"விக் காரணமாக" கேதன் அகர்வால் மீது சியா கோயல் கோபமடைந்தாரா? - விசாரணையில் கூறப்படுவது என்ன?

பட மூலாதாரம், PTI
- எழுதியவர், பிரதிநிதி
- பதவி, பிபிசி மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வாலின் மரண வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கேதனைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் இருக்கும் அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலன் என்று கூறப்படும் சேத்தன் சௌத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இப்போது கேதனின் தந்தை ஊடகங்களில் வந்த சில கூற்றுகளுக்குப் பதிலளித்துள்ளார்.
மறுபுறம், சியாவின் வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் பல விசாரணைக் குழுக்கள் இந்த வழக்கில் வேலை செய்து வருவதாகப் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
'விக் பற்றிய விஷயத்தை முன்பே சொல்லிவிட்டோம்'
ஊடகங்களில் வந்த சில செய்திகளில், கேதன் விக் வைத்திருந்ததால்தான் சியா கோயலுக்குப் அவரைப் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த கேதனின் தந்தை, "கேதன் விக் பயன்படுத்துகிறார் என்பதை நாங்கள் சியா கோயலின் குடும்பத்தினருக்கு முன்பே தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்," என்றார்.
"விக் பிடிப்பதில்லை என்பது ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கான காரணமாக இருக்க முடியாது. மேலும் விக் பிடிக்கவில்லை என்றால் திருமணத்தை மறுத்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரை, ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்ற ஆசை சியாவுக்குத்தான் இருந்தது," என அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், PTI
கேதன் மற்றும் சியாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஜூன் 18 அன்று இருவரும் லோஹ்கட் கோட்டைக்குச் சென்றிருந்தனர் என இந்த வழக்கில் போலீஸார் ஏற்கனவே கூறியிருந்தனர்,
அதன் பிறகு நடந்த சம்பவத்தைப் பற்றி ஆரம்பத்தில் விபத்து என்றே கூறப்பட்டது. ஆனால், விசாரணையின் போது சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரும் இணைந்து கேதனைக் கொலை செய்ததாகப் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
"இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று நான் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என கேதனின் தந்தை விஷால் அகர்வால் மேலும் கூறினார்.
'இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்படும்' என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது."
புனேயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சாரதி' நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அகர்வால் குடும்பத்தினரைச் சந்தித்ததாக பாஜக எம்.எல்.ஏ அபிமன்யு பவார் ஊடகங்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.
பட்நாவிஸின் போன் கால், குடும்பத்தின் கோரிக்கை…
மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான உஜ்வல் நிகம், கேதன் அகர்வால் கொலை வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றித் தகவல் தெரிவித்த உஜ்வல் நிகம், "இந்தக் கொலையால் ஒட்டுமொத்த நாடே அதிர்ந்து போயுள்ளது. இன்று மதியம் எனக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸிடமிருந்து போன் வந்தது. அகர்வால் குடும்பத்தினர் அவரைச் சந்தித்ததாகவும், இந்த வழக்கில் என்னைச் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கக் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் என்னிடம் கூறினார். இது மகாராஷ்டிராவிற்கு முன்னால் உள்ள ஒரு சவால் என்று முதலமைச்சர் என்னிடம் கூறினார், மேலும் இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்ற அவரும் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் ஒப்புக்கொண்டேன். தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே விசாரணையின் நிலையை வெளிப்படுத்த முடியும். இது ஒரு முக்கியமான பொறுப்பு, ஏனென்றால் மகாராஷ்டிர மாநிலத்தில் நான் இதுபோன்ற பல வழக்குகளைக் கையாண்டுள்ளேன், இன்னும் கையாண்டு வருகிறேன். முதலமைச்சர் எப்போதும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். மகாராஷ்டிராவில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும், அந்த உணர்வோடு நான் முதலமைச்சரிடம், 'நிச்சயமாக, நான் இந்த வழக்கைக் கவனித்துக்கொள்கிறேன்' என்று கூறினேன்." என கூறினார்.
'சியா விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்'
சியா கோயல் தரப்பு வழக்கறிஞர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா, "நான் முன்பே கூறியது போல, இதன் விசாரணை நடந்து வருகிறது, போலீஸார் முறையான மற்றும் சரியான வழியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்," என கூறினார்.
"எங்கள் தரப்பு சியாவைப் பற்றிச் சொல்வதானால், விசாரணை அமைப்பிற்கு அவர் அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார், இதன் மூலம் போலீஸார் சரியான முடிவுக்கு வர முடியும் மற்றும் முழுத் தெளிவுடன் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியும். இது நீதிமன்றத்திற்கும் விசாரணையைத் திறம்பட நடத்துவதற்கும், இறுதியாக இறுதித் தீர்ப்பை வழங்குவதற்கும் உதவும்." என அவர் கூறினார்.
போலீஸார் போலீஸ் காவலைக் கோரியிருந்தனர். அதை எதிர்த்து நீதிமன்றக் காவலைக் கோரினோம். ஆனால் நீதிமன்றம் ஏழு நாட்கள் போலீஸ் காவல் விதித்துள்ளது, ஜூன் 29 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்படும் என சியா கோயலின் மற்றொரு வழக்கறிஞர் ராஜஸ்ரீ சகத் முன்னதாக கூறியிருந்தார்.
விசாரணைக்கு பல குழுக்கள்; சியாவின் சகோதரனிடம் விசாரணை
"இப்போது வரை விசாரணைக்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை இந்த வழக்கின் பல்வேறு கோணங்களில் வேலை செய்து வருகின்றன. நாங்கள் சில தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம் மற்றும் சில சாட்சிகளையும் விசாரித்துள்ளோம். இவை அனைத்தின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. ஏராளமான மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று சியாவின் சகோதரரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மற்ற சில உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது." என புனே கிராமப்புற போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் கஜானன் டோம்பே கூறினார்.

பட மூலாதாரம், PTI
இந்த வழக்கில் இதற்கு முன்பு பேசிய புனே ஊரக போலீஸ் கண்காணிப்பாளர் சந்தீப்சிங் கில், தொழில்நுட்ப ஆதாரங்கள், சம்பவ இடத்தின் சூழ்நிலை மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தைச் சரிபார்த்த பிறகு விசாரணை வேகம் எடுத்தது என்றார். போலீஸாரின் கூற்றுப்படி, இந்த வழக்கில் சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கொலையா அல்லது விபத்தா? விசாரணையில் வெளிவந்த தகவல்
ஜூன் 18 அன்று லோஹ்கட் கோட்டைக்குச் சுற்றுலா சென்றபோது கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார். அதன் பிறகு சியா கோயல் போலீஸாரிடம், "கோட்டையில் நடந்து செல்லும்போது கேதனின் கால் வழுக்கி அவர் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டார்," என்று கூறியிருந்தார். இதனால் ஆரம்பத்தில் போலீஸார் விபத்தால் மரணம் என்று பதிவு செய்திருந்தனர்.
இருப்பினும், உறவினர்களிடமிருந்து கிடைத்த தகவல், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அடுத்தகட்ட விசாரணையின் அடிப்படையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொழில்நுட்ப விசாரணையில் சேத்தன் சௌத்ரி சம்பவத்தன்று லோஹ்கட் பகுதியில் இருந்தது தெரியவந்தது என்பது காவல்துறையின் கூற்று. அதன் பிறகு இந்த வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























