விஜய் அரசு நான்கு மாதங்களில் திரும்ப பெற்ற 7 முக்கிய முடிவுகள் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், யாழினியன்
- பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொது (சட்டம்-ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்த அரசாணை வெளியான சில மணி நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதுபோன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்து, பின்னர் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது இது முதல்முறையல்ல. அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்களிலேயே, சர்ச்சைக்குள்ளான பல்வேறு நியமனங்கள், அரசாணைகள் மற்றும் டெண்டர்கள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ஆர்டிஐ விலக்கு ஏன் சர்ச்சையானது?
பொது சட்டம்-ஒழுங்குத் துறையின் கீழ் காவல் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை அறிக்கைகள், காவல் நிலைய மரணங்கள், காவல் துறை சித்ரவதை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விவகாரங்கள் வருகின்றன.
எனவே, இந்தத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டால் பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை ஆர்டிஐ மூலம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், சமூக மோதல்கள் தொடர்பான சில தகவல்களை மட்டும் ஆர்டிஐயில் வழங்க வேண்டாம் என்ற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார்.
"சட்டம்-ஒழுங்குத் துறையில் 20 பிரிவுகள் உள்ளன. அதில் சில பிரிவுகளுக்கு மட்டுமே ஆர்டிஐயில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இதில் அதிருப்தி இருந்தால் முதலமைச்சரிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரத்திலே சர்ச்சைக்குள்ளான அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், TNDIPR
'முடிவெடுப்பதற்கு முன்பே முழுமையாக ஆய்வு செய்திருக்க வேண்டும்' – சிவகாமி
அரசாணைகளையும் டெண்டர்களையும் வெளியிட்டு பின்னர் திரும்பப் பெறுவது, அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து சில முக்கியமான கேள்விகளை எழுப்புவதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி கூறுகிறார்.
"அரசாணைகள் மற்றும் டெண்டர்கள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்படுவது, ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பல முக்கியமான கருத்துகளை வெளிப்படுத்துகிறது. எதிர்ப்புகளுக்குச் செவிசாய்க்கும் பண்பு அரசிடம் இருப்பதை இது காட்டுகிறது," என்றார்.
அதே நேரத்தில், ஒரு கொள்கை அல்லது அரசாணையை வெளியிடுவதற்கு முன்பு அதன் சட்டப்பூர்வ, சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் அரசு அவசரமாக முடிவெடுக்கிறதா என்ற கேள்வியும் எழுவதாக அவர் கூறுகிறார்.
"நிர்வாக ரீதியாகத் தவறு அல்லது அதிருப்தி நிகழும்போது, பிடிவாதம் பிடிக்காமல் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதை சிறப்பான அம்சமாகவும் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட விலக்கு போன்ற விவகாரங்களில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட முடியாது என்ற அரசியல் கள நிலவரத்தையும் இது வெளிப்படுத்துகிறது."
அதே நேரத்தில், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்காமல் மேல்மட்டத்தில் இருந்து முடிவுகள் திணிக்கப்படுவதற்கான வாய்ப்பையும் இது காட்டுவதாக அவர் கூறுகிறார்.
"இவ்வாறு அரசாணை வெளியிடுவதும், பின்னர் அதைத் திரும்பப் பெறுவதுமாக இருந்தால் ஆட்சியின் நம்பகத்தன்மை மக்களிடையே குறைந்துவிடும்."
'ஆட்சியில் பல அதிகார மையங்கள் உள்ளன' – செஞ்சி மஸ்தான்

பட மூலாதாரம், X/GingeeMasthan
முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விஜய் அரசின் நிர்வாக நடைமுறை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்.
"தவெக அரசு ஒரு துக்ளக் அரசுக்கு உதாரணமாக இருக்கிறது. இங்கு முதலமைச்சருக்கு அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றித் தெரியவில்லை. பல அதிகார மையங்கள் உள்ளன." என்றார் அவர்
திமுக ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு முடிவும் கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்டதாகக் கூறும் அவர், விஜய் அரசிடம் தெளிவான கொள்கை இல்லை என்றும் விமர்சிக்கிறார்.
"இந்த அரசிடம் கொள்கை இல்லை. அதனால் முடிவெடுக்கும் திறனும் இல்லை. முதலில் எடுக்க வேண்டிய முடிவுகள் கடைசியில் எடுக்கப்படுகின்றன. கடைசியில் எடுக்க வேண்டிய முடிவுகள் ஆரம்பத்திலேயே எடுக்கப்படுகின்றன," என்றும் தெரிவித்தார்.
ஆர்டிஐ உத்தரவுக்கு முன்பும் இதேபோன்ற நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Handout
ஆர்டிஐ விலக்கு அரசாணையைத் திரும்பப் பெற்றதற்கு முன்பே, விஜய் அரசு பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சில உத்தரவுகளையும் நியமனங்களையும் திரும்பப் பெற்றுள்ளது.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
அரசியல் சிறப்பு அதிகாரி நியமனம்:
முதலமைச்சர் சி ஜோசப் விஜய்க்கு அரசியல் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். மே 12-ஆம் தேதி இந்த நியமனம் செய்யப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் எம். அய்யசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகிகளின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் மூலம் சேகரிக்க உத்தரவிட்டார்.
இதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசியல் கட்சி நிர்வாகிகளின் விவரங்களைச் சேகரிக்க அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இதையடுத்து வட்டாட்சியர் எம். அய்யசாமி அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இடதுசாரி கட்சிகளின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பது தொடர்பான சுற்றறிக்கை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கல்லூரி முதல்வர்கள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கும் எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

பட மூலாதாரம், TNDIPR
மேல்மா சிப்காட் நிலக் கையகப்படுத்துதல்:
மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டையின் மூன்றாம் கட்ட விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலக் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பை தவெக அரசு வெளியிட்ட நிலையில் பின்னர் திரும்பப் பெற்றது.
தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டத்துக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தவெக குரல் கொடுத்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அதே திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
திடக்கழிவு மேலாண்மை டெண்டர்:
நகர்ப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மைக்கான பொது-தனியார் கூட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்கும் டெண்டரும் தமிழக அரசால் பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை துப்புரவுப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்கான முதல் கட்டமாக இருக்கலாம் என்றும், இதனால் தங்களது வேலைவாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
ரூ.16.83 லட்சம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி டெண்டர்:
கரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான ரூ.16.83 லட்சம் மதிப்பிலான டெண்டரும் சர்ச்சைக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது.
காலை 9 மணிக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மாலை 3 மணிக்கே விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்ததாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. குறுகிய கால அவகாசத்தில் டெண்டர் விடப்பட்டதன் நோக்கம் குறித்தும் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதையடுத்து அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
விஜய் அரசு மே மாதம் பதவியேற்ற நிலையில், இவ்வாறு நியமனங்கள், அரசாணைகள் மற்றும் டெண்டர்கள் தொடர்பாக சர்ச்சைகள் எழுவதும், அதன்பின்னர் அரசு அவற்றைத் திரும்பப் பெறுவதும் அரசின் ஆரம்பகால நிர்வாகத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பட மூலாதாரம், TNDIPR
இந்த நடவடிக்கைகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, இதுபோன்ற முடிவுகளை மட்டும் வைத்து விஜய் அரசை மதிப்பிடுவது இப்போதே சரியாக இருக்காது என்கிறார்.
"இவை எல்லா அரசுகளிலும் நடக்கக்கூடிய வழக்கமான விஷயங்கள்தான். கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான அரசுகளிலும் எதிர்ப்பு ஏற்பட்டபோது அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. விஜய் அரசு நான்கு மாதங்கள்தான் கடந்திருக்கிறது. அவர்களிடம் இருந்து இப்போதே ஒரு முழுமையான ஆட்சியை எதிர்பார்ப்பது நியாயமல்ல. இது அவர்களுக்கு கற்றுக்கொள்ளும் காலகட்டம்."
விஜய் அரசின் சில நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை என்றும் கிறிஸ்துதாஸ் காந்தி கூறுகிறார்.
"ஒரு அரசை மதிப்பிடுவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். இப்போது அதற்கு மிகக் குறுகிய காலம்தான் ஆகியுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
'அரசு பொதுமக்களின் கருத்தைக் கேட்கிறது' – பழ செல்வகுமார்
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் பழ செல்வகுமார், அரசின் உத்தரவுகள் மற்றும் முடிவுகள் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.
"அனைத்து நடைமுறைகளையும் அரசாணைகளையும் நாங்கள் மறுஆய்வு செய்து வருகிறோம். இது தவெக அரசு பொதுமக்களின் கருத்துக்கு செவிசாய்க்கிறது என்பதையே காட்டுகிறது."
அரசில் பல அதிகார மையங்கள் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
"அரசில் ஒரே ஒரு அதிகார மையம்தான் உள்ளது. அது முதலமைச்சர். அவருக்கு பல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளையும் அவர் கேட்டுக்கொள்கிறார்."
'அதிகார மையங்கள்' என்ற சொல் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில்தான் உருவானது என்றும் பழ செல்வகுமார் கூறினார்.
"திமுகவில் பல அதிகார மையங்கள் இருந்தன. அவை ஒவ்வொரு அரசாணையையும் நியமனத்தையும் கட்டுப்படுத்தின. அந்தச் சூழலில்தான் அதிகார மையங்கள் என்ற வார்த்தை உருவானது," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































