40 வயதை தாண்டிய ஆண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு புகைப்படம்
    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

சுகாதாரத் துறையில் பணிபுரியும் 45 வயதான தொழில் வல்லுநரான ஜெய் பரேக் மும்பையைச் சேர்ந்தவர். அவர், வழக்கமான பரிசோதனைகள், ஆரம்பகால நோயறிதல் மற்றும் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து நோயாளிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.

இருப்பினும், அவர் தனது சொந்த ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தினார். வேலை பளு, பயணம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக அவர் தனது மருத்துவப் பரிசோதனைகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ அல்லது சோர்வோ எதுவும் இல்லை.

அவரது நிலை ஒரு வியத்தகு மற்றும் தற்செயலான முறையில் வெளிச்சத்திற்கு வந்தது. ரத்த மாதிரி சேகரிப்பு குறித்த பயிற்சி அமர்வு ஒன்றில் பங்கேற்ற அவர் தனது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகத் தானாக முன்வந்து வழங்கினார்.

அப்போது செய்யப்பட்ட HbA1c பரிசோதனையில் அவரது சர்க்கரை அளவு 8.8 ஆக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த அளவு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயைக் குறிக்கிறது.

இதற்குப் பிறகு, அவர் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டார். அதில் அவரது கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவு மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. சிடி ஸ்கேனில் இதய ரத்த நாளங்களில் குறிப்பிடத்தக்க அளவு அடைப்புகள் இருப்பதைக் காட்டியது. ஆஞ்சியோகிராபி பரிசோதனையில், சுமார் 90% தீவிரத்தன்மை கொண்ட தலா இரண்டு பெரிய அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடி நிவாரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த கடுமையான பிரச்னை எவ்வித அறிகுறியும் இல்லாமல் மெதுவாக வளர்ந்து வந்தது. இதுவே இந்த விஷயத்தில் மிக முக்கியமான விஷயமாகும். பல நோய்கள், வெளிப்படையான எச்சரிக்கை அறிகுறிகள் ஏதுமின்றி உடலுக்குள் உருவாகின்றன.

சில சமயங்களில் எந்தவித முன் அறிகுறியும் இன்றி பெரும் உடல்நல அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக ஆபத்துக் காரணிகளைக் கொண்டவர்கள், வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை ஜெய்க்கு நேரிட்டது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜெய் பரேக்கின் நோயைக் கண்டறிந்த மும்பையைச் சேர்ந்த என். எம். மருத்துவ மையத்தின் மருத்துவர் பல்லவி நாகரே, இது குறித்து பிபிசியிடம் பேசுகையில் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மருத்துவர் பல்லவி கூறுகையில், "ஜெய் பரேக் சிடி கரோனரி ஆஞ்சியோகிராபி பரிசோதனைக்காக வந்தபோது, அவரது கால்சியம் அளவு 571.8 ஆக இருந்தது தெரிந்தது. இது மிகவும் ஆபத்தானது. அதன் பிறகு, இதயத்திற்கு அருகில் உள்ள எல்ஏடி எனப்படும் இடது முன்பக்க இறங்கு தமனியில் 80 முதல் 90 சதவீதம் வரை சுருக்கம் காணப்பட்டது. அதுவும் மிக முக்கியமான இடத்தில், அதாவது அந்த தமனி தொடங்கும் இடத்திலேயே இந்த சுருக்கம் இருந்தது.

அதேபோல், ஓஎம்2 தமனியிலும் குறிப்பிடத்தக்க அளவு சுருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. 44 வயதுடைய ஒரு நபருக்கு இந்த அளவிற்கு கடுமையான சுருக்கம் இருப்பது அதிர்ச்சியளித்தது. ஒரு உயர்பதவியில் இருக்கும், நன்கு படித்த ஒரு நபருக்கு இவ்வளவு முற்றிய நிலையில் நோய் கண்டறியப்படுவது, நாம் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது" என்றார்.

"வாழ்க்கை முறை, உணவு முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மிகவும் அவசியமானவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை பணம் சம்பாதிப்பதற்காக நாம் போடும் உழைப்பிற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது" என்று மருத்துவர் பல்லவி கூறுகிறார்.

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதிநிதித்துவ புகைப்படம்

நாற்பது வயதை எட்டுவது என்பது வெறும் எண்களின் மாற்றம் மட்டுமல்ல; அதுவரை ஒரு ஆண் பின்பற்றிய உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பு அவரது உடலில் வெளிப்படத் தொடங்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு அல்லது இதய நோய்களின் அறிகுறிகள் போன்றவை இந்தக் காலகட்டத்தில் தலைதூக்கத் தொடங்குகின்றன. ஒரு காலத்தில் ஐம்பது அல்லது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இத்தகைய பாதிப்புகள், கடந்த இரு தசாப்தங்களாக முப்பதுகளின் மத்தியப் பகுதியிலும் நாற்பதுகளிலும் உள்ளவர்களிடையே அதிகரித்து வருகின்றன. இந்த காலகட்டத்தில் உடலைப் பரிசோதித்துக் கொண்டால், வரவிருக்கும் பல ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.

"நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், நான் பார்ப்பதற்கு ஃபிட்டாக இருக்கிறேன்" என்ற எண்ணத்தை பெரும்பாலான ஆண்கள் கொண்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணங்கள் சரியானவையா அல்லது தவறானவையா என்பது உடல் பரிசோதனைகள் மூலம் மட்டுமே தெரியவரும்.

நிபுணர்களின் கருத்துப்படி, சரியான நேரத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் இத்தகைய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும், அவற்றைச் சிறப்பாகக் கையாளவும் உதவுகின்றன. வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நோய்களைக் கண்டறிய உதவுவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் அளிக்கின்றன.

எனவே, 40 வயதிற்குப் பிறகு ஆண்கள் சில முக்கியமான மருத்துவப் பரிசோதனைகளை அலட்சியப்படுத்தாமல் தவறாமல் செய்து கொள்வது அவசியமாகும். இத்தகைய முன்னெச்சரிக்கை அணுகுமுறையே, வருங்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையைத் தக்கவைப்பதற்கான திறவுகோலாக அமையக்கூடும்.

பரிசோதனைகளுக்கான அவசியம் என்ன?

40 வயதிற்குப் பிறகு சில குறிப்பிட்ட பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது மிக அவசியமாகக் கருதப்படுகிறது; ஏனெனில், உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் ஆரம்பக்கட்டத்தில் தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை.

அதேபோல், நீரிழிவு நோயின் அபாயத்தைக் கண்டறிய, வெறும் வயிற்றில் மற்றும் உணவுக்குப் பிறகு என இரு நிலைகளிலும் ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதிப்பது அவசியமாகும்.

கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைப் புரிந்துகொள்ள, 'லிப்பிட் ப்ரொஃபைல்' பரிசோதனையை வருடத்திற்கு ஒருமுறை செய்வது நன்மை பயக்கும்.

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் புகைப்படம்

இதய நோய்க்கான அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மற்றும் 2டி எக்கோ கார்டியோகிராபி போன்ற பரிசோதனைகளும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, சிறுநீரகத்தின் செயல்பாட்டைச் சரிபார்க்க 'சீரம் கிரியேட்டினின்' பரிசோதனையும், கல்லீரல் மற்றும் பிராஸ்டேட் சுரப்பியை அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலமும் ஆரம்பக்கட்ட மாற்றங்களை விரைவாகக் கண்டறிய முடியும். 40 வயதிற்குப் பிறகு பிராஸ்டேட் தொடர்பான பிரச்னைகளுக்கு 'பி.எஸ்.ஏ' பரிசோதனையும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் உடல் எடையை மட்டுமே நம்பியிருக்காமல், இடுப்பு சுற்றளவு மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கவனத்தில் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பானது நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இதர நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, வழக்கமான பரிசோதனைகளும், வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சரியான மாற்றங்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

மும்பையிலுள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் 'உள்மருத்துவம் மற்றும் நிர்வாக சுகாதாரப் பரிசோதனைத் துறையின் ஆலோசகரான டாக்டர் சந்தீப் தோஷி, இது குறித்து மேலும் விளக்கங்களை அளித்தார்.

"நாம் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வதற்கும், உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம். 40 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும் இரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, லிப்பிட் ப்ரொஃபைல் மற்றும் சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறியும் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். யூரிக் அமிலம் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒரு அழுத்தப் பரிசோதனை மற்றும் 2டி எக்கோ கார்டியோகிராம் ஆகியவற்றை மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. பிராஸ்டேட், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள், ஏற்படக்கூடிய நோய்களின் அறிகுறிகளைக் கண்டறிய உதவும்."

ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய பரிசோதனைகளை எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை மீண்டும் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் தோஷி, "40 வயதைக் கடந்த ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த சர்க்கரை மற்றும் லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைத் தெரிந்துகொள்வது, வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வதற்கும், இதயத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்ப்பதற்கும் போதுமான நேரத்தை நமக்கு அளிக்கிறது."

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதிநிதித்துவ புகைப்படம்

இந்தப் பரிசோதனைகள் அனைத்தோடும் சேர்த்து ஒரு முக்கியமான பரிசோதனையைச் செய்வது அவசியமாகும், அதுதான் 'டெஸ்டோஸ்டிரோன்'. 40 வயதில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போக்கு அதிகரிக்கிறது. வயது முதிர்வு, மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடங்கும் போது, தொடர்ந்து சோர்வு ஏற்படுதல், தசை அளவு குறைதல், பாலியல் உணர்வு மற்றும் ஆர்வம் குறைதல், விறைப்புத்தன்மை குறைபாடு, உடல் ஆற்றல் குறைதல், மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் டெஸ்டோஸ்டிரோன் அளவை பரிசோதிப்பது அவசியமாகும். அது எதிர்பார்க்கப்பட்ட அளவை விடக் குறைவாக இருந்தால், அதற்கான சிகிச்சையைப் பெற முடியும்.

பெரும்பாலான மக்கள் உடல் எடையை மட்டுமே ஒரே அளவுகோலாக மனதில் வைத்திருக்கிறார்கள். ஆனால், எடையின் அளவை மட்டும் வைத்து உங்கள் ஒட்டுமொத்த உடலின் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவை பரிசோதிப்பதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உடல் எடை உட்பட இந்த உடல் மாற்றங்கள், இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு, கொழுப்பு கல்லீரல், சிறுநீரக நோய், இதய நோய், மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற நிலைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

உடலில் உள்ள கொழுப்பின் அளவு, அதிலும் குறிப்பாக தொப்பை கொழுப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பது, எதிர்காலத்தில் என்னென்ன ஆரோக்கியப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை முன்கூட்டியே எச்சரிக்கும் ஒரு முக்கிய அறிகுறியாக அமைகிறது. இது சரியான நேரத்தில் வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதிநிதித்துவ புகைப்படம்

40 வயதிற்குப் பிறகு புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் மருத்துவ ரீதியாக மிகவும் முக்கியமானதாக மாறுகின்றன என்று டாக்டர் தோஷி கூறுகிறார். பிஎஸ்ஏ, சிஇஏ, சிஏ 19-9 மற்றும் ஆல்ஃபா-ஃபெட்டோபுரோட்டீன் போன்ற ரத்தப் பரிசோதனைகள், யாருக்குக் கூடுதல் பரிசோதனைகள் தேவை என்பதைக் கண்டறிய உதவுகின்றன.

45 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு 'கோலோனோஸ்கோபி' பரிசோதனை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது பெருங்குடலில் உள்ள பாலிப்ஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது; இந்த நிலையில் இதற்கு சிகிச்சை அளிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது. புகைபிடிப்பவர்கள் அல்லது அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளவர்கள் நுரையீரலின் 'ஹை-ரெசல்யூஷன் சிடி ஸ்கேன்' செய்வது குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதும் நல்லது.

பிராஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் கருத்தில் கொண்டு டாக்டர் சௌரப் பாட்டீல் ஒரு சிறப்பு ஆலோசனையை வழங்குகிறார். அவர் முலுண்டில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரகப் புற்றுநோயியல் துறையில் ஒரு மூத்த ஆலோசகராக உள்ளார்.

வழக்கமான பிராஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் பொதுவாக 50-55 வயதிற்குப் பிறகு தோன்றத் தொடங்கும் அதே வேளையில், பிராஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் 60-65 வயதிற்குப் பிறகே கண்டறியப்படுகிறது என்று அவர் விளக்குகிறார். இருப்பினும், பிராஸ்டேட் புற்றுநோயின் குறிப்பிடத்தக்க குடும்ப வரலாற்றைக் கொண்ட ஆண்கள், அல்லது பிராஸ்டேட், மார்பகம், அல்லது கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களைக் கொண்ட ஆண்கள் 45 வயதிலிருந்தே அல்லது அதற்குரிய ஆபத்து காரணிகளின் அடிப்படையில் அதற்கும் முன்பாகவே பரிசோதனை செய்துகொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்."

இதற்காகப் பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகளில் 'பிராஸ்டேட்-ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்' (PSA) ரத்தப் பரிசோதனை, அதனுடன் சிறுநீரக மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற்று உடல் ரீதியான பரிசோதனை செய்துகொள்வது ஆகியவை அடங்கும் என்று டாக்டர் சௌரப் கூறுகிறார். கூடுதல் ஆபத்து காரணிகள் இல்லாத ஆண்களுக்கு, வழக்கமான பிஎஸ்ஏ பரிசோதனையை பொதுவாக 50-55 வயதிலிருந்து தொடங்கலாம். ஆரம்பக்கட்ட பிஎஸ்ஏ பரிசோதனை முடிவு இயல்பாக இருந்தால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பரிசோதனை செய்வது பொதுவாக போதுமானதாகும்."

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

40 வயதுக்கு முன்பு ஒருபோதும் முழு உடல் பரிசோதனை செய்யவில்லை என்றால் என்னவாகும்?

40 வயதிற்குப் பிறகு, முன்னெச்சரிக்கையான ஆரோக்கியப் பரிசோதனையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது, இதற்கு முக்கிய காரணம் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களின் அபாயம் அதிகரிப்பதே ஆகும். நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய், உடல் பருமன் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் பெரும்பாலும் இந்த வயதில் உருவாகத் தொடங்குகின்றன. பெரும்பாலான நேரங்களில் இவற்றிற்கான தெளிவான அறிகுறிகள் தெரிவதில்லை.

ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்வதன் மூலம், இந்த நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். அக்கால கட்டத்தில் அவற்றை திறம்பட நிர்வகிப்பது, கட்டுப்படுத்துவது, முற்றிலும் மாற்றி அமைப்பது/குணப்படுத்துவது அல்லது சிகிச்சை அளிப்பது சாத்தியமாகும். இது தவிர, 40 வயதைக் கடந்த பல ஆண்கள் தங்களின் தொழில்முறை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக உடல்நலம் சார்ந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். இதனால் நோய்கள் தீவிரமடைந்து, மருத்துவ உதவியை நாடும் போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

எனவே, எந்தவொரு அறிகுறியும் இல்லாவிட்டாலும், குடும்ப மருத்துவ பின்னணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், 40 வயதில் ஒரு அடிப்படை ஆரோக்கியப் பரிசோதனை செய்துகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதிநிதித்துவ புகைப்படம்

இருப்பினும், ஒரு நபர் 40 வயதை அடையும் வரை ஒருமுறை கூட ஒட்டுமொத்த ஆரோக்கியப் பரிசோதனையை செய்துகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு டாக்டர் சௌரப் பாட்டீல் பேசுகையில்"அத்தகைய சூழ்நிலையில், முன்னுரிமை அடிப்படையில் அடிப்படை ஆரோக்கியப் பரிசோதனைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும். இதில் ரத்த சர்க்கரை அளவு, லிப்பிட் ப்ரொஃபைல், ரத்த அழுத்தப் பரிசோதனை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டைக் கண்டறியும் பரிசோதனைகள், அத்துடன் வழக்கமான சிறுநீர் பரிசோதனை ஆகியவை அடங்கும்."

அவர் மேலும் கூறுகையில் "இந்தப் பரிசோதனைகளின் மூலம், வாழ்க்கை முறை சார்ந்த பொதுவான நோய்களையும், பெரும்பாலும் எந்தவொரு அறிகுறியையும் காட்டாத ஆரோக்கியப் பிரச்னைகளையும் கண்டறிய முடியும். இந்த நோய்கள் பொதுவாக 40 வயதை ஒட்டித் தோன்றுகின்றன; இந்தப் பரிசோதனைகள் மூலம் அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பின்விளைவுகளை தவிர்க்க முடியும்." என்றார்.

40 வயதுக்குப் பிறகு கண் ஆரோக்கிய பராமரிப்பு

40 வயதில் எந்தவொரு அறிகுறியும் இல்லாவிட்டாலும், கண்பார்வை நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், இந்த வயதில் 'பேஸ்லைன்' எனப்படும் ஆரம்பக்கட்ட முழுமையான கண் பரிசோதனை அவசியம் என அமெரிக்க கண் மருத்துவக் கழகம் கூறுகிறது. ஏனெனில் குளுக்கோமா எனும் கண் நீர் அழுத்த நோய், கண்புரை, மேக்குலர் டிஜெனரேஷன் விழித்திரை சிதைவு மற்றும் நீரிழிவு விழித்திரை பாதிப்பு ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறிகள் இக்காலக்கட்டத்தில்தான் தென்படத் தொடங்குகின்றன. இந்த நோய்கள் பெரும்பாலும் எந்தவொரு அறிகுறியும் காட்டாமலேயே தீவிரமடைகின்றன.

டாக்டர் ஹிமான்ஷு சேகர், ஏஎஸ்ஜி கண் மருத்துவமனையின் குரூப் சீஃப் ஸ்ட்ரேட்டஜி & கிளினிக்கல் ஆபீசர் ஆவார். கண் பரிசோதனை என்பது உங்கள் வயது மற்றும் உங்களுக்கு இருக்கக்கூடிய சாத்தியமான ஆபத்து காரணிகளைப் பொறுத்தது என்று அவர் கூறுகிறார்.

வயதுக் குழுக்களின் அடிப்படையில் பின்வரும் அட்டவணையை அவர் பரிந்துரைக்கிறார்:

  • வயது 40-54 ஆண்டுகள், எந்த ஆபத்தும் இல்லாதவர்கள்: 2-4 ஆண்டுகளுக்கு ஒருமுறை
  • வயது 55-64 ஆண்டுகள்: 1-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை
  • வயது 65 மற்றும் அதற்கு மேல்: 1-2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
  • அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ள ஆண்கள்: ஒவ்வொரு வருடமும் அல்லது 1-2 ஆண்டுகளுக்கு ஒருமுறை

(அதிக ஆபத்துள்ள நோயாளிகளில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், குடும்பத்தில் குளுக்கோமா அல்லது ஏஎம்டி பாதிப்பு இருந்த பின்னணி கொண்ட ஆண்கள் அடங்குவர்.)

ஆண்கள், மருத்துவப் பரிசோதனைகள், இதய நோய், நீரிழிவு நோய், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதிநிதித்துவ புகைப்படம்

நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வாழ்க்கை முறை மாற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ஹிமான்ஷு சேகர் அறிவுறுத்துகிறார். ரத்த அழுத்தத்தை 130/80-க்கு குறைவாக வைத்திருக்க வேண்டும், வழக்கமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும், புற ஊதாக்கதிர் பாதுகாப்பு கொண்ட கூலிங் கிளாஸ் பயன்படுத்த வேண்டும், அத்துடன் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்" என்று கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "திடீரென கண் முன்னால் மிதக்கும் புள்ளிகள் தோன்றுவது அல்லது வெளிச்சம் மின்னுவது போன்ற உணர்வு, பார்வைக்கு முன்னால் கருப்புத் திரை அல்லது நிழல் போன்ற மறைப்பு ஏற்படுதல், ஒரு கண்ணில் திடீரென பார்வை இழப்பு ஏற்படுதல், கடுமையான கண் வலி, வாந்தி, விளக்குகளைச் சுற்றி ஒளிவட்டங்கள் தெரிவது, நேர்கோடு வளைந்து தெரிவது, பக்கவாட்டுப் பார்வை படிப்படியாகக் குறைவது, திடீரென ஒரு பொருள் இரண்டாகத் தெரிவது , கண்புரையின் அறிகுறிகள் அதாவது படிப்படியாகப் பார்வை மங்குவது அதாவது போன்ற விஷயங்கள் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்ய வேண்டும்."

வாழ்க்கை முறையில் ஏதேனும் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள விரும்பினாலோ, உணவு முறையில் மாற்றம் செய்ய நினைத்தாலோ, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலோ, அல்லது உடற்பயிற்சிகளைத் தொடங்க விரும்பினாலோ, மருத்துவர்கள் மற்றும் தகுதியான பயிற்சியாளர்களின் உதவியைப் பெறுவது அவசியமாகும்.

நம் உடலையும், நோயின் அறிகுறிகளையும் மருத்துவர்கள் மூலம் முறையாகப் பரிசோதித்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வது சரியானதாகும். மருத்துவரை அணுகாமல் சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆபத்தானது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு