"இரு மொழிக்கொள்கை, தேர்தல் வாக்குறுதி" - இவை பற்றி ஆளுநர் உரையில் கூறப்பட்டது என்ன?

ஆளுநர் உரையுடன்

பட மூலாதாரம், TNDIPR

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது .

முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பின் போது வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்ட நிலையில், இன்று தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இரண்டும் முதலிலேயே பாடப்பட்டது.

சிவப்பு கம்பள வரவேற்பிற்கு பிறகு பேரவையில் நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார்.

ஆளுநர் உரையில் வாசிக்கப்பட்டது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் ஆளுநர் உரையாற்றி வருகிறார்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் ஆளுநர் உரையாற்றி வருகிறார்.

மோசமான நிதிநிலை இருந்தாலும் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளித்ததுடன் அவர்களது நலன்களுக்கு அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரை

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

  • இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்
  • உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்குவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும்
  • மாநிலத்தின் நிதி நிலைமை சீரமைக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்
  • தொழில் முதலீட்டை ஈர்க்க புதிய தொழில்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்
  • ஒன்றிய அரசுக்குச் செலுத்திய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வுப் பங்கைத் தரக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  • இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், நியாயமான நிதிப் பகிர்வைப் பெறுவதற்காக, இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் வரை சட்டப்பூர்வமாகக் கொண்டு செல்ல ஒரு சிறப்புச் சட்டக் குழுவும் அமைக்கப்படும்
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்புப் போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பதற்கான அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது. போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது..
  • அனைத்துத் துறை சார்ந்த கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.
ஆளுநர் உரையின் போது சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ஆளுநர் உரையின் போது சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் கூட்டம் எவ்விதம் இருக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆளுநரின் உரைக்கு பின்னர் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெறும்.

இந்த கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கூட்டத் தொடருக்கு "வாயத்திறங்க சி.எம்" என்று திமுக எம்எல்ஏக்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?

ஆளுநர் உரை தவெக சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் உரையாக அமைந்திருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திமுக மீது பழி சுமத்தியிருக்கின்றனர். முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஆளுநர் உரை அமைந்திருந்தது" எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட என்ன நடவடிக்கை என ஆளுநர் உரையில் எந்த தகவலும் இல்லை என உதயநிதி தெரிவித்துள்ளார். உண்மையான பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவேண்டும் என்பதற்காக எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் அதிமுக எம்.எல்.ஏக்களை புல்லிங் செய்துகொண்டிருக்கிறார் எனவும் ஆட்சியை பாதுகாக்க எம்.எல்.ஏக்களை வாங்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஆளுநர் உரையில் எதிர்பார்த்ததைப் போன்ற திட்டங்கள் எதும் இடம்பெறவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"தவெக பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போதிய நடவடிக்கை இல்லை. போதைப் பொருள் விற்பனை முன்பைவிட அதிகரித்துள்ளது." எனவும் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

"தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேட்டூர் அணை ஜுன் 12ஆம் தேதி திறக்கவில்லை. அதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கொடுக்கப்பட்ட்ட திட்டங்கள் ஆளுனர் உரையில் இடம்பெறவில்லை" எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் இரவில் தூங்கமுடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் என்றும் தடையில்லாத மின்சாரம் வழங்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு