'பாரதிராஜா மறைவுத் துயரில் இருந்து மீளாத பாக்யராஜ்' - பால்ய நண்பர்கள், திரையுலகினர் கூறியது என்ன?

பாக்யராஜ்

பட மூலாதாரம், Shantanu Bhagyaraj

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

''ஸ்டூடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்றால், எளிய மனிதர்களின் உணர்வுகளை திரைக்குள் கொண்டு வந்தவர் பாக்யராஜ். இவர்களிருவருடைய படங்களின் கலவையாகத்தான் என்னுடைய படங்கள் அமைந்திருந்தன. திரைப்படக் கல்லூரியில் நான் படித்திருந்தாலும் திரைக்கதையைக் கற்றுக்கொண்டது பாக்யராஜ் படங்களிலிருந்துதான்!''

இப்படிச் சொல்கிறார் பல வெற்றிப்படங்களின் இயக்குநரான ஆர்.வி.உதயகுமார்.

''குடும்பஸ்தன் படத்துக்கு திரைக்கதை எழுதும் முன்பாக பாக்யராஜின் பல படங்களைப் பலமுறை பார்த்தோம். 80களில் இருந்த கோவையின் சின்னச்சின்ன வீதிகளையும், அங்கு வாழும் சாதாரண மனிதர்களின் உணர்வுகளையும் ரசிக்கும்படி திரையில் பதிவு செய்தவர் பாக்யராஜ் மட்டுமே. அவருடைய படங்களில் காட்சி அமைப்புகள், அழகிய நீரோட்டமாக இருக்கும். திரைக்கதைக்கு என்றென்றும் அவர்தான் பல்கலைக்கழகம்!''

இப்படிச் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த திரைப்பட கதாசிரியரும் நடிகருமான பிரசன்னா பாலச்சந்தர்.

'மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்பிய பாக்யராஜ்'

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கோவையிலும் அவருக்காக பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாங்கோவில்தான் பாக்யராஜின் பூர்வீகம் என்றாலும், அவருடைய குழந்தைப் பருவத்திலேயே கோவை (அவர் பிறந்த ஆண்டு ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகியவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக இருந்தன) வந்து விட்டதை நினைவு கூர்கிறார் பாக்யராஜ் ரசிகர் மன்றத்தின் கோவை மாவட்டத்தலைவரும், பாக்யராஜின் நண்பருமான சுந்தரம்.

பாக்யராஜ்

பட மூலாதாரம், Sundaram

படக்குறிப்பு, பாக்யராஜ் ரசிகர் மன்றத்தின் கோவை மாவட்டத்தலைவரும், பாக்யராஜின் நண்பருமான சுந்தரம்.

பிபிசியிடம் பேசிய சுந்தரம், ''எனக்கும் அவருக்கும் ஒரே வயதுதான். கோவை மணி பள்ளியில் அவர் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு பழக்கம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நட்பில் இருந்தேன். அப்போதிலிருந்து நான்தான் பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கிறேன். பாக்யராஜின் ஆரம்பப்பள்ளி வயதில்தான் அவருடைய அப்பா, பாப்பநாயக்கன்பாளையத்திற்கு குடிபெயர்ந்து வந்தார்.'' என்றார்.

''பாக்யராஜூக்கு 2 அண்ணன்கள், இவர்தான் கடைசி. முதலில் பாரதிபுரத்திலும் பின்பு சித்தாபுதூரிலும் குடியிருந்தனர். மணி பள்ளியில் பியூசி படித்தவுடனே சென்னைக்குச் சென்றுவிட்டார். அவருடைய அண்ணன்கள் பாரதி என்று ஒர்க் ஷாப் வைத்திருந்தனர். சில நாட்கள் அவர்களுடனும் இருந்தார். இங்குள்ள விளையாட்டு மன்றத்தில் கேரம் போர்டு விளையாடுவார்.'' என்றார் சுந்தரம்.

''எம்ஜிஆரை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மாற்றுத்திறனாளி பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அவரிடம் உதவி கேட்டேன். அப்போது துவங்கி இப்போது அந்தக் குழந்தை பெரியவளாகி விட்ட நிலையிலும், மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை தேவைக்கேற்ப அனுப்பி வைப்பார். அதை நான்தான் மாதந்தோறும் கொடுத்து வருகிறேன். இந்த மாதம் இன்று அல்லது நாளை வரவேண்டியது. அதற்குள் அவர் இறந்துவிட்ட வேதனைச்செய்தி வந்துவிட்டது.'' என்றார் சுந்தரம்.

படப்பிடிப்பு தளத்தில் பாக்யராஜ் மிகவும் சீரியஸ் ஆகத் தெரிந்தாலும், சிரிக்காமல் சத்தமேயில்லாமல் ஒரு ஜாலி கமெண்ட் அடிப்பார். அதிலேயே அவருடைய உதவியாளர்கள் சுதாரிப்பாகி, உற்சாகமாக வேலை பார்ப்பார்கள் என்று அவருடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்கிறார், பொள்ளாச்சியைச் சேர்ந்த லொகேஷன் மேனேஜர் ராஜா.

பாக்யராஜ்

பட மூலாதாரம், Raja

படக்குறிப்பு, லொகேஷன் மேனேஜர் ராஜா

பிபிசியிடம் பேசிய ராஜா, ''சொக்கத்தங்கம் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினேன். சிங்காநல்லூர் பங்களாவில் (தேவர் மகன் பங்களா என்று அழைக்கப்படும் வீடு) படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தேன். மதியம் நேரமாகிவிட்டதால் சாப்பிட்டுப் போகலாம் என்றதற்கு முதலில் வீட்டைப் பார்க்க வேண்டுமென்றார். அங்கே உணவு எதுவும் கிடைக்காது என்பதோடு மிகவும் தாமதமாகிவிடும் என்பதால் அவருக்குத் தெரியாமல் அதே வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்தேன். அதில் அவர் மிகவும் மகிழ்ந்தார்.'' என்று விளக்கினார்.

''தான் நினைத்ததை விட சிறப்பாக யாராவது வேலை செய்துவிட்டால் மனதாரப் பாராட்டுவார். அதேநேரத்தில் யாராவது சரியாக வேலை செய்யாவிட்டால், சிரிக்காமல் சீரியஸ் ஆக முகத்தை வைத்துக்கொண்டே ஒரு வித்தியாசமான கமெண்ட் அடிப்பார். அதிலே எல்லோரும் சிரித்துவிடுவார்கள். அல்லது சுதாரிப்படைந்து உற்சாகமாக வேலை பார்க்கத் துவங்கிவிடுவார்கள்.'' என்றார் லொகேஷன் மேனேஜர் ராஜா.

'பாரதிராஜாவின் மறைவு சோகத்திலிருந்து மீளாத பாக்யராஜ்'

பாக்யராஜ்

பட மூலாதாரம், Rajan

படக்குறிப்பு, படத்தயாரிப்பாளர் ராஜன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைண்டர் நிறுவன உரிமையாளரும், படத் தயாரிப்பாளருமான ராஜன், ''வீட்ல விசேஷங்க படத்தின்போது எனக்கும் பாக்யராஜ் சாருக்கும் அறிமுகம். அப்போதிலிருந்து இப்போது வரை நல்ல நட்பில் இருந்தார். கடந்த வாரம் கூட அவரை சென்னையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். நான் தயாரிக்கும் 3-வது படத்துக்கு அவர்தான் ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருந்தார்.''

இவர் கவுண்டமணியை கதை நாயகனாக வைத்து 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது எம்எஸ்.பாஸ்கர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் 'கிராண்ட்ஃபாதர்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

''பாக்யராஜ் சாருக்கு கோவையில் அடுத்த மாதம் ஒரு விழா எடுப்பதற்கு நினைத்து, 'கோ இண்டியா' அரங்கத்தை புக்கிங் செய்துவிட்டோம். அதற்காக கடந்த வாரம் அவரை சென்னையில் சென்று சந்தித்தபோது, பாரதிராஜாவின் மரணத்தால் பெரும் துயரத்தில் இருந்தார். அதனால் ஒரு மாதத்துக்கு எந்த நிகழ்ச்சியிலும் என்னால் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டார்.

அவருடைய மகள் வழிப்பேரனுடன் விளையாடுவது அவருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எம்ஜிஆரின் 'ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்' பாடலைக் கேட்டு துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து ரசித்த அவர், 'நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். என் பேரனும் எம்ஜிஆர் பாட்டுக்கு ஆடுகிறான். இதுதான் ஜீன்' என்று மகிழ்ந்தார்.'' என்றார் ராஜன்.

'80களின் கோவை நகரை அச்சு அசலாக பதிவு செய்த பாக்யராஜ்'

பாக்யராஜ்

பட மூலாதாரம், Prasanna Balachandhar

படக்குறிப்பு, கோவையைச் சேர்ந்த கதாசிரியரும் நடிகருமான பிரசன்னா பாலச்சந்தர்.

கோவை நகர வீதிகளை எவ்விதமான மிகைப்படுத்தலும் செயற்கையுமின்றி பதிவு செய்தவர் பாக்யராஜ் மட்டுமே என்கிறார் கோவையைச் சேர்ந்த கதாசிரியரும் நடிகருமான பிரசன்னா பாலச்சந்தர்.

பிபிசியிடம் பேசிய பிரசன்னா பாலச்சந்தர், ''அவருடைய ஆரம்பகாலப்படங்கள், அந்தக் காலத்து மண்ணின் மனிதர்களை, அதாவது நகர்ப்புற மனிதர்களின் எளிய வாழ்க்கையை மிக நுட்பமாகப் பதிவு செய்ததை யாரும் மறுக்க முடியாது. சுவர் இல்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா ஆகிய படங்கள் அதற்கு சிறந்த உதாரணங்கள்.'' என்றார்.

எளிய மக்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு படைப்பாளியாக அதிக வெற்றிப்படங்களைத் தந்தவர் பாக்யராஜ்தான் என்று கூறும் பிரசன்னா பாலச்சந்தர், அந்தப் படங்களும் காலங்களைக் கடந்து நிற்கக்கூடிய படைப்புகளாகவே இருக்கின்றன, அதற்குக் காரணம் அவருடைய திரைக்கதைதான் என்கிறார்.

''இன்றைக்கும் சினிமாவில் திரைக்கதை கற்றுக் கொள்ள விரும்பும் யாருக்குமே அவர்தான் பல்கலைக்கழகம், திரைக்கதை பாடத்துக்கு அவர்தான் தலை சிறந்த ஆசான். கோவை நகரின் வீதிகள் 80களில் எப்படியிருந்தன என்பதை பாக்யராஜ் படத்தில்தான் பார்க்க முடியும். வேறு படங்களே கிடையாது.

ஒரு பெட்டிக்கடைக்குள் ஒரு டெய்லர், டிரவுசர் போட்டுக்கொண்டு சைக்கிளில் மில்லுக்குச் செல்லும் ஒரு ஊழியர், கோவை நகர வீதிகளின் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்களின் யதார்த்தமான உரையாடல்கள் அத்தனைக்கும் அவருடைய படங்கள்தான் ஆவணமாக இருக்கின்றன.'' என்றார் பிரசன்னா பாலச்சந்தர்.

மேலும் தொடர்ந்த அவர், ''சினிமாவில் காட்சிக் கட்டமைப்பு என்று ஒன்று உண்டு. காட்சிகள் துண்டு துண்டாக இல்லாமல் இணைந்து செல்வதையும், ஒரு காட்சியை கச்சிதமாக அமைப்பதையும் பாக்யராஜ் படங்களில்தான் கற்க வேண்டும். குடும்பஸ்தன் படம் பண்ணுவதற்கு முன்பாக அவருடைய பல படங்களை பலமுறை பார்த்தோம். அந்தளவுக்கு அவருடைய படங்களில் திரைக்கதை ஒரு அழகிய நீரோட்டமாயிருக்கும்.'' என்றார்.

''திரைக்கதையால் சமூக சிந்தனையை மாற்றிய பாக்யராஜ்'' - ஆர்.வி.உதயகுமார்

திரைத்துறையை நோக்கி தான் செல்ல இயக்குநர் பாக்யராஜ்தான் பெரும் தூண்டுகோல் ஆக இருந்ததாகக் கூறுகிறார் பல்வேறு வெற்றிப்படங்களை தந்துள்ள இயக்குநரும், கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருமான ஆர்.வி.உதயகுமார். மேட்டுப்பாளையம் தெருக்களில் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தை எடுக்கும்போது, அவரை வேடிக்கை பார்த்தவன் நான் என்று நினைவு கூர்ந்தார் அவர்.

பிபிசியிடம் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ''ஸ்டூடியோவுக்குள் இருந்த தமிழ் சினிமாவை பாரதிராஜா எப்படி வெளியே கொண்டு வந்தாரோ, அதேபோல ஒரு சாதாரண வாழ்க்கையை வாழும் எளிய மனிதர்களின் உணர்வுகளை, வாழ்க்கை முறையை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் அச்சு அசலாகப் பதிவு செய்தவர் பாக்யராஜ்தான்.

திண்ணை, பெட்டிக்கடை, பேச இயலாத மாற்றுத்திறனாளி என அவருடைய கதாபாத்திரங்கள், காட்சிகள் மிக எளிமையாக இருக்கும். ஆனால் அதில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் பிரமாண்டமாக இருக்கும். அதே நேரத்தில் எல்லாமே யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.'' என்றார்.

பாக்யராஜ், உதயகுமார்

பட மூலாதாரம், RB Udhayakumar

படக்குறிப்பு, இயக்குநர் உதயகுமார்

''அவர் படத்தில் வரும் காட்சிகள் அன்றாட வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக்காட்டும். வேலையில்லாத ஓர் இளைஞனின் காதல் தூறல் நின்னு போச்சு என்றால், பேச இயலாத மாற்றுத்திறனாளியின் உணர்வை ஒரு கை ஓசையில் அழகாகச் சொல்லியிருப்பார். ஒருவரின் காதலி மற்றொருவருக்கு மனைவியான பின்னும் காதலனுடன் சேர்வது போன்ற ஒரு கடினமான கதையை அந்தக் காலத்திலேயே அழகாகக் கையாண்டிருப்பார்.'' என்று மேலும் விளக்கினார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

மேலும் தொடர்ந்த அவர், ''இளம் வயதில் கோவையில் அவர் ஜீவா மன்றத்தில் கேரம் விளையாடுவார் என்பார்கள். அப்போது அவருக்குள் விதைக்கப்பட்ட கம்யூனிச சித்தாந்தம், பல படங்களில் வெளிப்பட்டிருக்கும். 'இது நம்ம ஆளு' சிறந்த உதாரணம். அந்த படத்தை இப்போது நினைத்தாலும் யாராலும் எடுக்க முடியாது. ஓர் உயர் வகுப்புப் பெண்ணுக்கு பிற சமுதாய இளைஞனுடன் திருமணம் நடக்கும் கதையை அந்த உயர் வகுப்பு மக்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்க அவரால் மட்டுமே சாத்தியம்.'' என்றார்.

''பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய இருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டதுதான் என்னுடைய படங்களில் வெளிப்பட்டது. மண் சார்ந்த விஷயங்களையும், எளிய மனிதர்களின் உணர்வுகளையும் கலந்து கொடுத்ததே என்னுடைய படங்கள். சின்னக்கவுண்டர், பொன்னுமணி, கிழக்கு வாசல் போன்ற படங்களைப் பார்த்தால் அந்த நுட்பத்தை உணரமுடியும். அந்த விதத்தில் இருவருமே தமிழ் சினிமாவில் என்றைக்குமே தவிர்க்கவே முடியாத ஆளுமைகள். இவர்களின் தாக்கமின்றி படம் இயக்குவது சாத்தியமேயில்லை.'' என்றார் இயக்குநர் ஆர்.பி.உதயகுமார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு