கோலடிக்காத ரொனால்டோ, வெற்றியைத் தவறவிட்ட போர்ச்சுகல் - காங்கோ அணிக்கெதிராகத் தடுமாறியது ஏன்?

போர்ச்சுகல், காங்கோ, ரொனால்டோ

பட மூலாதாரம், Alex Slitz/Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஃபிஃபா உலகக் கோப்பையில் நேற்றிரவு நடந்த போட்டியில் டி.ஆர்.காங்கோ அணிக்கு எதிரான போட்டியை 1-1 என டிரா செய்தது போர்ச்சுகல்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய போர்ச்சுகல் அணி, இந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால், மாறாக அவர்கள் கடைசி வரை போராடியும் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை.

6வது நிமிடத்திலேயே ஜோ நெவெஸ் அடித்த கோலால் முன்னிலை பெற்ற போர்ச்சுகல் அணி, அதன்பிறகு மொத்த போட்டியிலும் கோல் நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. அதேசமயம் தங்களுக்குக் கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட டி.ஆர்.காங்கோ, முதல் பாதியின் முடிவில் யோன் விஸா அடித்த கோலால் போட்டியை சமன் செய்தது.

ஹியூஸ்டனில் நடந்த இந்த கே பிரிவு போட்டியில் 90 நிமிடமும் போர்ச்சுகலுக்கு சவால் கொடுத்தது டி.ஆர்.காங்கோ. சிறப்பாக விளையாடி ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் தங்களுடைய முதல் கோலை அடித்ததோடு, முதல் புள்ளியையும் பெற்றது.

இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் செயல்பாட்டோடு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயல்பாடும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் பெரும்பாலான முன்னணி வீரர்கள் கோலடித்துக்கொண்டிருக்கையில், ரொனால்டோவால் அதைச் செய்ய முடியவில்லை. அவரால் இந்தப் போட்டியில் எந்தவித தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை.

52 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை அரங்குக்குத் திரும்பிய ஒரு அணி, உலகக் கோப்பையை வெல்லத் தகுந்ததாகக் கருதப்படும் ஒரு அணிக்கு எப்படி சவால் கொடுத்தது? கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது அணியும் எதனால் வெற்றியைத் தவறவிட்டார்கள்?

ஸ்பெய்ன் செய்த அதே தவறைச் செய்ததா போர்ச்சுகல்?

போர்ச்சுகல், காங்கோ, ரொனால்டோ

பட மூலாதாரம், Molly Darlington/Getty Images

இந்தப் போட்டியில் மொத்தம் 793 பாஸ்கள் செய்தது போர்ச்சுகல். அதில் 728 பாஸ்கள் வெற்றிகரமானவை. ஒரு உலகக் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அதிக பாஸ்கள் செய்தது இந்தப் போட்டியில் தான். சொல்லப்போனால், அந்த மைல்கல்லை 71வது நிமிடத்துக்கு முன்பாகவே எட்டிவிட்டது போர்ச்சுகல். ஆனால், இதுதான் அந்த அணியின் மிகப் பெரிய பிரச்னையாகவும் அமைந்தது.

முழுக்க முழுக்க பாஸிங் செய்வதிலேயே கவனம் செலுத்தியது போர்ச்சுகல். அதிலும் பெரும்பாலான பாஸ்கள் முன்னே 'அட்டாகிங் தேர்ட்' நோக்கிச் செல்லாமல், பக்கவாட்டிலும், பின்னாலுமே சென்றுகொண்டிருந்தன. அதனால், இந்தப் போட்டியின் பெரும்பகுதி நேரம் அவர்கள் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், அவர்களால் அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. டி.ஆர்.காங்கோ அணியின் நடுகள மற்றும் டிஃபன்ஸிவ் கட்டமைப்பை உடைக்ககூடிய பாஸ்களை அவர்களால் செய்ய முடியவில்லை.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தப் போட்டியில் கோலடிப்பதற்காக போர்ச்சுகல் எடுத்த முயற்சிகள் மொத்தமே 7 தான். அது டி.ஆர்.காங்கோ அணியை விட ஒன்று குறைவு. அந்த அளவுக்குத்தான் இருந்தது அவர்களது அட்டாக்கின் செயல்பாடு.

ஆட்டத்தின் முதல் பாதி முடிந்தபிறகு நடந்த ஜி5 விவாத நிகழ்ச்சியில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய பெங்களூரு எஃப்.சி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆஷ்லி வெஸ்ட்வுட், "போர்ச்சுகல் ஸ்பெய்ன் போலவே செயல்பட்டது. அவர்கள் ஆட்டம் கணிக்கக்கூடியதாக இருந்தது. அவர்கள் பந்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். டி.ஆர்.காங்கோ கட்டமைப்பைத் தாண்டி நூனோ மெண்டஸ் தவிர்த்து யாரும் செல்லவில்லை, எந்த வாய்ப்பையும் உருவாக்கவில்லை. அவர்களிடம் பிளான் பி என்பதே இருக்கவில்லை" என்று விமர்சித்திருந்தார்.

சாம்பியன்ஸ் லீக் வென்றிருந்த விடினியா, ஜோ நெவெஸ் மற்றும் கடந்த பிரீமியர் லீக் சீசனின் சிறந்த விருதை வென்ற புரூனோ ஃபெர்னாண்டஸ் ஆகியோர் இருந்தும், போர்ச்சுகல் நடுகளத்தால் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

போர்ச்சுகல் அணியின் இந்த செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு சந்தோஷ் டிராபி அணியின் பயிற்சியாளருமான தர்மராஜ் ராவணன், "இது மிகவும் மோசமான செயல்பாடு. ஆட்டம் முழுவதும் பந்தை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்களே தவிர, அதை முன்னே எடுத்துச் செல்லவேயில்லை. ஷாட்கள் அடிக்கவில்லை, கோல் வாய்ப்புகளை உருவாக்கவில்லை, பெனால்டி பாக்சுக்குள் அவர்கள் எதுவுமே செய்யவில்லை. ஒருவேளை மிக விரைவாக கோலடித்ததே அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஏனெனில், சீக்கிரம் முன்னிலை பெற்றுவிட்டதால் அவர்கள் சற்றே ஆசுவாசமாக ஆடத் தொடங்கிவிட்டார்கள் என நினைக்கிறேன்" என்று கூறினார்.

மேலும், டிஃபன்ஸில் இருந்து அட்டாக்குக்கு மாறும் 'டிரான்ஸிஷன்' தருணங்களில் போர்ச்சுகல் அணியின் வேகம் டி.ஆர்.காங்கோ அணியின் வேகத்தைவிட குறைவாக இருந்தது என்றும் ராவணன் குறிப்பிட்டார். பந்தைப் பெற்றதும் உடனே முன்னேறாமல் போர்ச்சுகல் வீரர்கள் தாமதப்படுத்தியது, டி.ஆர்.காங்கோ அணி தங்கள் டிஃபன்ஸிவ் கட்டமைப்புக்குச் சென்றுவிட உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயல்பாடு எப்படி இருந்தது?

போர்ச்சுகல், காங்கோ, ரொனால்டோ

பட மூலாதாரம், Julian Finney - FIFA/FIFA via Getty Images

முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்குகிறார் என்றாலே அந்தப் போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும். ஆனால், முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள் அந்த எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்தன.

அல்ஜீரியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் ஆர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி 3 கோல்கள் அடித்து சிறப்பாக இந்த உலகக் கோப்பையைத் தொடங்கினார். ரொனால்டோவும் அதேபொல் இத்தொடரைத் தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க, அது ஆரம்பத்திலேயே அவர்மீது நெருக்கடியையும் ஏற்படுத்தியது.

அந்த எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் மத்தியில் களமிறங்கிய 41 வயது ரொனால்டோ, இந்தப் போட்டியில் அவ்வளவாக சோபிக்கவில்லை. இந்தப் போட்டியில் அவர் மொத்தமே 25 முறை தான் பந்தைத் தொட்டார். சர்வதேச கால்பந்து அரங்கில், அவர் 90 நிமிடம் முழுமையாக ஆடிய போட்டிகளில் மிகக் குறைவான முறை பந்தைத் தொட்டது இதுதான். அந்த 90 நிமிடத்தில் அவர் கோல் நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2வது பாதியில் பாக்சுக்குள் அவருக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவை இரண்டையுமே இலக்குக்கு வெளியே அனுப்பினார் ரொனால்டோ.

ரொனால்டோவின் இந்த செயல்பாடு விமர்சிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவரது செயல்பாடே அணியின் பின்னடைவுக்குக் காரணம் என்றும் கூட விமர்சிக்கப்படுகிறது. ஆனால், ஒருசில வல்லுநர்கள் டி.ஆர்.காங்கோ அணிக்கெதிரான இந்தப் போட்டியில் ரொனால்டோவுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

தி அத்லெடிக் தளத்தில் இதுபற்றி எழுதிய பத்திரிகையாளர் ஆலிவர் கே, "கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தற்போதைய தடுமாற்றத்தைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது புதிய விஷயமல்ல. ரொனால்டோ யூரோ 2024 தொடரில் மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தினார் (ஐந்து போட்டிகளில் கோல் எதுவும் அடிக்கவில்லை). மேலும், 2022 உலகக் கோப்பையிலும் கூட ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு கோல் மட்டுமே (கானாவுக்கு எதிரான பெனால்டி) அடித்திருந்தார். யூரோ 2024 தொடரில் இருந்த ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவருக்கு சில கோல் அடிக்கும் வாய்ப்புகளாவது கிடைத்தன. ஆனால், இந்தப் போட்டியில் கோல் அடிப்பதற்கான எந்தவொரு சிறு வாய்ப்பையும் கூட அவர் பெறவில்லை" என்று குறிப்பிட்டார்.

இதே கருத்தை முன்வைத்த ராவணன், ரொனால்டோவை போர்ச்சுகல் அணி சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

"இந்தப் போட்டியில் ரொனால்டோவால் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை என்பது உண்மை. அவருக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றையாவது அவர் கோல் நோக்கி அடித்திருக்கலாம். ஆனால், தவறவிட்டுவிட்டார். அவரிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்கு, அந்தப் போட்டியின் சூழ்நிலைக்கு அவர் இன்னும் சற்று சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவருக்கு 90 நிமிடத்தில் மொத்தமே அந்த 2 வாய்ப்புகளைத்தான் போர்ச்சுகல் அணி உருவாக்கிக் கொடுத்தது என்பதுதான் பிரச்னை.

ரொனால்டோ போன்ற ஒரு வீரர் களத்தில் இருக்கும்போது நீங்கள் அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதிக கிராஸ்கள் செலுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படியொரு கிராஸில் தான் அவர்களின் முதல் கோல் வந்தது. ஆனால், அதன்பிறகு அதைச் செய்யத் தவறினார்கள். தொடர்ச்சியாக கிராஸ் போட்டு, நடுகள வீரர்களும், மற்ற விங்கர்களும் பாக்சுக்குள் நுழைந்து எதிரணி டிஃபன்ஸுக்கு சவால் தரவேண்டும். அதை போர்ச்சுகல் செய்யவே இல்லை.

அதுமட்டுமல்ல, குறைந்தபட்சம் பாக்சுக்கு வெளியே இருந்து நிறைய ஷாட்களை எடுத்திருக்கவேண்டும். அவை வாய்ப்புகளை உருவாக்கும். அர்ஜென்டினா போட்டியைப் பாருங்கள். மெஸ்ஸியின் முதல் மற்றும் மூன்றாவது கோல் 'ஜோன் 14'ல் இருந்து எடுக்கப்பட்டது. அதேபோல், அந்த இரண்டாவது கோலும்கூட வெளியே இருந்து மெக்காலிஸ்டர் அடித்த ஷாட்டால் ஏற்பட்ட வாய்ப்புதான். அப்படி ஷாட்களை போர்ச்சுகல் வீரர்கள் எடுக்கவே இல்லையே" என்று கேள்வியெழுப்பினார் ராவணன்.

கவலையளிக்கிறதா போர்ச்சுகல் டிஃபன்ஸ்?

போர்ச்சுகல், காங்கோ, ரொனால்டோ

பட மூலாதாரம், Lars Baron/Getty Images

போர்ச்சுகல் அணி ஒருபக்கம் வாய்ப்புகளை உருவாக்கத் தவற, டிஃபன்ஸின் செயல்பாட்டிலுமே சில குறைபாடுகள் இருந்தது. விஸா கோலடித்தபோது அவரை எந்த வீரரும் சரியாக 'மேன் மார்க்' செய்யவில்லை. எந்தவித சவாலும் இல்லாமல் பந்தைத் தலையால் முட்டி கோலாக்கினார் விஸா. அதுமட்டுமல்லாமல், டி.ஆர்.காங்கோ அணிக்குக் கிடைத்த வெகுசில தருணங்களிலும் அவர்களால் சில வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது.

போர்ச்சுகல் அணியின் முக்கிய சென்டர்பேக் ரூபன் டியாஸ், உலகக் கோப்பைக்கு முன்பான நட்புறவுப் போட்டியின்போது காயமடைந்தார். அதன்பிறகு அவர் முழு உடற்தகுதியைப் பெறாததால் அவர் இந்தப் போட்டியில் களமிறக்கப்படவில்லை. அதனால், அந்த அணியின் டிஃபன்ஸில் அனுபவம் இல்லாதது இந்தப் போட்டியில் வெளிப்பட்டது என்று கூறினார் ராவணன்.

"ரூபன் டியாஸ் இல்லாத இந்த டிஃபன்ஸ் சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. அங்கே தலைமைப்பன்பு இல்லை. நான்கில் 3 டிஃபண்டர்கள் அனுபவமற்றவர்கள். நூனோ மெண்டஸ் உலகத்தர வீரர் என்றாலும் அவரும் இளம் வீரர்தன். ஜோ கன்சலோ அனுபவம் கொண்டிருந்தாலும் எளிதில் கோபமடையக்கூடிய, நிலைத்தன்மையை இழக்கக்கூடிய ஒரு வீரர். அது சற்று பிரச்னையாகவே தெரிகிறது.

போர்ச்சுகல், காங்கோ, ரொனால்டோ

பட மூலாதாரம், Alex Slitz/Getty Images)

மேலும், நடுகளத்திலுமே அந்த அணி பெரிய இடைவெளிகளை விட்டது. அதனால் தான் டி.ஆர்.காங்கோ அணியால் சில கவுன்ட்டர் அட்டாக்குகளைத் தொடக்க முடிந்தது. அதே இடத்தில் வேறு பெரிய அணியாக இருந்திருந்தால் போர்ச்சுகல் தடுமாறியிருக்கும். பிரான்ஸின் புயல்வேக வீரர்கள் 5 கோல்கள் கூட அடித்திருப்பார்கள். துடிப்பான ஜப்பான் அணியுமே கூட குறைந்தது 2 கோல்கள் அடித்திருக்கும். போர்ச்சுகல் அதை சரிசெய்யவேண்டும். ரூபன் டியாஸ் அடுத்த போட்டியிலும் களமிறங்கவில்லை என்றால், மத்திய டிஃபண்டர்களுக்கு முன்பே ஒரு டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் களமிறக்கப்படுவது நல்லது" என்று ராவணன் தெரிவித்தார்.

இந்த செயல்பாடு கவலையளிப்பதாக இருந்தாலும், குரூப் சுற்றிலேயே இப்படியொரு முடிவு கிடைத்தது போர்ச்சுகல் அணிக்கு நல்ல விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். "நாக் அவுட் சுற்றில் இப்படியொரு செயல்பாடு வராமல், இப்போதே வந்துவிட்டது நல்லது. இது, அந்த அணி தங்கள் தவறுகளை சரிசெய்து மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். போர்ச்சுகல் அப்படி மீண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா, 2010 உலகக் கோப்பையில் ஸ்பெய்ன் போன்ற அணிகள் தங்களின் முதல் போட்டியில் தோற்றுவிட்ட அதன்பின் சாம்பியன் ஆகியிருக்கிறார்கள். அதனால், நல்லபடியாக மீண்டுவருவது சாத்தியமே" என்று அவர் கூறினார்.

போர்ச்சுகல் அணி தங்களின் அடுத்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை ஜூன் 23ம் தேதி எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடக்கும்.

முத்திரை பதித்த டி.ஆர்.காங்கோ

போர்ச்சுகல், காங்கோ, ரொனால்டோ

பட மூலாதாரம், Alex Slitz/Getty Images

52 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்குத் திரும்பிய டி.ஆர்.காங்கோ அணி அத்தனை எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டது. இதற்கு முன் 1974 உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடியிருந்த அந்த அணி, ஒரு கோல் கூட அடிக்காமல், அப்போது விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருந்தது.

போர்ச்சுகலுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அவர்களின் டிஃபன்ஸிவ் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அதைப் பாராட்டிப் பேசிய ராவணன், "போர்ச்சுகல் அணி இப்படித் தடுமாறியது என்றால், டி.ஆர்.காங்கோ அணியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. அவர்களது டிஃபன்ஸ் நன்கு ஒழுக்கத்துடன் செயல்பட்டது. அவர்கள் பாக்சுக்கு அருகில் பெரிதாக ஃபவுல்கள் செய்து எதிரணிக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தங்களின் நெருக்கமான கட்டமைப்பை கடைசி வரை சரியாகக் கடைபிடித்தார்கள். எப்போதுமே இதுபோன்ற ஒரு தொடரின் முதல் போட்டி மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், டி.ஆர்.காங்கோ வீரர்கள் அந்த நெருக்கடியை உணராமல் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்கள். 52 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் களமிறங்கியிருக்கும் அந்த நாட்டுக்கு இது பெருமை மிகு தருணம்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு