இறைச்சி மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேம்படுமா? கார்னிவோர் டயட் பற்றி 8 கேள்வி – பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மருத்துவர் அலெக்ஸ் ஜார்ஜ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
(எச்சரிக்கை: உணவு உட்கொள்ளல் தொடர்பான கோளாறுகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளவர்களுக்குத் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகள் நிறைந்த உணவு முறைகள் குறித்து இக்கட்டுரை விவாதிக்கிறது)
கார்னிவோர் (மாமிச) உணவுமுறை என்பது இறைச்சி மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முறையாகும். அதே நேரத்தில், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகள் இந்த உணவுமுறையில் இருந்து முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன அல்லது கணிசமாகக் குறைக்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் இந்த உணவுமுறைக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இது உடல்நலப் பிரச்னைகளைச் சரிசெய்யவும், உடற்தகுதியை மேம்படுத்தவும் உதவுவதாகப் பலர் கூறுகின்றனர்.
கிளிக்பெய்ட் கிளினிக் நிகழ்ச்சியில், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் உடல்நலம் தொடர்பான கூற்றுகளின் உண்மைத்தன்மையை ஸ்டேசி டூலி, மருத்துவர் நிகாத் அரிஃப் மற்றும் நான் ஆகியோர் சரிபார்க்கிறோம்.
இந்த நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தில் கார்னிவோர் உணவுமுறை குறித்து ஆய்வு செய்கிறோம். சிலர் இந்த உணவுமுறையைத் தீவிரமாகப் பின்பற்றுகின்றனர். ஆனால், இதனால் நீண்டகாலத்தில் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்கள் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கார்னிவோர் உணவுமுறை என்றால் என்ன?
கார்னிவோர் (மாமிச) உணவுமுறையில், இறைச்சி (குறிப்பாகச் சிவப்பு இறைச்சி), மீன், முட்டை போன்ற விலங்குகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் மட்டுமே உட்கொள்ளப்படுகின்றன. இந்த உணவுமுறையைப் பின்பற்றும் சிலர், சீஸ் போன்ற பால் பொருட்களையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
மற்ற கட்டுப்பாடுகள் நிறைந்த உணவுமுறைகளைப் போலவே, இதிலும் முக்கியமான உணவுக் குழுக்களும் ஊட்டச்சத்துகளும் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, கார்போஹைட்ரேட்டுகள் தவிர்க்கப்படுவதால் நார்ச்சத்தும் உணவில் குறைகிறது.

பட மூலாதாரம், BBC/Nutopia/Colin Hutton
கார்னிவோர் உணவு முறை உடல் எடையைக் குறைக்க உதவுமா?
இந்த உணவுமுறை தொடர்பாகப் பரவலாக முன்வைக்கப்படும் கூற்றுகளில் ஒன்று, இது அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கவும், வயிறு உப்புசத்தைக் குறைக்கவும் உதவும் என்பதாகும்.
இந்த உணவுமுறையைத் தொடங்கிய பிறகு, குறுகிய காலத்தில் உடல் எடை குறைந்ததாகவும், வயிறு உப்புசம் குறைந்ததாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த மாற்றங்கள் கார்னிவோர் உணவுமுறையால் ஏற்பட்டவையா அல்லது உணவுப் பழக்கத்தில் செய்யப்பட்ட பிற மாற்றங்களால் ஏற்பட்டவையா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
மக்கள் கார்னிவோர் உணவு முறையைப் பின்பற்றுவதற்கு வேறு என்ன காரணங்கள் உள்ளன?
இது அதிகப் புரதச்சத்து கொண்ட உணவுமுறையாகும். சமீபகாலமாகப் பலரும் புரதச்சத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குறிப்பாக, உடற்தகுதி மற்றும் வலிமைப் பயிற்சியில் கவனம் செலுத்துபவர்கள் இதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
மேலும், இணையத்தில் நான் பார்க்கும் சில காணொளிகளில், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு குறைந்து வருவதாகச் சமூக ஊடகப் பிரபலங்கள் பேசுகின்றனர். ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.
கார்னிவோர் உணவுமுறை இதற்குத் தீர்வாக அமையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதை ஆதரிப்பதற்கான மருத்துவ ஆய்வுச் சான்றுகள் எதுவும் இல்லை.
இதுபோன்ற பெரிய அளவிலான கூற்றுகள் முன்வைக்கப்படும்போது, அவை மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதற்கான ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Getty Images
அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால், கார்னிவோர் உணவு முறை நல்லதாக அமையுமா?
இந்த உணவுமுறையைப் பின்பற்றுபவர்களில் சிலர், தாம் அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாகவும், கார்னிவோர் உணவுமுறையைப் பின்பற்றுவது அதற்கு மாற்றாக அமையும் என்றும் கூறுகின்றனர்.
ஏனெனில், இதில் பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்களை மட்டுமே உட்கொள்வதாக அவர்கள் கருதுகின்றனர்.
ஒரு தேசமாக (பிரிட்டன்) நாம் அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்கான தீர்வு மற்றொரு தீவிரமான, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட உணவுமுறைக்கு மாறுவதல்ல.
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தையும் முற்றிலும் தவிர்ப்பது நடைமுறைக்கு உகந்ததல்ல. எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதும் பெரிய அளவில் உதவாது.
அதற்குப் பதிலாக, உங்கள் உணவுப் பட்டியலில் எவற்றைச் சேர்க்கலாம் என்று சிந்தியுங்கள்.
புதிய, குறைந்த கொழுப்புள்ள இறைச்சி வகைகள், மீன், பருப்பு வகைகள் மற்றும் டோஃபு போன்ற சைவப் புரத ஆதாரங்கள், பல்வேறு வகையான காய்கறிகள், சுத்திகரிக்கப்படாத கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
உங்கள் உணவில் இவை போதுமான அளவில் இடம்பெற்றிருந்தால், அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சார்ந்திருப்பது கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

கார்னிவோர் உணவு முறை உடல்நலப் பிரச்னைகளுக்கு உதவுமா?
'கிளிக்பெய்ட் கிளினிக்' நிகழ்ச்சியில், எடி அபேவ் மற்றும் அவரது மகள் செலினாவை ஸ்டேசி சந்தித்தார்.
எடி, இணையத்தில் கார்னிவோர் உணவுமுறையைப் பிரபலப்படுத்தி வருபவராக மாறியுள்ளார். இந்த உணவுமுறை தங்களது உடல்நலத்தை எவ்வாறு மேம்படுத்தியது என்பதை இருவரும் விளக்குகின்றனர்.
குறிப்பாக, இந்த உணவுமுறையைத் தொடங்குவதற்கு முன்பு தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகச் செலினா கூறுகிறார்.
ஆனால், அறிவியல் அடிப்படையில், ஒரு தனிநபரின் அனுபவத்தை மட்டும் வைத்து ஒட்டுமொத்த மக்களுக்கான பொது சுகாதாரப் பரிந்துரைகளை வழங்க முடியாது. ஆய்வுகள், பகுப்பாய்வுகள் உள்ளிட்ட அனைத்து ஆராய்ச்சிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கார்னிவோர் உணவுமுறை, அது குணப்படுத்துவதாகக் கூறப்படும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைச் சரிசெய்யும் என்பதற்கு தற்போது நம்பகமான அறிவியல் சான்றுகள் இல்லை.
அப்படியானால், அவர்களது உடல்நலம் ஏன் மேம்பட்டது? இது அடிப்படையில் சில உணவுகளைத் தவிர்க்கும் உணவுமுறையாகும் என்பதை இதற்கான ஒரு விளக்கமாகக் கூறலாம்.
ஒவ்வாமை அல்லது உணவுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள முடியாமை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய பசையம் , லாக்டோஸ் போன்றவற்றை அவர்கள் உணவில் இருந்து நீக்கியிருக்கலாம்.
நீங்கள் உட்கொள்ளும் சில உணவுகளால் உடலில் எதிர்வினைகள் ஏற்படுவதாகக் கருதினால், குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்க்கும் உணவுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.
ஆனால், படிப்படியாக அந்த உணவுகளை மீண்டும் உணவில் சேர்ப்பது முக்கியம். இதன் மூலம், பிரச்னைகள் எதனால் ஏற்படுகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதே நேரத்தில், நீண்டகாலத்தில் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்ளவும் முடியும்.
ஆனால், இறைச்சியை மட்டுமே உண்ணும் உணவுமுறையில் உள்ள பிரச்னை என்னவென்றால், தவிர்க்கப்பட்ட உணவுகள் மீண்டும் உணவில் சேர்க்கப்படுவதே இல்லை.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் இதயத்திற்கு என்னென்ன அபாயங்கள் உள்ளன?
சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகம் உள்ள உணவுமுறைகள், குடல் புற்றுநோய் மற்றும் பிற வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகப் பெருமளவிலான அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், இதயக் குழாய் நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.
நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சிலருக்கு எல்.டி.எல் எனப்படும் 'கெட்ட' கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும். இது இதயக் குழாய் நோய்களுக்கான அறியப்பட்ட ஓர் அபாயக் காரணியாகும். ஏனெனில், கொழுப்புப் படிவங்கள் தமனிகளில் குவிந்து, ரத்த ஓட்டத்தை மெதுவாக்கவோ அல்லது தடுக்கவோ செய்யலாம்.
இறைச்சியை மட்டுமே உண்ணும் உணவுமுறையில் எந்த ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகலாம்?
இந்த உணவுமுறை அதிக அளவு புரதத்தையும் கொழுப்பையும் வழங்குவதாகக் கூறப்பட்டாலும், அவை முக்கியமான ஊட்டச்சத்துகளாக இருந்தாலும், காய்கறிகள் மற்றும் தாவர உணவுகள் மூலம் பெரும்பாலும் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகளும் நார்ச்சத்தும் இதில் இல்லை.
தாவரங்களிலிருந்து கிடைக்கும் மற்ற நுண்ணூட்டச்சத்துக்களுடன் சேர்த்து, உங்களுக்கு நார்ச்சத்தும் குறைவாகக் கிடைத்தால், காலப்போக்கில் சில ஊட்டச்சத்துகளின் பற்றாக்குறை ஏற்படலாம்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆதரவு குறையலாம். சரும ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். மேலும் வளர்ந்து வரும் ஆய்வுகளின்படி, மனநலமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இன்னும் இறைச்சியை மட்டுமே உண்ணும் உணவுமுறையைப் பின்பற்ற யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த உணவுமுறை நீண்டகால உடல்நல அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
நீங்கள் அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாகக் கருதினாலோ அல்லது உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்த விரும்பினாலோ, மத்திய தரைக்கடல் உணவுமுறையை தொடக்கமாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் கூறுவேன்.
இந்த உணவுமுறையில் பல்வேறு வகையான உணவுகள் இடம்பெறுவதால், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
ஒரு மருத்துவராக, தகவல்களை நான் எப்போதும் விமர்சனப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்கிறேன். எந்தவொரு கூற்றையும் அப்படியே நான் ஏற்றுக்கொள்வதில்லை.
அதுகுறித்து ஆராய்ந்து, அறிவையும் அறிவியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி மதிப்பிடுகிறேன். பல நேரங்களில், 30 விநாடிகள் கொண்ட காணொளியில் தோன்றுவதைப் போல உண்மை இருப்பதில்லை.
இணையத்தில் ஒருவர் ஒரு விஷயம் நல்லது என்று கூறிவிட்டார் என்பதற்காக, உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, அவர் முன்வைக்கும் கருத்தை விமர்சனப்பூர்வமாக ஆராயுங்கள்.
அறிவியல் ஆதாரங்களையும், அந்தத் துறையில் நிலவும் பரந்த ஒருமித்த கருத்தையும் கவனித்துப் பார்த்து, அதன் பிறகு உங்கள் முடிவை எடுங்கள்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































