இருமல், தும்மல் அல்லது சத்தமாக சிரித்தால் சிறுநீர் கசிகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டியவை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
சில பெண்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் பயத்துடனேயே இருக்கிறார்கள். இவ்வளவு நீண்ட பயணத்தின்போது அவர்களால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியுமா? என்பதுதான் அவர்களின் மனதில் முதலில் எழும் கேள்வி.
நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இருமினாலோ அல்லது தும்மினாலோ திடீரென சிறுநீர் வெளியேறி கட்டுப்பாட்டை இழக்கிறீர்களா? சில நேரங்களில் படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது சத்தமாக சிரிக்கும் போதோ சிறுநீர் வெளியேறுகிறது.
இதுபோன்ற பிரச்னையைப் பல பெண்கள் எதிர்கொள்கிறார்கள். அதன்பிறகு, அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கும்போதுகூட சிறுநீர் வெளியேறிவிடுமோ என்ற உணர்வு ஏற்படுகிறது.
அதன்பிறகு அத்தகைய பெண்கள் இந்தச் செயல்களைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், பயம் மற்றும் வெட்கத்தின் காரணமாக, அவர்கள் அதைப் பற்றிப் பேசக்கூடத் தயாராக இருப்பதில்லை.
கர்ப்பம், குழந்தைப் பிறப்பு, மாதவிடாய் நிறுத்தம், முதுமை, உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற காரணங்களால் இடுப்புத் தளத் தசைகள் பலவீனமடையலாம். இதனால் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறன் பாதிக்கப்படலாம்.
மருத்துவ ரீதியாக இது 'ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினன்ஸ்' (Stress Urinary Incontinence) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது சிறுநீர் கசிவு என்று குறிப்பிடப்படுகிறது.
பல பெண்கள் இந்தப் பிரச்னையை வயது அதிகரிப்பதாலோ அல்லது குழந்தைப் பிறப்புக்குப் பிறகோ ஏற்படும் 'இயல்பான' விஷயம் என்று கருதுகின்றனர். அதனால், சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக தொடர்ந்து அதைச் சகித்துக்கொள்கிறார்கள்.
ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, எந்த வயதிலும் தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறுவது புறக்கணிக்க வேண்டிய அறிகுறி அல்ல.
உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். இடுப்புத் தளத் தசைகளுக்கான பயிற்சிகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைகூட பலனளிக்கக்கூடும்.
எனவே, சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை 'வயதாகும்போது இயல்பாக நடப்பது தான்' என்று ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இதை சுகாதாரப் பிரச்னையாகக் கருதி தீவிரமாக அணுக வேண்டியது அவசியம்.
பல பெண்கள், 'இதற்கு எந்தத் தீர்வும் இல்லை', 'நாம் இதைச் சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்' என்று நினைக்கின்றனர்.
1. சிறுநீர் கசிவு பிரச்னை எப்படி உருவாகிறது?
பெரும்பாலும் படிப்படியாக உருவாகிறது. ஆரம்பத்தில் இருமும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போதோ மட்டுமே சிறுநீர் கசியும். ஆனால், பின்னர் அது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கத் தொடங்குகிறது.
சில பெண்களுக்கு இதனால் பயணம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது அல்லது வீட்டை விட்டு வெளியே செல்வதுகூட கடினமாகிவிடும். சிறுநீர் கசிவுடன் எரிச்சல், வலி, சிறுநீரில் ரத்தம், அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் அல்லது சிறுநீர்ப்பை முழுமையாகக் காலியாகாதது போன்ற உணர்வு இருந்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
எவ்வளவு விரைவாக சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அவ்வளவு சிறந்த பலன்கள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இடுப்புத் தளத் தசைகளுக்கான பயிற்சிகள், உடல் எடையைக் கட்டுப்படுத்துதல், மலச்சிக்கல் மற்றும் நீடித்த இருமலுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற எளிய நடவடிக்கைகளும் பல பெண்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும்.
சில சந்தர்ப்பங்களில், மருந்துகள் அல்லது சிறப்பு சிகிச்சை முறைகள் தேவைப்படலாம். மிக முக்கியமாக, சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை என்பது வெட்கப்பட்டு அமைதியாக இருக்க வேண்டிய விஷயம் அல்ல. இது ஒரு மருத்துவப் பிரச்னை; இதற்கு சிகிச்சைகள் உள்ளன.
எனவே, இந்த அசௌகரியத்தைப் பொறுத்துக் கொள்வதற்குப் பதிலாக, மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது முதல் மற்றும் மிக முக்கியமான நடவடிக்கையாகும்.
2. நீங்கள் சிரிக்கும்போது, இருமும்போது அல்லது தும்மும்போது என்ன நடக்கிறது?
சிரித்தல், இருமல், தும்மல், ஓடுதல், குதித்தல் அல்லது கனமான பொருட்களைத் தூக்குதல் போன்றவை வயிற்றுக்குள் அழுத்தத்தை திடீரென அதிகரிக்கச் செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக, இடுப்புத் தளத் தசைகள் மற்றும் சிறுநீர்க்குழாயைத் தாங்கி நிற்கும் திசுக்கள் இந்த அழுத்தத்தைத் தாங்கி, சிறுநீர் கசிவதை தடுக்கின்றன. ஆனால், இந்த ஆதரவு பலவீனமடைந்தாலோ அல்லது அங்குள்ள தசைகளின் ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்டாலோ, சிறுநீர் கசியத் தொடங்குகிறது.
இதன் பொருள், சிறுநீர்ப்பையில் கோளாறு இருக்கிறது என்று அர்த்தமல்ல. மாறாக, சிறுநீர்ப்பையைத் தாங்கி நிற்கும் அமைப்பில் பலவீனம் ஏற்பட்டுள்ளது என்பதாகும்.
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடங்காமையின் மிகவும் பொதுவான வகைகள் அவசர சிறுநீர் அடங்காமை, அழுத்த சிறுநீர் அடங்காமை மற்றும் கலப்பு சிறுநீர் அடங்காமை ஆகும்.
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கட்டுப்பாடின்மையின் பொதுவான வகைகள் 'அர்ஜ் யூரினரி இன்கான்டினன்ஸ்' (Urge Urinary Incontinence), 'ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினன்ஸ்' (Stress Urinary Incontinence) மற்றும் 'மிக்ஸ்டு யூரினரி இன்கான்டினன்ஸ்' (Mixed Urinary Incontinence) ஆகியவையாகும்.
3. என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?
சிகிச்சை என்பது பிரச்னையின் வகை, தீவிரம் மற்றும் அதற்கான அடிப்படைக் காரணத்தைப் பொறுத்து அமையும்.
ஆரம்பத்தில், இடுப்புத் தளத் தசைகளுக்கான பயிற்சிகள், சிறுநீர்ப்பை பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் நடத்தை சார்ந்த நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சில பெண்களுக்கு மருந்துகள் அல்லது சிறப்பு மருத்துவச் சாதனங்கள் பலனளிக்கக்கூடும். ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினன்ஸ் நீண்ட காலமாகத் தொடர்ந்தால், ஊசி மூலம் சிகிச்சை அளிப்பது அல்லது ஸ்லிங் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளைக் கருத்தில் கொள்ளலாம்.
எனினும், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு துல்லியமான நோயறிதலைப் பெறுவது மிகவும் முக்கியம். இதை மருத்துவரின் மூலம் மேற்கொள்வதும் அவசியம். நீங்களாகவே நோயைக் கண்டறிந்து, எந்தவொரு சிகிச்சையையோ அல்லது உடற்பயிற்சியையையோ செய்ய முயற்சிக்க கூடாது.
4. இடுப்புத் தளம் என்பது என்ன?
இடுப்புத் தளப் பகுதி என்பது இடுப்பின் கீழ்ப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள தசைகள் மற்றும் தசைநார்களின் தொகுப்பாகும். இடுப்பு என்பது இடுப்புப் பகுதி மற்றும் அடிவயிற்றுக்கு கீழே உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் அமைந்துள்ள பகுதியாகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இடுப்பை ஒரு கட்டடமாகக் கருதினால், அதன் அடிப்பகுதியில் அமைந்துள்ள நெகிழ்வுத்தன்மை கொண்ட தசைகள் மற்றும் திசுக்களின் தொகுப்புதான் இடுப்புத் தளப் பகுதி.
இந்தப் பகுதி முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியையும், இரு தொடைகளின் எலும்புகளையும் இணைக்கிறது. இது உடலின் எடையைத் தாங்குவதுடன், அடிவயிற்றுக்குக் கீழே உள்ள முக்கியமான உறுப்புகளை அவற்றின் இடத்தில் நிலைநிறுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
எளிமையாகச் சொல்வதென்றால், இந்தத் தசைகள் உடலின் கீழ்ப்பகுதிக்கு ஆதரவளிக்கின்றன. சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதைக் கட்டுப்படுத்துவதிலும், வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிக்கும்போது உறுப்புகளுக்கு ஆதரவளிப்பதிலும், பாலியல் செயல்பாட்டைச் சீராகப் பராமரிப்பதிலும் இடுப்புத் தளப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது.
கர்ப்பம், குழந்தைப் பிறப்பு, வயது அதிகரித்தல், உடல் பருமன், நீண்டகால மலச்சிக்கல் அல்லது சில வகையான அறுவை சிகிச்சைகள் ஆகியவை இடுப்புத் தளத் தசைகளைப் பலவீனப்படுத்தலாம். இருப்பினும், அனைத்து பிரச்னைகளுக்கும் தசைகளின் பலவீனம்தான் காரணம் என்று கூற முடியாது.
சிலருக்கு இடுப்புத் தளத் தசைகள் மிகவும் இறுக்கமாகவோ அல்லது அதிகச் செயல்பாட்டுடனோ இருக்கலாம். இதனால் இடுப்புப் பகுதியில் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது உடலுறவின்போது வலி ஏற்படலாம்.
எனவே, இந்தத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் எல்லாப் பிரச்சனைகளுக்கும் பொருத்தமானதாக இருக்காது.
5. வயதாக ஆக சிறுநீர்ப்பை, சிறுநீர் அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன?
சிறுநீர் கசிவு எந்த வகையில் இருந்தாலும், இந்தப் பிரச்னையை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது அவசியம். இதைப் புறக்கணிக்கக் கூடாது.
வயது அதிகரிக்கும் போது பெண்களின் சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மும்பை கரில் உள்ள பி.டி. இந்துஜா மருத்துவமனை மற்றும் எம்.ஆர்.சி.யில் ஆலோசனை சிறுநீரக மருத்துவர் மற்றும் ஆண்ட்ராலஜிஸ்ட்டாக பணியாற்றும் மருத்துவர் சோனி மேத்தா நம்மிடம் தெரிவித்தார்.
பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், "வயது அதிகரிக்கும்போது இடுப்புத் தளத் தசைகளின் ஆதரவு குறைகிறது. இதனால் சிஸ்டோசீல் மற்றும் ரெக்டோசீல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் சிறுநீர்ப்பையை முழுமையாகக் காலி செய்வது கடினமாகிறது. சிறுநீர்க்குழாய் சுருங்குதல், அடிக்கடி சிறுநீர்ப் பாதைத் தொற்று ஏற்படுதல் மற்றும் முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாத நிலை போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்" என்றார்.
மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் சிறுநீர்க்குழாய் சுருங்கி, சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறன் குறையலாம்.
"வயது அதிகரிப்பது மற்றும் குழந்தைப் பிறப்பு ஆகியவற்றைத் தவிர வேறு காரணங்கள் உள்ளனவா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவர் மேத்தா பதில் அளித்தார். "நீண்டகால இருமல், நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் நீரிழிவு ஆகியவை சிறுநீர் கட்டுப்பாடின்மை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாகும். உடல் பருமன் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஆகியவை சிறுநீர்ப்பை உள்ளிட்ட உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கின்றன. இதனால் சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு வகையான சிறுநீர் கட்டுப்பாடின்மை பிரச்சினைகள் ஏற்படலாம்" என்றார்.
இந்தப் பிரச்னையை கண்டறியத் தேவையான பரிசோதனைகள் குறித்து மருத்துவர் சோனி மேத்தா கூறுகையில், "இந்த நிலையை கண்டறிய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற அடிப்படைப் பரிசோதனைகள் முதல், யூரோடைனமிக் ஆய்வு போன்ற விரிவான பரிசோதனைகள் வரை பல்வேறு பரிசோதனைகள் தேவைப்படலாம். இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளைத் துல்லியமாக ஆய்வு செய்ய சிறுநீரக மருத்துவரின் வழிகாட்டுதல் அவசியம்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
கர்ப்ப காலத்தில் இடுப்புத் தளப் பகுதியில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, அது சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறனை எவ்வாறு பாதிக்கிறது?
கர்ப்ப காலத்தில் இடுப்புத் தளப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. கருப்பையின் அளவு அதிகரிக்கும்போது, இடுப்புப் பகுதியில் ஏற்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது.
அதே நேரத்தில், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள், சிறுநீரைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தசைகள் மற்றும் திசுக்களைப் பாதிக்கின்றன.
சில பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்கு முன்பே சிறுநீர் கட்டுப்பாடின்மை ஏற்படத் தொடங்குகிறது. கர்ப்ப காலத்தில் இந்தப் பிரச்னை ஏற்பட்டால், குழந்தைப் பிறப்புக்குப் பிறகும் அது தொடர்வதற்கான அபாயம் அதிகரிக்கிறது. வயது, உடல் எடை மற்றும் முந்தைய கர்ப்பங்களும் இதைப் பாதிக்கின்றன.
குழந்தைப் பிறப்புக்குப் பிறகு இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள் குறித்து, மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் ஆலோசனை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான மருத்துவர் மாயா பி. எல். காடேவிடம் சில கேள்விகளைக் கேட்டோம். கேள்விகளும் அவரது பதில்களும் கீழே தரப்பட்டுள்ளது.
கேள்வி 1: இயற்கையான பிரசவத்திற்கும் சிசேரியன் (அறுவை சிகிச்சை) பிரசவத்திற்கும் இடையே வெவ்வேறு வகையான ஆபத்துகள் உள்ளனவா?
சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படுவதை விட, சுகப் பிரசவத்திற்குப் பிறகு சிறுநீர் அடக்க இயலாமை ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பல ஆய்வுகளின் ஒருங்கிணைந்த பகுப்பாய்வும், சுகப் பிரசவத்திற்குப் பிறகு இந்தப் பிரச்னை மிகவும் பொதுவானது என்பதைக் காட்டியுள்ளது.
இருப்பினும், சிசேரியன் அறுவை சிகிச்சை இந்த அபாயத்தை முழுமையாக நீக்கிவிடுவதில்லை, ஏனெனில் கர்ப்பமும் இடுப்புத் தளத்தைப் பாதிக்கிறது.
மகப்பேறுக்கு முந்தைய அறிகுறிகள், தாயின் உடல்நிலை மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் நிலைமை மாறுபடலாம்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி 2: குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஏற்படும் சிறுநீர் கசிவு எப்போதும் தற்காலிகமானதா?
குழந்தைப் பிறப்புக்குப் பிறகு முதல் சில மாதங்களில் இடுப்புத் தளப் பகுதி மீண்டு வருவதால், சிறுநீர் கட்டுப்பாடின்மை பிரச்னை தானாகவே குறையலாம். இருப்பினும், இது எப்போதும் நடக்காது. பல பெண்களுக்கு இந்தப் பிரச்னை நீண்ட காலம் தொடர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, குழந்தைப் பிறப்புக்குப் பிறகு சிறுநீர் கசிவு ஏற்பட்டால், அதை 'இயல்பானது' என்று கருதி புறக்கணிக்கக் கூடாது. பரிசோதனை செய்வதன் மூலம், சிறுநீர் கட்டுப்பாடின்மையின் சரியான வகையையும், அதைக் கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் கண்டறிய முடியும்.
கேள்வி 3: எந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்?
சிறுநீர் கசிவு பிரச்னை தொடர்ந்து இருந்தாலோ, அதிகரித்தாலோ அல்லது உடற்பயிற்சி, வேலை, தூக்கம், உறவுகள் அல்லது அன்றாட வாழ்க்கையைப் பாதித்தாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
இது தவிர, சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர்ப் பையை முழுமையாகக் காலி செய்ய முடியாத நிலை, அடிக்கடி ஏற்படும் தொற்றுகள், இடுப்புப் பகுதியில் ஏற்படும் பிற பிரச்னைகள் அல்லது சிறுநீர் கட்டுப்பாட்டில் திடீரென ஏற்படும் மாற்றம் ஆகியவையும் முக்கியமான அறிகுறிகளாகும். முறையான பரிசோதனை மூலம் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும்.
கேள்வி 4: கீகல் பயிற்சிகள் என்றால் என்ன?
கீகல் பயிற்சிகள் என்பது இடுப்புத் தளத் தசைகளைச் சுருக்கி, பின்னர் தளர்த்தும் பயிற்சிகளாகும்.
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கட்டுப்பாடின்மைக்கு சிகிச்சையளிக்க, 1940-களில் மருத்துவர் அர்னால்ட் கீகல் முதன்முதலில் இந்தப் பயிற்சிகளைப் பரிந்துரைத்தார்.
இன்று, பெண்களைப் போலவே ஆண்களும் கீகல் பயிற்சிகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, புரோஸ்டேட் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்தப் பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இவற்றைச் சரியான முறையில் செய்யும்போது, சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்தவும், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு உடல் மீள்வதற்கு உதவவும், சில சந்தர்ப்பங்களில் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கவும் உதவும்.
இருப்பினும், பலர் தவறான தசைகளைச் சுருக்குகின்றனர். வயிறு, பிட்டம் அல்லது தொடைகளை இறுக்குவதுதான் கீகல் பயிற்சி என்று தவறாகக் கருதப்படுகிறது. சிலர் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து அதிகமாகச் செய்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்கெனவே இடுப்புத் தளத் தசைகள் இறுக்கமாக உள்ளவர்களுக்கு, தசைகளை இறுக்கும் பயிற்சிகளை மட்டும் செய்வது வலி, அசௌகரியம் அல்லது சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை அதிகரிக்கச் செய்யலாம்.
எனவே, கீகல் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு, பிரச்னை என்ன என்பதைத் துல்லியமாக மதிப்பீடு செய்வது முக்கியம். தேவைப்பட்டால், இடுப்புத் தளப் பகுதி பிசியோதெரபி நிபுணரின் வழிகாட்டுதலையும் பெற வேண்டும்.
ஆண்கள் மற்றும் பெண்களில் இடுப்புத் தளத் தசைகளின் அடிப்படை அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், பெண்களில் கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்புக்காக இந்தத் தசைகள் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கின்றன.
ஆனால், ஆண்களில் கீகல் தசைகள் சிறுநீரைக் கட்டுப்படுத்துதல், விறைப்புத்தன்மை மற்றும் பாலியல் செயல்பாடு ஆகியவற்றுடன் நெருக்கமாகத் தொடர்புடையவை.
6. கீகல் உடற்பயிற்சி உதவி
சிறுநீர் கட்டுப்பாடின்மை உள்ள பெண்களுக்கு கீகல் பயிற்சிகள் பயனுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, தானே நகரில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையின் பிசியோதெரபி துறைத் தலைவர் மருத்துவர் அருண் குமார் கன்னோஜியா கூறுகையில், "கீகல் பயிற்சிகள் இன்னும் பயனுள்ளதாக உள்ளன. இருப்பினும், இடுப்புத் தளப் பகுதி மறுவாழ்வு என்பது இந்தத் தசைகளைச் சுருக்குவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இடுப்புத் தளத் தசைகள், ஆழமான வயிற்றுத் தசைகள், உதரவிதானம் மற்றும் பிட்டத் தசைகளுடன் இணைந்து ஒரு செயல்பாட்டு அலகாகச் செயல்படுகின்றன".
"இடுப்புத் தளத் தசைகளுக்கான பயிற்சிகளுடன், இடுப்பைச் சாய்க்கும் பயிற்சிகள் மற்றும் 'பேர்ட்-டாக்ஸ்', 'குளூட் பிரிட்ஜஸ்' போன்ற உடலின் மையப்பகுதி தசைகளைச் செயல்படுத்தும் பயிற்சிகளைச் செய்வது, அன்றாட இயக்கங்களின்போது தசைகளின் வலிமை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பயோஃபீட்பேக்கும் ஒரு பயனுள்ள கருவியாகும். ஈஎம்ஜி அல்லது அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பெண்கள் சரியான தசைகளைப் பயன்படுத்துகிறார்களா, அவற்றை முறையாகத் தளர்த்த முடிகிறதா என்பதை நிகழ்நேரத்தில் புரிந்துகொள்ள முடியும். இடுப்புத் தளத் தசைகளை எவ்வாறு சரியாகச் செயல்படுத்துவது என்பதைக் கண்டறிவதில் சிரமம் உள்ள பெண்களுக்கு இது குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் கன்னோஜியா ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
அவர் கூறுகையில், "ஒவ்வொருவரின் இடுப்புத் தளத் தசைகளுக்கும் வலுப்படுத்தும் பயிற்சிகள் தேவையில்லை. சில பெண்களுக்கு இந்தத் தசைகள் மிகவும் இறுக்கமாகவோ அல்லது அதிகச் செயல்பாட்டுடனோ இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தசைகளைத் தளர்த்தி சரியான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். ஒருவரது நிலையை பிசியோதெரபிஸ்ட் மதிப்பீடு செய்து, அதற்கேற்ற பயிற்சிகளைத் திட்டமிட முடியும்" என்றார்.
"இடுப்புத் தளத் தசைகளின் பலவீனம், இடுப்புப் பகுதி உறுப்புகள் இறங்குவதுடனும் தொடர்புடையதாக இருக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு சிறுநீர் தொடர்பான பிரச்னைக்கும் இடுப்புத் தளத் தசைகளின் பலவீனம்தான் காரணம் என்று கூற முடியாது.
"சில பெண்களுக்கு இந்தத் தசைகள் பலவீனமாக இருப்பதற்குப் பதிலாக, அளவுக்கு அதிகமாக நீட்டப்பட்டிருக்கலாம். எனவே, பிரச்னை என்ன என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள, இடுப்புப் பகுதி ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற பிசியோதெரபிஸ்ட்டிடம் பரிசோதனை செய்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய விரும்பினாலோ, உணவு முறையை மாற்றினாலோ, மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ அல்லது உடற்பயிற்சியைத் தொடங்கினாலோ, மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்சியாளரின் உதவியைப் பெறுவது முக்கியம்.
மருத்துவரிடம் உடல்நிலை மற்றும் அறிகுறிகளை முறையாகப் பரிசோதித்துக் கொண்டு, அவர்களின் ஆலோசனையின் படி மட்டுமே வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வது சிறந்தது. மருத்துவரை அணுகாமல் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்வது ஆபத்தானதாக அமையலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































