கவிஞர் புலமைப்பித்தனின் 10 பிரபல பாடல்களின் தொகுப்பு - கண்ணதாசன் பாணியில் அவர் எழுதிய பாடல் தெரியுமா?

பட மூலாதாரம், Pulamaipithan Fans Association FB
''அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே...
சுகம் பல தரும் தமிழ்ப்பா...
சுவையொடு கவிதைகள் தா...தமிழே நாளும் நீ பாடு!''
இளையராஜாவுக்குப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர், மறைந்த கவிஞர் புலமைப்பித்தன்.
கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த புலமைப்பித்தனின் சொந்தப்பெயர் ராமசாமி. நடிகர் சிவகுமார், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் படித்த அதே சூலூர் அரசுப் பள்ளியில் படித்த ராமசாமி, பேரூர் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்று சென்னை சாந்தோம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரை தமிழ்ச் சினிமாவில் புலமைப்பித்தனாக மாற்றி பாடலாசிரியராக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிறார் அவருடைய நெருங்கிய நண்பரும், திரைத்துறையில் இணைந்து பணியாற்றியவருமான சூலூர் கலைப்பித்தன். புலமைப்பித்தன், சிவகுமார், மணிவண்ணன் பயின்ற அதே சூலூர் அரசுப்பள்ளியில் பயின்று நட்பில் இருந்தவர் கலைப்பித்தன்.
சிவகுமாரை நாயகனாக வைத்து, பாக்யராஜ் கதை வசனத்திலும், இளையராஜா இசையிலும் 'சாட்டை இல்லாத பம்பரம்' மற்றும் 'கண்ணத் தொறக்கணும் சாமி' ஆகிய 2 படங்களை கலைப்பித்தன் தயாரித்துள்ளார். சுதந்திர பாரதி உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தமிழில் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தமிழக அரசின் 'முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவாதம்' விருது பெற்றுள்ளார்.
''தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்ட புலமைப்பித்தன், தன்னுடைய பாடல்களில் தன்னுடைய கொள்கையை பறை சாற்றியிருக்கிறார். காதல், தத்துவம், கொள்கை என எந்தச் சூழலுக்கான பாடலையும் வெகுஜனம் ரசிக்கும் விதத்தில் எழுதுவார். அதனால்தான் இளையராஜா இவரிடம் பல கவிதைகளை வாங்கி அதை புகழ்பெற்ற பாடல்களாக மாற்றியிருக்கிறார்.'' என்கிறார் சூலூர் கலைப்பித்தன்.
ஆசிரியராக இருந்து திரைத்துறையில் பாடலாசிரியராக கால் பதித்து, தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவுமான புலமைப்பித்தன், தமிழகத்தில் சட்டமேலவை துணைத்தலைவர், அதிமுக அவைத்தலைவர் ஆகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் இவர் மறைந்தார். அவருடைய பிறந்தநாளான (அக்டோபர் 6) இன்று, புலமைப்பித்தனின் சிறந்த பாடல்களை சூலூர் கலைப்பித்தனும், பல்வேறு கவிதை நூல்கள் மற்றும் உலக சினிமாக்களின் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள கவிஞர்கள் அவை நாயகன், கவியன்பன் கே.ஆர்.பாபு ஆகியோரும் பட்டியலிட்டனர். அவற்றில் 10 சிறந்த பாடல்களின் தொகுப்பு இது:
1. ஆயிரம் நிலவே வா...ஓராயிரம் நிலவே வா! (அடிமைப்பெண்)
எம்ஜிஆர் நடித்த 'அடிமைப்பெண்' படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்தான், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல். அதே பாடல்தான் புலமைப்பித்தனுக்கும் முதல் பாடல். தன்னுடைய முதல் பாடலிலேயே எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்று, அதற்குப் பின் அவருக்காக ஏராளமான பாடல்களை எழுதியதைச் சுட்டிக்காட்டுகிறார் சூலூர் கலைப்பித்தன்.
கே.வி.மகாதேவன் இசையில் உருவான இந்தப்பாடலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பி.சுசீலா பாடியிருப்பார்.

2. நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...(இதயக்கனி)
எம்ஜிஆருக்கு இதயக்கனி என்ற பட்டம் உண்டு. அந்த படத்திற்காக புலமைப்பித்தன் எழுதிய இந்தப் பாடல், அதிமுக தொண்டர்கள் அனைவருக்குமே மனப்பாடமாயிருக்கும். எம்ஜிஆர் இருக்கும் வரை இந்தப் பாடல் ஒலிக்காத அதிமுக நிகழ்ச்சியே இருந்திருக்காது. காரணம், அந்தப் பாடலில் எம்ஜிஆரின் குணாதிசயத்தையும், கொள்கையையும் வார்த்தைக்கு வார்த்தை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார் புலமைப்பித்தன்.
காவிரி ஆறு தலைக்காவிரியில் புறப்பட்டு அகண்ட காவிரியாக விரிவதை விளக்கும் வகையில் 'தென்னகமாம் இன்பத்திருநாட்டில் மேவியதோர்...' என்று சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க்குரலில் வார்த்தைகளாகத் துவங்கும் இந்தப் பாடலில், காவிரியையும், எம்ஜிஆரின் ஈகை குணத்தையும் ஒப்பிட்டுப் பாடல் வரிகளை புலமைப்பித்தன் எழுதியிருப்பார். அதை விளக்கும் விதமாக பாடலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
சீர்காழி கோவிந்தராஜனுடன் டி.எம்.செளந்தரராஜனும், எஸ்.ஜானகியும் இந்தப் பாடலை இணைந்து பாடியிருப்பார்கள். ஏறத்தாழ 7 நிமிடங்கள் நீளும் இந்தப் பாடலின் இசை, குரல், நடனம், காட்சிப்படுத்தப்பட்ட விதம், இரட்டை இலைச்சின்னம் என ஒட்டு மொத்தமாய் அதிமுக தொண்டர்களை குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்களை ஒரு கொண்டாட்டமான ஆடிப்பாடும் மனநிலைக்குக் கொண்டு செல்லும்.
3. சங்கத்தில் பாடாத கவிதை... அங்கத்தில் யார் தந்தது (ஆட்டோ ராஜா)
விஜயகாந்த் நடித்த ஆட்டோராஜா படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல், இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாகும். இந்தப் படத்திற்கு சங்கர் –கணேஷ் இசையமைத்திருந்தாலும் இந்தப் பாடல் மட்டும் இளையராஜாவிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
கையின்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ...
காதலியை காதலன் வர்ணிக்கும் காதல் பாடலாக படத்தில் இடம் பெறும் இந்தப் பாடலின் இந்த வரிகள் உட்பட பாடல் முழுவதுமே தமிழும் இளமையும் கொஞ்சி விளையாடுவதாகச் சொல்கிறார் கவிஞர் அவை நாயகன். இந்தப் பாடலை இளையராஜாவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருப்பார்கள்.
ஏற்கெனவே தன்னுடைய மூன்றாம் பிறை படத்தில் இளையராஜா அமைத்த பின்னணி இசையை வைத்து, தன்னுடைய மலையாளப்படமான 'ஓலங்கள்' படத்தில் ஒரு பாடல் ட்யூனாக மாற்றச்சொல்லியிருப்பார் பாலு மகேந்திரா. 'தும்பி வா தும்பக்குடத்தில்' என்ற அந்தப் பாடல் மலையாளத்தில் பெரும் பிரபலமானது. அதே டியூனுக்காக இந்தப் பாடல் வரிகளை எழுதியிருந்தார் புலமைப்பித்தன்.

பட மூலாதாரம், Pulamaipithan Fans Association FB
4. அமுதே தமிழே அழகிய மொழியே...எனதுயிரே (கோயில் புறா)
இளையராஜா, தன்னுடைய மேடைக்கச்சேரிகளில் 'ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ' என்ற பக்திப் பாடலைப் பாடிய பின்பு, அடுத்த பாடலாகத் தேர்ந்தெடுக்கும் முதல் பாடலாக இந்தப் பாடல் இருக்கும். சென்னையில் நடந்த 'இளையராஜா 50' நிகழ்ச்சியில் இந்தப் பாடலை பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த கமலுடன் சேர்ந்து ரசித்துப் பாடியிருப்பார் இளையராஜா.
கே.விஜயன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டில் வெளியான 'கோயில் புறா' படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது. ஒரு சிறுமிக்கு சிறுவன் இசை கற்றுத்தரும்போது பாடும் பாடலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடலை பி.சுசீலாவும், உமா ரமணனும் இணைந்து பாடியிருப்பார்கள்.
தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே - தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்...
என முழுக்க முழுக்க தமிழின் பெருமையைக் கொண்டாடும் வரிகளாக இந்த பாடலை வடித்திருப்பார் புலமைப்பித்தன். அதற்குப் பொருத்தமாக இசையைக் கோர்த்திருப்பார் இளையராஜா.
தமிழ் விரும்பிகளின் தனி விருப்பப்பாடலாக இது பண்பலைகளில் எப்போதும் கேட்கப்படுவதுண்டு. தமிழ் கலை, இலக்கிய விழாக்களில், நூல் வெளியீட்டு விழாக்களில் இந்தப் பாடல் அதிகமாக ஒலிப்பதைக் கேட்க முடியும்.
5. கங்கை நதியோரம் ராமன் நடந்தான்...(வரப்பிரசாதம்)
''இந்தப் பாடல் இன்றைய தலைமுறையினருக்கு அதிகமாக அறிமுகமாகாத பாடலாக இருந்தாலும், சென்ற தலைமுறை இசை ரசிகர்களின் விருப்பப்பாடல்கள் பட்டியலில் இந்தப் பாடலும் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலின் வரிகளும், வரிகளை செவிக்கு மறிக்காத மென்மையான இசையும் ஓர் ஈடு இணையற்ற பிணைப்பு.'' என்கிறார் கவிஞர் அவைநாயகன்.
தமிழ்ப்பாடல்களைப் பற்றி அதிகமாக குறிப்புகளை வெளியிடும் இசை விமர்சகர் ஜெயசீலன், இந்தப் பாடலைப் பற்றி மெய்சிலிர்த்து இப்படி எழுதியிருக்கிறார்...
''மெல்லிய காற்றில் மலர்கள் உதிர்ந்து விழ கிடார் கம்பிகளின் மென்மையான சிணுங்கலுடன் குழல் கதை பேச இடைபுகும் வயலின் இசைத்து ஓய..."கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்" என்ற வாணியம்மாவின் தேவலோக குரல் இரவின் ஏகாந்தத்தை இனிமையாக்கும் மாயம். மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள்" என்று கந்தர்வ குரலோன் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும்போது நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்க வைக்கும்.''
கடந்த 1975 ஆம் ஆண்டில் வெளியான 'வரப்பிரசாதம்' என்ற படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது. இதற்கு இசையமைத்தவர் கோவர்த்தனன். கே.ஜே.ஜேசுதாஸ் உடன் இணைந்து வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.
6. நீ ஒரு காதல் சங்கீதம்...(நாயகன்)
நாயகன் படத்தில் தான் எழுதிய 'நிலா அது வானத்து மேலே' தவிர, மற்ற பாடல்கள் அனைத்தையும் எழுதும் வாய்ப்பை புலமைப்பித்தனுக்குக் கொடுத்திருப்பார் இளையராஜா. அதை மிகச்சிறப்பாக செய்திருப்பார் புலமைப்பித்தன். அந்திமழை மேகம், தென்பாண்டிச்சீமையிலே, நான் சிரித்தால் தீபாவளி என எல்லாப் பாடல்களுமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவை என்றால், அதில் இடம் பெற்றிருந்த 'நீ ஒரு காதல் சங்கீதம்' பாடல் எந்தச் சூழலிலும் கேட்பவரின் மனதை இலகுவாக்குகின்ற ஓர் இனிமையான பாடலாகும்.
இளையராஜாவின் கச்சேரிகளில் தவறாமல் இடம் பெறும் பாடல்களில் இதுவும் ஒன்று. அதேபோன்று பண்பலைகளில் 'ரெட்ரோ' என்று குறிப்பிடப்படும் நாட்களில் இந்தப் பாடல் ஒரு முறையாவது ஒலிக்காமல் இருக்காது. மனோவும், சித்ராவும் இணைந்து பாடிய டாப் ஹிட் பாடல்களில் இந்தப் பாடலுக்கு தனி இடம் இருக்கிறது.
'தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்...கடற்கரைக் காற்றே...கடற்கரைக் காற்றே வழியை விடு...தேவதை வந்தாள் என்னோடு!'' என்ற காதல் வழிந்தோடும் வரிகளை மணிரத்னம் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.

பட மூலாதாரம், Pulamaipithan Fans Association FB
7. புஞ்சையுண்டு நஞ்சையுண்டு பொங்கிவரும் கங்கையுண்டு...(உன்னால் முடியும் தம்பி)
''நாத்திகக் கொள்கையில் இறுதிவரை நிலைத்திருந்த புலமைப்பித்தன், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய பாடல்களில் கொள்கைகள் சார்ந்த கருத்துகளைத, எளிமையான அதேநேரத்தில் நினைவில் பதியக்கூடிய வார்த்தைகளில் வெளிப்படுத்துவார். உன்னால் முடியும் தம்பி படம் அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. அதை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பார்.'' என்கிறார் கலைப்பித்தன்.
சாதிய மறுப்பு, பொதுவுடமை ஆகிய கொள்கைகளை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்ட 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் ''அக்கம் பக்கம் பாரடா சின்னராசா'', ''உன்னால் முடியும் தம்பி தம்பி...அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி'' ஆகிய பாடல்களுடன் இந்தப் பாடலையும் அவர் எழுதியிருப்பார்.
எல்லாப் பாடல்களிலும் அரசியல், சமூகப்பாகுபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த புலமைப்பித்தன், இந்தப் பாடலில், ''வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு நீதிசொல்ல மட்டும் இங்கே நாதியில்லை'' என்று மிக அழுத்தமாக தனது சமூகப்பார்வையைப் பதிவு செய்திருப்பார். அதை கம்பீரத்தோடு பாடியிருப்பார் எஸ்.பி.பி.
8. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...(தங்கமகன்)
கமல் படங்களுக்காக அதிக பாடல்களை எழுதியுள்ள புலமைப்பித்தன், ரஜினிக்காக எழுதிய பாடல்கள் மிகக் குறைவுதான். ஆனால் எழுதிய சில பாடல்களும் தமிழ்ச் சினிமாவின் இசை ரசிகர்களால் இன்று வரை பெரிதும் ரசிக்கப்படுபவை. அவற்றில் ஒரு பாடல்தான் இது. மென்மையான இந்த காதல் பாடலை எஸ்.பி.பி.யும், எஸ்.ஜானகியும் மிகமிக மென்மையாக உருகி உருகிப் பாடியிருப்பார்கள்.
''வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்'' என்று பெண்ணும், அதைத்தொடர்ந்து, ''கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்'' என்று ஆணும் பாடும்போது வெளிப்படுத்தப்படும் காதலின் உணர்வு, எல்லாக் காலத்துக்குமான காதலர்களுக்குமான நெருக்கமான பரிமாற்றமாக இருக்கும் என்கிறார் கவிஞர் அவை நாயகன். இந்தப் படம் ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் 1983 ல் வெளியான தங்கமகன் படத்தில் இடம் பெற்றிருந்தது.

பட மூலாதாரம், Pulamaipithan Fans Association FB
9. கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா...(மெளனம் சம்மதம்)
பட்டினப்பிரவேசம் படத்தில் ''வான்நிலா நிலா உன் வாலிபம் நிலா'' என்ற பாடலில் பாடலின் வரிகள் அனைத்தும் 'லா...லா...'' என்று முடியும் வகையில் கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார்.
அதேபோன்று இந்தப் பாடல் முழுவதும் ''தென்பாண்டி கூடலா, தேவார பாடலா, தீராத ஊடலா, தேன் சிந்தும் கூடலா, என் அன்பு காதலா, எந்நாளும் கூடலா, பேரின்பம் மெய்யிலா, நீ தீண்டும் கையிலா, பார்ப்போமே ஆவலா, வா-வா நிலா'' என்று அனைத்து வரிகளும் ''லா...லா'' என்று நிறைவு பெறும் வகையில் பாடலை வடித்திருப்பார் புலமைப்பித்தன்.
இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடியிருந்தனர். மம்முட்டி, அமலா நடித்த மெளனம் சம்மதம் என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல், இரவில் பால் நிலா வெளிச்சத்தில் ஒளிரும் வகையில் ரம்மியமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். வானில் முழு நிலா தெரியும் நாட்களில் எல்லாம் பண்பலைகளில் இந்தப் பாடலை மாறிமாறி பல ரசிகர்கள் விரும்பிக்கேட்பது வழக்கமாகவுள்ளது.
10. அம்மாடி இதுதான் காதலா...(இது நம்ம ஆளு)
இயக்குநர் கே.பாக்யராஜ் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த 'இது நம்ம ஆளு' படத்தில் சூப்பர் ஹிட் பாடலான இந்தப் பாடலை புலமைப்பித்தன்தான் எழுதியிருந்தார். சரணம், பல்லவி முழுவதும், ''அம்மாடி இதுதான் காதலா, அடராமா இது என்ன வேதமோ, அடி சித்திரம் எப்படி சேலையக் கட்டுச்சு...தேவதை பாதங்கள் பூமியில் ஒட்டுச்சு'' என்று எளிமையான வரிகளில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருப்பார் புலமைப்பித்தன்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.எஸ்.சித்ரா இணைந்து பாடிய இந்தப் பாடலின் இசையும் வரிகளும் குரல்களும் கச்சிதமாக பின்னிப் பிணைந்து பாடலை ஒரு பெரும் உயரத்துக்குக் கொண்டு சேர்த்தன. இன்றைய தலைமுறை வரையிலும் ரசிக்கின்ற ஒரு டூயட் பாடலாக இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதே படத்தில் ''பச்சை மலை சாமி ஒண்ணு உச்சி மலை ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம்'' என்ற பாடல், சாதிய பாகுபாட்டை மிகக்கடுமையாக விமர்சிக்கும் பாடலாக இருந்தது. பாக்யராஜ் பாடிய முதல் பாடல் அது. பாடலில் இடம் பெற்றிருந்த சில வரிகளை, இன்றைய அரசியல், சமூக சூழ்நிலையில் எழுதியிருக்க முடியுமா, எழுதியிருந்தாலும் அது அனுமதிக்கப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் என்கின்றனர் கவிஞர்கள்.
சோகப்பாடல்களிலும் சோபித்த புலமைப்பித்தன்!
இவை தவிர்த்து, 'கன்னிப்பருவத்திலே' படத்திற்காக சங்கர் –கணேஷ் இசையில் அவர் எழுதிய ''பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்'' பாடலும், ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துக்காக இளையராஜா இசையில் அவர் எழுதிய ''உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க.'' பாடலும் புலமைப்பித்தனின் எளிய ஈர்ப்புள்ள தமிழுக்கு இன்னும் சில உதாரணங்கள்.
இருப்பினும் எம்ஜிஆருக்காக அவர் எழுதிய காதல் பாடல்கள் அதிகம் ஹிட் அடித்ததாகச் சொல்கிறார் கவிஞர் அவை நாயகன். இதயவீணை' படத்துக்காக அவர் எழுதிய ''பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப இரவு'' என்ற பாடல் அக்காலத்தில் இசைக் கச்சேரிகளிலும், கல்யாண வீடுகளிலும் இடைவிடாது ஒலித்ததாகச் சொல்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























