தவெக அரசின் முதல் பட்ஜெட்: விஜய் அரசுக்கு இருக்கும் 3 சவால்கள் என்ன?

தவெக அரசின் முதல் பட்ஜெட்: காத்திருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், CMOTamilNadu/X

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது முதல் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.

இது வெறும் நிதிநிலை அறிக்கையை மட்டுமே முன்வைப்பதாக இருக்காது எனக் கூறும் நிபுணர்கள், "மாறாக, மாற்றத்திற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்தால், தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகத் தான் விவரிக்கும் ஒரு நிதி அமைப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?" என்ற ஓர் அடிப்படைக் கேள்வி இருப்பதாகக் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த தவெக அரசின் 'வெள்ளை அறிக்கை' வெளியான பிறகு, இந்தச் சவால் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட அந்த அறிக்கை, ஐந்து ஆண்டுக்கால திமுக ஆட்சிக்குப் பிந்தைய மாநிலத்தின் நிதிநிலை குறித்த "கவலைக்குரிய நிலையில்" இருப்பதாக ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது.

அந்த வெள்ளை அறிக்கையின்படி, "தமிழகத்தின் நிதிச் சிக்கல்கள் தற்காலிகமானவை அல்ல, அவை கட்டமைப்பு ரீதியானவை". எனவே, அவற்றுக்குக் கடினமான கொள்கை முடிவுகளும் நீண்டகால சீர்திருத்தங்களும் தேவைப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார்.

அரசின் இந்த மதிப்பீட்டை வைத்துப் பார்த்தால், "தவெக நிர்வாகத்தின் முதல் பட்ஜெட் அரசியல் லட்சியங்கள், சமூக நலன் சார்ந்த வாக்குறுதிகள் ஆகியவற்றுக்கான முக்கியத்துவத்தைவிட பொருளாதார எதார்த்தங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்," என்று குறிப்பிடுகிறார் பொருளாதார நிபுணர் கார்த்திகேயன் பிரபாகரன்.

அதே வேளையில், "தற்போதைய வெள்ளை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது போல, தமிழ்நாடு மிகவும் மோசமான நிதி நெருக்கடியிலோ அல்லது கடும் கடன் சுமையிலோ இல்லை. வரையறுக்கப்பட்ட அளவிலேயே மாநிலத்தின் கடன் அளவு இருப்பதாகவும், இது தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருக்கும் சவால்களை மறைப்பதற்கான முயற்சி," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து, தாக்கல் செய்யப்போகும் அதன் முதல் பட்ஜெட்டில் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

குறிப்பாக, குறைந்த அளவிலான நிர்வாக அனுபவத்துடனும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடனும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு, தேர்தல் வாக்குறுதிகளை நிதிசார் எதார்த்தங்களாக மாற்றுவது எவ்வளவு தூரம் சாத்தியமாக வாய்ப்புள்ளது?

நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்

தேர்தல் வாக்குறுதிகளை பட்ஜெட் ஒதுக்கீடுகளாக மாற்றுவதில் உள்ள சவால்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாடு இந்தியாவின் மிக அதிக தொழில்மயமான, பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்களில் ஒன்று. அதே வேளையில், கணிசமான கடன் சுமையையும் கொண்டுள்ளது.

எந்தவொரு புதிய அரசாங்கமும், ஏற்கெனவே உள்ள கடன்கள், கட்டாய செலவுகள், நலத்திட்ட பொறுப்புகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றைத் தனது பொறுப்பில் ஏற்க வேண்டியிருக்கும்.

அதோடு, "தேர்தல் பிரசாரங்களின்போது பல லட்சியமிக்க வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பட்ஜெட் தயாரிப்பின்போது துல்லியமான நிதிசார் கணக்கீடுகள் தேவைப்படும். நலத்திட்டச் செலவுகள், மூலதனச் செலவுகள், வேலைவாய்ப்புத் திட்டங்கள் அல்லது கடன் குறைப்பு ஆகியவற்றில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதை தவெக அரசு தீர்மானிக்க வேண்டியிருக்கும்" என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

அவரது கூற்றுப்படி, அரசியல் மாற்றத்திற்குப் பிறகு உடனடி மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்கக்கூடும் என்பதால், இந்தச் சவால் தீவிரமானதாக இருக்கும். இருப்பினும், "கூடுதல் வருவாய் ஆதாரங்களைக் கண்டறியாமல் பெரிய அளவிலான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் கடினம். இதனால், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமல் போவதற்கு, முந்தைய அரசு ஏற்படுத்தி வைத்துவிட்டுச் சென்ற நிதி நெருக்கடிதான் காரணம் என்று கூற வாய்ப்புள்ளது," என்றார் ஜோதி சிவஞானம்.

அரசியல் பிரசாரங்கள் பெரும்பாலும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரை மையமாகக் கொண்ட பரந்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஆனால், "ஆட்சிக்கு வந்த பிறகு, அவற்றை உறுதியான பட்ஜெட் ஒதுக்கீடுகளாக மாற்ற முடியுமா என்பது அலசி ஆராயப்பட்ட பிறகே, அந்த வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள தவெக அரசு, அதில் புதிதாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே, சி.ஏ.ஜி அறிக்கைகள் மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளில் கூறப்பட்ட விவரங்களையே தெரிவித்துள்ளார்கள். இவை கடந்த பல மாதங்களாக பொதுவெளியில் அனைவரின் பார்வைக்கும் இருந்து வரும் நிலையில், தங்களது வாக்குறுதிகளை வடிவமைக்கும்போதே, அவை தமிழக நிதிநிலையில் சாத்தியமா அல்லது சாத்தியப்படுத்த என்ன வழிகள் உள்ளன என்பனவற்றை ஆராய்ந்து முடிவு செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாததன் சவால்களை இந்த முதல் பட்ஜெட்டில் தவெக அரசு எதிர்கொள்ளும்," என்று விளக்கினார் ஜோதி சிவஞானம்.

கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டபோது

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டபோது

மேலும், "தங்கள் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் பிரசார முழக்கங்கள் மட்டுமே அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை தவெக அரசு இந்த பட்ஜெட்டின்போது எதிர்கொள்ளும். இதில் பயிர்க் கடன் தள்ளுபடி மிக முக்கியப் பங்காற்றும். ஏனெனில், அதுதான் தவெக பெற்ற கிராமப்புற வாக்குகளில் பெரும்பான்மைக்குக் காரணமாக அமைந்தது. ஆயினும், அதில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரையறைகள் விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

இதேபோல, ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசம், மகளிர் உரிமைத்தொகையை 2,500 ஆக உயர்த்துவது என மேலும் பல்வேறு வாக்குறுதிகள் இருக்கின்றன. இவையனைத்தையும் நிறைவேற்ற அரசுக்குத் தோராயமாக மூன்று லட்சம் கோடி வேண்டும். இவர்கள் முன்வைத்திருக்கும் நிதிநிலையில், அதற்கான நிதியை, வருவாயை எங்கிருந்து திரட்டத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை இந்த பட்ஜெட்டில் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது," என்று விளக்கினார் பொருளாதார நிபுணர் கார்த்திகேயன் பிரபாகரன்.

குறிப்பாக, "எந்தெந்த வாக்குறுதிகளை உடனடியாகச் செயல்படுத்த முடியும், எந்தெந்த திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்படும், நிதிசார் கட்டுப்பாடுகள் காரணமாக எந்தெந்த வாக்குறுதிகளில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்" என்பன போன்ற சில கடினமான கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் நலத்திட்டங்கள் அப்படியே தொடரும் என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ள நிலையில், "சமூகநலத் திட்டங்களில் எதையும் தவிர்க்க முடியாது. அவைதாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான அஸ்திவாரமாக தலைமுறை தலைமுறையாகச் செயல்பட்டு வருகின்றன. அப்படியிருக்க, அதற்கான செலவுகள் போக, தனது கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதியைக் கொண்டு வருவதற்கு எத்தகைய திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன" என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது என்றார் கார்த்திகேயன் பிரபாகரன்.

நிதியமைச்சர் மரிய வில்சன்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, நிதியமைச்சர் மரிய வில்சன்

மாநிலத்தின் கடன் அளவு பட்ஜெட்டை பாதிக்குமா?

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான விஷயம், தமிழ்நாட்டின் மொத்த கடன்.

அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் மாநிலத்தின் நேரடி நிலுவைக் கடன் சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் உள்ளடக்கும்போது, அரசின் மொத்த கடன் பொறுப்பு சுமார் 13.18 லட்சம் கோடியாக உயர்வதாக வெள்ளை அறிக்கை கூறுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 5.13 லட்சம் கோடியாக இருந்த மாநில கடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக வெள்ளை அறிக்கை கூறுகிறது. ஆனால், ஓர் அரசின் கடன் என்பதை இப்படி மேம்போகாகக் குறிப்பிடுவது அடிப்படையற்றது எனக் கூறிய ஜோதி சிவஞானம், "அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், மாநிலத்தின் வளர்ச்சியும் இரு மடங்காக அதிகரித்து இருப்பதைக் கவனிக்க வேண்டும்," என்றார்.

அதேவேளையில், "இப்போது இருக்கும் கேள்வி என்னவெனில், கடன் சுமையால் நிதிநிலை மோசமாக இருப்பதாகத் தொடர்ந்து முந்தைய ஆட்சியைக் குறைகூறுவதேலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தனது பட்ஜெட்டில், தமது புதிய திட்டங்களை அறிவிக்க எவ்வளவு கடன் வாங்கப் போகிறது என்பதுதான்" என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார நிபுணர் கார்த்திகேயன் பிரபாகரனின் கூற்றுப்படி, தவெக அரசு, பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் அறிவிப்பதற்கு முன்பாகவே, அதிக கடன், நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை எனக் கூறி பொறுப்பைத் தள்ளிப்போட அல்லது தட்டிக்கழிக்க முயல்கிறது.

அதோடு, "மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எதார்த்த நிலைக்கும் இடையே தனது பட்ஜெட்டில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு தற்போது உள்ளது. அதை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதே அவர்கள் முன் இருக்கும் முக்கிய சவால்" என்று விளக்கினார் அவர்.

தவெக அரசின் முதல் பட்ஜெட்: காத்திருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், மகளிர் உரிமைத்தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்துதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதித் தேவையைக் கண்டறிவது தவெக அரசுக்கு சவாலாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

'வருவாயை அதிகரிப்பது சவாலாக இருக்கும்'

மறுபுறம், 2021இல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது இதைவிட மோசமான நிலை நிலவியதாகக் கூறுகிறார் ஜோதி சிவஞானம். இவற்றுடன், "அப்போது கோவிட் பேரிடர் உச்சத்தில் இருந்தது. அதைச் சமாளித்து, கோவிட் இரண்டாவது அலையின் தாக்கத்தை எதிர்கொண்டு, பின்னர் ஏற்பட்ட புயல் பேரிடர்களைச் சமாளித்து அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டியிருந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக பல்வேறு உலக நாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வந்ததன் மூலம் மாநிலத்தின் வருவாய் அளவை உயர்த்தி, மோசமாக இருந்த நிதிநிலையை மீட்டெடுத்தது மட்டுமின்றி, உறுதியளித்த மக்கள் நலத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியது. அத்தகைய கடுமையான சூழல் தற்போது இல்லையென்றாலும், தவெக அரசுக்கு இது முதல் பட்ஜெட் என்பதால், நிலவக்கூடிய நிதிசார் சிக்கல்களைக் கையாண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தேவையான வருவாய் மூலத்தைக் கொண்டு வருவது முக்கிய சவாலாக இருக்கும்," என்றும் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, ஒவ்வோர் அரசாங்கமும் அதிகமாகச் செலவு செய்யவே விரும்புகிறது, ஆனால் அப்படி செலவழிக்கப் போதுமான வருவாய் தேவைப்படுகிறது.

"தவெக அரசு, மக்கள் அல்லது தொழில்துறைகள் மீது அதிகப்படியான சுமைகளை ஏற்றாமல், அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான வடிமுறைகளை ஆராய வேண்டியிருக்கும். வரி இணக்கத்தை மேம்படுத்துதல், வணிக வருவாயை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற சாத்தியமான வழிகளில் அதை முயல வேண்டும்.

இருப்பினும், சொத்து வரி முதல் தொழில்துறை வரிகள் வரை, அனைத்தும் ஏற்கெனவே மிக அதிகமாக இருப்பதாகக் கூறி குறைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. எனவே, வருவாயை அதிகரிக்க வேண்டுமெனச் சொல்வதைவிட, அதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவது மிகவும் கடினமானது," என்று விளக்கினார்.

ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் போன்ற திட்டங்களில்கூட, அவற்றுக்கான நிதி மூலத்தை உறுதி செய்வது அரசுக்கு கடினமான சவாலாக இருக்கும் என்கிறார் கார்த்திகேயன் பிரபாகரன்.

தமிழ்நாடு மின்வாரியக் குழுமம், 2.47 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனையும், சுமார் 1.82 லட்சம் கோடி நஷ்டங்களையும் கொண்டிருப்பதாக வெள்ளை அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், "மாநிலத்தின் நிதியைச் சீர்திருத்தும் எந்தவொரு முயற்சியிலும், மின்சாரத் துறையில் ஏற்படும் நஷ்டங்களை கையாள்வது தவிர்க்க முடியாததாக இருக்கும். இப்படியான சூழலில், அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும், மின் கட்டண விவகாரத்தில் மாற்றங்களைச் செய்வது எதிர்ப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

அதேவேளையில், மின்சாரத் துறையில் வருவாயைப் பெருக்கும் அளவுக்குத் தற்போதைய நிலைமை இல்லை. இது தவெக அரசை ஒரு கடினமான நிலையில் சிக்க வைத்துள்ளது. இந்தப் பிரச்னையைப் புறக்கணிப்பது நிதிசார் சவால்களை மேலும் மோசமாக்கக்கூடும். அதேநேரத்தில் தீவிரமான சீர்திருத்தங்கள் அரசியல் ரீதியாக விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வித்திடவும் வாய்ப்புள்ளது," என்றார் கார்த்திகேயன் பிரபாகரன்.

அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, அதிகரித்து வரும் கடன், வரலாறு காணாத பற்றாக்குறைகள், பலவீனமடைந்து வரும் வருவாய்த் திரட்டல், பெருகி வரும் வட்டிப் பொறுப்புகள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இது ஏற்கெனவே மாநிலத்தின் பொருளாதாரம் மிகுந்த நிதி நெருக்கடியில் இருப்பதைப் போன்றதொரு சித்தரிப்பை நிறுவியுள்ளது.

இந்தச் சூழலில் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தவெக அரசு, வெறுமனே இருக்கும் பிரச்னைகளை அடையாளம் காண்பதுடன் நிற்காமல், அவற்றைச் சரி செய்வதற்குத் தேவைப்படும் நம்பகமான செயல்திட்டத்தைத் தங்களால் முன்வைக்க முடியும் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இவை அனைத்துக்குமான பதிலாக த.வெ.க அரசு தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு