'ரஜினி' எனும் பிராண்ட் 50 ஆண்டுகளை கடந்தும் நிலைத்திருப்பது எப்படி?

ரஜினிகாந்த், கோலிவுட், ஜெயிலர் 2, திரைப்படங்கள்
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திரைப்படங்களில் அறிமுகமாகி 50 வருடங்களைக் கடந்தும், ஒரு 'சோலோ ஹீரோவாக' நீடிக்கிறார் 75 வயதான நடிகர் ரஜினிகாந்த்.

அவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், பெரும் பட்ஜெட்டில், முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு வெளியாகிறது. அவரது முந்தைய திரைப்படமான 'கூலி' பெற்ற கலவையான விமர்சனங்கள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை பெரிதாக பாதிக்கவில்லை.

இன்றும் பல புதிய இயக்குநர்கள் நேர்காணல்களில் 'சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு என்னிடம் கதை உள்ளது' எனக் கூறுகிறார்கள். ஆனால், அது 'தந்தை' கதாபாத்திரமோ அல்லது வேறு முக்கிய துணைக் கதாபாத்திரமாக அல்லாமல் 'நாயகனாகவே' அவரை முன்னிறுத்துகிறார்கள்.

பல இளம் நடிகர்கள் தான் 'ரஜினி ரசிகன்' என திரையில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பல பிற மொழி திரைப்படங்களின் 'தமிழ்நாடு' தொடர்பான சித்தரிப்புகளில் ஏதேனும் ஒரு 'ஃபிரேம்'-இல் ரஜினியின் போஸ்டர் அல்லது புகைப்படம் இடம்பெறுகிறது.

ஃபோர்ப்ஸ்-இந்தியா இதழ் ரஜினி குறித்த ஒரு கட்டுரையில் (2013), "திரைப்படங்களுக்கு ஒரு ஆயுட்காலம் உண்டு, ஆனால் அவற்றின் நட்சத்திரங்களுக்கு இல்லை- அவர்கள் பிராண்டுகளாக மாறிவிடுகிறார்கள். ரஜினியின் ரசிகர்கள் திரைப்படங்களைப் பார்க்கச் செல்வதில்லை. அவர்கள் அவரை திரையில் பார்க்கதான் செல்கிறார்கள்" என்று குறிப்பிட்டது.

'ரஜினி' எனும் பிராண்ட்

ரஜினிகாந்த், கோலிவுட், ஜெயிலர் 2, திரைப்படங்கள்
படக்குறிப்பு, 'கிராண்ட் பிராண்ட் ரஜினி: பிராண்ட் மேனேஜ்மேன்ட் தி ரஜினிகாந்த் வே' புத்தகம்

"சில திரைப்படங்களை ரஜினி மனம் விட்டு பாராட்டுவார், இதேபோன்ற கதைகளில் நடிக்க ஆசையாக உள்ளது எனச் சொல்வார். ஆனால், தனது ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதை மட்டுமே கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பார். அதனால் தான், 'ரஜினி' எனும் பிராண்ட் இன்றும் நிலைத்து நிற்கிறது" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா.

இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"தன்னுடைய பலம், பலவீனங்களை நன்கு அறிந்துள்ள ரஜினி, அது திரையில் எப்படி வெளிப்படுகிறது என்பதில் எப்போதும் கவனமாக உள்ளார். உதாரணத்திற்கு முதல் திரைப்படம் தொடங்கி, இப்போது வரை மாறாமல் இருக்கும் அவரது ஸ்டைல்" என்கிறார் அவர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ரஜினி திரையில் பேசும் பன்ச் வசனங்கள், 'அண்ணாமலை', 'உழைப்பாளி', 'வீரா', 'முத்து' என சாமானியரை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், பொதுவெளிகளில் அவரிடம் காணப்படும் எளிமையான அணுகுமுறை, போன்றவற்றின் மூலம் திரைப்படங்களைக் கடந்து பலதரப்பு மக்களை ரஜினி ஈர்த்துள்ளதாகவும், அதுவே அவரது 'பிராண்டிற்கு' வலுசேர்ப்பதாகவும் 'அ பேர்ட்ஸ் ஐ வியூ ஆஃப் பிராண்ட் ரஜினிகாந்த்' ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

"அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமிர் மற்றும் சல்மான் போன்ற இந்திய சூப்பர் ஸ்டார்கள் பல விளம்பர பிராண்டுகளை ஆதரிக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் அவ்வாறு வர்த்தக பிராண்டுகளை பொதுவெளியில் ஆதரிப்பதில்லை" என அக்கட்டுரை கூறுகிறது.

அதேசமயம், "'ரஜினி' எனும் பிம்பம் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது, உதாரணத்திற்கு 'டோஹாடோ' என்ற ஜப்பானிய உணவு நிறுவனம், ஜப்பானில் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்த, அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தியது".

'முத்து' (1995) திரைப்படத்தின் மொழிமாற்று பதிப்பின் மூலம் ரஜினிகாந்த் ஜப்பான் நாட்டிலும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக ரீதியான வெற்றிகள்

ரஜினிகாந்த், கோலிவுட், ஜெயிலர் 2, திரைப்படங்கள்

'ஜெயிலர்' (2023) திரைப்படத்தின் கதை, ரஜினியின் 'பாட்ஷா' திரைப்படத்தின் தாக்கத்தில் உருவான ஒன்று தான். ஓய்வு பெற்ற ஜெயிலர் ஒருவர், தனது மகனைக் கொன்றவர்களை பழிவாங்க, அமைதியான குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து வன்முறையை கையில் எடுக்கிறார். அவர் யார், இதற்கு முன் அவர் செய்த சாகசங்கள் என்ன என்பது பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் பிற கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படுகிறது.

மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், ஜாக்கி ஷெராஃப் என பிரபல பிற மொழி நட்சத்திரங்கள் 'ரஜினிக்காகவே' அத்திரைப்படத்தில் நடித்ததாகக் குறிப்பிட்டனர்.

ரஜினி பேசும் ஒரு பன்ச் வசனத்தைக் கொண்டு ஒரு பாடல் உருவாக்கப்பட்டு, ஜெயிலர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.

'கலைப்படைப்பு', 'சிறந்த கதை, திரைக்கதை', 'சமூகத்திற்கான நல்ல மெசேஜ்' என்பதைக் கடந்து ஒரு நடிகரின் திரைப்படம் வணிக ரீதியில் பெறும் வெற்றி என்பதே அத்திரைப்படத்திற்கான ஒரு வகையான அங்கீகாரமாக உள்ளது.

அப்படிப் பார்க்கும்போது, 'ஜெயிலர்' திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதன் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டது.

இந்திய திரைத்துறையின் இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களின் வணிக வெற்றிகளோடு ஒப்பிடும்போது, இது குறிப்பிடத்தக்க ஒன்று தான்.

அதேசமயம், 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் அனைத்து திரைப்படங்களும் வணிக ரீதியில் பெரு வெற்றி அடைவதில்லை. மிகச் சிறந்த உதாரணம் 2002இல் வெளியான 'பாபா'.

ரஜினி திரைக்கதை எழுதி, தயாரித்த 'பாபா' தோல்வியடைந்தபோதும், அவரது அடுத்த திரைப்படமான 'சந்திரமுகி'-இன் மாபெரும் வெற்றியை அத்தோல்வி எந்தவகையிலும் பாதிக்கவில்லை.

"சந்திரமுகி திரைப்படத்தில் இடைவேளைக்கு முந்தைய பல காட்சிகள் ரஜினி இன்றியே நகரும். திரைக்கதையில் ஜோதிகாவிற்கு முக்கியத்துவம் இருந்தும், அதில் ரஜினி நடித்ததற்கு அவரது 'பிராண்ட்' மீதிருக்கும் நம்பிக்கை ஒரு முக்கிய காரணம்" என்கிறார் ஜா.தீபா.

'பலவீனங்களை அறிந்தவர்'

ரஜினிகாந்த், கோலிவுட், ஜெயிலர் 2, திரைப்படங்கள்

நடிகர் ரஜினி தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்தில் பல 'வில்லன்' கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'பதினாறு வயதினிலே', 'மூன்று முடிச்சு', 'காயத்ரி', 'அவர்கள்' என ஒரு 'பிராண்ட்'-ஆக தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கும் ஒரு நடிகர் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரங்கள் அவை.

"ரஜினி திரையில் ஒரு ரசிக்கத்தக்க வில்லனாக உருவெடுத்தார், அவர் நடித்த எதிர்மறை கதாபாத்திரங்கள் அவருக்கு பெரும் நேர்மறையான பலன்களைத் தந்தன. ஒரு வில்லனாக அவர் திரைப்படத்தில் தோன்றிய ஒவ்வொரு முறையும் அவர்தான் அதிக கைதட்டல்களைப் பெற்றார் - இது, தென்னிந்திய திரையுலகிற்குப் புதிய ஒரு நிகழ்வாகும்" என 'கிராண்ட் பிராண்ட் ரஜினி: பிராண்ட் மேனேஜ்மேன்ட் தி ரஜினிகாந்த் வே' புத்தகம் குறிப்பிடுகிறது.

இதைத் தான் தனது 'பலவீனங்களை அறிந்தவர்' ரஜினி எனக் குறிப்பிடுகிறார் ஜா.தீபா.

"ரஜினி அறிமுகமான காலகட்டத்தில் உடனடியாக ஒரு 'கறுப்பு தோல்' நடிகரை திரையுலகம் எளிதாக கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளாது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே தனக்கு கிடைத்த வில்லன் கதாபாத்திரங்களை தனித்துவமாக செய்தார். அதை வேறு ஒரு நடிகர் நிரப்புவது கடினம் என மக்கள் யோசிக்கும் வகையில் அதில் நடித்தார்" என்கிறார் அவர்.

80கள் மற்றும் 90களில் பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகனாக அல்லது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் ரஜினி. குறிப்பாக, அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களில்.

"அவர் பாலிவுட்டில் நட்புக்காக பல திரைப்படங்களில் நடித்தார். அது அவருக்கு அங்கு ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. அதேசமயம், அங்கு அவர் முன்னணி கதாநாயகனாக மாற முயற்சி எடுக்கவில்லை. பாலிவுட்டில் நிலவிய 'அழகியல்' குறித்த விதிகளை அவர் புரிந்து வைத்திருந்தார். ஆனால், அவர் நடித்த பாலிவுட் திரைப்படங்கள் அவரை 90களிலேயே 'பான் இந்தியன்' நட்சத்திரமாக மாற்றியது. அவரது தமிழ் திரைப்படங்கள் அங்கு கவனம் பெற இது உதவியது" என்கிறார் ஜா.தீபா.

"தனது திரைவாழ்க்கையின் தொடக்கம் மற்றும் உச்சத்தில் எதையெல்லாம் மிகக் கவனமாக ரஜினி கையாண்டாரோ, பிற்காலத்தில் அவருக்கான கதைகள் உருவாகும்போது, இயக்குநர்களும் அந்த அம்சங்களை கையாளத் தொடங்கிவிட்டனர்." என்று ஜா.தீபா குறிப்பிடுகிறார்.

தயாரிப்பாளர்களிடையே உள்ள ஆதரவு

ரஜினிகாந்த், கோலிவுட், ஜெயிலர் 2, திரைப்படங்கள்

கடந்த சில வருடங்களில், 'தர்பார்', 'அண்ணாத்தே', 'லால் சலாம்', 'வேட்டையன்' போன்ற ரஜினி நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும், ரஜினி தொடர்ந்து 'ஜெயிலர்', 'கூலி', 'ஜெயிலர் 2' போன்ற பிரமாண்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

"இப்போதும் ரஜினியின் திரைப்படத்தைத் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். அவராக வேண்டாம் என்று சொல்லும்வரை, அவரது 'சூப்பர் ஸ்டார்' பிம்பம் அல்லது 'பிராண்ட்' காரணமாக அவரது திரைப்படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படும்" என்கிறார் திரைப்பட தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.

"ஜெயிலர் அல்லது ஜெயிலர் 2 ஆகிய இரு திரைப்படங்களும் ரஜினி என்ற பிராண்டை முன்னிறுத்தியே உருவாகியுள்ளன" என்று குறிப்பிடும் தனஞ்செயன், "படத்தின் தொடக்க நாள் வசூல் மற்றும் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் கணிப்புகள் அனைத்தும் ரஜினியின் பிரபலத்தையும் அவரது பிராண்ட் மதிப்பையும் அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பையும் வசூல் கணிப்புகளையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அவர் இருக்கிறார்" என்கிறார்.

"ஜெயிலர் 2, முதல் பாகமான ஜெயிலர் படத்தின் வசூல் சாதனைகளை நிச்சயம் முறியடிக்கும்" எனக் கூறுகிறார் அவர்.

ரஜினிகாந்த், கோலிவுட், ஜெயிலர் 2, திரைப்படங்கள்
படக்குறிப்பு, நடிகர் ரஜினியுடன் திரைப்பட தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.

'கூலி' திரைப்படத்தின் நிகழ்வில், "எனக்கு வயதாகிவிட்டது, 1950களின் மாடல் வண்டி இது. பல லட்சம் கிலோமீட்டர்கள் ஓடிவிட்டது, எனவே என்னை அதிகமாக வேலை வாங்கி விடாதீர்கள், கவனமாக கையாளுங்கள் என திரைப்படக் குழுவிடம் கூறினேன்" என ரஜினி பேசியிருப்பார்.

ஒரு நட்சத்திரம் என்ற நிலையில் இருந்து அல்லாமல், திரைப்படங்களிலும், அதைக் கடந்து மேடை நிகழ்வுகளிலும் சாமானியனுக்கு நெருக்கமாக இருக்கும் அவரது ஆளுமை தான் ரஜினி என்ற 'பிராண்டின்' நீட்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

'கிராண்ட் பிராண்ட் ரஜினி' புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது, "'இவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்', 'ஸ்டைல் கிங்' என ரஜினி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், 'ரஜினி' என்ற பிராண்ட் உருவாகியிருக்காது. ஒரு 'பிராண்ட்', தன்னால் என்ன செய்ய முடியும், முடியாது என்பதை தெளிவாக உணர வேண்டும். ரஜினி அதை உணர்ந்துள்ளார்".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு