'விதைப்பையில் மகன் அடித்ததால் ஒரு வாரமாக குறையாத வலி... இறுதியில் இதுவே தந்தை உயிரை காப்பாற்றியதா?'

- எழுதியவர், ஓவைன் கிளார்க்
- பதவி, பிபிசி
- எழுதியவர், மேத்யூ பாசெட்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பென் லிட்ஜி தனது மகனுடன் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது விதைப்பையில் அடிபட்டது. ஆனால் அந்தச் சம்பவமே அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.
ஒரு வாரத்துக்குப் பிறகும் வலி குறையாததால், அவர் மருத்துவ உதவியை நாடினார். அப்போது அவருக்கு விதைப்பைப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
ஆண்களுக்கான தொண்டு நிறுவனமான மோவெம்பர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பிரிட்டனின் வேல்ஸில் மூன்றில் ஒரு ஆண் தனது 75-வது பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழக்கிறார். ஆண்களின் உடல்நலத்துக்காக தனியான திட்டத்தை உருவாக்குமாறு அந்த அமைப்பு வேல்ஸ் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆண்கள் எதிர்கொள்ளும் சில சவால்களை சமாளிக்க, தற்கொலைத் தடுப்பு மற்றும் சுயதீங்கு, மனநலம் மற்றும் புற்றுநோய் தொடர்பான தங்களது தற்போதைய திட்டங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக வேல்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன
கார்டிஃப் நகரைச் சேர்ந்த லிட்ஜி, தனது மகன் உதைத்த பிறகு தனது விதைப்பை 'கிரிக்கெட் பந்து போல' இருந்ததாகக் கூறுகிறார். ஆனால், அந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும் என்று நினைத்து, மருத்துவரை அணுக அவர் தயங்கினார்.
"ஆண்களுக்கு அடிக்கடி நடக்கும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று. அதை அப்படியே விட்டுவிட்டு, 'சரி, இது தானாகவே சரியாகிவிடும்' என்று நினைத்துவிடுகிறோம்," என்று அவர் கூறினார்.
"எங்கள் குடும்பச் சூழலும் பரபரப்பாக இருந்தது. இரண்டு சிறு குழந்தைகள், வேறு பல விஷயங்கள் என நிறைய வேலைகள் இருந்தன."
பின்னர், அவர் புற்றுநோயிலிருந்து குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு, லிட்ஜி வேறொரு சவாலை எதிர்கொண்டார்.
அவர் கூறுகையில், "நான் நன்றாக இருப்பதாகவே நினைத்தேன். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, என் மனைவி, 'நீங்கள் நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் யாரிடமாவது பேச வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.
"நான் முன்பைவிட சற்று அமைதியிழந்திருந்ததையும், மற்றவர்களிடம் சற்று அதிகமாக வாதிடுவதையும், பொறுமை குறைந்திருப்பதையும், முன்பு இருந்த நபராக நான் இல்லை என்பதையும் அவர் கவனித்திருந்தார்."
ஆலோசனை பெற்ற பிறகு லிட்ஜியின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஆண்கள் ஏன் குறைந்த வயதிலேயே உயிரிழக்கின்றனர்?
உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவ உதவியை நாட ஆண்கள் பொதுவாகத் தயங்குவது, அவர்கள் குறைந்த வயதிலேயே உயிரிழப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
மோவெம்பர் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும் வேல்ஸில் 75 வயதை அடைவதற்கு முன்பு சுமார் 7,000 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை, இதேபோன்ற அகால மரண விகிதம் 28% குறைவாக உள்ளது.
தடுக்கக்கூடிய நோய்கள் அல்லது ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் நல்ல பலன் கிடைக்கக்கூடிய நோய்களால் ஆண்கள் உயிரிழப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, சில வகையான புற்றுநோய்கள், இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள், போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டுடன் தொடர்புடைய பிரச்னைகள், அத்துடன் தற்கொலை ஆகியவை இதில் அடங்கும்.

ஒருவர் வசிக்கும் இடமும் அவரது ஆயுளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பவிஸுடன் ஒப்பிடும்போது, பிளெனாவ் க்வென்ட் பகுதியில் ஆண்களின் அகால மரண விகிதம் சுமார் 60% அதிகமாக உள்ளது. அதேபோல், மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஆண்களின் சராசரி ஆயுட்காலம், குறைவாகப் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஆண்களைவிட 7.5 ஆண்டுகள் குறைவாக உள்ளது.
ஆண்களின் அகால மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும் முதல் ஐந்து காரணங்களால், வேல்ஸ் பொருளாதாரத்துக்கு ஆண்டுக்கு 1.4 பில்லியன் பவுண்ட் செலவு ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பராமரிப்புத் துறை பேராசிரியர் ஜோனதன் ஸ்கோர்ஃபீல்ட் "குறிப்பாக இளம் ஆண்கள், உடல் ரீதியான ஆபத்துகளை மேற்கொள்வதால் காயமடைவதற்கும் உயிரிழப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. உடல் வலிமையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இதற்கு ஒரு காரணம்" என்றார்.
சமூக உறவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை சில ஆண்கள் புறக்கணிக்கக்கூடும் என்றும், அதற்குப் பதிலாக அந்தப் பொறுப்பை தங்கள் பெண் துணை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
"அவர்கள் துணையை இழக்கும்போதோ அல்லது ஓய்வுபெறும்போதோ, தனிமையுடன் போராடுவது அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிடுகிறது," என்று அவர் கூறினார்.
"உணவுமுறையும் மிகவும் முக்கியமான ஓர்அம்சம். பழங்கள், காய்கறிகள் போன்ற பல ஆரோக்கியமான உணவுகள் ஆண்மைக்கான அடையாளமாகக் கருதப்படுவதில்லை. அதேநேரத்தில், அதிகமாக மது அருந்துவது போன்ற உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சில பழக்கங்கள், சிறுவன் ஒருவன் வளர்ந்து ஆணாக மாறுவதன் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன."
கனரகத் தொழில்கள் மற்றும் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் குறைந்துவிட்டபோதிலும், சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள் மூலம் 'ஆண்மை' குறித்த பாரம்பரியக் கருத்துகள் இளம் ஆண்களிடம் தொடர்ந்து நிலவுவதாக ஸ்கோர்ஃபீல்ட் கூறினார்.
.

பாங்கோர் மற்றும் ஸ்னோடோனியா என்று அழைக்கப்படும் எரிரி பகுதிகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் மென்ட்ரைப் ஆதரவுக் குழு, வெளிப்புறச் சவால்கள் மூலம் மன உறுதியையும் மன மற்றும் உடல் நலனையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
13 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இதன் இணை நிறுவனர் காலம் டிப்டன், அதிர்ச்சிக்கு பிந்தைய மனஅழுத்தக் கோளாறு மற்றும் மனச்சோர்வு காரணமாக ராணுவத்தில் இருந்து விலகினார்.
தனிமையை எதிர்கொள்ள, 34 வயதில் அவர் குழுக்களாக மலையேற்றம் செல்லத் தொடங்கினார்.
"உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது, உடலில் இயற்கையாகவே எண்டோர்ஃபின்களைச் சுரக்கச் செய்கிறது. இதனால் அவர்களுக்கு ஒருவிதமான உற்சாகமான உணர்வு கிடைக்கிறது. அதன்பிறகு, அவர்கள் தங்களது பிரச்னைகளைப் பற்றித் திறந்து பேசும்போது, அவர்கள் மிகவும் நிதானமாக இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Callum Tipton
பாங்கோர் நகரைச் சேர்ந்த கேவின் ராபர்ட்ஸுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால், ஒரு குழந்தை உயிரிழந்தது.
தற்போது ஐந்து வயதாகும் அவரது மற்றொரு மகனுக்கு இதயத்தின் இடது பக்க வளர்ச்சியின்மை பாதிப்பு உள்ளது. இதனால், இதயத்தின் ஒரு பாதி மட்டுமே வளர்ந்துள்ளது. மேலும், ஒரு நுரையீரல் மட்டுமே செயல்படுகிறது.
44 வயதான ராபர்ட்ஸ் கூறுகையில், "இதையெல்லாம் நானே சமாளிக்க முயன்றேன். ஆனால், இதில் என்ன நடக்கிறது என்பதை நண்பர்களும் குடும்பத்தினரும் முழுமையாகப் புரிந்துகொள்வது அரிது என்பதால், இது கடினமாக இருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மென்ட்ரைப் குழுவைப் பற்றி தெரிந்துகொண்டபோது, மலைப் பகுதிகளில் எனக்குத் துணையாக யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால், நான் அடிக்கடி மலைப் பகுதிகளுக்குச் செல்வேன், பெரும்பாலும் தனியாகத்தான் செல்வேன்.
தற்கொலை செய்துகொண்ட இரண்டு நண்பர்களை நான் இழந்திருக்கிறேன். எனவே, ஆண்கள் தங்களுக்குத் தேவையான உதவியை நாடி, முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் நடக்கும்போது பேசலாம், பேசாவிட்டாலும் பரவாயில்லை; வெறுமனே நடக்கலாம், மீண்டும் சுறுசுறுப்பாக இருக்கலாம்," என்றார்.

வேல்ஸின் முன்னாள் கால்பந்து வீரரும், சூதாட்டப் பழக்கத்தில் இருந்து மீண்டு வருபவருமான ஜான் ஹார்ட்சனும், வேல்ஸ் ஆண்களுக்கான சுகாதாரத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அவருக்கு விதைப்பைப் புற்றுநோய் இருப்பதும், அது மூளை மற்றும் நுரையீரலுக்குப் பரவியிருப்பதும் தெரியவந்ததைத் தொடர்ந்து, ஹார்ட்சனுக்கு அவசரமாக மூளை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
"எனது விதைப்பையில் ஒரு சிறிய கட்டி இருப்பதை நான் கண்டபோது, எனது உடல்நலம் குறித்து எனக்கே போதிய விழிப்புணர்வு இல்லை. 'எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம்' என்று நினைத்துவிட்டேன்," என்று அவர் கூறினார்.
"என் குடும்பத்தினரை அந்தச் சூழலுக்குள் தள்ளியது குறித்து எனக்கு வருத்தம் இருக்கிறது. ஏனென்றால், நான் புற்றுநோயுடன் போராடியபோது அவர்களும் அந்தப் பாதிப்பை அனுபவித்தனர்."
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சகோதரரையும் தற்கொலை காரணமாக அவர் இழந்தார். ஆண்களிடையே தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
விதைப்பைப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
- விதைப்பைப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
- விதைப்பையில் கட்டி அல்லது வீக்கம் ஏற்படுதல்
- விதைப்பையின் அளவு பெரிதாகுதல்
- விதைப்பை அல்லது விதைப்பையைச் சுற்றியுள்ள தோல் பகுதியில் (scrotum) வலி
- விதைப்பைச் சுற்றியுள்ள தோல் பகுதி கனமாகவோ, இறுக்கமாகவோ அல்லது கடினமாகவோ உணரப்படுதல்
- விதைப்பைப் புற்றுநோய் பொதுவாக ஒரு விதைப்பையை மட்டுமே பாதிக்கும். ஆனால், இரண்டு விதைப்பைகளிலும் ஏற்படலாம்.
- இந்த அறிகுறிகள் வேறு சில உடல்நலப் பிரச்னைகளாலும் ஏற்படக்கூடும். இருப்பினும், விதைப்பையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதை மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.
வேல்ஸ் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஆண்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கெனவே மேற்கொண்டு வருகிறோம். நோய்களைத் தடுப்பது மற்றும் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்னைகள் நெருக்கடியான நிலையை எட்டுவதற்கு முன்பே, ஆண்கள் உதவியை நாடுவதை ஊக்குவித்து வருகிறோம். மனநல ஆதரவை முன்கூட்டியே பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இதில் அடங்கும்," என்று தெரிவித்தார்.
கூடுதல் தகவல்கள்: மைக்கேலா ரிவா
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































