அபூர்வ சகோதரர்கள் உள்பட சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் அதிகம் பேசப்பட்ட 10 படங்கள்

சிங்கீதம் சீனிவாசராவ், கோலிவுட், தமிழ் சினிமா, சினிமாத் துறை, இயக்குநர் சிங்கீதம் சீனிவாசன்
    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ், நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர், சென்னையில் படித்தார். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக, நாடக எழுத்தாளராக, பத்திரிகையாளராக பணியாற்றினார். சினிமா மீதான ஆர்வத்தால் அந்த காலத்தில் பிரபல இயக்குநராக இருந்த கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். 'மாயாபஜார்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

தெலுங்கில் 1972-ல் வெளியான 'நீதி நிஜாயிதி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் அவர் முதன்முதலில் இயக்கிய படம் 'திக்கற்ற பார்வதி' 1974-ல் வெளியாகி, தேசிய விருதையும் வென்றது. 54 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து இயங்கியவர்,

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 60 படங்களை இயக்கியிருக்கிறார் சிங்கீதம். தமிழில் கமல்ஹாசன் கூட்டணியில் பல வெற்றி படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.

தமிழ் எழுதப் படிக்க தெரியாதவர்

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் குறித்து அவரிடம் 3 படங்களில் பணியாற்றிய இயக்குனர் ராசிஅழகப்பன் பிபிசி தமிழிடம் கூறுகையில் ''அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மகளிர்மட்டும்' என 3 படங்களில் பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவம். மற்ற இயக்குநர் படங்களை விட, அவர் படங்கள் வித்தியாசமாக இருக்கும். யாரும் சொல்லாத கதைக்களத்தில் இருக்கும். அவர் சிந்திப்பதே அப்படிதான். தமிழில் இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தாலும் அவரால் தமிழ் எழுத படிக்க தெரியாது என்பது பலருக்கும் தெரியாது. நான்தான் அவர் டீமில் தமிழ் தெரிந்தவன். ஆனால், அவர் அனைத்து வசனங்கள், காட்சிகளையும் உன்னிப்பாக கவனிப்பார், திருத்தங்கள் செய்வார், அதை மெருகேற்றுவார். தமிழ், தெலுங்கு தவிர, கன்னடத்தில் ராஜ்குமாரை வைத்து வெற்றி படங்கள் கொடுத்தார். கன்னடத்தில் ஒரு படத்துக்கு இசையும் அமைத்து இருக்கிறார். கமல், பாலகிருஷ்ணா வைத்து மட்டுமல்ல, ஜோதிகா நடித்த லிட்டில்ஜான் படத்தையும் இயக்கினார். அதுவும் ஒரு குள்ள வேட ஹீரோ கதை'' என்றார்

கமல்ஹாசன், சிங்கீதம் கூட்டணி குறித்து பேசிய ராசி அழகப்பன் ''கமல்ஹாசனுக்கும், அவருக்கும் நல்ல நட்பு. அதனால்தான் இத்தனை வெற்றி படங்களை கொடுக்க முடிந்தது. அவர்களுக்கு இடையில் நல்ல புரிதல் இருந்தது. அபூர்வசகோதரர்கள் படத்தில் முதலில் 13 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு அதை வேண்டாம் என்று மறுக்கிற துணிவு இருந்தது. அதனால், அந்த படம் இன்னும் அழகாக வந்தது. அந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் அப்பு கமலும், அவர் அம்மாவும் சந்திப்பார்கள். அப்போது பல பக்க டயலாக் கொடுத்தார் கிரேஸி மோகன். கமலும் அதை விரிவாக நடித்துகாண்பித்தார். ஓடி வருகிறபோது இவ்வளவு சீன் வேண்டாம். கொஞ்ச நேரம் அம்மாவும், மகனும் எமோஷனலாக பேசினால் போதும் என டக்கென முடிவெடுத்து, அதை படத்தில் செயல்படுத்தினார்.

சிங்கீதம் சீனிவாசராவ், கோலிவுட், தமிழ் சினிமா, சினிமாத் துறை, இயக்குநர் சிங்கீதம் சீனிவாசன்

தனது 94 வயதில் சிங்கீதம் படத்தை வீட்டில் இருந்தே இயக்கினார். நான் அவரிடம் பேசியபோது படப்பிடிப்புதளத்தை லேப்டாப்பில் வீட்டில் இருந்து பார்க்கிறேன். இங்கே இருந்து படத்தை இயக்குகிறேன். டெக்னாலாஜி உதவுகிறது என சிரித்தார். அந்த படத்தின் கதையும் வித்தியாசமானதுதான். அவர் இயக்கிய படங்களில் இருநிலவுகள், புஷ்பக், மகளிர்மட்டும், ஆதித்யா 369, அபூர்வசகோதரர்கள் படங்கள் பிடிக்கும்'' என்றார்.

சிங்கீதம் சீனிவாசராவ் குறித்து சில மாதங்களுக்குமுன்பு சென்னையில் நடந்த நடந்த சிங்கீதம் பட விழாவில் கமல்ஹாசன் பேசுகையி்ல் '"மா​யாபஜார் முதல் தற்​போதைய 'சிங் கீதம்' வரை, சிங்​கிதம் சீனி​வாச ராவிடம் எந்த மாற்​ற​மும் இல்​லை. சினிமா அவரிடமே உள்​ளது. இது மிக​வும் அரிதாக நடக்​கும் விஷ​யம். எனக்கு 20 வயதாக இருந்​த​போதே அவருடன் பணி​யாற்​றத் தொடங்​கினேன். அவருடைய படங்​களில் தயாரிப்​பாள​ராக​வும், உதவி இயக்​குந​ராக​வும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணி​யாற்ற வேண்​டும் என்​பதே என் நோக்​கம். பல ஆண்​டு​களுக்கு முன்​பு, அவர் என்​னிடம் 2 கதைகளைச் சொன்​னார்.

ஒன்று 'புஷ்பக விமானம்' என்ற படமாக வெளி​யானது. இப்​போது 2-வது கதை 'சிங் கீதம்' என்ற திரைப்​பட​மாக வெளி​யாகப் போகிறது. எனக்கு 20 வயதாக இருந்​த ​போது அந்​தக் கதையைக் கேட்​டேன். இப்​போது எனக்கு 70 வயதாகிறது. இப்​போது நான் அந்தப் படத்​தைப் பார்க்​கப் போகிறேன். சில யோசனை​கள், சில கதைகள் காலத்​தால் அழி​யாதவை. சிங்​கீதம் சாரின் கதைகளும் அப்​படித் ​தான்.' என்றார்.

சிங்கீதம் சீனிவாசராவ், கோலிவுட், தமிழ் சினிமா, சினிமாத் துறை, இயக்குநர் சிங்கீதம் சீனிவாசன்

கமல்ஹாசன் நடத்திய அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் 'ராஜபார்வை படப்பிடிப்பு நடந்தபோது நான் சினிமாவுக்கு வரவில்லை. அந்த படப்பிடிப்புதளத்தை நானும், பி.சி.ஸ்ரீராமும் திருட்டுதனமாக சென்று பார்த்து இருக்கிறோம். அப்போது நிறைய கற்றுக்கொண்டேன். சிங்கீதம் சீனிவாசராவ் திறமை பார்த்து வியந்தேன்.பிற்காலத்தில் நான் சினிமாவுக்கு வர அவரும் ஒரு காரணம்" என்று புகழ்ந்து பேசியிருக்கிறார். '

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான பிரபல படங்கள் சில:

சிங்கீதம் சீனிவாசராவ், கோலிவுட், தமிழ் சினிமா, சினிமாத் துறை, இயக்குநர் சிங்கீதம் சீனிவாசன்

1) ராஜபார்வை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கமல்ஹாசன் நடித்த 100வது படம். தலைப்பில் பார்வை இருந்தாலும் கதைப்படி பார்வையற்றவராக நடித்தார் கமல்ஹாசன். அவருக்கும், கிறிஸ்துவ பெண்ணான மாதவிக்குமான காதல், திருமண சிக்கல்களே படக்கதை.

ஹாசன் பிரதர்ஸ் என்ற நிறுவனம் மூலமாக கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்த படம். பிற்காலத்தில் இந்த நிறுவனம் ராஜ்கமலாக மாறியது. இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான எல்.வி.பிரசாத்தை இதில் தாத்தா வேடத்தில் நடிக்க வைத்தார் சிங்கீதம். கமலின் சகோதரர்களான சந்திரஹாசன், சாருஹாசன், நண்பர்களான சந்தானபாரதி, கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வி.கே.ராமசாமி, சித்ரா, டெல்லி கணேஷ் ஆகியோரும் கூட படத்தில் நடித்தார்கள்.

இந்திய சினிமாவில் பார்வையற்றவர்கள் என்றால் கையில் குச்சி வைத்துக்கொண்டு, கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு, ஒருவித உடல்மொழியில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதை இந்த படத்தில் உடைத்தார் சிங்கீதம் சீனிவாசராவ். 1981ல் வந்த இந்த படத்தில் இளையராஜா இசையில் அந்திமழை பொழிகிறது. அழகே அழகு ஆகிய பாடல்கள் ஹிட்டாகின. தெலுங்கில் இந்த படம் அமாவாசய சந்துருடு எனும் பெயரில் வெளியானது

2) பேசும்படம்

இதுவும் தலைப்புக்கு நேர் எதிரான கதை. ஆம், யாருமே பேசமாட்டார்கள். ஆரம்பகால மவுன படத்தை 1987ல் செயல்படுத்தி காண்பித்தார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். புஷ்பக் என்ற பெயரில் கன்னடத்தில்தான் உருவான இப்படம் தமிழில் பேசும்படமானது. கமல்ஹாசன், அமலா நடித்தனர்.

வறுமையில் வாடும், வேலையில்லாத இளைஞனான கமல்ஹாசன், ஒரு கோடீஸ்வரர் அடையாளத்தில் அவர் தங்கியிருக்கும் 'புஷ்பக்' என்ற சொகுசு ஹோட்டல் அறையில் ஆடம்பர வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். அங்கு தங்கியிருக்கும் ஒரு மந்திரவாதியின் மகளைக் காதலிக்கிறார். நிஜ கோடீஸ்வரரைக் கொல்லத் துடிக்கும் ஒரு கூலிப்படையின் கொடூரப் பிடியில் கமல்ஹாசன் எதிர்பாராமல் சிக்கிக் கொள்ள என்ன நடக்கிறது என்பது கதை.

பலரும் இந்த கதையை தயாரிக்க மறுக்க, சிங்கீதமே தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆனார். சிறந்த படத்துக்கான தேசியவிருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது. கேன்ஸ் திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டது. இன்றும் மவுனப்படம் என்றால் பேசும்படம் நினைவுக்கு வரும்.

3) அபூர்வ சகோதரர்கள்

சிங்கீதம் சீனிவாசராவ், கோலிவுட், தமிழ் சினிமா, சினிமாத் துறை, இயக்குநர் சிங்கீதம் சீனிவாசன்

அந்த உயரம் குறைவான அப்பு கேரக்டரில் கமல்ஹாசன் நடித்தது எப்படி என்று இன்றும் கேட்கிறார்கள். தொழில்நுட்பம், கிராபிக்ஸ் அதிகம் வளராத அந்த காலத்தில் எப்படி அதை சாதிக்க முடிந்தது என்று சினிமா துறையிலும் பலர் வியக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, நடிப்பு, பாடல்கள், காமெடி என அனைத்திலும் அபூர்வ சகோதரர்களை வெற்றி படமாக்கினார் சிங்கீதம். அதற்கு பஞ்சு அருணாசலம், கிரேஸி மோகன், இளையராஜா என பக்கா கூட்டணி அமைத்தார். கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையிலும் முக்கியமான படமானது.

4) மைக்கேல் மதன காமராஜன்

சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன், கிரேஸிமோகன், இளையராஜா கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றி படம். அபூர்வசகோதரர்கள் வெற்றிக்குபின், அந்த அனுபவத்தில் இப்படிப்பட்ட கதையை கமல் உருவாக்க, அதற்கு உயிர் கொடுத்தார் சிங்கீதம். 4 மாறுபட்ட கேரக்டர்களில் கமல்ஹாசன் கலக்கினார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த படம், இன்றும் தமிழில் அடிக்கடி ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்த படத்தில் கமல் பேசும் பாலக்காட்டு தமிழ் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

சிங்கீதம் சீனிவாசராவ், கோலிவுட், தமிழ் சினிமா, சினிமாத் துறை, இயக்குநர் சிங்கீதம் சீனிவாசன்

5) மகளிர் மட்டும்

1980-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '9 டூ 5' (9 to 5) என்ற படத்தின் தாக்கத்தில், பெண்களின் பணியிடச் சிக்கல்களை நகைச்சுவையுடன் பேசும் இந்த படக்கதையை எழுதி, தயாரித்தவர் கமல்ஹாசன். காமெடி படங்களை இயக்குவது சிங்கீதத்துக்கு கை வந்த கலை என்பதால் அவரிடம் கொடுத்தார்.

ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர், தங்கள் ஆபீஸ் மானேஜரான நாசரை எதிர்த்து போராடி ஜெயிப்பதே கதை. கமல்ஹாசன் கடைசியில் ஒரு கவுரவ வேடத்தில் வருவார். நடிப்பு திலகமான நாகேசை பிணமாக நடிக்க வைத்தார் சிங்கீதம்.

6) மும்பை எக்ஸ்பிரஸ்

தனது 74வது வயதில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய டிஜிட்டல் படம். பிலிம் ரோலில் சினிமா எடுக்கப்பட்ட காலத்தில், டிஜிட்டல் என்ற நவீனமுறைக்கு மாறி எடுத்த ரிஸ்க் படம் என்று கூட சொல்லலாம். தொழிலதிபர் மகனுக்கு பதில், போலீஸ் அதிகாரியின் மகனை மாற்றி கடத்தும் 3 நண்பர்கள் கதை.

வழக்கம்போல் காமெடி பாணியில் படம் நகரும். இன்னும் சொல்லப்போனால் பிளாக் காமெடி என்ற வகைமையில் உருவான தமிழ் படம். டிஜிட்டலில் படமாக்கப்பட்டு, அப்படியே சென்சார் ஆன முதல் படமும் கூட. பெரியளவில் வெற்றி அடையாவிட்டாலும் புதுமுயற்சிகளுக்காக மும்பை எக்ஸ்பிரஸ் கவனிக்கப்படுகிறது.

7) மயூரி

பிரபல பரதநாட்டியக் கலைஞர் சுதா சந்திரனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மயூரி படம் உருவானது. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஒரு கார் விபத்தில் தனது வலது காலை இழந்தவர், பின்னர், செயற்கை கால் பொருத்திக் கொண்டு மீண்டும் எப்படி நடனத்துறையில் சாதித்தார் என்பதை சினிமாவாக கொடுத்தார் சீங்கீதம்.

சுதா சந்திரனே மயூரியாக நடித்தார். ராமோஜி ராவ் தயாரிக்க, பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்தார். 1985ல் வந்த இந்த படம் தேசியவிருது உட்பட பல விருதுகளை பெற்றது.

8) ஆதித்யா 369

இன்றைக்கு டைம் டிராவல் கதைகள் அதிகம் வருகின்றன. 1991ல் அதை சாதித்து காண்பித்தவர் சிங்கீதம். பாலகிருஷ்ணா நடித்த இந்த படம் இந்தியளவில் அறிவியல் புனைவு கதைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பேராசிரியர் டினு ஆனந்த் என்பவர் காலத்தை கடந்து பயணம் செய்யும் 'ஆதித்யா 369' என்ற இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். அவர் மகள் மோகினியும், காதலன் பாலகிருஷ்ணா தற்செயலாக அந்த இயந்திரத்தில் ஏறி கிருஷ்ணதேவராயரின் விஜயநகரப் பேரரசுக்குச் செல்கிறார் என கதை விரியும்.

அன்றைய நிகழ்காலம், கி.பி. 1526 மற்றும் கி.பி. 2504 ஆகிய காலகட்டத்தில் கதை பயணிக்கும். தமிழில் அபூர்வசக்தி 369 என்ற பெயரில் வந்தது.

9) காதலா காதலா

கமல்ஹாசன், பிரபுதேவா, சவுந்தர்யா, ரம்பா நடித்த நகைச்சுவை படம். காதல், ஆள்மாறாட்ட பிரச்னைகளை பேசியது. கமலின் காமெடி காட்சிகள் மீண்டும், மீண்டும் ரசிகர்களால் பார்க்கப்பட்டன. காசுமேல காசு வந்து பாடல், கார்த்திக்ராஜா இசையில் பிரபலமானது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.விஸ்வநாதனை கூட பரமசிவம் என்ற கேரக்டரி்ல் நடிக்க வைத்து அழகு பார்த்தார் சிங்கீதம். வழக்கம்போல் வசனங்களில் கிரேசிமோகன் புகுந்து விளையாடினார். ஒரு பிரபலமான சாமியாரை கிண்டல் அடிக்கும் காட்சிகள் ரசிக்கப்பட்டது.

10) சிங்கீதம்

தனது 94வது வயதில், சில மாதங்களுக்கு முன்பு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படம். அவர் உடல்நிலை காரணமாக வீட்டில் இருந்தபடியே கம்யூட்டர் மூலம் படத்தை இயக்கினார். வீல்சேரில் இருந்தபடியே பட வேலைகளை கவனித்தார். அவர் பாணியில் இதுவும் ஒரு வித்தியாசமான கதைதான். படத்தில் நடித்தவர்கள் வசனங்களுக்கு பதில் பாடுவார்கள். முழுக்க வசன பாடல்களால் உருவான படம்.

சென்னையில் நடந்த இந்த படவிழாவில்தான் சிங்கீதம் கடைசியாக கலந்துகொண்டார். 94 வயதில் ஒருவர் இயக்கிய படம் என்ற புது சாதனையையும் சிங்கீதம் பெற்றது . ஹாலிவுட் இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் சாதனையை அவர் முறியடித்தார். ஆம், கிரை மேச்சோ (Cry Macho - 2021) என்ற படத்தை அவர் தனது 90வது வயதில் இயக்கினார்.

கவிஞர் சிநேகன் புகழாரம்

சிங்கீதம் சீனிவாச ராவ் குறித்து கவிஞர் சிநேகன் பிபிசி தமிழிடம் பேசுகையில் ''வயது மூப்பை, மரணத்தை யாரும் வெல்ல முடியாது. ஆனால், சில மரணங்கள் வலியை, ஏமாற்றத்தை கொடுக்கும். சிங்கீதம் திரையுலக முன்னோடி. கமல்ஹாசன், சிங்கீதம் நட்பு, செய்த படங்கள், என்னை போன்ற பலரை ஈர்த்து இருக்கிறது.

பேசும்படம், மகளிர்மட்டும், ராஜபார்வை, காதலா, காதலா, மும்பை எக்ஸ்பிரஸ், அபூர்வசகோதரர்கள்' என அவர்கள் கூட்டணியில் வந்த படங்கள், வெற்றி படங்கள் மட்டுமல்ல, முக்கியமான படைப்புகளும் கூட. சிங்கீதம், கமல்ஹாசன் நட்பு மிகவும் அழுத்தமானது. அதனால்தான் சமீபத்தில் அவரை அழைத்து அபூர்வசிங்கீதம் என்ற நிகழ்ச்சியை சொந்த செலவில் கமல்ஹாசன் நடத்தினார். அந்த விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டு சிங்கீதத்தை பாராட்டி, அவர் படங்களை புகழ்ந்து பேசி கவுரப்படுத்தினார். அந்த நிகழ்ச்சி அவரை இன்னும் இளமை ஆக்கியது. சிங்கீதம் சார்பில் ஒரு விருதை ஐதராபாத்தில் வாங்கினார் கமல்ஹாசன். அதை நாசர் உள்ளிட்டோரை அழைத்து சென்று சிங்கீதம் வீட்டுக்கு சென்று கொடுத்து அழகு பார்த்தார் கமல்ஹாசன். அந்த நட்பு, அவர்கள் செய்த படங்கள் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவர்களின் சினிமா ஆர்வம், உழைப்பு காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கிறது' என்றார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு