அமெரிக்கா படையெடுத்தால் அதை எதிர்கொள்ள கனடா எவ்வாறு தயாராகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நதீன் யூசிஃப்
- எழுதியவர், ராபின் லெவின்சன்-கிங்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்கப் படையெடுப்பு போன்ற கற்பனை செய்து பார்க்கவே கடினமான ஒரு சூழலுக்கும் தான் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த வாரம் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் நிலையில், அமெரிக்கா–கனடா இடையிலான உறவு மறுவரையறை செய்யப்பட்டு வருவதால், அனைத்து சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழிடம் அவர் கூறினார். அதேவேளை, அமெரிக்கா கனடா மீது படையெடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், அத்தகைய சூழல் ஏற்படுவது அசாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இது வெறும் ஆபத்து மேலாண்மை மட்டுமே" என்று கார்னி கூறினார்.
டிரம்பின் உலகளாவிய வரி விதிப்புகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற அவரது விருப்பம் குறித்து அவர் அடிக்கடி வெளியிடும் கருத்துகள் ஆகியவை, அமெரிக்காவிடம் இருந்து சாத்தியமான தாக்குதலை எதிர்கொள்வதற்காக கனடா தனது பாதுகாப்புத் தயார்நிலையை அதிகரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளன.
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா படைபலத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். அதற்குப் பதிலாக, தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக கனடா மீது பொருளாதார அழுத்தத்தைத் தொடர்ந்து செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"கனடாவின் சிறந்த மக்களைப் பாதுகாப்பதற்காக அதிபர் டிரம்பை விட வேறு எவரும் அதிக முயற்சி செய்ததில்லை" என்று வெள்ளை மாளிகை இந்த வாரம் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படக்கூடிய பல்வேறு வழிகளைச் சுட்டிக்காட்டிய ராணுவ வல்லுநர்களும், அமெரிக்கா கனடா மீது படையெடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்றே பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த விவகாரம் கனடா மக்களின் மனதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
கடந்த ஜனவரி மாதம் வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, 30 சதவீதத்துக்கும் அதிகமான கனடியர்கள் அமெரிக்கப் படையெடுப்பு நிகழ வாய்ப்புள்ளதாக நம்புவதாக 'லெஜர்' கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படையெடுப்பு ஏன் நடக்க வாய்ப்பில்லை?
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் ஏற்படுவது மிகவும் சிக்கலானதும், கற்பனை செய்து பார்ப்பதற்கே கடினமானதுமாக இருக்கும் என்று கனடாவின் ராயல் கனடியன் விமானப்படையின் முன்னாள் அதிகாரியும், 34 ஆண்டுகள் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியவருமான லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸ்டோபர் கோட்ஸ் கூறினார்.
"எனது ஒட்டுமொத்தப் பணிக்காலத்திலும் நான் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து கனடாவுக்கு ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சாத்தியக்கூறை நாங்கள் ஒருபோதும் பரிசீலித்ததே இல்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
நேட்டோ பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கோட்ஸ், ராணுவப் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களில் கனடாவும் அமெரிக்காவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளும் 'வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு' எனப்படும் நேட்டோவின் உறுப்பு நாடுகளாக உள்ளன. அதன் விதிகளின்படி, ஓர் உறுப்பு நாடு தாக்குதலுக்கு உள்ளாகும்போது, மற்ற உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இரு நாடுகளும் 'வட அமெரிக்க வான்வழிப் பாதுகாப்புக் கட்டளை' அமைப்பின் கீழ் இணைந்து ஆர்க்டிக் பிராந்தியப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், உளவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றன.
இதன் காரணமாக, கனடா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், அது நேரடியான ஆயுதத் தாக்குதலாகத் தொடங்க வாய்ப்பில்லை என்றும், அதற்குப் பதிலாக இணையவழிப் போர் போன்ற மறைமுகமான வழிமுறைகளில் தொடங்கக்கூடும் என்றும் தான் கருதுவதாக கோட்ஸ் தெரிவித்தார்.
எப்போதும் சிறந்த நண்பர்களாக இருந்ததில்லை
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கனடாவும் அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகளாக உருவெடுத்தன. அதன்பின்னர், இரு நாடுகளும் பொருளாதாரம், ராணுவம் மற்றும் கலாசாரம் என பல்வேறு துறைகளில் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தன.
ஆனால், நிலைமை எப்போதும் இப்படி இருந்ததில்லை. சொல்லப்போனால், 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவின் ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்து நின்றதே கனடாவின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய முக்கியக் காரணிகளில் ஒன்றாகும் என்கிறார் கனடிய போர் அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர் டிம் ஃபோரன்.
"அமெரிக்கா குறித்த அச்சமே 'கனடா' என்ற அரசியல் அமைப்பு உருவாவதற்கான அடித்தளமாக இருந்தது" என்று அவர் கூறினார்.
இன்றைய அமெரிக்கப் பகுதியில் இருந்த காலனிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தபோது, பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு விசுவாசமாகத் தொடர்ந்து இருந்த 'பிரிட்டிஷ் வட அமெரிக்கக் காலனிகள்' ஒன்றிணைந்தே பின்னர் கனடா உருவானது.
கனடா உருவாவதற்கு முன்பே, பிரிட்டனின் வட அமெரிக்கக் காலனிகளை ஆக்கிரமிக்க அமெரிக்கா முயன்றது. 1775-ஆம் ஆண்டில் மாண்ட்ரீலைக் கைப்பற்றிய அமெரிக்கப் படைகள், கியூபெக் நகரத்தையும் கிட்டத்தட்டக் கைப்பற்றின.
1812-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, மேல் கனடா (Upper Canada), கீழ் கனடா (Lower Canada) மற்றும் கடலோரக் காலனிகள் மீது அமெரிக்கப் படைகள் பலமுறை படையெடுத்தன. இருப்பினும், அந்தப் போர் இரு தரப்புக்கும் தீர்மானமான வெற்றி கிடைக்காமலேயே முடிவடைந்தது. அந்தப் போரின்போது, பிரிட்டிஷ் படைகள் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவின் புகழ்பெற்ற 'வெள்ளை மாளிகையை' தீயிட்டுக் கொளுத்தின.
பின்னர் கனடாவாக உருவெடுத்த அந்தக் காலனிகள், தங்களது பாதுகாப்புக்காக பிரிட்டனையும் அதன் அரச கடற்படையையும் சார்ந்திருந்தன. அதேபோல், முக்கியப் போர்களில் தளபதிகளாகப் பணியாற்றிய பழங்குடியின மக்களின் ஆதரவையும் அவை நம்பியிருந்ததாக ஃபோரன் கூறினார்.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் வளர்ந்து வந்த அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் பதிலளிக்கும் வகையில், கனடா மீண்டும் அமெரிக்காவுடனான சாத்தியமான போர் குறித்து பரிசீலித்தது.
இதற்காக, கனடிய ராணுவ அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் போல் நடித்து, உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக அமெரிக்க எல்லைப் பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு ரகசியமாகப் பயணம் செய்தனர். அந்தப் பயணங்களின்போது பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளைப் புகைப்படம் எடுத்தனர்.
தங்களது சாத்தியமான எதிரியைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்காக, அவர்கள் உள்ளூர் மக்களிடமும் பேசினர்.
அப்போதும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்ததாக, 20-ஆம் நூற்றாண்டு கனடா குறித்து நிபுணத்துவம் பெற்ற கனடிய போர் அருங்காட்சியக ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ பர்ட்ஷ் தெரிவித்தார். இருப்பினும், கனடியர்கள் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க விரும்பினர்.
"அது ராணுவத்தின் பணிகளில் ஒரு பகுதி" என்றார் அவர். "அவர்கள் பல்வேறு சாத்தியமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்கிறார்கள்."

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் படையெடுப்பு எவ்வாறு அமையக்கூடும்?
அமெரிக்கப் படையெடுப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்றாலும், கனடா அதற்குத் தயாராகி வருவது, உலக ஒழுங்கு எந்த அளவுக்குத் தீவிரமாக மாறியுள்ளது என்பதற்கான ஓர் அறிகுறி என்று கனெக்டிகட்டில் உள்ள நியூ ஹேவன் பல்கலைக்கழகத்தின் தேசியப் பாதுகாப்புத் துறை இணைப் பேராசிரியர் மேத்யூ ஷ்மிட் கூறினார்.
அமெரிக்க ராணுவத்துடன் எந்த அளவுக்கு நெருக்கமாகத் தொடர்ந்து பணியாற்றுவது என்பது குறித்து கனடியத் தலைவர்கள் கடினமான கேள்விகளை எழுப்ப வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். ஒருவேளை அமெரிக்கா கனடாவுக்கு ஏதேனும் வகையில் தீங்கு விளைவிக்க நினைத்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கூட்டாண்மை அமெரிக்காவுக்கு மதிப்புமிக்க தகவல்களை வழங்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இது அமெரிக்காவுடனான உறவுகளுக்கு உண்மையிலேயே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஓரளவுக்கு நியாயமான அச்சமும் நிலவுகிறது" என்று அவர் கூறினார்.
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்றுவது குறித்த டிரம்பின் கருத்துகளை அமெரிக்கர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், கனடியர்கள் அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், தேவைப்பட்டால் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் ஷ்மிட் கூறினார்.
ஒருவேளை அத்தகைய சூழல் ஏற்பட்டால், அது எப்படி இருக்கும்?
போரின் முதல் கட்டம் மிகவும் குறுகியதாக இருக்கலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'குளோப் அண்ட் மெயில்' நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, கனடிய ராணுவம் பயன்படுத்திய ஒரு மாதிரித் திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், கனடாவின் முக்கிய ராணுவ நிலைகள் ஒரே வாரத்துக்குள் நிலைகுலையக்கூடும்.
கனடாவின் ராணுவப் பலம் விரைவாக வீழ்த்தப்படக்கூடும். இதனால், எதிரிப் படைகளை எதிர்கொள்ள கனடியப் படைகள் கொரில்லா பாணியிலான போர் முறையைக் கையாள வேண்டிய நிலை ஏற்படலாம்.
கனடாவுக்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்குமாறு பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உதவி கோரப்படலாம் என்று மூத்த அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் ஜனவரியில் செய்தி வெளியிட்டது.
ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அமெரிக்கத் தாக்குதல் நிகழும் சாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா திட்டமிட்டிருப்பது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.
எனினும், இந்த மாதிரித் திட்டமிடல் என்பது ராணுவப் போர் திட்டமிடலில் மிகவும் ஆரம்பகட்ட நிலையிலேயே இருப்பதாக கோட்ஸ் கூறினார்.
தனது நேட்டோ கூட்டாளிகளைப் போலல்லாமல், எந்தவொரு தரைவழிப் படையெடுப்பையும் எதிர்கொள்வதற்கான பதிலடித் திட்டத்தை உருவாக்குவதில் கனடா பின்தங்கியிருப்பதாக அவர் கூறினார். கணிக்க முடியாத புவிசார் அரசியல் சூழல் நிலவும் நிலையில், அந்தக் குறையை ஈடுசெய்ய கனடா தற்போது முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடாவின் பாதுகாப்புத் துறைத் தலைவர் சமீபத்தில் விடுத்த அழைப்பும் இதைத் தெளிவுபடுத்துவதாக அவர் கூறினார். குறைந்த அளவு பயிற்சி பெற்ற 3 லட்சம் வரையிலான குடிமக்கள் வீரர்களைச் சேர்ப்பதும் அந்தத் திட்டத்தில் இடம்பெறுகிறது.
அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், கனடா மீதான படையெடுப்பு அவ்வளவு எளிதானதாக இருக்காது.
அமெரிக்காவிடம் மிகப்பெரிய ராணுவப் பலம் இருந்தாலும், கனடாவுடனான போருக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவது அமெரிக்காவுக்கு கடினமாக இருக்கும் என்று ஷ்மிட் கூறினார்.
"கனடா மீது படையெடுக்குமாறு உத்தரவிடப்பட்டால், பெருமளவிலான அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பதவி விலகுவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றார் அவர்.
"அவர்கள் அதை சட்டவிரோதமானதும், ஒழுக்கநெறிக்கு முரணானதுமான உத்தரவாகவே கருதுவார்கள்."
கனடிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வழக்கமாக ஒன்றாகப் பயிற்சி பெறுவதுடன், ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையையும் கொண்டிருப்பதாக ஷ்மிட் கூறினார்.
ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் போர் மூளும் அளவுக்கு மோசமடைந்தால், கனடாவின் எண்ணெய் மற்றும் கனிமங்கள் போன்ற மதிப்புமிக்க வளங்களைக் கைப்பற்றுவதிலும், அந்நாட்டின் அரசியல் தலைமையை வீழ்த்துவதிலும் அமெரிக்கா கவனம் செலுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்ய அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், "வெனிசுவேலாவில் நீங்கள் கண்டதைப் போன்ற ஒரு நடவடிக்கையை அநேகமாக இங்கும் காண்பீர்கள்" என்றார்.
அமெரிக்காவிடம் அதிக ராணுவத் திறன் இருப்பதை ஒப்புக்கொண்டாலும், திறமைக்கு திறமை என்ற அடிப்படையில் பார்த்தால், கனடிய வீரர்களால் கடுமையான எதிர்ப்பை வழங்கிப் போராட முடியும் என்றும் ஷ்மிட் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























