'ஆடையை இழுத்தனர், பிறப்புறுப்பு பகுதியில் உதைத்தனர்' - டெல்லி போலீஸ் மீது போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

- எழுதியவர், சுமேதா பால்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள சில விவரங்களும் படங்களும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.)
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின்போது காவலில் எடுக்கப்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் செயற்பாட்டாளர்கள், தங்களை காவல்துறையினர் தாக்கியதாகவும், தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அச்சுறுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சில போராட்டக்காரர்கள் தங்கள் உடலில் ஏற்பட்ட காயங்களையும் காட்டினர். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். பிபிசி ஹிந்தி, இத்தகைய சில மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் பேசியது.
இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் கருத்தையும் அறிய பிபிசி முயன்றது. இந்தச் செய்தி எழுதப்படும் வரை காவல்துறையிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
சரண்யா, டெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் முதுநிலை மாணவி. மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். அக்டோபர் 11ஆம் தேதி போராட்டத்தில் பங்கேற்ற அவர், காவலில் வைக்கப்பட்டபோது நேர்ந்த அனுபவங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.
சரண்யாவின் கூற்றுப்படி, காவல்துறையினர் அவரை தள்ளியபடி பேருந்தில் ஏற்றினர். அப்போது அவரது கால் பேருந்தின் கதவுக்குள் சிக்கியது. மேலும், பெண் காவலர்கள் தனது ஆடைகளை மேலே இழுத்ததாகவும், ஆண் கமாண்டோ வீரர்கள் தன்னைப் பேருந்துக்குள் தள்ள முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பேருந்தில் வெளிச்சமோ போதுமான காற்றோ இல்லை என்றார் அவர். காவலர்கள் தனது தலைமுடியையும் இழுத்ததாக அவர் தெரிவித்தார்.
போராட்டம் நடந்த நாளன்று காலை சுமார் 11 மணியளவில் சரண்யா காவலில் எடுக்கப்பட்டார். அவரை நாங்லோய் பகுதியிலுள்ள ஓர் இடத்தில் தங்க வைத்ததாகவும், நள்ளிரவுக்குப் பிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதித்ததாகவும் அவர் கூறினார். அங்கு உணவு, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை என்றும் சரண்யா குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
'காவலில் வைப்பதன் நோக்கம் அச்சத்தை ஏற்படுத்துவதுதான்'
டெல்லி இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவரும் வளர்ச்சி ஆய்வுகள் துறையில் பயிலும் மாணவியுமான நாடியா, அக்டோபர் 10ஆம் தேதி காவலில் எடுக்கப்பட்டார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
நாங்கள் நாடியாவை சந்தித்தபோது அவரது உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் இருந்தன. இருப்பினும், அக்டோபர் 12ஆம் தேதி இந்தியா கூட்டணியின் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். காவலில் இருந்தபோது பெண் காவலர்கள் தனது தலைமுடியைப் பிடித்து இழுத்ததாகவும், கிள்ளிக் காயப்படுத்தியதாகவும் நாடியா குற்றம் சாட்டினார். மேலும், காவல்துறையினர் தனது கைப்பேசியைப் பறிக்க முயன்றதாகவும், அதைத் தடுத்தபோது தன்னைத் தாக்கியதாகவும் கூறினார்.
அப்போது தனது கழுத்தை நெரிக்கவும் அவர்கள் முயன்றதாக குற்றம் சாட்டிய நாடியா, இந்த அனுபவம் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். இருப்பினும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறுகிறார் அவர். இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதுதான் காவலில் வைப்பதன் நோக்கம் என்று நாடியா கருதுகிறார். பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படும் வரை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான நடைமுறையைச் சந்தேகிப்பதும் கேள்வி எழுப்புவதும், பெரிய அளவிலான ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு பகுதி என்பது நாடியாவின் கருத்து.
'மூன்று மணிநேரம் பேருந்தில் வைத்து அடித்தனர்'
டெல்லியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் நோயல், அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பகத் சிங்கின் போஸ்டருடன் பங்கேற்றார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், அவரை காவலில் எடுக்கும்போது காவல்துறையினர் அந்த போஸ்டரை எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.

பட மூலாதாரம், Arjun
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி பவனுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆரஞ்சு நிற டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்தில் தன்னை ஏற்றியதாக நோயல் தெரிவித்தார். "சுமார் மூன்று மணிநேரம் அந்தப் பேருந்தில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் காவல்துறையினர் தன்னை மீண்டும் மீண்டும் அறைந்ததாகவும்" அவர் கூறினார். "பேருந்தில் தான் மட்டுமே இருந்ததாகவும், தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்ததாகவும்" அவர் தெரிவித்தார்.
தான் ஓர் ஆசிரியர் என்றும், தனது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் காவல்துறையினரிடம் கூறியதாகத் தெரிவித்த நோயல், "இருந்தும்கூட, தன்னைத் தாக்குவது தொடர்ந்ததாக" குற்றம் சாட்டினார். சுமார் மூன்று மணிநேரத்துக்குப் பிறகு தான் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அர்ஜுன் அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது காவலில் எடுக்கப்பட்டார். முதலில் தன்னை டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏற்றியதாகவும், பின்னர் டெல்லிக்கு வெளியே இருந்த ஒரு தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
காவல்துறையினர் தனது மார்பிலும் பிறப்புறுப்புப் பகுதியிலும் உதைத்ததுடன், மீண்டும் மீண்டும் குத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அப்போது தனது ஆடைகள் கிழிந்துவிட்டதாகவும் அவர் கூறினார். அந்தப் பேருந்தில் சிறார்கள் சிலரும் இருந்ததாகக் கூறிய அர்ஜுன், "அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், சிலருக்கு எலும்பு முறிவுகூட ஏற்பட்டதாகவும்" தெரிவித்தார். உடலில் வெளிப்படையாகக் காயத் தடங்கள் தெரியாத வகையில் சிலரை காவல்துறையினர் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இவர்களில் பலர் காணொளிகளைக் காட்டியுள்ளனர். இருப்பினும், இந்த நான்கு போராட்டக்காரர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுகளைச் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images
போராட்டத்தைச் செய்தியாக்கிய பத்திரிகையாளர்களும் காவலில் வைக்கப்பட்டனர்
அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் போராட்டத்தைச் செய்தியாகச் சேகரித்த பத்திரிகையாளர்களும் காவலில் எடுக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவான கமிட்டி டு புரொடெக்ட் ஜர்னலிஸ்ட்ஸ் அமைப்பின் (சிபிஜே) தகவல்படி, அந்த இரண்டு நாட்களில் டெல்லி, ஆமதாபாத், புனே ஆகிய நகரங்களில் குறைந்தது 37 பத்திரிகையாளர்கள் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களில் குறைந்தது 35 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள்.
அக்டோபர் 10ஆம் தேதி காவலில் எடுக்கப்பட்டவர்களில் ஸ்க்ரோல் இணையதளத்தின் ஷோயப் டேனியல், ஆயுஷ் திவாரி, பிசினஸ் ஸ்டாண்டர்டின் அனுஷ்கா பரத்வாஜ், நியூஸ் லாண்ட்ரியின் அஷ்வினி குமார் சிங், ஆஸ்தா சவ்யசாசி, அன்மோல் ப்ரீதம் ஆகியோர் அடங்குவர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தங்களது பத்திரிகையாளர்களின் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக நியூஸ்லாண்ட்ரி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 11ஆம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஹிந்தி பிரிவின் பத்திரிகையாளர்களான சாஷ்வத், சியா, விஜய் குமார் ஆகியோரும் காவலில் எடுக்கப்பட்டதாக சிபிஜே தெரிவித்துள்ளது. தங்களது பத்திரிகையாளர் அடையாள அட்டைகளைக் காவல்துறையினரிடம் காட்டியபோதும், தங்களைப் பேருந்தில் ஏற்றியதாகவும், சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு சத்ரசால் விளையாட்டரங்கம் அருகே இறக்கிவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளோம். ஆனால், இந்தச் செய்தி எழுதப்படும் வரை காவல்துறையிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Elke Scholiers/Getty Images
போராட்டம் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
இந்தப் போராட்டங்கள் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கின. அக்டோபர் 10ஆம் தேதி காக்ரோச் ஜனதா கட்சி விடுத்த அழைப்புக்குப் பிறகு அவை அதிக கவனம் பெற்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் கமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறைக்குப் பொறுப்புக் கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.
அக்டோபர் 10ஆம் தேதி புதுடெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சிக்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. புதுடெல்லி பகுதியில் பிஎன்எஸ்எஸ் 163வது பிரிவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பையும் சட்டம்-ஒழுங்கையும் பராமரிக்கத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் இணை ஆணையர் நுபுர் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
போராட்டத்துக்கு முன்பாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டிருந்தன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, அக்டோபர் 8 முதல் 12ஆம் தேதி வரை டெல்லி காவல்துறைக்கு உதவ மத்திய ஆயுதக் காவல் படைகளின் 221 கம்பெனிகள், அதாவது சுமார் 23,000 வீரர்கள் வழங்கப்பட்டிருந்தனர். இதுதவிர, டெல்லி காவல்துறையைச் சேர்ந்த குறைந்தது 15,000 காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாக சிபிஜே அறிக்கை தெரிவிக்கிறது.
காவலில் எடுக்கப்பட்டவர்கள் நாங்லோய், பவானா, முண்ட்கா, புராரி, நரேலா போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சில பத்திரிகையாளர்களும் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெகு தொலைவிலுள்ள தடுப்புக் காவல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிபிஜே தெரிவித்துள்ளது. இதனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது அவர்களது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் கடினமாக இருந்தது.

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
இதற்கிடையில், அக்டோபர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம், அமைதியான முறையில் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபடுவோரை சட்டவிரோதமாகக் காவலில் எடுக்க முடியாது என்று தெரிவித்தது.
மேலும், காவலில் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்றும் கூறியது.
டெல்லியில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காவலில் எடுக்கப்பட்டவர்களில் சிலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களில் இருந்து மீள முயன்று வருகின்றனர். அதே நேரத்தில், பலர் மீண்டும் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
போராட்டக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும் காவலில் வைத்தபோது காவல்துறையினர் அத்துமீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறையின் கருத்தை அறிய தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டுள்ளோம். ஆயினும், இந்தச் செய்தி எழுதப்படும் வரை காவல்துறையிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































