'நீரில் விழுந்தாலும் இறப்பதில்லை': கோவை அருகே இரவில் படையெடுத்த வண்டுகளால் தூக்கத்தை தொலைத்த 3 கிராமங்கள்

கோழித்தீவன குடோனிலிருந்து பரவி 3 கிராம மக்களை மிரட்டிய தானிய வண்டுகள். ( கோப்புப்படம் )
படக்குறிப்பு, (கோப்புப் படம் )
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோவை அருகில் கிராமத்தை ஒட்டியிருந்த குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோழித்தீவனங்களிலிருந்து பூச்சிகள் பரவி 3 கிராமங்களில் உள்ள வீடுகளுக்குப் படையெடுத்து வந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் உண்ணவும் உறங்கவும் முடியவில்லை என்று கூறி, குடோனை காலி செய்ய வலியுறுத்தி 3 கிராம மக்கள் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கினர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, அந்த குடோனை காலி செய்ய உத்தரவிட்டனர். அதனால் குடோனில் இருந்த கோழித்தீவனங்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இத்தகைய கால்நடைத் தீவனங்களிலிருந்து பரவும் தானிய வண்டுகளை பூச்சி மருந்தால் அழிக்க முடியாது என்றும், புதைத்தே அழிக்க முடியுமென்றும் பூச்சியியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இவை வீட்டுக்குள் வருவதைத் தடுக்க முடியாவிட்டாலும், குறைப்பதற்கு எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

'அரிசி, தண்ணீர் எல்லாவற்றிலும் ஊடுருவிய பூச்சிகள்'

'அரிசி, நீர் என எங்கும் பரவின': கோவை அருகே இரவில் படையெடுத்த வண்டுகளால் தூக்கத்தை தொலைத்த 3 கிராமங்கள்
படக்குறிப்பு, மூன்று வாரங்களாக பூச்சிகள் படையெடுப்பு இருந்தாலும், கடந்த 10 நாட்களாகத்தான் இந்த பிரச்னை பெரிதாக இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கோழிப்பண்ணை வளர்ப்பு, மிக முக்கியத் தொழிலாக உள்ளது. இந்த பண்ணைகள் பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான தீவனங்களும் அதே பகுதியிலுள்ள குடோன்களில் பாதுகாத்து வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப எடுத்துக் கொள்வது வழக்கமாகவுள்ளது.

இந்த தீவனங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோன்களிலிருந்து, எந்தப் பூச்சிகளும் பரவியதாக இதுவரை எந்தப் புகாரும் வந்ததில்லை என்கின்றனர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையினர். கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காடம்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு விதமான பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுப்பது அதிகமாகியுள்ளது.

காடம்பாடி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில்தான் முதலில் இந்த பாதிப்பு தென்பட்டுள்ளது. அங்குள்ள விவசாயத் தோட்டப்பகுதிகளுக்கு அருகிலுள்ள சில வீடுகளுக்குள் மாலை 6 மணிக்கு மேல் இந்த பூச்சிகள் வரத் துவங்கியுள்ளன. கடந்த 3 வாரங்களுக்கு முன்பாகவே இந்த பூச்சிகள் ஊடுருவல் துவங்கி விட்டாலும் கடந்த ஒரு வாரமாக இவற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாக மக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, வீடுகளில் இரவில் விளக்குகளைப் போட முடியாமலும், வீட்டுக்கதவு, ஜன்னல்கள் எதையும் திறந்து வைக்காமலும் பூட்டியிருக்கும் நிலைக்கு இங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த பூச்சிகளால் இரவு நேரங்களில் சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் அவதிப்பட்ட மக்கள், இந்த பூச்சிகள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிய முயன்றுள்ளனர்.

அதில் செங்கத்துறை கிராமத்தில் குமாரபாளையம் பிரிவிலுள்ள ஒரு தனியார் குடோனிலிருந்தே இந்த பூச்சிகள் பரவுவதைக் கண்டறிந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, அந்த குடோனை முற்றுகையிட்டு, அங்கு உள்ளே சென்று பார்த்தபோது, அதில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம், கோதுமை மூட்டைகளில் இருந்தும் பூச்சிகள் பரவுவதைப் பார்த்து, காணொளிகளை எடுத்துப் பதிவிட்டுள்ளனர். வண்டு போல இருக்கும் அந்த பூச்சிகளை பொதுமக்கள் செல்லுப்பூச்சி என்று கூறுகின்றனர்.

குடோனிலிருந்தே பூச்சிகள் பரவுவதை அறிந்த பொதுமக்கள், அந்தத் தீவனங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென்று வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி இரவில் காடம்பாடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறுநாள் காலையில் குடோன் முன்பாக மக்கள் திரண்டனர். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், அங்கு சென்று மக்களிடம் பேசி தீர்வு காண்பதாகத் தெரிவித்தனர்.

'அரிசி, நீர் என எங்கும் பரவின': கோவை அருகே இரவில் படையெடுத்த வண்டுகளால் தூக்கத்தை தொலைத்த 3 கிராமங்கள்

பிபிசியிடம் பேசிய காடம்பாடியைச் சேர்ந்த கோபால்சாமி, ''சில வாரங்களாக இந்த பிரச்னை இருந்து வந்தது. ஆனால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக, இரவாகிவிட்டால் வீட்டைத் திறந்து வைக்கவே முடியவில்லை. விளக்கு போடமுடியவில்லை. உணவு, தண்ணீர் எல்லாவற்றிலும் பூச்சி விழுந்து விடுகிறது. தண்ணீரில் விழுந்தாலும் அவை இறப்பதில்லை. வழக்கமாக விளக்குக்கு வரும் பூச்சிகள் பெரிதாகப் பறக்காது. இந்தப் பூச்சிகள் பறப்பதால் அவற்றை எளிதாக அழிக்கவும் முடிவதில்லை.'' என்றார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு; அடுத்த நடவடிக்கை என்ன?

அந்த குடோன் பல ஆண்டுகளாக இருந்தாலும், அங்கு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தப் பிரச்னையுமில்லை என்று கூறும் கிராமவாசிகள், கடந்த 10 நாட்களாகத்தான் பூச்சிகள் படையெடுப்பு பெரிதாகி விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளையும் அவர்கள் விவரித்தனர்.

செங்கத்துறையைச் சேர்ந்த கோகிலா, ''கோழித் தீவனங்களில் இருந்துதான் இந்த செல்லுப்பூச்சிகள் வருகின்றன. முறையாக குடோனைப் பராமரிக்காததால்தான் பிரச்னை பெரிதாகியிருக்கிறது. மக்கள் புகார் கூறியும் மேற்பார்வையாளர் மட்டும்தான் பேசுகிறார். உரிமையாளர் தரப்பில் யாருமே பேசவில்லை. தீவனங்களை அகற்றுவதே ஒரே தீர்வு. 'நாங்கள் எல்லாரும் இரவில் தூங்கி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டன. குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் காதுகளில் பஞ்சு வைத்துக்கொண்டு தூங்க வேண்டியுள்ளது. இந்த பூச்சிகள் கடித்தால் உடலில் தடிப்பு ஏற்படுகிறது. '' என்றார்.

'அரிசி, நீர் என எங்கும் பரவின': கோவை அருகே இரவில் படையெடுத்த வண்டுகளால் தூக்கத்தை தொலைத்த 3 கிராமங்கள்
படக்குறிப்பு, செங்கத்துறையைச் சேர்ந்த கோகிலா
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசியிடம் பேசிய வேறு சில பெண்கள், ''மாலை 6 மணியாகிவிட்டால் விளக்குப்போடுவோம். ஆனால் நாங்கள் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டிற்குள் இருக்க வேண்டியுள்ளது. அரிசி மூட்டைகளில் புகுந்துவிடுவதால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. நாங்கள் எல்லோருமே அரிசி, பருப்புகளை மூட்டைகளாக விவசாயிகளிடம் வாங்கி பாதுகாப்போம். இப்போது எல்லாவற்றிலும் இந்த பூச்சிகள் கலந்துவிட்டதால் அவற்றை வெளியே கொட்ட வேண்டிய நிலையுள்ளது. அரிசி விற்கும் விலையில் இதனால் நஷ்டமும் ஏற்படுகிறது.'' என்றனர்.

குடோனில் உள்ள தீவனங்களை லாரிகளில் ஏற்றிச் செல்லும்போது, அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான பூச்சிகள் வெளியேறி பின்னால் இரு சக்கர வாகனங்களில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பறப்பதாக பலரும் தெரிவித்தனர்.

பொது மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, காடம்பாடி கிராம நிர்வாக அலுவலர், சூலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக அந்த குடோனில் உள்ள கோழித்தீவனங்கள் அனைத்தையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சூலூர் வட்டாட்சியர் செந்தில்குமார், ''அந்த குடோனில் மொத்தம் 1200 டன் அளவுக்கு கோழித்தீவனங்களான மக்காச்சோளம், கோதுமை உள்ளிட்ட தீவனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை உடனடியாக அகற்றச்சொல்லி உத்தரவிட்டுள்ளோம். தற்போது அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்று இரவுக்குள் அனைத்து தீவனங்களும் அங்கிருந்து அகற்றப்படும். அதன்பின் இந்த பூச்சித்தொல்லை வருவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம்.'' என்றார்.

இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் தரப்பை தொடர்பு கொள்ள முயன்ற போது, பதில் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் அறிவுரை!

'அரிசி, நீர் என எங்கும் பரவின': கோவை அருகே இரவில் படையெடுத்த வண்டுகளால் தூக்கத்தை தொலைத்த 3 கிராமங்கள்
படக்குறிப்பு, செங்கத்துறை கிராமத்தில் குமாரபாளையம் பிரிவிலுள்ள ஒரு தனியார் குடோனிலிருந்தே இந்த பூச்சிகள் பரவுவதைக் கண்டறிந்துள்ளனர்

வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவைத் தொடர்ந்து, அக்டோபர் 13 அன்று வரிசையாக லாரிகளில் அந்த தீவனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

காடம்பாடி கிராமத்தில் பரவிய பூச்சிகள் குறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையினரும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த பூச்சி குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை தலைவர் முருகன் மற்றும் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் விரிவாக விளக்கினர்.

''மேற்கு மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகமிருக்கும் மாவட்டங்களில் இத்தகைய புகார் இதுவரை வந்ததில்லை. இப்படியொரு புகார் வருவது இதுதான் முதல்முறை. காடம்பாடி பகுதியில் இப்படியொரு பூச்சி பரவுவது பற்றி எங்களுக்குத் தகவல் வந்தது. ஆனால் இன்னும் நேரில் அதைப் பார்க்கவில்லை. வந்துள்ள காணொளி மற்றும் புகைப்படங்களிலிருந்து பார்க்கும்போது அது தானிய வண்டு என்பது போல தெரிகிறது. பொதுவாக இதுபோன்று மக்காச்சோளம், கோதுமை போன்ற கோழித்தீவனங்களில் பலவிதமான பூச்சிகள் இருக்கும். அதில் 3 வகை பூச்சிகள் அதிகமிருக்கும்.'' என்றார் பூச்சியியல் துறைத் தலைவர் முருகன்.

இதுபற்றி மேலும் விளக்கிய பூச்சியியல் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ''வயலில் இருந்து ஈரமான நிலையிலேயே மக்காச்சோளம், கோதுமையை இந்த குடோனுக்கு கொண்டு வந்திருக்கலாம். அங்கேயே பூச்சிகள் முட்டையிடத் துவங்கிவிடும். இங்கே வந்து அவை பெருகியிருக்கும். அதனால் இந்த தீவனங்களை எங்கிருந்து எப்போது கொண்டு வந்தனர் என்பதை அறிவது அவசியம்.'' என்றார்.

''விதைக்காக வைத்துள்ள தானியங்களை வெளியே எடுத்து மருந்து தெளிக்கலாம். ஆனால் இத்தகைய கோழித்தீவனங்களில் பூச்சிகளை அழிக்க வீரியமான பூச்சி மருந்தைத் தெளிக்க முடியாது. அப்படித் தெளித்தால் கோழிகள் இறந்துவிடும். அதனால் வீரியம் குறைவான மருந்துகளை மட்டுமே பயன்படுத்த முடியும். காடம்பாடி பகுதியில் பரவும் தானிய வண்டு எது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.'' என்றார் அவர்.

''ஏற்கெனவே இந்த தீவனங்களில் முட்டைகள் அதிகளவில் இருக்கும் என்பதால் அவை 10 நாட்களில் பெரிதாகிவிடும். அதனால் வண்டுகள் உள்ள தீவனங்களைப் புதைப்பதே சிறந்தது. இதன் ஆயுட்காலம் 25 முதல் 35 நாட்கள்தான். அதில் 20 முதல் 25 நாட்கள் சுறுசுறுப்பாக இயங்கும். விளக்கு வெளிச்சத்துக்கு இவை வருவதைத் தடுக்க முடியாது. எல்இடி விளக்குகளைப் போட்டால் இவை வருவதை குறைக்க முடியும்.'' என்றார் ஸ்ரீனிவாசன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு