You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
48 ஆண்டுகளுக்கு முன்பே 'சினிமாட்டிக் யூனிவெர்ஸ்'- விருதுகளைப் பெற்ற பாரதிராஜாவின் 6 திரைப்படங்கள்
'சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' என சொல்லப்படும், ஒரே கற்பனை உலகத்தில் அல்லது காலகட்டத்தில் கதை நடைபெறுவது போன்ற திரைப்படங்கள் இன்று பொதுவானவையாக மாறிவிட்டன. மிகப்பிரபலமான உதாரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'எல்சியூ'.
ஆனால், சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் இத்தகைய கதாபாத்திரங்களையும் கதை களத்தையும் காட்சிப்படுத்தினார்.
'என் இனிய தமிழ் மக்களே…'- பாரதிராஜா குறித்து பேசுபவர்களோ அல்லது அவரது குரலை 'மிமிக்ரி' செய்ய முயற்சிக்கும் நபர்களோ இந்த வசனத்தை குறிப்பிடாமல் இருக்கமாட்டார்கள்.
தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, சிறந்த இயக்குநருக்கான மாநில விருதையும் பெற்ற பாரதிராஜா சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார். அவருக்கு வயது 84.
16 வயதினிலே தொடங்கி, 2023இல் ஓடிடி-இல் வெளியான மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி தொடர் வரை பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ள பாரதிராஜா 6 தேசிய விருதுகள், 6 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
16 வயதினிலே (1977)
இத்திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே, சப்பாணி (நடிகர் கமலஹாசன்) சிறையில் இருந்து விடுதலையாகி வருவதை எதிர்நோக்கி, மயிலு (நடிகை ஸ்ரீதேவி) காத்திருக்கிறாள் என்பதாகவே கதை தொடங்கும்.
மயிலுவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கும் பரட்டையை (நடிகர் ரஜினிகாந்த்) கொன்றுவிட்டு தான் சிறைக்கு சென்றிருப்பான் சப்பாணி. அவனுக்காக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் மயிலு தாலியுடன் காத்திருப்பது போல தான் திரைப்படம் முடியும்.
சப்பாணி விடுதலையாகி வந்தானா, அவனும் மயிலும் திருமணம் செய்துகொண்டார்களா என்ற கேள்விக்கான பதிலை தனது அடுத்த திரைப்படமான 'கிழக்கே போகும் ரயிலில்' (1978) பதிவு செய்திருப்பார் பாரதிராஜா.
'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் ஒரு திருமண நிகழ்வில் மொய் வசூலிக்கப்படும். அப்போது ஒலிபெருக்கியில், 'பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி 5 ரூபாய் மொய்' செய்துள்ளார் என அறிவிக்கப்படும்.
'16 வயதினிலே' திரைப்படத்திற்கு முன்பே தெங்குமரஹாடா என்ற அழகிய கிராமத்தில் படமாக்கப்பட்டு, கிராமத்து கதையைக் கொண்ட 'அன்னக்கிளி' (1976) திரைப்படம் வெளியாகி இருந்தாலும் கூட, 16 வயதினிலே மூலம் தமிழ் கிராமங்களின் புதிய முகத்தை காட்சிப்படுத்தினார் பாரதிராஜா.
அதற்காக, அவர் மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதையும் வென்றார்.
கருத்தம்மா ஏற்படுத்திய தாக்கம்
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்றுவந்த பெண் சிசுக் கொலைகளை தடுக்கும் நோக்கில், 'தொட்டில் குழந்தை திட்டம்' 1992இல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இரண்டு வருடங்கள் கழித்து பாரதிராஜாவின் இயக்கத்தில், பெண் சிசுக் கொலையை மையமாக வைத்து வெளியான 'கருத்தம்மா' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெரும் வெற்றியையும் பெறுகிறது.
அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால், பெண் சிசுக் கொலைக்காக தந்தையால் கொடுக்கப்படும் ஒரு குழந்தை வேறோரு இடத்தில் வளர்ந்து, மருத்துவராகி, பின்னாளில் தனது சொந்த கிராமத்திற்கு வந்து, தந்தைக்கு மருத்துவம் பார்ப்பது போல திரைக்கதை அமைத்திருப்பார் பாரதிராஜா.
நட்சத்திர நடிகர்கள் யாரும் இல்லாமல், ஒரு ஆவணப்படத்திற்கான கதையை தனது திரைக்கதை மூலம், வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக மாற்றினார் பாரதிராஜா.
'கருத்தம்மா' திரைப்படம் 3 தேசிய விருதுகள், 4 மாநில விருதுகள் என பல விருதுகளை பெற்றது. அதில் 'போறாளே பொன்னுத்தாயி' பாடலுக்காக ஸ்வர்ணலதா வென்ற தேசிய விருது குறிப்பிடத்தக்கது.
முதல் தேசிய விருது
'சீதக்கோக சிலகா' (1981) என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் பாரதிராஜா.
இத்திரைப்படம் தமிழ்/தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது. தமிழில், 'அலைகள் ஓய்வதில்லை'. இரு மொழிகளிலும் நடிகர் கார்த்திக் தான் கதாநாயகன்.
நடிகர்/இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் பாரதிராஜா. இதை 'லவ்வர்ஸ்' (1983) என்ற பெயரில் இந்தியிலும் இயக்கிருந்தார் அவர்.
சில்க் ஸ்மிதாவை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக அடையாளப்படுத்திய இத்திரைப்படத்தின் தமிழ் பாதிப்பிற்கு சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதையாசிரியர் என மாநில அரசின் பல விருதுகள் கிடைத்தன.
முதல் மரியாதை (1985)
"தொடக்கம் முதலே இத்திரைப்படம் யாருக்கும் பிடிக்கவில்லை. 'வயதான ஒரு குடும்பஸ்தன், இளம்பெண்ணை விரும்புவதா, என்ன மாதிரியான கதை இது', என என்னை பலவீனப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், நான் நம்பிக்கையுடன் இருந்தேன்"- முதல் மரியாதை திரைப்படம் குறித்து 5 வருடங்களுக்கு முன்பு ஒரு காணொளியில் பேசியிருப்பார் பாரதிராஜா.
திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பல நாட்களுக்கு இத்திரைப்படத்தை விநியோகிக்க முடியாமல் தவித்ததால், தானே திரைப்படத்தை வெளியிட்டதையும் பாரதிராஜா நினைவு கூர்த்திருந்தார்.
"இளையராஜா, வைரமுத்து என யாருக்கும் இதில் திருப்தி இல்லை. ஆனால், நான் இயக்கியதில் 'முதல் மரியாதை' தான் சிறந்த திரைப்படம்" என அவர் கூறியிருந்தார்.
சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி நடிப்பில் 1985இல் வெளியான 'முதல் மரியாதை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், சிறந்த தமிழ் திரைப்படம் உள்பட இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது.
வேதம் புதிது (1987)
"பாலு என்பது உங்கள் பெயர், பின்னால் இருக்கும் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?. சாதிக்கு எதிராக பேசும் நீங்கள் மூச்சுக்கு முன்னூறு முறை 'பாலு தேவர் பரம்பரை' என சொல்கிறீர்களே?" என ஒரு சிறுவன் பாலு தேவரை (நடிகர் சத்யராஜ்) நோக்கி கேட்கும் கேள்வியும், இத்திரைப்படம் பேசிய சாதிய அமைப்பிற்கு எதிரான கதைக்களமும் 80களின் இறுதியில் பெரும் கவனம் பெற்றது.
ஆனால், இடைநிலைச் சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்த்தும் வன்முறைகளை அல்லது குற்றங்களை இத்திரைப்படம் முழுமையாக விவாதிக்கவில்லை என விமர்சகர்கள் கூறினாலும், சாதிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்த தமிழ் திரைப்படங்களில் வேதம் புதிது திரைப்படத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு.
'சமூகப் பிரச்னைகள் குறித்த சிறந்த திரைப்படம்', 'சிறந்த படத்தொகுப்பு' என இரு தேசிய விருதுகளை இத்திரைப்படம் பெற்றது.
அந்திமந்தாரை (1996)
கிழக்குச் சீமை, கருத்தம்மா திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானோடு, பாரதிராஜா இணைந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்றாலும், வணிக ரீதியில் தோல்வியைத் தழுவியது.
ஆனால், சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது அந்திமந்தாரை.
அதன் பிறகு, 2001இல் 'கடல் பூக்கள்' என்ற திரைப்படத்தின் திரைக்கதைக்காக தேசிய விருதை பெற்றார் பாரதிராஜா. அதேபோல, 'ஈர நிலம்' (2003) திரைப்படத்திற்காக மாநில அரசின் விருதையும் அவர் பெற்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு