எரிமலை தீவில் வாழும் உலகின் மிகப்பெரிய பென்குயின் கூட்டம் ஆபத்தில் இருப்பது ஏன்?

பட மூலாதாரம், BAS
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அன்டார்டிகாவுக்கு அருகிலுள்ள எரிமலைத் தீவில் வாழும் சின்ஸ்ட்ராப் பென்குயின்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டதாக வான்வழி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய பென்குயின் கூட்டம் அமைந்திருந்த ஜாவோடோவ்ஸ்கி தீவு, தற்போது அந்தப் பெருமையை இழந்துவிட்டதாக ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2011-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் சின்ஸ்ட்ராப் பென்குயின்கள் வசித்த கூடுகளின் எண்ணிக்கை 63 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் இந்தப் பறவைகளின் உணவு விநியோகத்தையும், அவை வாழ்வதையும் பாதித்து வருவதாகவும், இதனால் பென்குயின்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்களாக அறிவிக்கப்படக்கூடும் என்றும் ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.
மேலும் மற்றொரு வகை பென்குயின்களான மக்கரோனி பென்குயின்களும் இந்தத் தீவில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றின் எண்ணிக்கை சிறப்பாக அதிகரித்து வருகிறது. அவற்றின் உணவுப் பழக்கம் பல்வேறு வகைகளைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், BAS
ஜாவோடோவ்ஸ்கி தீவு, அன்டார்டிகா கண்டத்துக்கு வடக்கே அமைந்துள்ள தொலைதூரத் தீவுக்கூட்டமான தெற்கு சாண்ட்விச் தீவுகளின் ஒரு பகுதியாகும். இந்தத் தீவுக்கூட்டம் பிரிட்டனின் பிரதேசமாக உள்ளது.
2011-ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய பென்குயின் இனப்பெருக்கக் கூட்டம் அமைந்துள்ள இடமாக பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு நிறுவனம் (பிஏஎஸ்) இந்தத் தீவைப் புகழ்ந்து குறிப்பிட்டது. அப்போது, அதன் மோசமான, பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு கொண்ட பகுதியில் சுமார் 6 லட்சம் சின்ஸ்ட்ராப் பென்குயின்களும் 90,000 மக்கரோனி பென்குயின்களும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ததாக மதிப்பிடப்பட்டது.
இந்தப் புதிய ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வு நிறுவனம் (பிஏஎஸ்), "கள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உலகிலேயே மிகவும் கடுமையான இடங்களில் இதுவும் ஒன்று" என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வு நிறுவனத்தின் (பிஏஎஸ்) ஆய்வுக் குழுவினர், இந்தத் தீவை அடைந்து அங்கு வாழும் பறவைகளை ஆய்வு செய்வதற்காக 15 நாட்கள் கடல் பயணம் மேற்கொண்டனர். டிரோன்கள், வான்வழிப் புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதுடன், 20 பறவைகளின் உடல்களில் கண்காணிப்புக் கருவிகளையும் பொருத்தினர்.
இந்த ஆய்வும் செயற்கைக்கோள் படங்களும், 2011-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சின்ஸ்ட்ராப் பென்குயின்கள் வசித்த கூடுகளின் எண்ணிக்கை 63 சதவீதம் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டின.
பென்குயின்கள் எல்லாம் எங்கே போயின?

பட மூலாதாரம், BAS
சின்ஸ்ட்ராப் பென்குயின்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள "கவலையளிக்கும்" சரிவுக்கு, உணவு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை அதிகரிப்பதும் முக்கியக் காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் நார்மன் ராட்க்ளிஃப், சின்ஸ்ட்ராப் பென்குயின்களின் "குறிப்பிட்ட வகை உணவுப் பழக்கமும்" குளிர்ந்த நீரை விரும்பும் தன்மையும் அவற்றை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக விளக்கினார்.
இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் நார்மன் ராட்க்ளிஃப் "கடல் நீர் வெப்பமடைந்து வருவதால், சின்ஸ்ட்ராப் பென்குயின்கள் உண்ணும் கிரில் உயிரினங்கள் தெற்கு நோக்கி நகர்ந்துவிட்டன.
"தெற்குப் பகுதியில் கடல் பனிப்படலம் காணப்படுவதாலும், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற தீவுகள் இல்லாததாலும், உணவைத் தேடி சின்ஸ்ட்ராப் பென்குயின்களால் அவற்றைப் பின்தொடர முடியவில்லை" என்று கூறினார்.

பசியுள்ள திமிங்கலங்களும் எரிமலைகளும்
தொலைதூரத் தீவில் ஆபத்தான நிலையில் வாழும் பென்குயின்களுக்கு வேறு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வுக் குழுவினர் ஆராய்ந்தனர்.
இங்குள்ள பறவைகள், செயல்பாட்டில் உள்ள எரிமலையான மவுன்ட் கரியின் நிழலில் கூடுகட்டி வாழ்கின்றன. இந்த எரிமலை, மவுண்ட் அஸ்பிக்சியா என்றும் அழைக்கப்படுகிறது.
எரிமலையின் பள்ளத்திலிருந்து வெளியேறும் வாயுக்களின் துர்நாற்றம் காரணமாக, காற்று வீசும் திசையில் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஸ்டெஞ்ச் பாயிண்ட், நாக்சியஸ் பிளஃப், அஸ்பிக்சியா பிளெய்ன் உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிபிசி நியூஸிடம் பேசிய ராட்க்ளிஃப், "இதனுடன் பென்குயின்களின் எச்சங்களையும் சேர்த்துக்கொண்டால், உலகிலேயே மிகவும் துர்நாற்றம் வீசும் இடங்களில் ஒன்றாக இது மாறிவிடும்".
"இது பென்குயின்களின் இருண்ட, துர்நாற்றம் வீசும், பாழடைந்த உலகம் போல இருக்கிறது" என்று கூறினார்.
மவுன்ட் கரி எரிமலையின் கடைசி பெரிய வெடிப்பு 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஆனால், இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்ட பென்குயின்களின் எண்ணிக்கை சரிவு, 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது வேறு ஏதோ மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
சின்ஸ்ட்ராப் பென்குயின்கள் நம்பியிருக்கும் கிரில் உயிரினங்களுக்கான போட்டியும் மற்றொரு கவலையாக இருந்தது. இடம்பெயரும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் இந்தப் போட்டிக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இருப்பினும், ஹம்ப்பேக் திமிங்கலங்கள் அதிக அளவிலான கிரில் உயிரினங்களை உணவாக உட்கொண்டாலும், அவை வெளியேற்றும் அதிக அளவிலான கழிவுகள், கிரில் உயிரினங்கள் உணவாக உட்கொள்ளும் கடல்வாழ் தாவரங்களுக்கு உரமாகச் செயல்படுகின்றன. இதன் மூலம் கிரில் உற்பத்தியும் அதிகரிக்கிறது.
கடல் உணவுச் சங்கிலியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அடிப்படையான மாற்றமே இதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், BAS
இந்தச் செய்தியில் எதிர்பாராத மற்றொரு அம்சமும் உள்ளது. இந்தப் பிராந்தியம் எவ்வாறு, ஏன் மாறி வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. சின்ஸ்ட்ராப் பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தீவில் மக்கரோனி பென்குயின்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
மக்கரோனி பென்குயின்கள், பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்ளும் திறனும், உணவுப் பழக்கத்தில் நெகிழ்வுத்தன்மையும் கொண்டிருப்பதால், அவை சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு எளிதில் தகவமைத்துக்கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்ட கண்காணிப்புத் தரவுகளின்படி, மக்கரோனி பென்குயின்கள் தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வெப்பமான கடல் நீரில் உணவு தேடிச் சென்றுள்ளன. அங்கு அவை மீன்கள் மற்றும் பிற உயிரினங்களையும் உணவாக உட்கொண்டு தங்களது உணவுப் பழக்கத்தை விரிவுபடுத்தியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த மாற்றம் குறித்து ராட்க்ளிஃப் கூறுகையில், "அன்டார்டிகாவில் ஒரே இடத்தில் காணப்பட்ட உயிரினக் கூட்டமைப்பில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இதுவாகும்" என்றார்.

பட மூலாதாரம், BAS
"குளிர்ச்சியான சூழலுக்கு ஏற்றவாறு தகவமைந்துள்ள அன்டார்டிக் சின்ஸ்ட்ராப் பென்குயின்கள், அன்டார்டிகாவுக்கு அருகிலுள்ள துணை அன்டார்டிக் பகுதிகளில் வாழும் தங்களது அண்டை இனங்களுடன் இணைந்து இனி செழித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை எங்களது தரவுகள் காட்டுகின்றன," என்றும் ராட்க்ளிஃப் கூறினார்.
மேலும், "அன்டார்டிகாவில் வேகமாக அதிகரித்து வரும் வெப்பநிலை, தனித்துவமான மற்றும் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது மேலும் ஓர் ஆதாரமாகும்," என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய பென்குயின் கூட்டம் என்ற பெருமை, தற்போது 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில், அன்டார்டிகா கண்டத்தின் மறுபுறத்தில் உள்ள ராஸ் கடல் பகுதியில் அமைந்துள்ள கேப் அடேர் என்ற இடத்துக்குச் சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வு கரண்ட் பயாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































