You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அதிக ரத்தப்போக்கு' - கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; பிகாரை சேர்ந்தவர் கைது
எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்
கும்மிடிப்பூண்டி அருகே பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தைக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று காலை (ஜூன் 15) உயிரிழந்துவிட்டதாக, அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.
'இந்தச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம்' எனத் தகவல் பரவிய நிலையில், ஒருவர் மட்டுமே குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பிகாரைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
ஜூன் 14ஆம் தேதியன்று மாலை சுமார் 5 மணியளவில் அத்தம்பதி, 'தங்களின் மூன்று வயது குழந்தையைக் காணவில்லை' எனக் கூறி சுற்றுப்புற பகுதிகளில் தேடியுள்ளனர்.
இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
"அவர்கள் தங்கியிருக்கும் பகுதியைச் சேர்ந்த பெண்களில் சிலர், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக சென்றபோது, புதர் ஒன்றில் ரத்த காயங்களுடன் குழந்தை கிடந்துள்ளதைப் பார்த்துள்ளனர்" என்கிறார், திருவள்ளூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அருள்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இத்தகவலை உடனே காவல்நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்" என்கிறார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுமார் மூன்று கி.மீ தொலைவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக குழந்தையைச் சேர்த்துள்ளனர்.
"சுமார் 7 மணியளவில் சிசிச்சைக்காக குழந்தையைக் கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்" என்கிறார் அருள்.
"குழந்தையின் பெற்றோரிடம் நாங்கள் பேசியபோது, பிகாரை சேர்ந்த தங்களுக்கு நன்கு அறிமுகமான 19 வயது இளைஞர் ஒருவர், குழந்தைக்கு பிஸ்கெட் கொடுத்துக் கூட்டிச் சென்றுள்ளார். அவர் இவ்வாறு குழந்தைக்கு பிஸ்கெட் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளதாகக் கூறினர்" என அவர் குறிப்பிட்டார்.
குழந்தையைக் கூட்டிச் சென்றதாகக் கூறப்பட்ட நபர், அத்தம்பதி வசிக்கும் அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். "குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை பொதுமக்கள் பிடித்துத் தாக்கியுள்ளனர். அந்த நபருடன் தங்கியிருந்த மற்ற நபர்கள் தப்பியோடிவிட்டனர்" என்கிறார் அருள்.
அரசு மருத்துவமனை டீன் கூறியது என்ன?
"இரவு 10.30 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு வந்தனர். அப்போதே சில இடங்களில் ரத்தப்போக்கு அதிகப்படியாக இருந்தது" என்கிறார், அரசு மருத்துவமனை டீன் அரவிந்த்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், " சம்பவத்தின் பின்னணி குறித்துக் கேட்டபோது, பிகாரைச் சேர்ந்த தெரிந்த நபர் ஒருவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது" எனக் கூறினார்.
குழந்தைக்கு செயற்கை சுவாசம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அரவிந்த், "நேற்று இரவு 11 மணிக்கு சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. உடல்ரீதியான வன்முறையால் அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. காலை சுமார் 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்களை விரைவில் காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் தெரிவித்தார். குழந்தை உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
'ஒருவருக்கு மட்டுமே தொடர்பு' - காவல்துறை
இதுதொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, 'காவல்துறை விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது' எனக் கூறியுள்ளது.
'குற்றம் சுமத்தப்பட்ட நபரும் சிறுமியும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது' என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற ரீதியில் ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, 'சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்தவொரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் மூன்று வயது பெண் குழந்தை இறந்தது, அரசியல்ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.
அரசியல் கட்சிகளின் விமர்சனம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
'கொலை வழக்கில் தொடர்புள்ள நபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.
'பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், ' பெண்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாநிலத்தில் அரசு என எதுவும் உள்ளதா என சந்தேகிக்கும் அளவுக்கு ஓர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது' என விமர்சித்துள்ளார்.
2 மாதம் தான் ஆகிறது'
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், திங்கள்கிழமையன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் காவல்துறை கருதியதால், அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் சில விவரங்களைப் பட்டியலிட்டார்.
"கைதான நபர் மற்றும் அவருடன் தங்கியிருந்த நபர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இங்கு குடிவந்தனர். அவர்களைப் பற்றி எந்த விவரங்களும் எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறார்.
தொடர்ந்து பேசும்போது, "எந்த நிறுவனத்துக்கு வேலைக்கு வருகிறார்களோ அவர்களின் கட்டுப்பாட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட வேண்டும். வீட்டை வாடகைக்கு கொடுப்பவர்களும் அவர்களின் பின்னணி குறித்து விசாரிப்பதில்லை" எனக் கூறினார்.
'1 கி.மீட்டரில் 3 மதுக்கடைகள்'
அப்பொதுமக்களிடம் பொன்னேரி சார்-ஆட்சியர் அப்துல் ராசிக் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நடந்த விவரங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அருள், "சம்பவம் நடந்த பகுதியில் சுமார் ஒரு கி.மீட்டர் தொலைவில் மூன்று மதுபானக் கடைகள் அமைந்துள்ளன. இவற்றை அப்புறப்படுத்துமாறு சார்-ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்கிறார்.
"இங்கு எந்த இடத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை" எனக் கூறும் அருள், " வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிய வருவதால் அவர்களைப் பற்றிய விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி எந்த நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை என சார்-ஆட்சியரிடம் கூறியுள்ளோம்" என்கிறார்.
பொன்னேரி சார்-ஆட்சியர் அப்துல் ராசிக்கிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "தற்போது அவசர கூட்டம் ஒன்றில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு