கேரளாவை உலுக்கிய மினி கூப்பர் விபத்து - 3 பேர் உயிரிழப்பு, எழும் சர்ச்சைகள்

கேரளத்தில் கொச்சி சர்வதேச விமான நிலைய சாலையில் 19 வயது இளைஞர் மதுபோதையில் மினி கூப்பர் காரை அதிவேகமாக இயக்கி ஸ்கூட்டர் மீது மோதியதில் 2 இளம்பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்தினர் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாகவும், தன் மகளின் மீது அவதூறு பரப்புவதாகவும் இறந்து போன பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
இந்த விபத்து வழக்கிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தப்பிக்க வைப்பதற்கு அரசியல் அழுத்தம் தரப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உறுதி கூறியுள்ளார்.
இந்த வழக்கு கேரளத்தில் பொதுமக்களிடமும், அரசியல்ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹரிதா பிபிசியிடம் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும், நீதிமன்ற உத்தரவின்படியே கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிபிசியிடம் கூறிய கேரள தெற்கு மண்டல ஐஜி நிஷாந்தினி, இவ்வழக்கு முறைப்படி நடந்து வருவது பற்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விளக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
3 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலையில், கடந்த அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவு கடந்த நேரத்தில் நடந்த ஒரு விபத்தில், ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடும்பச்சேரி காவல் நிலையம் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, கொச்சி விமான நிலையச் சாலையில் மூழியல் என்ற இடத்தில் அதிவேகமாகச் சென்ற மினி கூப்பர் கார், ஸ்கூட்டர் மீது மோதி 100 மீட்டர் இழுத்துச் சென்றுள்ளது.
அதில் ஸ்கூட்டரில் சென்ற கர்நாடகா மாநிலம் கூர்க்கை சேர்ந்த இஜாஸ், பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டை சேர்ந்த கோபிகா, வயநாட்டைச் சேர்ந்த தேவிகா ஆகிய 3 பேரும் அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மூவரும் 20–30 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனையாளர்களாகப் பணியாற்றியுள்ளனர் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து நடந்த சிறிது நேரத்தில், காலை 6:59 மணிக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், வாகனத்தை ஓட்டியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், கொலைக்குச் சமமான குற்றமாகக் கருதப்படாத குற்றமற்ற கொலை என்ற பிரிவின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னர், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, வேகமாகவும் முறையற்ற வகையிலும் வாகனம் ஓட்டியது, குற்றம் செய்யத் தூண்டியது, பலர் சேர்ந்து குற்றத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்பட்டன.
ஆய்வக அறிக்கையின்படி, சஜீவின் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான ஆல்கஹால் இருந்ததும் கண்டறியப்பட்டது என்றும் இதையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது என்றும் காவல்துறை கூறியுள்ளது.
காவல்துறையினர் பகிர்ந்துள்ள தகவலின்படி, விபத்தை ஏற்படுத்திய மினி கூப்பர் காரை இயக்கியவர், காக்கநாடு பகுதியைச் சேர்ந்த சுஹைல் சஜீவ் என்ற 19 வயது இளைஞர். இவர் காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அவருடன் அமீர் (வயது 20), ஜோயல் (வயது 20) மற்றும் நினவ் ( வயது 19) ஆகிய 3 பேரும் காரில் பயணம் செய்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பின்பு, இவர்கள் அனைவரும் தப்பிக்க முயன்று, சுற்றிலும் இருந்த பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக கேரள ஊடகங்களில் பலரும் தகவல் பகிர்ந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து கேரள காட்சி ஊடகங்களிடம் பேசியிருந்த மக்கள் பலர், ''அவர்கள் 4 பேரும் போதையில் இருந்தனர். கார் ஓட்டிய இளைஞரைப் பிடித்தபோது, அவர் எங்களுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். என்ன நடந்தாலும் தன் தந்தை பார்த்துக்கொள்வார் என்று கூறினார்'' என்று தெரிவித்திருந்தனர்.
காரை ஓட்டிய சுஹைலின் பெற்றோர், ஜவுளித்தொழில் செய்து வருவதாகவும், அவருடைய தந்தை பெயரில்தான் மினி கூப்பர் கார் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குப்பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 பேரும், அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.
அப்போது நீதிமன்றத்தில் காவல்துறை பதிவு செய்த அறிக்கையில், ''சுஹைல் சஜீவும், அவரது நண்பர் நினாவும் அக்டோபர் 10 சனிக்கிழமை மாலையிலிருந்து கொச்சியில் உள்ள பல மதுக்கூடங்களுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வாக்கில், நெடும்பசேரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்த மதுக்கூடத்தில் தங்கள் நண்பர்களான அமீர் மற்றும் ஜோயல் ஆகியோரைச் சந்தித்து, பின்பு அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்'' என்று கூறியிருந்தனர்.

வைரலாக பரவி வரும் காணொளி!
இந்த விபத்துக்குப் பின்பு, சுஹைல் சஜீவ் தாயார், தன்னுடைய இளைய மகனான சுஹைலுக்கு பிறந்தநாள் பரிசாக இந்த மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
கொச்சி மற்றும் ஆலப்புழாவில் பிரபலமான நிறுவனத்தை நடத்தி வரும் சஜீவின் தாயார், தன்னுடைய முகநூல் பதிவில் அந்த காணொளியை வெளியிட்டிருந்துள்ளார்.
அதேபோன்று சஜீவ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலும் சில காணொளிகளை பகிர்ந்திருந்ததாகவும், அதில் மினி கூப்பர் காரை மிக வேகமாக இயக்கியதை வெளியிட்டிருந்ததாகவும் கேரள ஊடகங்கள் கூறியுள்ளன.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ''சஜீவ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியில் 11.8 வது நொடியில் கார் 204 கி.மீ. வேகத்தைக் கடந்து உச்சபட்சமாக 220 கி.மீ. வேகத்தைத் தொடுகிறது.'' என்று கூறியுள்ளது.
ஆனால் இப்போது சுஹைல் சஜீவின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. சஜீவின் தாயார் வெளியிட்ட காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. சஜீவ் இன்ஸ்டாகிராமில் இருந்த காணொளிகள் பற்றியும் தெரியவில்லை.

கைது செய்யப்பட்ட 4 பேரும் கேரள சிறார் குற்றச் சட்டப்படி (The Kerala Borstal Schools Act) கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனால் கொடூரமான முறையில் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய அவர்களை வழக்கமான சிறைக்கு அனுப்பாதது ஏன் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த கோபிகாவின் பெற்றோர், அக்டோபர் 12 அன்று பாலக்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய கோபிகாவின் தந்தை பிரதீப் குமார், ''இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்த ஒருவரை சிறார் இல்லத்திற்கு அனுப்பியது, வழக்கை அடியோடு திசைதிருப்புவதற்காகத்தான் என சந்தேகிக்கிறோம். காவல்துறையின் விசாரணையில் ஆரம்பத்திலிருந்தே கடுமையான குளறுபடிகள் உள்ளன. அவர்களுக்கு மேலிடத்திலிருந்து கடுமையான அரசியல் அழுத்தம் இருப்பதாகத் தெரிகிறது. '' என்றார்.
மேலும் பேசிய அவர், ''விபத்து நடந்த உடனேயே 'என்ன நடந்தாலும் என் தந்தை பார்த்துக் கொள்வார்' என்று குற்றவாளி பேசியதிலிருந்தே அவரது செல்வாக்கு புரிகிறது. முதல் தகவல் அறிக்கையில் அவர் மது அருந்தியிருந்த விவரம் ஆரம்பத்தில் மறைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியைக் காப்பாற்ற பல முக்கிய புள்ளிகள் தலையிட்டுள்ளனர்." என்று குற்றம்சாட்டினார்.
''சில அரசியல் தலைவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது வீண்பழி சுமத்துகின்றனர். சமூக வலைதளங்களிலும் மகளைப் பற்றியும் எங்களைப் பற்றியும் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. ஒரு தேநீர் கூட கடையில் குடிக்காமல் பணம் சேமித்து வைத்து என் மகளைப் படிக்க வைத்தேன்.'' என்றார் பிரதீப் குமார்.
சமூகப்பொறுப்பை உணராத சிறுவயதினருக்கு கார் வாங்கிக் கொடுத்ததால் ஏற்பட்ட விபத்தில்தான் தன் மகள் பலியாகிவிட்டதாக அவருடைய தாயார் சஜிதா கூறினார்.

சிபிஎம் குற்றச்சாட்டு!
கோபிகா, அவர் படித்த கல்லூரியில் துணைத்தலைவராக இருந்ததாகவும், என்எஸ்எஸ் அமைப்பிலும் தீவிரமாக சேவைப்பணிகள் செய்திருப்பதாகவும் கூறிய பெற்றோர், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் எடுப்பதில் கோபிகா தீவிரமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய முன்னாள் கேரள அமைச்சர் ராஜீவ், ''சம்பவம் நடந்து பல மணி நேரம் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. குற்றவாளி சாலையில் நிற்கவே முடியாமல் போதையில் இருந்துள்ளார். ஆனால் எப்ஃஐஆரில் குற்றவாளியின் பெயர் இல்லை. அரசியல் தொடர்பில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. அவர்களை சிறைக்கு அனுப்பும் அளவுக்கு முதல் தகவல் அறிக்கையில் போதிய தகவல்கள் இல்லை. இதை உள்துறை அமைச்சர் கவனிப்பது அவசியம்.'' என்று கூறியிருந்தார்.
ஆனால் செல்வாக்கை வைத்து வழக்கை திசை திருப்பும் எந்த முயற்சியையும் அனுமதிக்கமாட்டோம் என்று கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சென்னிதலா, ''இவ்வளவு கொடுமையான விபத்தை ஏற்படுத்தி, 3 பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த சஜீவிற்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். இதில் குற்றவாளிகள் யாருமே தப்பிக்க முடியாது.'' என்று கூறியுள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் இந்த விபத்து தொடர்பாக உறுப்பினர் சி.வி.சாந்தகுமார் எழுப்பிய கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்துப்பேசிய கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.ஜான், ''இது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடந்து வருகிறது. தற்செயலாக நிகழும் விபத்துகளைப் போல, இதனை அலட்சியத்தால் ஏற்படும் சிறிய குற்றமாகக் கருதமுடியாது. போதைக்கு அடிமையாகி, தெரிந்தே வாகனம் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்துவோரின் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கும் அவர்களைச் சிறையில் அடைப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் முறையாகச் செயல்படுத்தப்படும்.'' என்று கூறியுள்ளார்.
மாநிலத்தில் வாகன விபத்துகளைப் பெருமளவில் குறைக்கும் நோக்கில், முதல்வரை தலைவராகவும் போக்குவரத்துத்துறை அமைச்சரை இணைத் தலைவராகவும் செயல்படும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறிய அமைச்சர், ''உள்துறை, பொதுக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், சமூகநீதி, இளைஞர் நலன், உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றின் அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கும் ஆளும் குழு அமைப்பு விரைவில் உருவாக்கப்படும். இதன் கீழ் இயக்குநரகம் அமைத்து, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.'' என்றும் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் அதிவேகத்தில் கார்களை இயக்கி, விபத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து வரும் நிலையில், இந்த விபத்தில் 3 இளையவர்கள் உயிரிழந்திருப்பதால், மாநில அளவில் இது பேசுபொருளாக மாறியிருப்பதாக கேரள பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
பிபிசியிடம் பேசிய கேரள பத்திரிகையாளர் ஹரிதா, ''இந்த விபத்தை ஏற்படுத்திய சுஹைல் உட்பட 4 பேருமே 20 வயதுக்கு உட்பட்டவர்கள். கேரளத்தில் 23 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே, மது விற்பனை செய்ய வேண்டும். அப்படியிருக்கும்போது இவர்களுக்கு மது விநியோகம் செய்தது யார் என்ற கேள்வி அதிகமாக எழுப்பப்படுகிறது. காவல்துறை விசாரணையின் அடிப்படையில், இவர்களுக்கு மது விநியோகம் செய்த கடவந்திரா, பாலரிவட்டம் ஆகிய இடங்களில் உள்ள 2 மதுக்கூடங்கள் மற்றும் நெடும்பச்சேரி நட்சத்திர ஓட்டல் பார் ஆகியவற்றுக்கு எதிராக கலால்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.'' என்றார்.
''இதற்கு முன்பு கேரளத்தில் எத்தனையோ விபத்துகள் நடந்துள்ளன. சில நாட்களில் அது மறக்கப்படும். ஆனால் இந்த மினி கூப்பர் விபத்து கேரளத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து விவகாரத்தில் அரசின் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஆனால் கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறியிருக்கிறார்.'' என்றார் ஹரிதா.
மினி கூப்பர் கார் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு காக்கநாடு கண்காணிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4 பேரும், அக்டோபர் 14-ஆம் தேதி அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை விசாரிப்பதற்கு காவல்துறையினரின் காவலில் ஒப்படைக்க அனுமதியளித்த நீதிமன்றம், அக்டோபர் 15 மாலை 5 மணி வரை விசாரிக்க அனுமதித்துள்ளது. 4 பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
காவல்துறை கூறியது என்ன?
குற்றம்சாட்டப்பட்டுள்ள கார் ஓட்டுநர் சுஹைல் உட்பட கைது செய்யப்பட்ட 4 பேரும் 19 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை வழக்கமான சிறைக்கு அனுப்பாமல்
கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பியதற்கான காரணம் குறித்து பல தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து கேரள தெற்கு மண்டல ஐஜி நிஷாந்தினியிடம் பிபிசி சில கேள்விகளை முன் வைத்தது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், ''தமிழகத்தில் சிறார் சீர்திருத்தப்பள்ளி என்று சொல்லப்படுகிறது. இங்கு கண்காணிப்பு இல்லம் என்று சொல்லப்படும் இளம் வயதினருக்கான சிறை உள்ளது. கேரளாவில் இளம் வயதினருக்கு, வெவ்வேறு வயதுக்கேற்ப அவர்களுக்கான சிறைத்தண்டனையை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. இப்போதும் நீதிமன்ற உத்தரவின்படியே, காக்கநாடு கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பியுள்ளோம். இதில் காவல்துறையின் முடிவு எதுவுமில்லை.'' என்றார்.
''நேற்று (அக்டோபர் 14) அந்த 4 பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இன்று (அக்டோபர் 15) மாலை 5 மணி வரை அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். முதலில் சில பிரிவுகள் சேர்க்கப்படவில்லை என்று பலரும் கூறிவந்தனர். மோட்டார் வாகனச்சட்டம் 185 பிரிவு உட்பட இந்த விபத்துக்கான காரணிகளின் அடிப்படையில் தேவையான பிரிவுகள் அனைத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்றார் ஐஜி நிஷாந்தினி.
மேலும் பேசிய அவர், ''பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏதாவது கோரிக்கைகள், குறைகள் இருப்பின் அவர்கள் முறையிடுவதற்கான அதிகாரியாக அரசு என்னை நியமித்துள்ளது. நான் 3 குடும்பத்தினரிடமும் பேசினேன். வெளியில் பரவும் தகவல்களை வைத்து அவர்கள் சில சந்தேகங்களை எழுப்பினர். ஆனால் அவை தவறானவை என்பதை விளக்கி, காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினேன். அவர்களின் குறைகளை அறிந்து உதவுவதற்கு அரசு கூறிய அறிவுறுத்தலையும் கூறியுள்ளேன்.'' என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































