்திட்டத்தின் மீது கண் வைத்துள்ளது.
இது வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இங்கு சீனாவின் பொறியியல் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புப் பார்வையில் உணர்திறன் மிக்கவை.
நாங்கள் எந்தவொரு மூன்றாவது நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல என சீனா கூறியுள்ளது
தீஸ்தா நதி இந்தியாவின் எல்லை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் பாய்கிறது, சீனா இந்தக் கவலையை எவ்வாறு பார்க்கிறது?
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுனிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, சீனா-வங்கதேச ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது தரப்பிற்கும் எதிரானது அல்ல என்று அவர் பதிலளித்தார்.
"தீஸ்தா நதியின் புனரமைப்பு வங்கதேச மக்களுக்கு மிகவும் அவசியமானது. சீனா இந்த வேலையில் தன்னால் முடிந்த அளவு உதவும். சீனா-வங்கதேசத்தின் ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது நாட்டிற்கும் எதிரானது அல்ல, மேலும் நாம் எந்தவொரு வெளித் தாக்கத்திற்கும் ஆளாகக் கூடாது," என அவர் வெள்ளிக்கிழமை கூறினார்.
வங்கதேசம் உருவான பிறகு, அது இந்தியாவுடன் முதன்முதலில் 25 ஆண்டுகால நட்பு உடன்படிக்கையை மேற்கொண்டது. இதற்கு அடுத்தபடியாக இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தானது.
போரினால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்திற்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.
1975 வரை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வேகமாக முன்னேறியது என்று கூறலாம். 1975-இல் அவாமி லீக் அரசு அதிகாரத்தில் இருந்து நீங்கிய பிறகு, ஃபரக்கா அணை உள்ளிட்ட பல விவகாரங்களில் இந்தியாவுடனான உறவுகளில் சரிவு ஏற்பட்டது.
ஹுசைன் முகமது எர்ஷாத்தின் ஆட்சிக் காலத்தில் இருதரப்பு உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன. 2009-இல் அவாமி லீக் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இருதரப்பு உறவுகள் மீண்டும் மையப் புள்ளிக்கு வந்தன.
அந்தக் காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம் பல துறைகளில் தெளிவாக காணப்பட்டது. அவாமி லீக் அரசு தனது அதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் அரசியல் ஆதரவின் பலனையும் பெற்றது. ஆனால் அவாமி லீக் அரசு சென்ற பிறகு, இந்தியாவுடனான உறவுகளில் நம்பிக்கைப் பற்றாக்குறை தெளிவாகத் தெரிகிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு