அமலுக்கு வந்துள்ள அமெரிக்கா, இரான் ஒப்பந்தத்தின் 14 அம்சங்கள் என்ன?

டிரம்ப்

பட மூலாதாரம், White House

படக்குறிப்பு, ஜி7 மாநாட்டுக்கிடையே டிரம்ப் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை கூறுகிறது
    • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
    • பதவி, வெள்ளை மாளிகை செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்க-இரான் ஒப்பந்தம் கையெழுத்தாகி, இப்போது அமலுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்சில் உள்ள எவியன்-லெஸ்-பெய்ன்ஸில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட போது, அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட்டார் - இது மிக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க வழிவகை செய்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த 14 அம்ச ஒப்பந்தம், இரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்று கூறுகிறது, மேலும் நாட்டின் "மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக" 300 பில்லியன் டாலர் நிதியை உறுதியளிக்கிறது - இருப்பினும் அமெரிக்கா இதில் பங்களிக்க வேண்டிய அவசியமில்லை. இரு நாடுகளுக்கும் - மற்றும் இஸ்ரேலுக்கும் - இடையே மோதல் வெடித்த நான்கு மாதங்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் "செயல்திறன் அடிப்படையிலானது" என்று விவரித்துள்ளது, இரான் தனது கடமைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே பலன் பெறும்.

ஒப்பந்தத்தின் உரை பல கேள்விகளுக்குப் பதிலளிக்காமலும் - பல முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்காமலும் இருக்கும் நிலையில் - சில முக்கிய அம்சங்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவை இங்கே.

அம்சம் 1: 'அனைத்து முனைகளிலும்' மோதலுக்கு முடிவு

Smoke billows from southern Lebanon after reports of strikes yesterday

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தெற்கு லெபனானில் நேற்று நடந்ததாக கூறப்படும் தாக்குதலால் எழும் புகை

லெபனான் உட்பட "அனைத்து முனைகளிலும்" இராணுவ நடவடிக்கைகளை "உடனடியாக மற்றும் நிரந்தரமாக" நிறுத்துவதாக அமெரிக்கா, இரான் மற்றும் நட்பு நாடுகள் அறிவிக்கும் என்று ஒப்பந்தத்தின் முதல் பத்தி குறிப்பிடுகிறது.

அமெரிக்காவின் பார்வையில், ஹெஸ்பொலாவுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் இரானுடனான ஒப்பந்தத்தை சீர்குலைத்துவிடுமோ என்று டொனால்ட் டிரம்ப் கவலை அடைந்து வருகிறார்.

இரான் தன் பங்கிற்கு, லெபனானும் இந்த போர் நிறுத்தத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்ப்பதாகப் பலமுறை கூறியுள்ளது.

லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நீடித்தால், அது "புரிந்துணர்வை மீறுவதாக" அமையும் என்றும், "தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.

"இனிமேல்" இரு தரப்பும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கவோ அல்லது ஒருவருக்கொருவர் அச்சுறுத்தல் விடுக்கவோ மாட்டார்கள் என்றும், லெபனானின் "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை" உறுதி செய்வார்கள் என்றும் ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

இறுதி ஒப்பந்தம் மோதலின் நிரந்தர "முடிவுக்கு" வழிவகுக்கும் என்று ஆவணம் கூறுகிறது.

இந்த அம்சத்திற்கு இஸ்ரேல் எப்படி எதிர்வினையாற்றும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அம்சம் 2: 'உள்விவகாரங்களுக்கு' மரியாதை

இரான் சார்பில் இந்த ஒப்பந்தத்தில்

பட மூலாதாரம், IRNA

படக்குறிப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன்

அமெரிக்க அதிகாரிகளுடனான அழைப்பில் செய்தியாளர்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை வாசித்துக் காட்டப்பட்ட இந்த ஆவணத்தின் உரை, அமெரிக்காவும் இரானும் "பரஸ்பர இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும்" என்றும், ஒருவருக்கொருவர் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கும் என்றும் குறிப்பிடுகிறது.

இது இரானிய அதிருப்தியாளர் குழுக்களால் எதிர்மறையாகப் பெறப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரானிய நகரங்கள் முழுவதும் பரவிய அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது, இரான் போராட்டக்காரர்களுக்கு "உதவி வரப்போகிறது" என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அம்சம் 3: நீட்டிக்கக்கூடிய 60 நாள் காலக்கெடு

ஆவணத்தின் மூன்றாவது அம்சத்தின்படி, அமெரிக்காவும் இரானும் 60 நாட்களுக்குள் "அதிகபட்சமாக" ஓர் இறுதி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டுவர உறுதியளிக்கும், இருப்பினும் இரு தரப்பு சம்மதத்துடன் அந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியும்.

இரு நாடுகளின் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அந்த 60 நாள் காலக்கெடு இப்போது தொடங்கியுள்ளது.

பிரான்சில் உள்ள வெர்சாய்ஸ் அரண்மனையில் புதன்கிழமை இரவு நடந்த ஜி7 மாநாட்டிற்குப் பிந்தைய இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப் இரான் ஆவணத்தில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை கூற்றுப்படி, இதில் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னதாக, டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிகாரிகள் இருவரும் இந்த வார இறுதியில் ஜெனிவாவில் முறையான கையெழுத்து விழா நடைபெறும் என்று சுட்டிக்காட்டியிருந்தனர். அது இனியும் நடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அம்சம் 4: முற்றுகையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும்

Reopening the Strait of Hormuz among points agreed between US and Iran

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை திறப்பது தொடர்பாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையையும், இரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள "ஏதேனும் இடையூறுகள் அல்லது தடைகளையும்" நீக்கத் தொடங்கும் என்று நான்காவது அம்சம் கூறுகிறது.

ஒப்பந்தம் மற்றும் இரான் வெளியுறவு அமைச்சகத்தின்படி, முற்றுகை 30 நாட்களுக்குள் முழுமையாக முடிவுக்கு வரும். இந்த நேரத்தில், இரானிய துறைமுகங்கள் வழியாக அமெரிக்கா அனுமதிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை, ஹோர்மூஸ் நீரிணையில் இரானால் சீரமைக்கப்படும் போக்குவரத்தின் விகிதத்திற்கு ஏற்ப இருக்கும்.

இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள், இரானின் "அருகாமையில்" இருந்து அமெரிக்கப் படைகளை அகற்ற அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

நடைமுறையில், பிப்ரவரி 28 அன்று விரோதப் போக்குகள் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்க இராணுவம் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு திரும்பும் என்று பொருள்.

அம்சம் 5: ஹோர்மூஸ் நீரிணை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன், ஹோர்மூஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு இரான் "தனது சிறந்த முயற்சிகளைப் பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யும்" - எந்தக் கட்டணமும் இன்றி என்று ஒப்பந்தத்தின் ஒரு பகுதி குறிப்பிடுகிறது.

போர் தொடங்கி ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதில் இருந்தே, இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க நோக்கமாக இருந்து வருகிறது, இது உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தியது.

தொழில்நுட்ப மற்றும் இராணுவ "தடைகளை" அகற்ற வேண்டியதன் அவசியத்தையும், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் கணக்கில் கொண்டு, போக்குவரத்து "உடனடியாக" தொடங்கப்படும் என்று ஆவணம் குறிப்பிடுகிறது.

முன்னதாக நடந்த ஒரு விளக்கக் கூட்டத்தில் அதிகாரிகள், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்படாது என்பதைத் தெளிவுபடுத்த பலமுறை முயன்றனர்.

நீண்ட கால அடிப்படையில், ஹோர்மூஸ் நீரிணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து ஓமன் மற்றும் இதர வளைகுடா நாடுகளுடன் இணைந்து இரான் ஒரு "பரந்த" ஒப்பந்தத்தை உருவாக்கச் செயல்படும் என்று ஆவணம் குறிப்பிடுகிறது.

இரான் தனது உரிமைகளை 'தீவிரமாக' நிலைநாட்டும் என்று அமெரிக்கா நம்புகிறது, ஆனால் சுங்கக் கட்டண முறை நடைமுறையில் இருக்கும் ஒரு எதிர்காலத்தை வளைகுடா நாடுகள் "ஒருபோதும்" ஏற்காது என்று அந்த அதிகாரி கூறினார்.

அம்சம் 6: இரான் மறுசீரமைப்பிற்கான பணம்

இரானுக்கு பணம் அமெரிக்காவால் தரப்படுவதில்லை என்பதை நிறுவ டிரம்ப் நிர்வாகம் முயலுகிறது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானுக்கு பணம் அமெரிக்காவால் தரப்படுவதில்லை என்பதை நிறுவ டிரம்ப் நிர்வாகம் முயலுகிறது

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆறாவது அம்சம், அமெரிக்காவும் பிராந்திய பங்காளிகளும் இரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக குறைந்தது 300 பில்லியன் டாலர் (224 பில்லியன் பவுண்டுகள்) மதிப்பிலான "உறுதியான, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை" உருவாக்கும் என்று கூறுகிறது.

இறுதி வழிமுறை இறுதி ஒப்பந்தம் ஏற்பட்ட 60 நாட்களுக்குள் ஒப்புக்கொள்ளப்படும், மேலும் அனைத்து உரிமங்கள், தள்ளுபடிகள் மற்றும் அனுமதிகள் அமெரிக்காவால் வழங்கப்படும்.

இருப்பினும், அமெரிக்கா இதில் நிதி ரீதியாக ஈடுபடும் என்று இதற்குப் பொருள் அல்ல.

அமெரிக்கா இரானுக்கு "ஒரு பைசா கூட" செலுத்த வேண்டிய அவசியமில்லை அல்லது இந்த நிதியில் பங்களிக்க வேண்டியதில்லை என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டார்.

ஒரு கற்பனையான உதாரணமாக, இரான் "ஒழுங்காக நடந்துகொண்டால்", அமெரிக்காவின் ஆசியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் இரானில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்க முடியும் என்று அந்த அதிகாரி கூறினார்.

அமெரிக்கா இரானுக்கு நேரடியாகப் பணம் செலுத்தாது என்பதை அமெரிக்கப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர், இது இரானுக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையிலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது என்று இந்த அரசு கூறுகிறது.

அம்சம் 7: தடைகள் முடிவுக்கு வரும்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களில் சேர்க்கப்பட்டுள்ளவை மற்றும் அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டவை உட்பட இரானுக்கு எதிரான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா ரத்து செய்யும்.

இருப்பினும், இதற்கான காலக்கெடு தெளிவாக இல்லை.

கால அட்டவணை இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒப்புக்கொள்ளப்படும் என்று ஆவணம் குறிப்பிடுகிறது, ஆனால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்சினையை "உடனடியாக" தீர்க்க இரு தரப்பும் தங்களின் நோக்கங்களை ஒப்புக்கொள்கின்றன.

தடைகளால் இரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அமெரிக்காவின் பிரசாரமான - ஆபரேஷன் எகனாமிக் ஃபியூரி - தெஹ்ரானை உலகளாவிய நிதி அமைப்பிலிருந்து துண்டிக்க முயன்றது.

அம்சம் 8: அணு ஆயுதங்கள் இல்லை

அணு ஆயுதங்களை வாங்கவோ அல்லது பெறவோ மாட்டோம் என்று இரான் ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் தெஹ்ரானிடம் ஏற்கனவே உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையாள்வதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

பொருளை நிர்வகிக்கும் முறை தெளிவாக இல்லை. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இந்த வழிமுறை "பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படும்" என்று ஆவணம் குறிப்பிடுகிறது, ஆனால் குறைந்தபட்சம், சர்வதேச அணுசக்தி முகமை அல்லது ஐஏஇஏ (IAEA) மேற்பார்வையின் கீழ் அது இருக்கும் இடத்திலேயே "செறிவூட்டல் குறைக்கப்படும்".

ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி இதை ஒரு "குறைந்தபட்ச தரம்" மற்றும் அமெரிக்காவிற்கு கிடைத்த "பெரிய வெற்றி" என்று விவரித்தார்.

இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா செயல்திறன் அடிப்படையிலானது என்று விவரித்துள்ளதால், அம்சம் 7 இல் குறிப்பிடப்பட்டுள்ள தடைகள் நீக்கம் என்பது இரான் அம்சம் 8 இக்குக் கட்டுப்படுவதோடு பிணைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள் 9 மற்றும் 10: 'தற்போதைய நிலை' (Status quo)

ஒப்பந்தத்தின் அடுத்த இரண்டு பகுதிகள், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையாளும் வரை, இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவும் இரானும் அதன் அணுசக்தி திட்டத்தின் "தற்போதைய நிலையை" ஏற்க ஒப்புக்கொள்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன.

நடைமுறையில், அமெரிக்கா புதிய தடைகளை விதிக்காது என்று பொருள். இடைப்பட்ட காலத்தில், எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் போக்குவரத்து போன்ற இதர தொடர்புடைய சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கான விலக்குகளை அது வழங்கும்.

அம்சம் 11: முடக்கப்பட்ட நிதி

இந்த அம்சம் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது.

முடக்கப்பட்ட தனது சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று இரான் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது, இது நாட்டிற்கு மற்றொரு பொருளாதார வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

ஆவணத்தின் பதினொன்றாவது அம்சம், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும் "முடக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிதியை முழுமையாகக் கிடைக்கச் செய்ய அமெரிக்கா உறுதியளிக்கிறது" என்றும் பேச்சுவார்த்தைகளின் போது நடைமுறைகள் ஒப்புக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகள் தொடரும் போது, இரான் தனது அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையாளத் தொடங்குவது போன்ற ஒப்பந்தத்தின் அம்சங்களுக்குக் கட்டுப்படும் போது, அதற்குப் பரிசாக சில சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அம்சங்கள் 12-14: கண்காணிப்பு மற்றும் இறுதிப் பேச்சுவார்த்தைகள்

ஆவணத்தின் இறுதி சில அம்சங்கள் இந்த ஒப்பந்தம் எவ்வாறு செயல்படும் என்பதற்கான நடைமுறைகளை விளக்குகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதையும், எதிர்கால ஒப்பந்தத்திற்கு கட்டுப்படுவதையும் கண்காணிக்க அமெரிக்காவும் இரானும் ஒரு "வழிமுறையை" நிறுவும் என்று அவை கூறுகின்றன, இருப்பினும் நடைமுறையில் இது எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, அமலாக்கம் தொடங்கியவுடன், அமெரிக்காவும் இரானும் இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்.

இறுதியாக, இறுதி ஒப்பந்தம் ஒரு கட்டுப்படுத்தும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தால் உறுதிசெய்யப்படும் என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு