டெல்லியில் தர்ணா செய்த ராகுல், பிரியங்காவை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சி - என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், ANI
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய வானொலி நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் டெல்லி காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளியுடன் தகவல் பகிர்ந்துள்ளது. அதில் பிரியங்கா காந்தியை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் வேனில் ஏற்றும் காட்சிகள் உள்ளன.
அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தியை அங்கிருந்து அகற்றுவதற்கு அரசு காவல்துறையை அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக தேர்தல் ஆணையத் தலைமையகத்தை அடைவதற்காக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி வத்ராவும் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் நுழைந்தனர்.
போலீசார் அவர்களைத் தடுக்க முயன்ற போதிலும், இருவரும் அங்கு சென்று சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரை போலீசார் தடுத்து வைத்தனர்.
"நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல் தேசத்துரோகம். பிரதமர் மோதி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் அல்லது ஞானேஷ் குமார் என யாராக இருந்தாலும், யாரும் தப்ப முடியாது," என்று ராகுல் காந்தி கூறினார்.
தேர்தல் ஆணையர்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திக்க முடியாதது குறித்தும் ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பினார்.
"தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க இன்று 300-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். நாங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். தேர்தல் ஆணையர் ஏன் எங்களைச் சந்திக்கவில்லை? போலீசார் ஏன் எங்களைத் தடுத்து மிரட்டுகிறார்கள்?" என்று அவர் கேள்விகளை முன்வைத்தார்.
'ஞானேஷ், எல்லாம் முடிந்துவிட்டது சகோதரா' - ராகுல்
முன்னதாக, எதிர்க்கட்சியான 'இந்தியா' (INDIA) கூட்டணியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். நிதி ஆயோக் அலுவலகத்திற்கு முன்னால் போலீசார் அவர்களைத் தடுத்தனர்.
நிதி ஆயோக் மற்றும் அகில இந்தியா வானொலி நிலையம் ஆகியவற்றுக்கு இடையே, தேர்தல் ஆணையத் தலைமையகத்திற்குச் செல்லும் சாலையில் அந்த இடம் அமைந்துள்ளது. செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஞானேஷ், எல்லாம் முடிந்துவிட்டது சகோதரா. இப்போது பதவி விலக வேண்டிய நேரம் இது," என்று ராகுல் காந்தி முன்னதாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருந்தார்.
போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ். சீருடையில் ஞானேஷ் குமார் இருப்பது போன்ற கட்-அவுட்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏந்தியிருந்தனர். "பா.ஜ.க. தான் தலைமைத் தேர்தல் ஆணையர்", "வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்", "ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல" போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

பட மூலாதாரம், ANI
பாஜக பதிலடி
'இந்தியா' கூட்டணியின் ஊர்வலம் மற்றும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் "குழப்பத்தை உருவாக்கவும், ராகுல் காந்தியை மீண்டும் முன்னிறுத்தவும்" மேற்கொண்ட மற்றொரு முயற்சியே இந்த ஊர்வலம் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறினார். உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல் காந்தி தவறாகச் சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உச்ச நீதிமன்றம் 'படிவம் 6'-ஐ சட்டவிரோதமானது என்று அறிவிக்கவில்லை என்றும், அது குறித்து நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது என்றும், இது குறித்து மேலும் விசாரிக்கப்படும் என்றும் பத்ரா கூறினார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி "குழப்பத்தை" ஏற்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.
"எஸ்ஐஆரை எதிர்ப்பதன் மூலம், 2.8 கோடி இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் தக்கவைக்க காங்கிரஸ் விரும்புகிறதா? ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் 'வாக்குத் திருட்டு' மூலம் எம்.பி. ஆனார்களா? எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) சட்டவிரோதமானது என்றால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் அரசுகளும் சட்டவிரோதமானவையா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதியும், எஸ்ஐஆர் குறித்து "தவறான, ஆதாரமற்ற மற்றும் முரண்பாடான" அறிக்கைகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டி, ராகுல் காந்தியை விமர்சித்தார்.
"எந்தவொரு சரிபார்ப்பும் இல்லாமல், முகவரியை மாற்றியவர்கள், இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதன் மூலம் காங்கிரஸ் யாருக்குப் பயனளிக்க விரும்புகிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என்ன?
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடப்பதாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்ஐஆர் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் மற்றும் படிவம்-6இல் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான முடிவுகளில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
திங்கட்கிழமை, படிவம் 6 தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6 இல் "சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்சமான" மாற்றங்களைச் செய்ததாக ராகுல் காந்தி கூறினார். இந்தக் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்துள்ளதுடன், படிவம் 6 சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி
செவ்வாய்க்கிழமை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மற்றும் பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
பேரணியை முன்னிட்டு நாடாளுமன்றம், சன்சத் மார்க், அகில இந்தியா வானொலி நிலையம் மற்றும் தேர்தல் ஆணையத் தலைமையகம் ஆகியவற்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, விரைவு அதிரடிப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?

பட மூலாதாரம், Getty Images
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் 'படிவம்-6' (Form-6) குறித்து, அக்டோபர் 5 திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவித்தது.
படிவம்-6ல், விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர்கள் முந்தைய வாக்காளர் பட்டியல்களில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த தகவல்கள் கோரப்படுகின்றன.
படிவம்-6-ல் செய்யப்பட்ட மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.
திருத்தப்பட்ட படிவம்-6-ல், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்பவர்களிடம், கடந்த 'சிறப்புத் தீவிரத் திருத்த' நடவடிக்கைக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரோ அல்லது தங்கள் பெற்றோரின் பெயரோ இடம்பெற்றுள்ளதா என்று கேட்கப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து, செப்டம்பர் 26 தேதியிட்ட பத்திரிகைக் குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த கூற்றிலிருந்து மாறுபட்டதாக உள்ளது.
செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட இந்தச் செய்திக் குறிப்பில், "எஸ்ஐஆர்-க்கான படிவம்-6-உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையத்திற்குள் "முன்னெப்போதும் இல்லாத வகையிலான அரசியலமைப்புச் சார்ந்த விரிசல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகள்" நிலவுவதாகக் குற்றம் சாட்டி, வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டது.
ஆவணங்கள் கிடைத்ததும், அப்படிவத்தில் மாற்றங்களைச் செய்தது யார் என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் நீதிமன்றம் கூறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































