அயர்லாந்திடம் மீண்டும் தோல்வி: சூர்யவன்ஷியை இந்திய அணியில் சேர்ப்பதில் தயக்கம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக மீண்டும் தோல்வியடைந்திருக்கிறது. நேற்று (ஜூன் 28) நடந்த 2வது டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி.
பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா அடித்த பவுண்டரி, ஹேரி டெக்டர் வீசிய வைட்கள், நோ பால்கள் ஆகியவற்றின் வாயிலாக முதல் 4 பந்துகளில் 12 ரன்கள் கிடைத்தன. 2 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்ஷித் ராணா வெளியேறினார். அதனால், கடைசிப் பந்தில் பிரின்ஸ் யாதவ் சிக்ஸர் அடித்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.
வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடந்த முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது இந்தியா. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 0-2 என இழந்திருக்கிறது.
உலக சாம்பியனாக விளையாடிய முதல் தொடரில், புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடிய முதல் தொடரில் இப்படி எதிர்பாராத முடிவை சந்தித்திருக்கிறது இந்தியா.
இந்திய பேட்டர்களின் செயல்பாடு, அவர்களுக்கு சவாலாக அமைந்த ஆடுகள சூழ்நிலை, கேப்டன் எடுத்த சில முடிவுகள், அணித் தேர்வு என பல்வேறு காரணங்கள் இந்தத் தோல்விகளின் காரணமாக விவாதிக்கப்படுகின்றன. இந்தத் தொடரின் காரணமாக விவாதிக்கப்பட்டுவரும் முக்கிய விஷயங்களை அலசுவோம்.
இந்திய பேட்டர்களின் தடுமாற்றம்
இந்தத் தொடரில் இந்திய பேட்டர்களின் செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. திலக் வர்மா, ஷிவம் துபே இருவரும் மட்டுமே இரண்டு போட்டிகளிலுமே இரட்டை இலக்கத்தை எட்டிய இந்திய பேட்டர்கள்.
குறிப்பாக டாப் ஆர்டரின் செயல்பாடு எதிர்பார்த்தபடி இருக்கவில்லை. இரண்டு போட்டிகளிலும் சேர்த்து சஞ்சு சாம்சன் 5 ரன்களும், இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தலா 13 ரன்களுமே எடுத்தனர்.
பெரும்பாலான இந்திய பேட்டர்கள் பெரிய ஷாட்கள் அடிக்க முயற்சி செய்து எட்ஜாகி கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார்கள். அவர்களால் பந்தின் பவுன்சை சரியாகக் கணித்திட முடியவில்லை. அதனால், பந்துகளை சரியாகக் கணித்து விளையாட முடியவில்லை.
இந்த விஷயம் ஒருசில பேட்டர்களின் தடுமாற்றம் என்பதைத் தாண்டி ஒட்டுமொத்தமாகவே இந்திய பேட்டர்களுக்கு இருக்கும் ஒரு சிக்கலாகவும் விவாதிக்கப்படுகிறது. பேட்டிங்குக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஆடிப் பழகியவர்கள் சற்றே கடினமான ஆடுகளங்களில் சோபிக்கத் தவறுகிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் தோல்வி பற்றி தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், "நான் இந்திய பேட்டர்களை நிச்சயமாகக் குறைசொல்ல மாட்டேன். இங்கே ஐபிஎல் உள்பட பெரும்பாலான டி20 லீக்குகள் பௌலர்களுக்கானதாக இருப்பதில்லை. அங்கே பேட்டுக்கும் பந்துக்கும் இடையே சமநிலை இருக்கப் போவதில்லை. அவை பெரும்பாலும் பேட்டர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். அதனால் சற்றே கடினமான சூழ்நிலையில் விளையாடும் வாய்ப்பு இந்திய பேட்டர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் இப்படியான சூழ்நிலைகளில் இருக்கவில்லை. வித்தியாசமான சூழ்நிலைகளில் விளையாடிப் பழகும்போது சில சவால்கள் வரும்போது அவர்களால் அதற்கு ஏற்ப ஆடமுடியும்" என்று கூறினார்.
2026 டி20 உலகக் கோப்பையில் பந்துவீச்சுக்கு ஓரளவு ஒத்துழைத்த வான்கடே மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய பேட்டர்கள் தடுமாறியதையும் ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டார் அஷ்வின். இந்திய பேட்டர்களின் இந்த செயல்பாட்டைப் பார்த்து மற்ற அணிகளும் இப்படி சவாலான ஆடுகளங்களைக் கொடுக்கக்கூடுமோ என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
அஷ்வின் மட்டுமல்ல, பல்வேறு வல்லுநர்களும் ரசிகர்களும் இதே கருத்தை முன்வைக்கிறார்கள். இந்த சவாலை சரிசெய்ய பேட்டர்கள் நினைத்தால் மட்டும் முடியாது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் மனது வைத்தால் மட்டுமே முடியும்.
வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பதில் தயக்கம் ஏன்?
இந்திய பேட்டர்கள் ஒருபக்கம் தடுமாறிக் கொண்டிருக்க, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் சேர்க்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுந்துவருகிறது. ரசிகர்கள், வல்லுநர்கள், விமர்சகர்கள் எனப் பலரும் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். அதேசமயம், அவரை எப்படி களமிறக்க முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.
வைபவ் சூர்யவன்ஷியைக் களமிறக்க வேண்டும் என்றால் யாரை வெளியே அமரவைப்பது? உலகக் கோப்பையின் தொடர் நாயகன் சஞ்சு சாம்சனையா? உலகின் நம்பர் ஒன் டி20 வீரர் அபிஷேக் ஷர்மாவையா? இல்லை உலகின் நம்பர்-2 வீரர் இஷான் கிஷனையா? அது மிகவும் கடினமான விஷயம். சிறப்பாக செயல்பட்டுவரும் வீரர்களை அப்படி வெளியே அமர்த்துவது மற்ற வீரர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அப்படி இல்லையென்றால் ஒரு நடுகள வீரருக்குப் பதிலாக சூர்யவன்ஷியைக் கொண்டுவந்தால் கொண்டுவந்தால் சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் ஒரு இடம் கீழே இறங்கி ஆடவேண்டும். அதுவும் அணியின் சமநிலையைப் பாதிக்கும். இப்படியொரு இக்கட்டான நிலையும் இந்திய அணிக்கு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
முதல் டி20 போட்டிக்குப் பிறகு தங்கள் யூடியூப் சேனலில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஶ்ரீகாந்த் இருவரும் விவாதித்தார்கள். அவர்கள் இருவருமே வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், யாருக்குப் பதிலாக அவரைக் களமிறக்குவது என்று விவாதித்தபோது அவர்கள் இருவருமே பதில் இல்லை என்றே கூறினார்கள்.
"மிகச் சிறப்பாக விளையாடியிருக்கும் வீரர்களிடம் போய் நீங்கள் அணியில் இல்லையென்றோ, வேறொரு இடத்தில் ஆடவேண்டும் என்றோ சொல்வது எளிதான விஷயமில்லை. அது மிகவும் கடினம். சூர்யவன்ஷி ஆடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், யாருக்குப் பதிலாக என்றுதான் தெரியவில்லை" எனக் கூறினார் அனிருதா.
ஏற்கெனவே சாம்சனை அணியிலிருந்து நீக்கியது பலமுறை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் நிலையில், சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுப்பது மறுபடியும் அப்படியொரு சூழ்நிலையையே ஏற்படுத்தும். அதைத் தடுக்கவேண்டும் என்பதும் நிர்வாகத்துக்கு முக்கியமான இலக்காக இருக்கும்.
ஷ்ரேயாஸ் ஐயர் vs சுழற்பந்துவீச்சாளர்கள்
கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் தொடர் எதிர்பார்த்ததுபோல் செல்லவில்லை. டி20 உலகக் கோப்பை வென்ற ஒரு கேப்டனுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் கேப்டனாகியிருப்பதால், தற்போதே அவர் கேப்டன்சியின் மீதான கேள்வியும் எழுந்திருக்கின்றன. இரண்டே போட்டிகளில் ஒரு கேப்டனின் செயல்பாட்டின் மீது கேள்வி எழுப்புவது நியாயமில்லை.
அதேசமயம், ஷ்ரேயாஸ் ஐயரின் ஒரு குறிப்பிட்ட முடிவைப் பார்க்கும்போது கேள்வி எழுப்பாமலும் இருக்க முடியவில்லை - ஸ்பின்னர்களை அவர் பயன்படுத்துவது - சொல்லப்போனால், சரியாகப் பயன்படுத்தாதது.
முதல் டி20 போட்டியில் ஸ்பின்னர்களை 5 ஓவர்களுக்குப் பயன்படுத்தினார் ஷ்ரேயாஸ். அதில் 3 ஓவர்களை 16வது ஓவருக்குப் பிறகே கொடுத்தார். 2வது போட்டியில் ஸ்பின்னை 4 ஓவர்கள் பயன்படுத்திய ஷ்ரேயாஸ், பகுதி நேர மிதவேகப் பந்துவீச்சாளரான சூர்யான்ஷ் ஷெட்கேவுக்கு ஓவர் கொடுத்த பிறகே அக்ஷர் கையில் பந்தைக் கொடுத்தார். ஒருவேளை சூர்யான்ஷ் ஷெட்கே சிறப்பாகப் பந்துவீசியிருந்தால் அக்ஷரின் ஓவர்கள் குறைந்திருக்கலாம்.
சுழற்பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தாதைக் குறித்தும் தங்கள் யூ டியூப் சேனல் விவாதத்தின்போது குறிப்பிட்டார் அனிருதா ஶ்ரீகாந்த். "அயர்லாந்து கேப்டன் ஸ்பின்னர்களை சிறப்பாகப் பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுக்கும்போது, இந்திய கேப்டன் அதற்கு யோசிப்பது ஏன்? இதை இங்கு மட்டுமல்ல, ஐபிஎல் தொடரிலும் பார்த்திருக்கிறோம். மிகச் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்ப்ரீத் பிராரைக் கூட பல போட்டிகளில் அவர்கள் களமிறக்கவேயில்லை" என்று குறிப்பிட்டார் அனிருதா. அவர் குறிப்பிட்ட அந்த கடைசி விஷயம் தான் இந்தக் கேள்வி எழுவதற்கான காரணம்.
ஷ்ரேயாஸ் ஐயர் பொதுவாகவே ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவதற்குத் தயங்குகிறார். யுஸ்வேந்திர சஹால் போன்ற அனுபவ ஸ்பின்னரையே அவர் நம்பி பயன்படுத்துவதில்லை. இதுவுமே மறைமுகமாக அணியின் பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதை இந்த சீசன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சரிவிலும் காண முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் முன்னாள் வீரரான அபிநவ் முகுந்த் எப்போதுமே ஒரு விஷயத்தைக் கூறுவார். "ஒரு பேட்டராக சுழற்பந்துவீச்சை சிறப்பாக ஆடக்கூடிய ஒருசில கேப்டன்களுக்கு தங்கள் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இருக்காது" என்று அவர் கூறியிருக்கிறார். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் சிறப்பான ஸ்பின் ஹிட்டர்கள்.
அபிநவ் முகுந்த் சொல்வதுபோல், இதனாலேயே கூட அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால், அது அணியின் செயல்பாட்டில் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தும். ஷ்ரேயாஸ் தலைமை தாங்கிய அணிகளில் கடந்த சில மாதங்களில் அதைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. இதனால்தான் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் எடுக்கும் இந்த முடிவு சற்று கவலையளிப்பதாக இருக்கிறது.
அயர்லாந்தின் சிறப்பான செயல்பாடு
அயர்லாந்து அணிக்கு இந்தத் தொடர் சவாலானதாக இருக்கும் என்றே கருதப்பட்டது. பால் ஸ்டிர்லிங், மார்க் அடேர், ஜாஷ் லிட்டில் போன்ற பல முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தத் தொடரை சந்தித்தார்கள். முழுநேர கேப்டனாக லோர்சன் டக்கருக்கும் இதுதான் முதல் தொடர். அப்படியிருந்தும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது அயர்லாந்து அணி.
அந்த அணியின் பேட்டர்கள் சூழ்நிலையை உணர்ந்து சரியான ஷாட்களை ஆடினார்கள். சரியான இடங்களில் ஷாட்களை செலுத்தினார்கள். அதனால், அவர்களால் சிக்ஸர்கள் அடிக்க முடிந்தது. இந்த இடத்தில் தான் இந்திய பேட்டர்கள் சரியான ஷாட்களை ஆட முடியாமல் கேட்சாகி வெளியேறினார்கள். அவர்களால் சரியாக பார்ட்னர்ஷிப்கள் கட்டமைக்க முடிந்தது. சரியாக இன்னிங்ஸை முடிக்கவும் முடிந்தது.
அதேபோல் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்திய பேட்டர்களின் தடுமாற்றத்தை உணர்ந்து வேகப்பந்துவீச்சாளர்கள் சரியாக 'ஹார்ட் லென்த்தில்' பந்துவீசினார்கள். அதற்குப் பலனாக விக்கெட்டுகளும் கிடைத்தன. ஸ்பின்னர்களும் தங்கள் முழு திறனையும் பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஒருபக்கம் இந்திய கேப்டன் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தத் தடுமாற, இடது கை டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு எதிராக முதல் ஸ்பெல்லிலேயே இடது கை ஸ்பின்னரைப் பயன்படுத்தினார் அயர்லாந்து கேப்டன் டக்கர். இந்தத் துணிவான ஆட்டத்துக்கான பலனாகத்தான் இந்தத் தொடரை வென்றிருக்கிறது அயர்லாந்து.
இந்தியாவின் தடுமாற்றங்கள் ஒருபக்கம் இருந்தாலும், அயர்லாந்தின் இந்த மிகச் சிறப்பான செயல்பாடுமே அவர்கள் இந்தத் தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























