சிகரெட்டை விட கொசுவர்த்தி சுருளின் புகை அதிக ஆபத்தானதா? நிபுணர்கள் எச்சரிக்கை

கொசு விரட்டிச் சுருள்கள் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, கொசு விரட்டிச் சுருள்கள் (கோப்புப் படம்)
    • எழுதியவர், ஆசியா அன்சார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கொசுக்களின் ரீங்காரச் சத்தத்தை அறியாதவர்கள் யார்?

ஈரப்பதம் நிறைந்த காலநிலையில், இந்தக் கொசுக்கள் நம் காதுகளுக்கு அருகில் சுற்றித் திரிந்து, தங்களது இருப்பை உணர்த்துகின்றன.

கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் காலங்களில், பெரும்பாலான மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

பலர் தூங்கச் செல்வதற்கு முன்பு கொசுவர்த்திச் சுருளைப் பற்ற வைக்கின்றனர். அதன் புகை கொசுக்களை விரட்டுவதோடு மட்டுமல்லாமல், நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாக்கும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால், அதன் ஆபத்தான விளைவுகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு கொசுவர்த்திச் சுருளில் இருந்து வெளியேறும் புகை, டஜன்கணக்கான சிகரெட்டுகளில் இருந்து வெளியேறும் புகைக்கு சமமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதனால் சுவாசம் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதுடன், கடுமையான ஆஸ்துமா பாதிப்பு கூட ஏற்படலாம்.

ஆனால், இந்தப் புகை கொசுக்களுக்கு மட்டும்தான் தீங்கு விளைவிக்குமா? அல்லது மனிதர்களின் உடல்நலத்தையும், குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களின் உடல்நலத்தையும் பாதிக்குமா? கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட பல்வேறு ரசாயனங்கள் நிறைந்த இந்தக் கொசுவர்த்திச் சுருளை பயன்படுத்துவதற்கான சரியான வழி என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக, பல்வேறு நிபுணர்களிடம் பேசினோம். அவர்களின் கருத்துகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மூடிய அறையில் சுருளை எரிப்பது விஷத்திற்கு சமம்

ஒரு கொசுவர்த்திச் சுருளில் இருந்து வெளியேறும் புகை, டஜன் கணக்கான சிகரெட்டுகளில் இருந்து வெளியேறும் புகைக்கு சமமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதனால் சுவாசம் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதுடன், கடுமையான ஆஸ்துமா பாதிப்பு கூட ஏற்படலாம்.
படக்குறிப்பு, நிபுணர்களின் கூற்றுப்படி, மேசை அல்லது நாற்காலிக்கு நேர் கீழே சுருளை வைத்துப் பற்ற வைப்பது சிறந்தது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மருத்துவர் ஷஸ்லி மன்சூர் நுரையீரல், சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை தொடர்பான சிறப்பு மருத்துவர்.

கொசு விரட்டும் சுருள்களை மூடிய அறைக்குள் எரிப்பது கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, கொசுவர்த்திச் சுருளை திறந்த மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், அது உங்களிடம் இருந்து குறைந்தது 2 முதல் 4 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.

பிபிசி உருதுவிடம் பேசிய மருத்துவர் ஷஸ்லி, "மூடிய அறையில் கொசுவர்த்திச் சுருளை எரிப்பது விஷம் கொடுப்பதற்கு இணையானது. சுருளில் உள்ள ரசாயனங்கள் காரணமாக, அது எரியும்போது பல்வேறு வகையான நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன. அவை மூடிய அறைக்குள் தேங்கி, மனிதர்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

மருத்துவர் ஷஸ்லி கூறுகையில், "பலர் திறந்தவெளியில் சாப்பிடும் போதோ அல்லது ஏதேனும் வெளிப்புற நிகழ்வின் போதோ தங்களுக்கு அருகிலேயே கொசுவர்த்திச் சுருளைப் பற்ற வைக்கின்றனர். இதன் மூலமும் உடல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுக்கு ஆளாகக்கூடும்.

"எனவே, ஒரு மேசை அல்லது நாற்காலிக்கு சற்று கீழே சுருளை வைத்து எரிப்பது நல்லது. இதனால் சுவாசிக்கும் போது புகை நேரடியாக உடலுக்குள் செல்வதைத் தவிர்க்க முடியும்" என்றார்.

சுருளை எரிக்கும் போது, ​​புகையுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பிற ரசாயனங்களும் உடலுக்குள் செல்கின்றன

பிபிசி உருதுவிடம் பேசிய மருத்துவர் ஷஸ்லி, “மூடிய அறையில் கொசுவர்த்திச் சுருளை எரிப்பது விஷம் கொடுப்பதற்கு இணையானது. சுருளில் உள்ள ரசாயனங்கள் காரணமாக, அது எரியும்போது பல்வேறு வகையான நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன. அவை மூடிய அறைக்குள் தேங்கி, மனிதர்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்” என்றார்.
படக்குறிப்பு, டெங்கு மற்றும் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, கொசுவலைகளைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் (கோப்புப் படம்).

கொசுக்களைத் தவிர்ப்பதற்கான மிகவும் பொதுவான மற்றும் குறைந்த செலவிலான வழி கொசுவர்த்திச் சுருள்களைப் பயன்படுத்துவதாகும். ஆனால், இந்தச் சுருள்களில் இருந்து வெளியாகும் புகை டஜன்கணக்கான சிகரெட்டுகளின் புகையைப் போலவே தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜாவேத் கான், "கொசுக்களைக் கொல்வதற்காக கொசுவர்த்திச் சுருள்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும்" என்று பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "மூடிய அறையிலோ அல்லது மூடிய இடத்திலோ ஒரு இரவு முழுவதும் கொசுவர்த்திச் சுருளை எரித்தால், 60 முதல் 100 சிகரெட்டுகளின் புகையை உங்கள் நுரையீரலுக்குள் சுவாசிப்பதற்கு சமம்."

பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் கொசுவர்த்திச் சுருள்களில் வெவ்வேறு ரசாயனங்கள் இருக்கலாம். ஆனால், பொதுவாக பைரெத்ரின், அலெத்ரின், கார்பன் மோனாக்சைடு மற்றும் பென்சீன் போன்ற ரசாயனங்கள் இதில் இருக்கும் என்று அவர் விளக்கினார். இவைதவிர, பல்வேறு நிறமூட்டிகள் மற்றும் வாசனை ரசாயனங்களும் கொசுவர்த்திச் சுருள்களில் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் படி, கொசு விரட்டும் சுருளில் இருந்து வெளியாகும் பிஎம் 2.5 துகள்களின் அளவு, 75 முதல் 137 சிகரெட்டுகளை எரிப்பதால் வெளியாகும் அளவுக்கு சமமாக இருக்கலாம்.

ஒரு கொசுவர்த்திச் சுருளை எரிப்பதால் வெளியாகும் ஃபார்மால்டிஹைடின் அளவு, 51 சிகரெட்டுகளை எரிப்பதால் உருவாகும் அளவுக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கலாம்.

ஆனால், கொசுவர்த்திச் சுருளைப் பயன்படுத்திய பிறகு அறைக் காற்றில் பரவும் இந்த ரசாயனங்கள் உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற கேள்வி எழுகிறது.

2025-ல் வெளியிடப்பட்ட பிபிசி அறிக்கையின் படி, கரிமப் பொருட்கள் முழுமையாக எரியாத போது கார்பன் மோனாக்சைடு (CO) வாயு உருவாகிறது.

இந்த வாயு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் இணைந்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனைக் குறைக்கிறது. சிறிய அளவுகூட தலைவலி, சோர்வு மற்றும் குமட்டலை ஏற்படுத்தலாம். அதிக அளவு உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்.

கந்தக டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டைஆக்சைடு போன்ற வாயுக்கள் ஏற்கெனவே இருக்கும் இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் சுவாச நோய்களை மோசமாக்கக்கூடும். இவை நுரையீரலின் இயற்கையான பாதுகாப்புத் திறனையும் பலவீனப்படுத்தலாம்.

அதே நேரத்தில், பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 போன்ற நுண்துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் மற்றும் பிற மாசுபடுத்திகள் மூக்கு, தொண்டை மற்றும் சுவாசப் பாதையின் உட்புறப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

இதனால் இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

 பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 போன்ற நுண்துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (VOCs) மற்றும் பிற மாசுபடுத்திகள் மூக்கு, தொண்டை மற்றும் சுவாசப் பாதையின் உட்புறப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
படக்குறிப்பு, ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் பணியாளர் ஒருவர் சுருள்களைக் கட்டுகிறார் (மாதிரிப் படம்)

மருத்துவர் ஜாவேத் கானின் கூற்றுப்படி, வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்களால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்கு புகையால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு பைரெத்ரின் போன்ற ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

ஆனால், எந்த வகையான புகையும் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

அதுகுறித்துப் பேசிய அவர், "மூடிய அறையில் கொசுவர்த்திச் சுருளில் இருந்து வெளியாகும் புகை, சுவாசப் பாதைக்குள் இருக்கும் உடலின் பாதுகாப்பு அமைப்பை பாதிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்தக்கூடும்" என்றார்.

அதனைக் குறித்து மேலும் விளக்கிய மருத்துவர் ஜாவேத் கான், "நிகோட்டின் காரணமாக மக்கள் சிகரெட் புகைக்கிறார்கள். ஆனால், சிகரெட்டால் ஏற்படும் உண்மையான பாதிப்பு, புகையுடன் சேர்ந்து உடலுக்குள் செல்லும் ஆயிரக்கணக்கான ரசாயனங்களால் ஏற்படுகிறது. கொசு விரட்டும் சுருள்களிலும் இதேபோன்று தான் நடக்கிறது" என்றார்.

அவரது கூற்றுப்படி, "கொசுவர்த்திச் சுருளின் புகை ஆஸ்துமாவை மோசமாக்குவதுடன், சுவாசப் பாதை நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம். ஒவ்வாமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இரவில் இருமல் ஏற்படுவதுடன், ஆஸ்துமா பாதிப்பும் ஏற்படலாம்."

சுருள் புகையில் கார்பன் மோனாக்சைடு உட்பட பல தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அடங்கியுள்ளன

 எந்த வகையான புகையும் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
படக்குறிப்பு, கொசு சுருள்கள் எரிக்கப்படும்போது வெளியிடப்படும் துகள்கள் அனைத்தும் மிகவும் நுண்ணியவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது (கோப்புப் படம்).

கொசுவர்த்திச் சுருள்கள் எரியும்போது, ​​பல வகையான ரசாயனங்களும் மிகச் சிறிய மாசுபடுத்தும் துகள்களும் காற்றில் பரவுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கொசுக்களை விரட்டுவதற்காக அல்லது கொல்வதற்காக இவை பயன்படுத்தப்பட்டாலும், மூடிய அல்லது போதிய காற்றோட்டம் இல்லாத அறைகளில் இருந்து வெளியாகும் இந்தப் புகையை நீண்ட நேரம் சுவாசிப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வியை பல்வேறு அறிவியல் ஆய்வுகள் எழுப்பியுள்ளன.

என்ஐஎச்-ல் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, கொசுவர்த்திச் சுருள்களைப் பயன்படுத்திய பிறகு, அறைக்குள் இருக்கும் காற்றில் பல்வேறு மாசுபடுத்திகள் கண்டறியப்பட்டன. அவற்றில் கார்பன் மோனாக்சைடு, டிவிஓசி (TVOCs - மொத்த ஆவியாகும் கரிமச் சேர்மங்கள்), கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு மற்றும் நுண்துகள் மாசுபாடு ஆகியவை அடங்கும்.

பெரிய அறைகளில் கொசுக்களைக் கொல்லும் சுருளின் திறன் சற்று குறைந்ததாகவும், போதிய காற்றோட்டம் இல்லாத அறைகளில் அதன் செயல்திறன் அதிகமாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

என்ஐஎச்-ல் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, கொசுவர்த்திச் சுருள்களைப் பயன்படுத்திய பிறகு, அறைக்குள் இருக்கும் காற்றில் பல்வேறு மாசுபடுத்திகள் கண்டறியப்பட்டன. அவற்றில் கார்பன் மோனாக்சைடு, டிவிஓசிஸ் (TVOCs - மொத்த ஆவியாகும் கரிமச் சேர்மங்கள்), சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு மற்றும் நுண்துகள் மாசுபாடு ஆகியவை அடங்கும்.
படக்குறிப்பு, வங்கதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள் (மாதிரி புகைப்படம்)

கொசுவர்த்திச் சுருள்கள் எரியும்போது வெளியேறும் அனைத்து துகள்களும் மிகவும் நுண்ணியதாக இருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலான துகள்கள் 0.01 முதல் 0.1 மைக்ரோமீட்டர் மற்றும் 0.2 முதல் 0.3 மைக்ரோமீட்டர் அளவில் இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்தது.

கொசுவர்த்திச் சுருள்களால் ஏற்படும் மாசுபாட்டால் நோய் ஏற்படும் அபாயம் இருந்தாலும், அவை கொசுக் கடியிலிருந்து குறைந்த அளவிலான பாதுகாப்பையே வழங்குவதாகவும் ஆய்வில் தெரியவந்தது. எனவே, மலேரியாவைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இவை மிகவும் பயனுள்ள முறையாகக் கருதப்படவில்லை.

சுகாதாரத் தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, கொசுவர்த்திச் சுருள் புகையை சுவாசிப்பது குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.

மலேரியா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கொசுவர்த்திச் சுருள்களைப் பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.

மருத்துவர் ஷஸ்லியின் கூற்றுப்படி, சிகரெட்டைப் போலவே கொசுவர்த்திச் சுருளை எரிப்பதாலும் பல்வேறு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் வெளியாகின்றன. இவை நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதுடன், கடுமையான ஆஸ்துமா பாதிப்பைக் கூட ஏற்படுத்தக்கூடும்.

அவரது கூற்றுப்படி, "போதிய காற்றோட்டம் இல்லாத இடங்களில் கொசுவர்த்திச் சுருள்களை எரிப்பது ஆஸ்துமா, இருமல், தொண்டைப் புண் மற்றும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடும். இது நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கலாம். ஆஸ்துமா நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் நிலைகூட ஏற்படலாம்."

மருத்துவர் ஷஸ்லி கூறுகையில், "கொசுவர்த்திச் சுருளின் புகை ஒவ்வாமை உள்ளவர்களை மட்டுமல்லாமல், யாருக்கும் மூக்கு, தொண்டை மற்றும் சுவாசப் பாதை தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். கண்களில் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் தொண்டையில் அடைப்பு போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்" என்றார்.

கொசு வலைகளின் பயன்பாடு

மருத்துவர் ஷஸ்லி இதுகுறித்துக் கூறுகையில், "மாசுபாடு எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஒருவருக்கு நுரையீரல் பலவீனமாக இருந்தாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாலோ, புகை மற்றும் காற்று மாசுபாடு அவர்களின் உடல்நலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

மருத்துவர் ஷஸ்லியின் கூற்றுப்படி, கொசுக்களைத் தவிர்ப்பதற்கு அறைகளில் மின்சார கொசு விரட்டும் சாதனங்களைப் (Mosquito Repellents) பயன்படுத்துவது சிறந்தது.

இது தவிர, ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு வலைகளைப் பொருத்துவது, கொசுவலைக்குள் தூங்குவது, குறிப்பாக குழந்தைகளைத் திறந்தவெளியில் தூங்க விடாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மூடிய அறையில் எந்தவிதமான கொசு விரட்டும் ஸ்பிரேயையோ அல்லது கொசுவர்த்திச் சுருளையையோ பயன்படுத்தக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

மருத்துவர் ஷஸ்லி இதுகுறித்துக் கூறுகையில், "மாசுபாடு எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஒருவருக்கு நுரையீரல் பலவீனமாக இருந்தாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாலோ, புகை மற்றும் காற்று மாசுபாடு அவர்களின் உடல்நலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

இது தவிர, கொசுவர்த்திச் சுருளுக்குப் பதிலாக மின்சார கொசு விரட்டும் சாதனங்கள் அல்லது கொசு விரட்டும் லோஷனைப் பயன்படுத்துவது பாதுகாப்பான மற்றும் சிறந்த வழியாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு