எஸ்ஐஆர்: படிவம்-6 பற்றிய உச்சநீதிமன்ற கருத்தால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய நெருக்கடி - அடுத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் பல்லா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் 'படிவம் 6' குறித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்தது.
'பார் அண்ட் பெஞ்ச்' மற்றும் 'லைவ் லா' ஆகியவற்றின் தகவல்படி, "உச்ச நீதிமன்றம் படிவம் 6-ன் எந்தவொரு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை" என்று விசாரணையின் போது இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
"நாங்கள் மாற்றியமைக்கப்பட்ட எந்த 'படிவம் 6'-க்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தெளிவானது," என்று அவர் கூறினார்.
ஆவணங்கள் கிடைத்தவுடன், அந்தப் படிவத்தில் மாற்றங்களைச் செய்தது யார் என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
'படிவம் 6'-உடன் இணைக்கப்பட்ட எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர திருத்தப் பணி) தொடர்பான அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்த கூற்றுடன் பலர் இதனைத் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர்.
ஆனால் முழு விவரம் என்ன? தேர்தல் ஆணையம் என்ன கூறியது, இன்று உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?
முழு விவகாரம் என்ன?
செப்டம்பர் 26 அன்று நடைபெற்ற தேர்தல் ஆணையக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பத்திரிகை குறிப்பில், எஸ்ஐஆர்-ன் போது 'படிவம் 6'-உடன் இணைக்கப்பட்ட அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
அதே பத்திரிகை குறிப்பில், எஸ்ஐஆர்-ன் போது இந்த அறிவிப்பு பயன்படுத்தப்படும் என்றும், எஸ்ஐஆர் இல்லாத பட்சத்தில் 'வாக்காளர் பதிவு விதிகள், 1960'-ன் கீழ் பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது.
அதாவது, 'படிவம் 6' குறித்த தேர்தல் ஆணையத்தின் கூற்றுக்கும், அக்டோபர் 5 அன்று தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கும் இடையே முரண்பாடு உள்ளது.
எஸ்ஐஆர்-க்கான 'படிவம் 6' அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது; ஆனால், மாற்றியமைக்கப்பட்ட எந்த 'படிவம் 6'-க்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதன் செல்லுபடியாகும் தன்மை குறித்தும், தேர்தல் தொடர்பான முடிவுகளைத் தன்னிச்சையாக எடுத்ததாக தலைமைத் தேர்தல் ஆணையர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், ஒருமித்த கருத்து இல்லாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எந்த முடிவையும் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிடிஐ செய்தி நிறுவன தகவலின்படி, தேர்தல் ஆணையத்தின் ஏதேனும் ஒரு முடிவு சட்டத்திற்கு முரணாக இருப்பது கண்டறியப்பட்டால், அது ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமித்த கருத்து அல்லது பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் எடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ஒருதலைப்பட்சமான முடிவுகளால் வாக்காளர் பட்டியலே பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். எதிர் தரப்பினரின் வாதங்களைக் கேட்காமல் நீதிமன்றம் அத்தகைய ஒருதலைப்பட்சமான உத்தரவைப் பிறப்பிக்க முடியுமா என்று நீதிபதி பாக்ச்சி கேள்வி எழுப்பினார்.
'லைவ் லா' தகவலின்படி, "ஏதேனும் ஒரு முடிவு ஒருமனதாக எடுக்கப்படவில்லை என்பதை ஆவணங்கள் காட்டினால், அந்த முடிவுகளுக்கு நாங்கள் தடை விதிப்போம். அவை அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்று கூறுவோம். ஆனால் அனைத்து முடிவுகளும் ஒருதலைப்பட்சமானவை என்று நாமே ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ய முடியுமா? அவர்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பதிலளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று நீதிபதி பாக்ச்சி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் பத்திரிகை வெளியீடே செய்தி அறிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்குச் சமம் என்று விகாஸ் சிங் கூறிய போது, செய்தித்தாள் அறிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், ஞானேஷ் குமார் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவும், நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை சட்டவிரோதமானதாக அறிவிக்கவும் கோருகின்றன.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ச்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த பத்து மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்குத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் குறைந்தது 14 ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இதுவரை என்ன கூறியுள்ளது என்பதைப் பார்ப்போம்?

பட மூலாதாரம், Getty Images
"இவை வெறும் இடைத்தேர்தல்கள் மட்டுமே, அவ்வளவுதான்."
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் செப்டம்பர் 26, 2026 அன்று நிராகரித்தார்.
நந்திகிராம் மற்றும் ராஜ்நகர் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்ட மக்களால், ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது வாக்களிக்க முடியவில்லை என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தங்கள் மேல்முறையீடுகள் மீது முடிவு எடுக்கப்படாவிட்டால், அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் வாக்களிக்க முடியாது என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.
18,000-க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளதாக அவர் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விடம் தெரிவித்தார்; இருப்பினும், அவசர விசாரணைக்கான அவரது கோரிக்கையை அந்த அமர்வு ஏற்க மறுத்துவிட்டது.
முக்கிய எதிர்க்கட்சிகள் (காக்ரோச் ஜனதா கட்சி உட்பட) தலைமைத் தேர்தல் ஆணையரை அவரது பதவியிலிருந்து நீக்கக் கோரி போராட்டங்களைத் தொடங்கியுள்ள நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.
மிகப்பெரிய வாக்காளர் சரிபார்ப்புப் பணி
உச்ச நீதிமன்றத்தில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், இந்த விசாரணை ஒரு புதிய அத்தியாயமாக அமைந்தது.
இந்த வழக்கின் மையப்பொருள், வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கிய 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி' ஆகும்; இது வீடுவீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் ஒரு சரிபார்ப்பு நடவடிக்கையாகும்.
இறந்துபோன நபர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளவர்கள், வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்கள் அல்லாதவர்களின் பெயர்களை நீக்குவதற்கு இந்த நடைமுறை அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இந்த நடைமுறையை எதிர்ப்பவர்கள், இது வாக்காளர்கள் மீது ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சுமையைச் சுமத்துவதாகவும், தகுதியுள்ள குடிமக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும் கூறுகின்றனர்.
பிகாரில் எஸ்ஐஆர் நடைமுறையைத் தொடர நீதிமன்றம் அனுமதித்ததுடன், மே மாதத்தில் அது சட்டப்பூர்வமானது என்றும் அறிவித்தது.
ஆனால் மேற்கு வங்கத்தில், இந்த நடைமுறையில் நீதிமன்றம் மிகவும் தீவிரமான பங்கை வகித்தது.
பணியில் உள்ள நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்திடம், லட்சக்கணக்கான வாக்காளர்களைச் சரிபார்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதனுடன், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் மேல்முறையீடு விசாரிக்கப்படும் வரை வாக்களிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
பிகாரில் தொடக்கமும் சவால்களும்

பட மூலாதாரம், Dibyangshu SARKAR / AFP via Getty Images
எஸ்ஐஆர்-க்கு எதிரான மனுக்கள் மீதான முதல் விசாரணை ஜூலை 2025-ல் நடைபெற்றது. அப்போது, பிகார் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த எஸ்ஐஆர் பணி தொடங்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் "ஜனநாயகக் குடியரசின் செயல்பாட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது" என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியிருந்தது.
விசாரணைக்காக நீதிமன்றம் மூன்று முக்கிய அம்சங்களை வரையறுத்தது:
- இதைச் செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளதா?
- ஆணையம் பின்பற்றிய நடைமுறை சட்டத்திற்கு உட்பட்டதா?
- இதற்காக ஒதுக்கப்பட்ட காலம் மிகக் குறைவானதா?
நீதிமன்றம் எஸ்ஐஆர் நடைமுறையை நிறுத்தவில்லை. இருப்பினும், வாக்காளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கும் ஆவணங்களாக ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் அட்டைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கு அது பரிந்துரைத்தது.
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதைத் தடுக்குமாறு கோரிய மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஏற்கவில்லை.
இருப்பினும், அவர் மனுதாரர்களிடம், "நாங்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டால், எல்லாவற்றையும் ரத்து செய்துவிடுவோம்" என்று கூறினார்.
ஆகஸ்ட் மாதத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட சுமார் 65 லட்சம் மக்களின் பெயர்களையும், அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு அந்த அமர்வு உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், "பூனம் தேவியின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், தனது பெயர் நீக்கப்பட்டதையும், அதற்கான காரணத்தையும் பூனம் தேவி தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.
செப்டம்பர் 8 அன்று, அடையாளத்தை நிரூபிப்பதற்கான 12-வது செல்லுபடியாகும் ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், ஆதார் அட்டை "குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படாது" என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், "ஒவ்வொரு நபருக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு" என்று கூறினார்.
மனுதாரர்களின் வாதங்களைக் கேள்விக்குள்ளாக்கிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "எந்த மாற்றமும் இல்லாமல் ஒவ்வோர் ஆண்டும் வாக்காளர் பட்டியல்கள் அப்படியே நகலெடுத்து ஒட்டப்பட்டால் என்ன நடக்கும்?" என்று கேட்டார்.
இருப்பினும், நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
நீதிபதி ஜாய்மால்யா பாக்ச்சியும், இவை கேள்விகள் மட்டுமே என்றும், "எங்கள் முடிவு அல்ல" என்றும் கூறினார்.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் (சிறப்புச் சரிபார்ப்பு) நடைமுறையை எதிர்த்த மனுக்கள் 29 நாட்கள் விசாரிக்கப்பட்டன. ஜனவரி 29 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.
அதற்குள், பிகாரில் எஸ்ஐஅர் நடைமுறை நிறைவடைந்திருந்ததுடன், நவம்பர் 2025-ல் பிகார் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டிருந்தது.
மென்பொருள் கோளாறு, 'தர்க்க ரீதியான முரண்பாடு' மற்றும் வங்காளத்தில் தீர்ப்பாயம்

பட மூலாதாரம், Ishant Chauhan/Hindustan Times via Getty Images
ஜனவரி மாதத்திற்குள், எஸ்ஐஆர் நடைமுறை மேற்கு வங்காளத்தை அடைந்தது; அங்கு இவ்வழக்கில் "தர்க்கரீதியான முரண்பாடு" என்ற புதிய சொல் பயன்பாட்டிற்கு வந்தது.
தந்தையின் பெயர் அல்லது பெற்றோரின் வயது ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் போன்ற ஆவணங்களில் காணப்படும் முரண்பாடுகளின் அடிப்படையில், வாக்காளர்கள் சரிபார்ப்புக்காக அடையாளம் காணப்பட்டனர்.
ஜனவரி மாதத்தில், சுமார் 1.36 கோடி வாக்காளர்கள் இந்தப் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டிருந்ததை நீதிமன்றம் பதிவு செய்தது. பிப்ரவரி 4 அன்று, எழுத்துப் பிழை காரணமாக "உண்மையான தகுதியுடைய நபர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட அனுமதிக்கக்கூடாது" என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, அந்த அறிவிப்பை வெளியிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் குறித்து நீதிபதி பாக்ச்சி கேள்வி எழுப்பினார்.
வங்காளக் குடும்பங்களில் 'குமார்' என்பது ஒரு இடைப்பெயராக (middle name) அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், 'தபன் குமார் ராய்' என்பதற்குப் பதிலாக 'தபன் ராய்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததைப் போன்ற சிறிய வேறுபாடுகள் கூட, 'தர்க்கரீதியான முரண்பாடு' என்ற அடிப்படையில் அறிவிப்பு அனுப்பப்படுவதற்கு வழிவகுத்தன.
"அந்த மென்பொருளின் பயன்பாட்டால் பெருமளவில் அறிவிப்புகள் அனுப்பப்படுவதுதான் தற்போதைய யதார்த்த நிலை," என்று அவர் கூறினார்.
இந்தத் தானியங்கி முறையை விமர்சித்த மூத்த வழக்கறிஞர் மோகன் கட்டார்கி, "உண்மையான முறைகேடுகளைக் கண்டறிவதில் உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது" என்று கூறினார்.
அவர் பிபிசியிடம் கூறுகையில், "இறந்துபோன மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதே எஸ்ஐஆர்-இன் நோக்கமாக இருந்தது. ஆனால், ஒரு ரகசிய அல்காரிதம் 13 கோடி இந்தியர்களின் பெயர்களை நீக்கிவிட்டது. இதற்குக் கூறப்பட்ட காரணங்களில் 'தர்க்கரீதியான முரண்பாடு', 'பொருத்தம் இல்லாமை' மற்றும் 'வயது வித்தியாசம்' ஆகியவை அடங்கும். எழுத்துப் பிழைகளைக்கூ ட அந்த இயந்திரம் பிழைகளாகக் கருதியது. அந்த இயந்திரத்தின் நிரல் (code) குறித்த எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாகத் தெரிகிறது." என்றார்.
பிப்ரவரி 20 அன்று, கோரிக்கைகள் குறித்து எந்த அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்பதில் மேற்கு வங்க அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், இரு தரப்பினருக்கும் இடையே "நம்பிக்கை இடைவெளி" இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை நியமிக்குமாறு கொல்கொத்தா உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
'தர்க்கரீதியான முரண்பாடுகள்' மற்றும் வாக்காளர் பட்டியலின் பழைய பதிவுகளுடன் இணைக்க முடியாத நபர்கள் தொடர்பான புகார்களை இந்த அதிகாரிகள் விசாரிக்கவிருந்தனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, இப்பணியின் பிரமாண்டமான அளவைக் கருத்தில் கொண்டு, நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை நீதிமன்றம் அதிகரித்தது.
ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்தும் அதிகாரிகளை வரவழைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு கூடுதல் பட்டியல்கள் வெளியிடப்படலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் சேர்க்கப்படும் பெயர்களும் இறுதி வாக்காளர் பட்டியலின் ஒரு பகுதியாகவே கருதப்படும்.
மார்ச் 10 அன்று, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, "இப்போது இரு தரப்பினரின் நோக்கங்கள் மீதும் நாங்கள் சந்தேகம் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது" என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
தேர்தல் ஆணையத்திற்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 1-க்குள், சுமார் 60 லட்சம் ஆட்சேபனைகளில் 46 லட்சத்திற்கும் அதிகமானவை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.
அன்றைய விசாரணையின்போது, வாக்காளர் பட்டியலிலிருந்து ஒரு பெயரைத் தவறாக நீக்குவது அல்லது சேர்ப்பது போன்ற பிழைகளைத் தேர்தலுக்குப் பிறகு தீர்ப்பாயம் மூலம் சரிசெய்ய முடியும் என்று நீதிபதி பாக்ச்சி கூறினார். அவர் கூறுகையில், "ஒரு நபர் இன்று வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில் இருந்து, ஆனால் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் அந்த நீக்கம் நியாயமற்றது என்று கருதினால், அந்த முடிவை மாற்றி அமைத்து, அப்ப நபரின் பெயரை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதில் எந்தத் தடையும் இருக்க முடியாது." என்றார்.
ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நெருங்கியபோது, 34 லட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஏப்ரல் 13 அன்று பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 21 அல்லது 27-க்குள் முடிவெடுக்கப்படும் மேல்முறையீடுகளின் முடிவுகள் கூடுதல் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால், "மேல்முறையீடு நிலுவையில் உள்ளது என்பதற்காக மட்டும்" பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க உரிமை பெறமாட்டார்கள் என்றும் நீதிமன்றம் கூறியது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில் "இதை நாங்கள் அனுமதித்தால், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளவர்களின் வாக்குரிமையும் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்." என்றார்.
"சரியான அல்லது தவறான காரணங்களுக்காகப் பட்டியலில் பெயர் இல்லாத விழிப்புணர்வுள்ள வாக்காளரை இந்த அமர்வு புறக்கணிக்கிறது என்று யாரும் கருதக்கூடாது." என்று நீதிபதி பாக்சி கூறினார்.
வாக்குரிமை என்பது "தேசியவாதம் மற்றும் தேசபக்தியின் மிகச்சிறந்த வெளிப்பாடு" என்று அவர் கூறினார். அவர் ஒரு கற்பனைச் சூழலை உதாரணமாகக் கூறினார்.
2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் தொடர்புபடுத்தக்கூடிய அல்லது அடையாளம் காணக்கூடிய வாக்காளர்களில் 15 சதவீதம் பேர் வாக்களிக்கத் தவறி, அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டால், "நாங்கள் நிச்சயமாக அதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.
இருப்பினும், இது குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இவ்வளவு பெரிய அளவிலான செயல்முறையில், "எப்போதும் சில பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார்.
அத்தகைய தவறுகளைச் சரிசெய்வதற்காகவே மேல்முறையீட்டு நடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய விசாரணையின்போது, மேல்முறையீட்டு நடைமுறையை அவசரமாக முடிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிகார் தீர்ப்பு: 'பரந்த மற்றும் வரம்பற்ற உரிமை'
மே 27 அன்று, பிகார் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி பாக்ச்சி அடங்கிய அமர்வு, எஸ்ஐஆர்-இன் சட்டப்பூர்வத்தன்மையை உறுதிப்படுத்தியது. அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய இரண்டின் விதிகளும், தேர்தல் ஆணையம் "தனக்குச் பொருத்தமானதாகக் கருதும் வகையில்" ஒரு சிறப்பு மறுஆய்வை மேற்கொள்ள அனுமதிக்கின்றன என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பானது, தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட "பரந்த மற்றும் வரம்பற்ற அதிகாரம்" என்று இதனை வரையறுத்தது.
தாங்கள் ஒரு சிறந்த முறையைத் தேர்ந்தெடுத்திருப்போமா என்பது இங்குள்ள கேள்வி அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மாறாக, தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்த முறை "வெளிப்படையாகவே அளவுக்கு அதிகமானதா" என்பதே இங்குள்ள கேள்வி.
"குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளைக் கொண்ட அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்தவில்லை" என்று நீதிமன்றம் கூறியது.
ஒரு பிரச்னை "அமைப்பில் ஆழமாக வேரூன்றி, பரவலாக இருக்கும்போது", அதைச் சரிசெய்ய எடுக்கப்படும் விரிவான நடவடிக்கைகளை, அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் 'விகிதாச்சாரத்திற்கு மீறியவை' என்று கருத முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்த முறைக்கு மாற்றாகத் தாங்கள் விரும்பும் முறையை ஏன் திணிக்கவில்லை என்பதை விளக்கிய நீதிமன்றம், "சிறப்பு மறுஆய்வுக்காக (SIR) ஆணையம் மேற்கொண்ட செயல்முறை மற்றும் முறை ஆகியவை சிறந்த அல்லது மிகவும் பொருத்தமான தேர்வா என்பதை இந்த நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது" என்று கூறியது.
"ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட அந்தச் செயல்முறையானது, ஆவணங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் அணுகல் ஆகியவை குறித்து நியாயமான கவலைகளை எழுப்பியது" என்பதை அத்தீர்ப்பு ஒப்புக்கொண்டது.
இருப்பினும், நீதிமன்ற தலையீட்டின் மூலம் அந்தக் கவலைகள் நிவர்த்தி செய்யப்பட்டன என்று நீதிமன்றம் தெரிவித்தது.
செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டையைச் சேர்ப்பது மற்றும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுவது ஆகியவை இதில் அடங்கும்.
"அரசியலமைப்பு ரீதியான குறைபாடாகக் கருதத்தக்க வகையில், இவ்வளவு பெரிய அளவிலோ அல்லது திட்டமிட்ட முறையிலோ மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது" என்பதை அந்தத் தரவுகள் நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
"ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர் நீக்கப்படுவது" போன்ற விவகாரங்களை மேல்முறையீடு மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஒரு செயல்முறையின் செயல்திறனை அதன் கோட்பாட்டு கட்டமைப்பின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அது செயல்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையிலும் மதிப்பிட வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு குறிப்பிட்டது.
மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தத் தீர்ப்பின்படி, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் சரியாகவே சேர்க்கப்பட்டுள்ளன என்று சட்டரீதியாகக் கருதப்படுகிறது.
ஆனால், இந்த அனுமானத்தை ஆதாரங்கள் மூலம் மறுக்க முடியும் என்று நீதிமன்றம் கூறியது. முந்தைய தீர்ப்பு "ஒரு வழக்கை நீதித்துறை ரீதியாக விசாரித்து முடிவெடுக்கும் செயல்முறைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது" என்றும் அது குறிப்பிட்டது.
இந்த அங்கீகாரத்தை "அரசியலமைப்பு உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான ஒரு கேடயமாகப் பயன்படுத்த முடியாது" என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
குடியுரிமை விவகாரத்தைப் பொறுத்தவரை, இவ்விரு விஷயங்களுக்கும் இடையே "தெளிவான மற்றும் கொள்கை ரீதியான வேறுபாட்டை" அத்தீர்ப்பு சுட்டிக்காட்டியது.
ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தொடர்பான "வரையறுக்கப்பட்ட ஆய்வு" உள்ளது; மறுபுறம் ஒரு நபரின் குடியுரிமை குறித்த அதிகாரப்பூர்வமான முடிவு உள்ளது. குடியுரிமை குறித்து அதிகாரப்பூர்வமான முடிவை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது.
ஏதேனும் ஒரு வாக்காளர் குறித்து தேர்தல் ஆணையத்திற்குத் திருப்தி இல்லையெனில், அவரது விவகாரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
அந்த வாக்காளரின் பெயரை நீக்குவது என்பது அரசின் முடிவைப் பொறுத்தே அமையும்.
மக்களின் உரிமைகள் நீண்ட காலத்திற்கு நிச்சயமற்ற நிலையில் இருக்கக்கூடாது என்பதால், அடுத்த தேர்தலுக்கு முன்பாகவே அரசு இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இந்தத் தீர்ப்பு குறித்துப் பதிலளித்த பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஃபைசான் முஸ்தபா, பிபிசியிடம் கூறுகையில், "பிகார் தொடர்பான இந்தத் தீர்ப்பு மேலோட்டமாகப் பார்க்கையில் முந்தைய தீர்ப்புகளுடன் ஒத்துப்போவது போல் தோன்றுகிறது. இருப்பினும், நீதிமன்றம் இன்னும் சற்று கண்டிப்புடன் செயல்பட்டிருக்கலாம்," என்று குறிப்பிட்டார்.
"இந்தத் தீர்ப்பின் சில அம்சங்கள் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன," என்று அவர் கூறினார்.
பேராசிரியர் முஸ்தபா மேலும் கூறுகையில், "13 கோடி மக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு இப்போது முழுமையாகத் தெரியும். இந்தியத் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையைக் காக்க, நீதிமன்றம் இப்போது இன்னும் திறம்பட இதில் தலையிட வேண்டும்," என்றார்.
இவ்வளவு பெரிய அளவிலான ஒரு செயல்முறையை நீதிமன்றம் கையாண்ட விதம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி. லோகூரும் கவலை தெரிவித்தார்.
"இது மிகவும் தீவிரமான விஷயம். இது குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
"நீதிமன்றம் 'எஸ்ஐஆர்' நடைமுறையின் தாக்கத்தை விரிவாக ஆராய்ந்திருக்க வேண்டும்; குடிமக்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தை ஆழமாகப் பரிசீலித்திருக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Diptendu Dutta/NurPhoto via Getty Images
அடுத்தது என்ன?
மே 11 அன்று, மேற்கு வங்கத்தில் குறைந்தது 31 சட்டமன்றத் தொகுதிகளிலாவது, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்தத் தொகுதிகளின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்ததாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில், ஒரு நபரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது என்பது "அவர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குச் சமம்" என்று நீதிபதி பாக்ச்சி கூறியிருந்தார்; மேலும் இத்தகைய மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
செப்டம்பர் 16 அன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 38 லட்சம் மேல்முறையீடுகளில் சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
31 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரும் மனுவானது, "பெயர் நீக்கத்தின் அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக" இருந்தது என்று ஆணையம் கூறியது.
இவ்வகைகளில், குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவர்கள், வேறு இடத்திற்குச் சென்றவர்கள், இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆகியோர் அடங்குவர்.
நந்திகிராமில் பெறப்பட்ட 6,443 மேல்முறையீடுகளில், 89 பேரின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
ராஜநகரில் பெறப்பட்ட 12,452 மேல்முறையீடுகளில், நான்கு பேரின் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இவ்வழக்கின் விசாரணை இப்போது அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நந்திகிராம் மற்றும் ராஜ்நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கு முந்தைய நாள் இதுவாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























