மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல்.முருகன் அறிவிப்பு - என்ன காரணம்?

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சரான தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மோதிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்துவதில் முழுநேரமாக ஈடுபட ஏதுவாக, இணையமைச்சர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலக அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். 2029 மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்த எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் செலவிட விரும்புகிறேன்." எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்க என் இல்லத்திற்கு மூன்று முறை நீங்கள் வருகை தந்த அந்தச் சிறப்பான செயலை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அந்த கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
எல். முருகன் கூறியது என்ன?
பிரதமருக்கு ராஜிநாமா கடிதம் அனுப்பிய பிறகு ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு எல். முருகன் அளித்த பேட்டியில் , "நான் பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில், தமிழ்நாடு சென்று கட்சியை வலுப்படுத்தவும், 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான களத்தைத் தயார்படுத்தவும் எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன்." என்றார்.
மேலும் பேசிய அவர், "நான் தமிழகத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த விரிவாகப் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். எனது அமைச்சர் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்து, கட்சியை வலுப்படுத்த மாநிலத்திற்கு அனுப்புமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்" என்றார்.
எல்.முருகனின் பின்னணி
1977ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்த எல். முருகன், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
ஆர்.எஸ்.எஸில் இணைந்து பணியாற்றி வந்த எல். முருகன், அக்கட்சியின் பட்டியலினத்தோர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்த்து பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்ட முருகன் 1730 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2018ஆம் ஆண்டுவாக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றிவந்தார். ஆணையத்தில் ஓராண்டு பதவிக்காலம் இருந்தபோதும், மாநில பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக பாஜக தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 20 இடங்களைப் பெற்று, அதில் நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன் தோல்வியடைந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடம்பெற்றது கவனிக்க வைத்தது.
இருமுறை மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள எல்.முருகன், பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
எல். முருகன் ராஜிநாமா பற்றி ஜோதிமணி கருத்து
மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு எல். முருகன் நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னிமலை தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமைக்கும் அவர் அளித்த பேட்டியில், "முருகன் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகுந்த மதிப்பு உண்டு. ஏனெனில், நாங்கள் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மோதி தலைமையிலான மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் மோதியும் பாஜகவும், தொடர்ந்து தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் மொழி, கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர். உண்மையில், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கே எதிராக இருக்கின்றனர்.
இப்போதுகூட, பள்ளிக் கல்விக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியைப் பெறுவதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். எனவே, மத்திய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக இருக்கிறாரா, இல்லையா என்பது எங்களைப் பொறுத்தவரை பெரிய விஷயமல்ல.
தமிழ்நாட்டு மக்கள் நரேந்திர மோதிக்கும் பாஜகவுக்கும் ஒருபோதும் சாதகமாகப் பதிலளிக்க மாட்டார்கள் என்பதால், ஒருவேளை முருகனைப் பதவி விலகுமாறு நிர்பந்தித்திருக்கலாம். தனிப்பட்ட முறையில், மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































