திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; பொறியியல் பட்டதாரி பெண் உயிரிழப்பு!

பட மூலாதாரம், Getty Images
(கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரணைகள் சிலருக்கு சங்கடம் தரலாம்)
திருப்பூரில் மருத்துவமனைக்கே செல்லாமல், எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளார். இதில் பிறந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, இறந்துபோன பெண்ணின் கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தபோது, அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்த நிலையில், தற்போது இயற்கை முறையில் பிரசவம் பார்க்க கணவனும் மனைவியும் சேர்ந்து முடிவு செய்ததாகத் தெரியவந்துள்ளது. உறவினர் யாருடைய ஆலோசனையையும் அவர்கள் ஏற்கவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்ப்பிணிப் பெண்கள் முறைப்படி பதிவு செய்தால், 12வது வாரத்திலிருந்து குழந்தை பிறந்த பின்பும் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி, மருந்துகள், உதவித்தொகை தருவது பற்றி அறிந்திருந்தும் இவை எதையுமே அவர்கள் செய்யவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டில் பிரசவம் பார்ப்பதில் தாய், சேய் இருவருடைய உயிருக்கும் ஆபத்துக்கள் இருப்பதாகச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா.
மருத்துவத்தை நிராகரித்து சுயமாக பிரசவம்

பட மூலாதாரம், Handout
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள கிராமம் புஞ்சைதளவாய்பாளையத்தைச் சேர்ந்த குழந்தைசாமி (வயது 40), அவருடைய மனைவி சசிகலா (வயது 32) இருவரும் பொறியியல் பட்டதாரிகள். குழந்தைசாமி தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு 6 வயதுடைய பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார்.
சசிகலா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் அவரின் நிலைமை கவலைக்கிடமாகி, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு, ஜூன் 28 அன்று உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை புகாரின்படி, ஊத்துக்குளி காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி காவல்துறையினர் அளித்த தகவலில், கணவன்–மனைவி இருவரும் உறவினர்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் சுயமாக இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.
பிபிசியிடம் பேசிய ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் சரவணன், ''ஜூன் 23 அன்று இரவு 9:45 மணிக்கு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், அவருடைய தாய், தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனே வந்துள்ளனர். அவர்களிடம் பேசிய சசிகலா, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டாம். நாங்களே பிரசவம் பார்த்துக்கொள்கிறோம். கூப்பிடும்வரை வரவேண்டாமென்று கூறியுள்ளார். அதனால் அவர்கள் இரவு முழுவதும் வீட்டின் உள்ளே செல்லாமல் வெளியில் காத்திருந்துள்ளனர்.'' என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ''பிரசவம் பார்க்க சசிகலாவும், அவருடைய கணவரும் மட்டும் ஒரு அறைக்குள் சென்றுள்ளனர். சசிகலாவின் பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் இயற்கை முறையில் பிரசவம் பார்க்கின்ற முயற்சி பற்றித் தெரிந்திருக்கிறது. ஆனால் அதில் உடன்பாடு இருந்ததா என்று தெரியவில்லை. அவர்களிடம் மகள் இறந்தது பற்றி புகார் கொடுக்குமாறு கேட்டபோது, மறுத்துவிட்டனர்.'' என்றார்.
அதன்பின்பே குன்னத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் நித்யாவிடம் காவல்துறையினர் புகார் பெற்றுள்ளனர். முதற்கட்டமாக குழந்தைசாமி மீது மட்டும் கொலையாகாத மரணத்தை விளைவித்தல், முறைப்படி மருத்துவம் படித்து பதிவு செய்யாமல் மருத்துவம் பார்த்ததற்காக தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் சரவணன் பிபிசியிடம் தெரிவித்தார்.
காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, ஜூன் 23 இரவு 10 மணிக்கு மேல், குழந்தைசாமி மட்டுமே தனியாக யூடியூப் பார்த்து சசிகலாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். மறுநாள் அதிகாலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்குப் பின்பு சசிகலாவுக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமாகியுள்ளார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர்கள் முதலுதவி சிகிச்சையளித்துவிட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கே சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அங்கிருந்து அவரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் குழந்தைசாமியின் குடும்பத்தார், சசிகலாவை கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கடந்த ஜூன் 28 ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார். பிறந்த பெண் குழந்தை, தற்போது பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
சசிகலா–குழந்தைசாமிக்கு 2019 பிப்ரவரி 23 அன்று திருமணம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டில் சிசேரியன் முறையில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் பின்னர் பல்வேறு காரணங்களால் அலோபதி மருத்துவத்தின் மேல் தனது மனைவி சசிகலா நம்பிக்கையின்றி இருந்ததாக குழந்தைசாமி தெரிவித்ததாக ஊத்துக்குளி காவல்துறையினர் பகிர்ந்த தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை கர்ப்பமாகி ஒரு முறை கூட அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மாமனார், மாமியாரிடம் மட்டுமின்றி, தன்னுடைய பெற்றோரிடமும் முன்பிருந்தே வீட்டிலேயே நான் பிரசவம் பார்த்துக் கொள்ளப்போகிறேன் என்று சசிகலா சொல்லி வந்ததாகவும் காவல்துறை பகிர்ந்த ஆவணங்களில் விளக்கப்பட்டுள்ளது. இதையே சுகாதாரத்துறையினரும் கூறுகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திருப்பூரில் இந்த உயிரிழப்பு நடந்துள்ளதால், சுகாதாரத்துறையினர் இதுபற்றி தீவிரமான கவனம் செலுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 மாவட்டங்கள் தொடர்புடையதால் 3 மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் அறிக்கை பெறப்படுமென்றார் திருப்பூர் மாவட்ட இணை இயக்குநர் கண்ணன் மகராஜன்.
பிபிசியிடம் பேசிய அவர், ''குழந்தை வெளியே வந்த பின்னும் நஞ்சுக்கொடி (Placenta) வெளியில் வராமல் இருந்துள்ளது. அதனால் இரத்தப்போக்கு அதிகமாகியுள்ளது. அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கே அந்த நஞ்சுக்கொடியை மட்டும் எடுத்துவிட்டு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு செல்லும்போதே சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைத்துள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனை சென்றுவிட்டனர். இறந்தவரின் வீடு திருப்பூரிலும், சிகிச்சை பெற்ற பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஈரோடு மாவட்டத்திலும், மேல் சிகிச்சை பெற்று இறந்த தனியார் மருத்துவமனை கோவையிலும் இருப்பதால் 3 மாவட்ட அதிகாரிகளாலும் இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. '' என்றார்.
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு பதிவு செய்து கண்காணிக்கப்படுகின்றனர்?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் பெயர்களை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் PICME இணையதளத்தில் பதிவு செய்யும்பட்சத்தில் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தைக் குறிப்பிடும் RCH (Reproductive Child Health ) என்ற எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை உள்ளூர் சுகாதாரத்துறை அலுவலர்கள் பதிவு செய்து கொண்டு, கர்ப்பம் உறுதியான முதல் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணித்து, மருந்து, மாத்திரை வழங்கி பரிசோதிக்கின்றனர்.
கர்ப்பத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் பெண்களுக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை மகப்பேறு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் விரிவாக விளக்குகின்றனர். இந்த பதிவின் அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கு தனி கோப்பு தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மாதங்களில் அந்தந்த காலத்திற்கேற்ற சிகிச்சை தரப்படுவதுடன் குழந்தை பிறந்தபின், பிறப்புச்சான்று மற்றும் அதற்கான தடுப்பூசிகள் வழங்கவும் பயன்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்வனத்தில் அமைந்துள்ள பல்வேறு பழங்குடியின கிராமங்களிலும்கூட இத்தகைய மருத்துவப்பதிவுகளும், சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. இதுபற்றி அங்கு பணியாற்றும் மசினகுடி கிராம சுகாதார செவிலியர் ஸ்ரீதேவி பிபிசியிடம் பேசியபோது, ''ஆர்சிஎச் எண் வந்துவிட்டால் அந்தப் பெண்ணை முதல் மாதத்திலிருந்து பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அந்தப் பெண்ணின் கடைசி மாதவிலக்கு நாள் துவங்கி, குழந்தை பிறந்த பின்னும் எங்கள் கண்காணிப்பு தொடரும்.'' என்றார்.
''கர்ப்பிணிப் பெண்களுக்கு வீட்டுக்கே சென்று இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பார்ப்போம். குளுக்கோஸ் கொடுத்து இரத்தப் பரிசோதனை செய்வோம். சத்து மாத்திரை, பூச்சி மருந்து, இரும்புச்சத்து மாத்திரை, கால்சியம், பி காம்ப்ளக்ஸ் என வெவ்வேறு காலகட்டத்துக்கேற்ப மருந்துகள் கொடுப்போம். அதேபோன்று 3 கட்டங்களாக கருவின் ஆரோக்கியம், குழந்தையின் உறுப்புகள், எடை, வளர்ச்சியைப் பார்க்க ஸ்கேன் எடுக்கவும் உதவுவோம். அதில் பிரசவத் தேதி தெரிந்துவிடும். அதன்பின் அந்தக் காலகட்டத்தில் நெருக்கமாகக் கண்காணித்து பிரசவத்துக்கு தேவையான உதவிகளையும் செய்வோம்.'' என்றார் சுகாதார செவிலியர் ஸ்ரீதேவி.
கர்ப்பிணிப் பெண்களுக்கு 4 வது மாதத்தின் முடிவிலும், 6வது மாதத்தின் முடிவிலும் தமிழக அரசால் ஒரு 'கிட்' வழங்கப்படுகிறது. அதில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பானம், பூச்சி மாத்திரை, பேரிச்சம்பழம் 2 பெட்டி, இரும்புச்சத்து மருந்து, நெய் என பலவிதமான பொருட்கள் இருப்பதையும் அவர் விவரித்தார். குழந்தை பிறந்தாலும் போலியோ சொட்டு மருந்து துவங்கி, 5 வயது, 6 வயது, 16 வயது வரை தடுப்பூசிகள் போடுவதும் சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் துறை அதிகாரிகள் விளக்கினர்.
ஆனால் சசிகலா யாருடைய கண்ணிலுமே படாமல் தன் கர்ப்பத்தை மறைத்து வாழ்ந்து வந்ததால் சுகாதாரத்துறை அலுவலர்கள் யாருக்குமே அவரைப் பற்றி தெரியாமல் போய்விட்டதாகக் கூறினார் திருப்பூர் மாவட்ட துணை இயக்குநர் ஜெயந்தி. கர்ப்பமான நாளிலிருந்து பிரசவம் வரையிலும் எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், குடும்பத்தினர், உறவினர் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்ததாகவும் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய திருப்பூர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெயந்தி, ''அந்தப் பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்தபோது ஆர்சிஎச் எண் பெற்று, சிசேரியன் முறையில் குழந்தை பெற்றதுடன் முறையாக எல்லா சிகிச்சையும் பெற்றுள்ளனர். அதை வைத்தே இப்போதும் மீண்டும் பதிவு செய்து சிகிச்சை எடுத்திருக்கலாம். ஆனால் அந்த தம்பதியினர், அலோபதி மருத்துவத்தை நிராகரித்து, தாங்களாகவே சுய சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.'' என்றார்.
''இருவரும் பொறியியல் படித்த பட்டதாரிகளாக இருந்தும் கர்ப்பமான தகவலையே மறைத்துள்ளனர். யார் இதை அறிவுறுத்தினர் என்று எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. தெரிந்தால் அவர்கள் மீதும் புகார் அளிப்போம். ஆனால் அவருடைய குடும்பத்தினர் யாருமே இதுபற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுக்கின்றனர். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான், இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை அலுவலரால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.'' என்றார் மருத்துவர் ஜெயந்தி.
குழந்தைசாமியின் தம்பி குடும்பமும் அதே வீட்டில் வசிப்பதாகவும், தம்பியின் மனைவி முறைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுள்ளதாகவும் துணை இயக்குனர் தெரிவித்தார். அந்தக் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தும் கொடுத்தபோதும், இந்த விஷயத்தை அவர் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். தங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாமென்று கூறிவிட்டதால் சொல்லவில்லை என்று அவர் கூறியதாகவும் பிபிசியிடம் அவர் தகவல் பகிர்ந்தார்.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், ''தமிழகத்தில் இப்போது வீட்டில் பிரசவம் பார்ப்பது எங்குமே நடப்பதில்லை. ஆண்டுக்கு ஒன்றிரண்டு இடங்களில் இப்படி நடக்கிறது. ஒரு பெண் கர்ப்பிணியாவதில் துவங்கி, அவருக்குக் குழந்தை பிறந்த பின்னும் தொடர்ச்சியான கண்காணிப்பு முறை உள்ளது. நமது மாநிலத்தில் இருப்பது போன்ற சிஸ்டம் வேறு எங்குமே இல்லை என்றாலும், யாருக்குமே தெரியாமல் இப்படி மறைந்து இருப்பவர்களை நம்மால் கண்டு பிடிக்க முடிவதில்லை. இது சட்டவிரோதம்.'' என்றார்.
வீட்டில் பிரசவம் பார்த்தால் தாய், சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து!

பட மூலாதாரம், Getty Images
பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்தின்போதும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளை விளக்கிய கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் கீதா, ஒரு பெண்ணுக்கு மருத்துவமனையில் பிரசவம் பார்க்காமல் வீட்டிலேயே பார்ப்பது எவ்வளவு ஆபத்து விளைவிக்கும் என்பதையும் விரிவாக விளக்கினார்.
பிபிசியிடம் பேசிய மருத்துவர் கீதா, ''பொதுவாகவே பிரசவத்தின்போது பலவிதமான சிரமங்கள் ஏற்படும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, இரத்த அழுத்தம், இரத்த சோகை, சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்காகத்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதந்தோறும் இரத்த அழுத்த சோதனை, இரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் பரிசோதனைகள் எடுக்கிறோம். இவற்றை ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்து கொண்டால்தான் அதற்கான சிகிச்சை தரமுடியும்.'' என்றார்.
''இதைக் கண்டுபிடிக்காவிட்டால் அந்தப் பெண்ணுக்கு எந்த வகையில் பிரசவம் ஏற்படுமென கணிக்க முடியாது. இவை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிரமமாகிவிடும். பிரசவமானதும் கர்ப்பப்பை சுருங்க வேண்டும். அதற்கு Active Management of the Third Stage of Labour (AMTSL) என்ற சிகிச்சையளிக்கப்படும். அதற்கேற்ற ஊசி, மருந்து அளிக்கப்படும். இதெல்லாம் மருத்துவமனையில் மட்டுமே சாத்தியம்.'' என்றும் அவர் மேலும் விவரித்தார்.
''இறந்து போன அந்தப் பெண்ணுக்கு முதல் குழந்தை, சிசேரியன் முறையில் பிறந்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு பெண்ணுக்கு ஒரு முறை சிசேரியன் செய்துவிட்டால், அடுத்த முறை சுகப்பிரசவம் ஏற்படுவதில் பல சிக்கல்கள் உள்ளன. முந்தைய பிரசவத்தில் தையல் போடப்பட்டிருக்கும். அந்த தையல் பிரிந்து கர்ப்பப்பை வெடிக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றுவது கஷ்டமாகிவிடும். மருத்துவமனையில் இருந்தால் தீவிரமாகக் கண்காணித்து உரிய சிகிச்சை தரமுடியும்.'' என்றார் மருத்துவர் கீதா.
''ஒருவருக்கு கார் ஓட்டத் தெரியும் என்பதை வைத்து எப்படி லாரியை இயக்க முடியோதோ அதேபோன்றுதான் வீட்டில் பிரசவம் பார்ப்பதும். இது யூடியூப் பார்த்து விமானத்தை இயக்குவது போன்று ஆபத்தானது. சமீபமாக சுகப்பிரசவம்தான் நல்லது என்று நினைக்கும்போக்கு பலரிடம் ஏற்பட்டு வருகிறது. இது தவறானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் சேயும் ஆரோக்கியமாக பிறக்கும்.'' என்றார் மகப்பேறு மருத்துவர் கீதா.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



















