You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மேற்கு வங்கத்தில் அங்கீகரிக்கப்படாதது' - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் இணையும் கட்சி குறித்து எழும் கேள்விகள்
கிளர்ச்சியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் ஞாயிற்றுக்கிழமையன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் தங்களது பிரிவை இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தனர்.
"நாங்கள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். நாங்கள் மக்களவை சபாநாயகரிடம் எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினோம்," என்று ஓம் பிர்லாவை சந்தித்த பிறகு ககோலி கோஷ் தஸ்திதார் செய்தியாளர்களிடம் கூறினார்.
தஸ்திதார் மேலும் கூறுகையில், "நாங்கள் நாடாளுமன்றத்தில் தனி இருக்கை கோரியுள்ளோம், மேலும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைகிறோம். எங்களிடம் 20 எம்பிக்கள் உள்ளனர், இது திரிணாமுல் காங்கிரஸின் 28 எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாகும். நாங்கள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி குறித்து பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 20 பேர் அக்கட்சியுடன் இணைவது பற்றி பேசும் அளவுக்கு, இந்த கட்சியையும் அதன் பலத்தையும் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நிலாஞ்சன் தாஸ், கட்சிக்குள் கிளர்ச்சியில் ஈடுபடும் தலைவர்களை சாடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இவர் தான் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் தேசிய தலைவர் சியுலி குண்டு. இவர் இப்போது திரிணாமுல் காங்கிரஸிலிருந்து கட்சி மாறிய 20 பேரின் புதிய தலைவராகியுள்ளார்" என்று எழுதியுள்ளார்.
"இரட்டை மலர் சின்னத்தில் (திரிணாமுல் காங்கிரஸ் சின்னம்) வெற்றி பெற்றவர்கள், இப்போது வங்காளம் இதுவரை கேள்விப்படாத ஒரு கட்சியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ககோலி கோஷ் தஸ்திதார் தன்னிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறி, தன்னை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கூட்டாளியான இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் அங்கீகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்." என நிலாஞ்சன் தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இதுவரை எந்தவொரு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரும் இந்த அமைப்பில் சேருவதற்கு பகிரங்கமாக எந்த ஆர்வமும் காட்டவில்லை. மேற்கு வங்கத்தில் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சிக்கு எந்த அமைப்பும் இல்லை மற்றும் ஃபேஸ்புக்கில் இதனை 72 பேர் மட்டுமே பின்தொடர்கிறார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி எப்போது உருவாக்கப்பட்டது?
ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென கவனம் பெற்ற இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தை சிலர் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்தில் அந்த எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது.
இருப்பினும், இந்த ஃபேஸ்புக் பக்கம் சரிபார்க்கப்பட்டதோ அல்லது அதிகாரப்பூர்வமான பக்கமோ அல்ல.
தேர்தல் ஆணையத்தின்படி, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி என்பது மேற்கு வங்கத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கட்சி, 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 13, 2022 அன்று, இந்த கட்சியின் பதிவு தொடர்பான விண்ணப்பம் பற்றிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
விதிகளின்படி, இந்தக் கட்சி பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, இது குறித்து யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதற்கான காரணத்துடன் ஒரு மாதத்துக்குள் தங்களுக்குத் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
சியுலி குண்டுவின் பெயர் இந்த அரசியல் கட்சியின் நிறுவனர் தலைவராகவும், பொதுச் செயலாளராக சாய்கத் தாஸ் மற்றும் பொருளாளராக சுதம் ஜெட்டி ஆகியோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023 திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.
அக்கட்சி மொத்தம் 822 வாக்குகளைப் பெற்றது, இது இந்த தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் வெறும் ஒரு சதவிகிதத்தை மட்டுமே குறிக்கிறது.
சதவிகித அடிப்படையில், இந்த கட்சி நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் சின்னம் என்ன?
இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி இன்னும் மிகவும் சிறிய அரசியல் கட்சியாகவே உள்ளது, மேலும் நிலாஞ்சன் தாஸ் அளித்த தகவலின்படி, இந்தக் கட்சியின் சின்னம் பேனா ஆகும்.
சுவாரஸ்யமாக, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி திங்களன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் 20 இடங்கள் தங்களிடம் இருப்பதாக உரிமை கோரியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தணிக்கை அறிக்கை என்ன சொல்கிறது?
மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரியின் தணிக்கை அறிக்கையில் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி பற்றிய சில தகவல்கள் கிடைக்கின்றன.
2022-23 நிதியாண்டுக்கான மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரியின் அறிக்கையின் படி, இந்தக் கட்சி ஒன்பது நன்கொடையாளர்களிடமிருந்து அதன் கட்சி நிதிக்கு நன்கொடைகளைப் பெற்றுள்ளது, அதன் மொத்த மதிப்பு 1 லட்சம் ரூபாய்க்கும் சற்று அதிகமாகும்.
அதே நேரத்தில், 2023-24 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, அந்த ஆண்டில் தனக்குக் கிடைத்த நன்கொடைகள், தனது ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் தேர்தல் செலவுகள் பற்றிய எந்தவொரு தகவலையும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி பகிர்ந்து கொள்ளவில்லை.
அதே வேளையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரியின் ஆண்டு அறிக்கையில் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.
இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி அதன் தலைவரைப் பற்றி என்ன கூறியுள்ளது?
இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவின்படி, மக்களவையில் ககோலி கோஷ் தஸ்திதார் இந்தக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், "எங்களுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சத்ருகன் சின்ஹாவை கட்சிக்குள் வரவேற்பது போன்ற ஒரு படத்தையும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ககோலி கோஷ் தஸ்திதாருக்கு ஆதரவளித்து வரும் எம்.பியான சுதீப் பந்தோபாத்யாய் ஞாயிற்றுக்கிழமையன்று கூறுகையில், "நாங்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைகிறோம். இது ஒரு பிராந்திய கட்சி. இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இப்போது யார் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு