நீலகிரி: அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?

பட மூலாதாரம், Getty Images
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த வாரம் வெள்ளைப்புலி ஒன்று தென்பட்டுள்ளது. வெள்ளைப்புலி என்பது புலிகளில் அரிதான ஓர் இனமாக பொதுமக்களில் சிலர் தவறாக கருதுகின்றனர்.
மரபணு மாறுபாட்டால் ஏற்படும் நிற வேறுபாட்டின் வெளிப்பாடே இந்த வெள்ளைப்புலி என்கின்றனர் காட்டுயிர் ஆய்வாளர்கள்.
2017 ஆம் ஆண்டில் வனத்துறை கேமராவில் பதிவான வெள்ளைப்புலிகளில் ஒன்று, பல ஆண்டுகளுக்குப் பின்பு இங்கு மீண்டும் வந்திருக்கலாம் என்கிறார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் விஜயகுமார்.
வங்கப்புலிகளில் மரபணு மாறுபாட்டால் நிறவேறுபாடு அடைவதுதான் புலி வெள்ளையாக இருப்பதற்குக் காரணம் என்று விளக்கும் தமிழக வனத்துறையின் வன கால்நடை மருத்துவர் கலைவாணன், 10 ஆயிரம் புலிகளில் ஒன்றுதான் வெள்ளைப்புலியாக பிறக்குமென்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறார்.
வைரலாகும் அவலாஞ்சி வெள்ளைப்புலி
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த வாரத்தில் அவலாஞ்சி வனப்பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், வெள்ளைப்புலி நடந்து செல்வதை தூரத்திலிருந்து வீடியோ எடுத்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், UGC
இதே அவலாஞ்சி வனப்பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெள்ளைப்புலிகள் செல்வதை சிலர் பார்த்ததாக, அப்போதிருந்த வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அப்பகுதியில் கேமராக்களை பொருத்தி (Camera Trap) கண்காணித்த போது, அதில் 2 வெள்ளைப்புலிகள் இருந்தது பதிவாகியிருந்தது. அதன்பின் கடந்த 2018 ஆம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த காட்டுயிர் புகைப்படக்காரர் ஒருவர், அதே பகுதியில் 2 வெள்ளைப்புலிகளைப் படமெடுத்து, வனத்துறையினரிடம் பகிர்ந்துள்ளார்.
ஆனால் அதற்குப் பின் வனத்துறையினர் பொருத்திய கண்காணிப்பு கேமராக்களிலும் வெள்ளைப்புலிகள் பதிவாகவில்லை. அவ்வப்போது வெள்ளைப்புலிகளைப் பார்த்ததாக சிலர் தகவல் தெரிவித்தாலும் அவை குறித்த புகைப்படங்கள், காணொளிகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் கடந்த வாரத்தில் அவலாஞ்சி பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவில் வெள்ளைப்புலி நடந்து செல்வது பதிவாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரிடம் பகிர்ந்த வீடியோ காட்சிகள், பிபிசிக்குக் கிடைத்தன. அதில் பார்க்கும்போது, மலைப்பகுதியில் சற்று தூரத்தில் நடந்து செல்லும் புலி வெள்ளை நிறத்தில் இருப்பது தெரிகிறது.
'மெலனின் குறைபாடே காரணம்'
வெள்ளைப்புலி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் தகவல் பதிவிட்டு வரும் நிலையில், வெள்ளைப்புலியை அரிதான ஓர் இனமாகவே பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் வெள்ளைப்புலி என்பது தனியான ஓர் இனமோ அல்லது வகையோ இல்லை என்று காட்டுயிர் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். வெள்ளை நிறத்திலுள்ள இந்த புலியை வெளிறிய வடிவ (Pale morph) புலி என்றே இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய காட்டுயிர் ஆராய்ச்சியாளர் (Wildlife Biologist) விஜயகுமார், ''இதை வெளிறிய நிற வேறுபாடு என்றுதான் கூறவேண்டும். இதற்குக் காரணம் மெலனின் குறைபாடு (Melanin reduction). புலிகளின் உடலில் உள்ள மெலனின் (Melanin) என்ற நிறமிதான், அவற்றின் வழக்கமான நிறத்திற்குக் காரணம். மரபணு மாற்றங்கள் காரணமாக இந்த நிறமிகளின் உற்பத்தி குறையும் போது, உடலின் ரோமங்கள் வெளிறிய நிறமாக மாறுகின்றன. லியூசிஸம் (Leucism) என்ற மரபணு சார்ந்த நிலையே வெளிறிய நிறத்திற்கு முதன்மைக் காரணம். நிறமிகள் குறைந்தாலும், கண்களின் நிறம் மற்றும் உடலின் வரிகள் (stripes) மங்கலாகத் தெரியும்.'' என்றார்.
உலக வன உயிரின நிதியத்தில் (WWF) 2014 ஆம் ஆண்டில் தான் பணியாற்றிய போது, நீலகிரி வனக்கோட்டத்தில் கொல்லரிபெட்டா என்ற இடத்தில், ஒரு பெண் புலியைப் பார்த்ததாகக் கூறிய காட்டுயிர் ஆராய்ச்சியாளர் விஜயகுமார், அந்த பெண் புலிக்குதான் 3 குட்டிகள் பிறந்ததாகவும், அவற்றில் 2 ஆண் புலிகள் வெள்ளைப்புலிகளாக இருந்ததும் கேமராக்களில் பதிவானதாகவும் தெரிவித்தார்.
''கடந்த 2017 ஆம் ஆண்டில் அவலாஞ்சி மின் உற்பத்தி நிலையம் அருகில் ஒரு வெள்ளைப்புலியைப் பார்த்ததாக மின் வாரிய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அதே காலகட்டத்தில் வேறு ஒருவர் வெள்ளைப்புலியை புகைப்படமும் எடுத்துள்ளார். வனத்துறை கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியபோது, அதில் அவலாஞ்சி அருகில் 4 புலிகள் ஒரே இடத்தில் இருப்பது மிகவும் தெளிவாக பதிவாகியிருந்தது. அதில் 2 குட்டிகள் வெள்ளைப்புலிகளாக இருந்தன. அவையிரண்டுமே ஆண் புலிகள்.'' என்றார் விஜயகுமார்.

பட மூலாதாரம், BURRARD-LUCAS PHOTOGRAPHY
அந்த புலிகள் கேமராக்களில் பதிவாகும்போது, அந்த வெள்ளைப்புலிகள் உள்ளிட்ட 3 குட்டிகளுக்கும் ஒன்றரை வயது இருக்குமென்று கூறிய விஜயகுமார், அதன்பின் 2018 ஆம் ஆண்டில் கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு வெள்ளைப்புலி தென்பட்டதாகத் தெரிவித்தார். கர்நாடக மாநில எல்லையான சாம்ராஜ் நகர் வனப்பகுதியிலும் வெள்ளைப்புலியை சிலர் பார்த்ததாகவும் அவர் தகவல் பகிர்ந்தார்.
வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ''வங்கப்புலிகளில்தான் வெள்ளைப்புலிகள் காணப்படுகின்றன. மரபணு மாறுபாட்டால் ஏற்படும் நிற வேறுபாடு காரணமாகவே அந்த புலிகள் வெள்ளையாகத் தோற்றம் அளிக்கின்றன. பொதுவாக காட்டுயிர்களின் உடல்களில் இரு வகை மெலனின் (Eumelanin and Pheomelanin) இருக்கின்றன. இவற்றில் யூமெலனின் (Eumelanin) கருப்பு நிறக்கோட்டை உருவாக்குவது. ஃபியோமெலனின் (Pheomelanin) என்பது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களை உருவாக்குவது. இதை உற்பத்தி செய்வது SLC2A2 என்ற மரபணு.'' என்றார்.
அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''இந்த மரபணுதான் இந்த நிறமிகளுக்கான புரோட்டீனைத் தருகிறது. அவற்றில் ஏற்படும் மாற்றம்தான் இந்த புலியின் நிறத்தில் வேறுபாட்டை உருவாக்குகிறது. சிவப்பு அல்லது மஞ்சள் நிறமிகள் (pigments) உற்பத்தி செய்யப்படாத நிலையில் வெள்ளை நிறமே ஒரு புலியின் இயல்பு நிறமாக அமைவதால், அந்தப் புலி வெள்ளையாக தோற்றமளிக்கிறது. பத்தாயிரம் புலிகளில் ஒரு புலிக்குதான் இத்தகைய மரபணு மாறுபாட்டால் நிறவேறுபாடு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.'' என்றார்.
'வெள்ளைப்புலிக்கு பிறக்கும் அனைத்து குட்டிகளும் வெள்ளைப்புலியல்ல'

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக இந்தியாவில் வன உயிரினப்பூங்காக்களில் (ZOO) அதிகமான வெள்ளைப்புலிகள் இருப்பதைப் பார்க்க முடியும் என்று கூறிய வன கால்நடை மருத்துவர் கலைவாணன், அதற்கு டெல்லி வன உயிரினப் பூங்காவில் இருந்த வெள்ளைப்புலியை வைத்து அதிகமாக இனப்பெருக்கம் செய்ததுதான் காரணம் என்கிறார். இனப்பெருக்கத்திற்காக சேரும் புலிகளில் எந்த புலியின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன்படி பிறக்கின்ற குட்டிகளிலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றார் அவர்.
அவலாஞ்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டில் பார்த்த வெள்ளைப்புலிகள் இரண்டும் தற்போது நன்கு வளர்ந்த ஆண் புலிகளாக இருக்கும் என்ற காட்டுயிர் ஆராய்ச்சியாளர் விஜயகுமார், அவை இரண்டும் காணப்பட்ட அமைதிப் பள்ளத்தாக்கு மற்றும் சாம்ராஜ் நகர் வனப்பகுதிகளில் அவை பிற புலிகளுடன் இணைந்ததால் பிறந்த புலிகளில் எதுவும் வெள்ளைப்புலியாக அடையாளம் காணப்படவில்லை என்றார்.
வெள்ளைப்புலிகள் தொடர்பாக steemit.com என்ற இணைய இதழில் வல்த் என்ற ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள கட்டுரையில், ''காட்டுயிர்களில் இந்த மரபணு மிகவும் அரிதானது. சில புலிகள் இந்த மரபணுவைக் கொண்டுள்ளன. இந்த மரபணுவைக் கொண்டுள்ள புலிகள் இனப்பெருக்கம் செய்தால், பிறக்கும் குட்டிகளில் நான்கில் ஒரு பங்கு வெள்ளையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
''இவ்வாறு வெள்ளையாக இருப்பதால் அந்தப் புலிக்கு உடல்ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது. சில சிறுத்தைகள் முழுமையாக கருப்பு நிறத்தில் (Black Panther) இருப்பதற்கும் இத்தகைய மரபணு மாறுபாடுதான் காரணம். மனிதர்களில் சிலருக்கு கண்கள், முடி எல்லாமே வெள்ளையாக இருக்கும். அது தோற்றத்தில் தெரியுமே தவிர, அவர்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. அது போலத்தான் வெள்ளைப்புலிகளுக்கும் உடல் பாதிப்பு எதுவுமிருக்காது.'' என்றார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் விஜயகுமார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































