பண்டைய கிரேக்க காதல் கடவுளை சித்தரிப்பதில் என்ன சர்ச்சை?

பண்டைய கிரேக்க தெய்வமான 'அப்ரோடைட்டி' சர்ச்சைக்குரிய அடையாளமாக மாறியது எப்படி?
படக்குறிப்பு, கலையில் சித்தரிக்கப்பட்ட விதத்தின் காரணமாக, அழகின் தேவதை பல நூற்றாண்டுகளாக ஒரு சர்ச்சைக்குரிய ஆளுமையாக இருந்து வருகிறார். லண்டனில் உள்ள நேஷனல் கேலரியில் உள்ள டியாகோ வெலாஸ்கஸின் "வீனஸ் அட் ஹர் மிரர்" என்ற ஓவியம்.
    • எழுதியவர், மேத்யூ வில்சன்
    • பதவி, பிபிசி கல்ச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பண்டைய கிரேக்கக் காதல் மற்றும் அழகின் தெய்வமான அப்ரோடைட்டியை உருவகப்படுத்தும் கலைப் படைப்புகள், பெண் உடலைத் தவறான முறையில் காட்சிப்படுத்துவதாகக் கூறி நீண்ட காலமாகவே ஆபாசமானவை என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவர் கலை வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவராக எப்படி மாறினார்?

அப்ரோடைட்டியின் (பண்டைய ரோமானியர்களால் வீனஸ் என அழைக்கப்பட்டவர்) நிர்வாண வடிவம் பல நூற்றாண்டுகளாக விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது.

1880-ஆம் ஆண்டில், எழுத்தாளர் மார்க் ட்வைன், டிட்டியனின் 'வீனஸ் ஆஃப் உர்பினோ' (1534) ஓவியத்தைக் கண்டு அதை "உலகிலேயே மிகவும் அருவருப்பான, வக்கிரமான மற்றும் ஆபாசமான ஓவியம்" என்று வர்ணித்தார்.

1914-ஆம் ஆண்டில், பெண்களுக்கு வாக்குரிமை கோரி போராடிய மேரி ரிச்சர்ட்சன், லண்டனின் தேசிய கேலரியில் இருந்த டியேகோ வெலாஸ்குவெஸின் 'வீனஸ் அட் ஹர் மிரர்' (அல்லது 'ரோக்பி வீனஸ்', தோராயமாக 1647-1651) ஓவியத்தை கறிவெட்டும் கத்தியால் குறைந்தது மூன்று முறை தாக்கி சேதப்படுத்தினார்.

"நாள் முழுவதும் ஆண்கள் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் தாங்க முடியவில்லை," என்பது அவர் பின்னர் அளித்த விளக்கங்களில் ஒன்றாகும்.

ஆக்ஸ்போர்டின் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் 'அப்ரோடைட்டி: தி மேக்கிங் ஆஃப் எ காடஸ்' (Aphrodite: The Making of a Goddess) என்ற புதிய கண்காட்சி, இந்த தெய்வத்தின் வரலாற்றை ஆராய்கிறது. மேலும், அவர் எவ்வாறு இத்தகைய தீவிரமான கலாசார சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறினார் என்பதையும் இந்த கண்காட்சி விளக்குகிறது.

வீனஸின் பிறப்பு

இந்தத் தெய்வத்தின் தோற்றம் குறித்து இரண்டு கதைகள் உள்ளன: ஒன்று புராணக் கதை, மற்றொன்று வரலாற்று ரீதியானது. இவற்றில் எந்தவொரு கதையும் இவர் பிற்காலத்தில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக மாறுவார் என்பதை முன்கூட்டியே உணர்த்தவில்லை.

புராணக் கதையின்படி, கிரோனஸ் தனது தந்தை யுரேனஸின் ஆண்குறியை நீக்கி கடலில் வீசுகிறான். அப்போது கடலின் மேற்பரப்பில் குமிழ்கள் தோன்றுகின்றன. அதிலிருந்து அப்ரோடைட்டி ஏற்கெனவே முழு உருவத்துடன் தோன்றுகிறார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவர் அலைகளின் மீது சறுக்கிச் சென்று சைப்ரஸ் தீவை அடைந்தார். அங்கே அவரது காலடிகள் பட்ட இடங்களில் பூக்கள் அற்புதமாக பூமியிலிருந்து மலர்ந்தன.

அப்ரோடைட்டியின் பிறப்பு குறித்த வரலாற்று விளக்கமும் சைப்ரஸ் தீவிலிருந்தே தொடங்குகிறது. கி.மு. 1200-ஆம் ஆண்டுவாக்கில், அங்கு அவர் ஒரு தெய்வமாக உருவெடுத்தார். கிரேக்கத் தெய்வங்களின் கூட்டத்தில் அவர் ஒரு புதிய வரவாக இருந்தாலும், இஷ்தார், அஸ்தார்தே, ஹாதோர் போன்ற மத்திய கிழக்கின் பழமையான பெண் தெய்வங்களிடமிருந்து அவரது சில பண்புகள் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

"இந்தப் பழங்காலத் தெய்வங்களின் முக்கியப் பண்புகளாகப் பாலியல் ஈர்ப்பு, காதல் மற்றும் கருத்தரிப்பு ஆகியவை இருந்தன. ஆனால், அவை ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகள் இருந்தன" என்று ஆஷ்மோலியன் அருங்காட்சியகக் கண்காட்சியின் காப்பாட்சியரான அன்யா உல்ப்ரிச் பிபிசியிடம் தெரிவித்தார்.

அப்ரோடைட்டிக்கும் இதே நிலைதான். தொடக்கக் காலத்தில் அவர் காதல் தெய்வமாக மட்டுமல்லாமல், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களின் உடல் சார்ந்த காதல், இனப்பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகவும் விளங்கினார்.

அவரது ஆளுமையின் மற்ற அம்சங்களும் உள்ளன; அவற்றில் சில அதிகம் அறியப்படாதவை. ட்ரோஜன் போரில் அவர் பங்கேற்றார். அவரது இந்தப் போர்வீரர் அம்சத்தின் காரணமாக, பண்டைய கிரேக்கக் கடற்படையினரும் அவரை வழிபட்டனர்.

ரோமானிய நாகரிகத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் அப்ரோடைட்டியைக் குறிப்பிடலாம். ஒரு புராணக் கதையின்படி, ட்ரோஜன் இளவரசர் அங்கீசஸுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்குப் பிறந்த ஏனியஸ், ட்ரோஜன் நகரம் வீழ்ச்சியடைந்த பிறகு இத்தாலிக்குத் தப்பிச் சென்றார். அவரது வழித்தோன்றல்கள்தான் பின்னர் ரோம் நகரை நிறுவியதாகக் கூறப்படுகிறது.

கி.மு. 13-ஆம் நூற்றாண்டில் சைப்ரஸ் தீவில் தோன்றிய பிறகு, அப்ரோடைட்டி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். பண்டைய கிரேக்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவரது வழிபாடு பரவியது.

அவர் மக்களிடையே இவ்வளவு பிரபலமானது ஏன்?

"கலாசார வேறுபாடின்றி, கருவுறுதல், காதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவை மனிதகுலத்திற்குப் பொதுவான உலகளாவிய கருப்பொருள்களாகும்." என்று உல்ப்ரிச் பதிலளிக்கிறார்.

"அவரது பெயர்களில் ஒன்று 'பாண்டெமோஸ்'. அதற்குப் 'அனைத்து மக்களின் தெய்வம்' என்று பொருள். அவர் போர்வீரர்களுக்கோ பெண்களுக்கோ மட்டுமே உரிய தெய்வம் அல்ல. காதல் என்பது அனைவரையும், அனைத்தையும் பாதிக்கிறது. அது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நிறைந்திருக்கிறது" என்று அவர் விளக்கினார்.

ஒரு புதிய வகையான நிர்வாணம்

பண்டைய கிரேக்க தெய்வமான 'அப்ரோடைட்டி' சர்ச்சைக்குரிய அடையாளமாக மாறியது எப்படி?
படக்குறிப்பு, பிராக்சிடெலஸின் 'ஸ்னைடஸ் நகர அப்ரோடைட்டி' (Aphrodite of Cnidus) சிலை தொலைந்துவிட்டது; எனினும், 'கேபிடலைன் வீனஸ்' (Capitoline Venus) போன்ற பிற்கால ரோமானியப் பிரதிகள் அதை ஒத்திருக்கின்றன.

இதுவரை அப்ரோடைட்டியைச் சுற்றி பெரிய சர்ச்சைகள் எதுவும் இருக்கவில்லை. பல நூற்றாண்டுகளாக, மற்ற ஒலிம்பிய பெண் தெய்வங்களிலிருந்து அவரை மிகவும் வேறுபட்டவராகக் கலைஞர்கள் சித்தரிக்கவில்லை. தொடக்கக் காலத்தில், அவர்கள் பொதுவாக அப்ரோடைட்டியை நிர்வாணமாகவும் சித்தரிக்கவில்லை. இப்போது அவருடன் தொடர்புபடுத்தப்படும் கவர்ச்சியான உடல் தோற்றங்களிலும் அவரைச் சித்தரித்ததில்லை. ஆனால், கி.மு. 350-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு இந்த நிலையை முற்றிலும் மாற்றியது.

கி.மு. 350-ஆம் ஆண்டுவாக்கில் பிராக்சிடெலஸின் உருவாக்கிய 'க்னிடோஸின் அப்ரோடைட்டி' சிற்பம், பண்டைய கிரேக்கத்தில் ஒரு பெண்ணை முழு நிர்வாணமாகச் சித்தரித்த முதல் கலைப்படைப்பாகும். அந்த அசல் சிற்பம் தற்போது இல்லை. இருப்பினும், கி.மு. 160-ஆம் ஆண்டுவாக்கில் உருவாக்கப்பட்ட 'கேபிடோலின் வீனஸ்' போன்ற பிற்கால ரோமானியப் பிரதிகள் மூலம் அதன் தோற்றத்தை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது.

பிராக்சிடெலஸினுக்கு முன்பு, ஆண் உருவங்களே நிர்வாணமாகச் சித்தரிக்கப்பட்டன. "கி.மு. 7 அல்லது 6-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆண்களின் உடல் அழகை நிர்வாணத்தின் மூலம் கொண்டாடுவது முற்றிலும் இயல்பான ஒன்றாக இருந்தது" என்கிறார் உல்ப்ரிச். அதே அணுகுமுறையைப் பெண்ணின் உடல் அழகுக்கும் பயன்படுத்த பிராக்சிடெலஸ் முடிவு செய்தார்.

ஆனால், அப்ரோடைட்டியின் நிர்வாணச் சித்தரிப்பு ஆண் சிற்பங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. கிரேக்க ஆண் சிற்பங்களில் நிர்வாணம் எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதை உற்றுப் பார்த்தால், இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளலாம். அது முழுவதும் உடல்மொழியில்தான் இருக்கிறது.

பிராக்சிடெலஸின் அப்ரோடைட்டி குளித்துக்கொண்டிருந்தபோது திடீரெனப் பிடிக்கப்பட்டதைப் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளார். வெட்கம் அல்லது சங்கடம் காரணமாகத் தனது உடலை மறைத்துக்கொள்ளும் முயற்சியில் இருப்பதைப் போலவும், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைப் போலவும் அவர் தோன்றுகிறார். ஆனால், கிரேக்கக் கலையில் நிர்வாண ஆண் உடல்கள் எப்போதும் தன்னம்பிக்கையும் வீரமும் நிறைந்தவையாகச் சித்தரிக்கப்பட்டன.

"புராணக் கதைகளில் அப்ரோடைட்டி தொடர்ந்து குளிப்பதும், தனது உடல் அழகைப் பேணுவதில் ஈடுபடுவதும் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் அவற்றின் அடிப்படையில்தான் அவரது சித்தரிப்பு அமைந்துள்ளது" என்று உல்ப்ரிச் விளக்குகிறார்.

ஆனால், பிராக்சிடெலஸின் சிற்பத்தில் அப்ரோடைட்டியின் கைகள் உடலிலிருந்து சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பார்வையாளர்கள் வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போது அவரது நிர்வாண உடலைக் காண முடிகிறது. பார்வையாளர்களின் பங்கேற்பைத் தூண்டும் வகையிலும், அவர்களின் உடல் அழகு குறித்த ஆர்வத்துக்கு இடமளிக்கும் வகையிலும் இந்தச் சிற்பம் அமைந்துள்ளது.

இந்தப் புதுமையான கலை உத்திகள் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கடுமையான விவாதங்களுக்கு வழிவகுத்தன. பிராக்சிடெலஸின் சிற்பத்தில் காணப்பட்ட இந்த உடல்நிலைக்கு வீனஸ் புடிகா என்ற பெயரும் வழங்கப்பட்டது. இதற்கு 'அடக்கத்துடன் இருக்கும் வீனஸ்' அல்லது 'வெட்கத்தால் உடலை மறைக்கும் வீனஸ்' என்று பொருள்.

'க்னிடோஸின் அப்ரோடைட்டி' சிற்பம் ஒரு புரட்சிகரமான படைப்பு என்கிறார் உல்ப்ரிச். பிராக்சிடெலஸுக்கு முன்பு, ஆடைகள், நகைகள் மற்றும் பிற அடையாளங்கள் மூலம் அப்ரோடைட்டியைச் சிற்பங்களில் அடையாளம் காண முடிந்தது. ஆனால், அதற்குப் பிறகு, "நிர்வாணச் சித்தரிப்பே அவரது அடையாளத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது" என்று அவர் கூறுகிறார்.

நிர்வாணமான மனித உடல் என்பது இயற்கையான ஒன்று; அது தன்னளவிலேயே சர்ச்சைக்குரியதல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், பிற்காலத்தில் அப்ரோடைட்டியின் சித்தரிப்பு சர்ச்சைக்குரியதாக மாறியதற்குக் காரணம், அவர் ஆடையின்றி இருந்தது மட்டுமல்ல. பார்வையாளர்களின் பாலியல் இன்பத்துக்காக அவரது உடல் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சித்தரிக்கப்பட்டதே முக்கியக் காரணமாகும். இதன் மூலம் அவர் பாலியல் இச்சையைத் தூண்டும் ஒரு பொருளாக மாற்றப்பட்டார்.

பிராக்சிடெலஸின் அசல் சிற்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், ரோமானியச் சிற்பிகள் அதைப் பல்லாயிரக்கணக்கான முறை பிரதியெடுத்தனர். அவற்றில் புகழ்பெற்ற ஒரு படைப்புதான் 'கேபிடோலின் வீனஸ்'. வீனஸ் புடிகா பாணியின் மூலம், கலையில் பெண்களின் உடல்களைப் பார்க்கும் புதிய அணுகுமுறை உருவானது. பின்னர் அது ரோமானியப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.

அப்ரோடைட்டியின் மறுபிறப்பு

பண்டைய கிரேக்க தெய்வமான 'அப்ரோடைட்டி' சர்ச்சைக்குரிய அடையாளமாக மாறியது எப்படி?
படக்குறிப்பு, சான்ட்ரோ பொட்டிசெல்லியின் 'வீனஸின் பிறப்பு' போன்ற பல்வேறு படைப்புகளில், நூற்றாண்டுகளாக அப்ரோடைட்டி மறுபிறவி எடுத்து வந்துள்ளார்.

இருப்பினும், இந்த தாக்கம் பண்டைய உலகத்துடன் நின்றுவிடவில்லை. மறுமலர்ச்சி காலத்தில், கலைஞர்கள் முந்தைய ஆயிரமாண்டுகளை விட தீவிரமாக கிளாசிக்கல் சிற்பங்களைத் தேடிப் பிடித்து நகலெடுக்கத் தொடங்கினர்.

மிகவும் விரும்பப்பட்டவற்றில் 'வீனஸ் புடிகா' வகையும் ஒன்றாகும். இதன் விளைவாக, பிராக்சிடெலஸ் கற்பனை செய்தது போன்ற அப்ரோடைட்டின் மயக்கும் அதே சமயம் அடக்கமான நிர்வாண வடிவம் மசாசியோ, பாட்டிசெல்லி, ரபேல் மற்றும் டிட்டியன் ஆகியோரின் படைப்புகளில் மீண்டும் உயிர்த்தெழுந்தது. இவர்கள் பிற்காலத்தில் கலை வரலாற்றின் "பெரும் பெயர்களாக" மாறினர்.

சில கலைஞர்கள் இந்த தோரணையை அப்ரோடைட்டியை சித்தரிக்க மட்டுமே பயன்படுத்திய போதிலும், பல கலைஞர்கள் இதை மற்ற பெண் உருவங்களுக்கும் பயன்படுத்தினர். அடக்கமான நிர்வாணம் என்ற அதே கருத்தின் அடிப்படையில் புதிய தோரணைகளை உருவாக்கவும் இது பிற படைப்பாளர்களை ஊக்கப்படுத்தியது.

இவ்வாறு, கலைஞர்களால் 'வீனஸ் புடிகா' மீண்டும் மீண்டும் விளக்கமளிக்கப்பட்டதன் மூலம், பொருளாக்கப்பட்ட பெண் உருவம் கலை வரலாற்றின் ஒரு அழியாத அங்கமாக மாறியது.

ரூபன்ஸ் மற்றும் வெலாஸ்குவெஸ் ஆகியோர் பரோக் காலத்தில் அவரை மறுபிறவி எடுக்கச் செய்தனர். 19-ஆம் நூற்றாண்டில் கபனல் மற்றும் மானெட் ஆகியோராலும், 20-ஆம் நூற்றாண்டில் மோடிக்லியானி மற்றும் ஈவ் கிளைன் ஆகியோராலும் அவர் மீண்டும் பயன்படுத்தப்பட்டார். மார்க் ட்வைன் மற்றும் மேரி ரிச்சர்சனின் கோபம் என்பது அப்ரோடைட்டியை பாலியல் மயமாக்கும் இந்த வரலாற்றுக்கு எதிரான ஓர் எதிர்வினையாகும்.

அன்ஜா உல்ப்ரிக் பிபிசியிடம் கூறுகையில், இந்த தெய்வம் பல்வேறு வழிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பிராக்சிடெலஸின் சிற்பம் மட்டுமே அவரை வரையறுக்கும் ஒரே பிம்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்.

நார்தம்பர்லாந்தில் தயாரிக்கப்பட்டு அஷ்மோலியனில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்று, அப்ரோடைட்டி குளிப்பதாகச் சித்தரிக்கிறது. மத்திய தரைக் கடலில் இருந்து இவ்வளவு தூரத்தில், "அவர் குளிரால் சற்று தொந்தரவு அடைந்தது போலத் தோன்றுகிறார்" என்று உல்ப்ரிக் புன்னகையுடன் குறிப்பிடுகிறார்.

நவீன அப்ரோடைட்டி

பண்டைய கிரேக்க தெய்வமான 'அப்ரோடைட்டி' சர்ச்சைக்குரிய அடையாளமாக மாறியது எப்படி?
படக்குறிப்பு, 2023-இல், 'வீனஸ் புடிகா' பாணியில் கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடையை அணிந்து, ஒரு பிரமாண்டமான சிப்பிக்குள் அமர்ந்த நிலையில் பியோன்சே மேடையில் தோன்றினார்.

சமீபகாலங்களில், பிராக்சிடெலஸின் தாக்கத்தைத் தாண்டி, அப்ரோடைட்டி வேறுபட்ட முறையில் அடிக்கடி வெளிப்படுத்தப்படுகிறார். அவர் அதிகாரமளித்தலின் சின்னமாகவும் பார்க்கப்படுகிறார்.

2023-ஆம் ஆண்டில், பிரபல பாப் பாடகி பியான்சே ராட்சத சிப்பி ஒன்றின் உள்ளே மேடையில் தோன்றி, 'வீனஸ் புடிகா' பாணி கை உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட உடையை அணிந்து தனது இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

பியார்க், லேடி காகா, கைலி மினோக் மற்றும் பனானராமா போன்ற கலைஞர்களும் இந்த தெய்வத்தைப் பற்றி பாடல்களை இயற்றியுள்ளனர்.

உச்சக்கட்ட அழகு மற்றும் ஈர்ப்பின் அடையாளமாக, அப்ரோடைட்டி 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பார்வையாளர்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தகவமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளார். இது பண்டைய கிரேக்கக் கடவுள் ஒன்றுக்குக் கிடைத்த அசாதாரணமான நீண்ட ஆயுளாகும்.

மற்றொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், பிராக்சிடெலஸின் அப்ரோடைட்டி ஆஃப் நிடோஸ் என்கிற ஒரே ஒரு சிற்பம் நிர்வாணம் குறித்த நமது மனப்பான்மையை இவ்வளவு ஆழமாக வடிவமைத்துள்ளது என்பதாகும்.

மனிதர்களின் விவகாரங்கள் மீதான அவரது ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவரைச் சுற்றியுள்ள சர்ச்சையும் தணியாது. அழகு மற்றும் அதன் மீதான அணுகுமுறை என்பவை எப்போதும் தொடர்புடையவையாகவும், காலத்திற்கு ஏற்ப மாறும் பொதுமக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் விவாதப் பொருளாகவுமே தொடரும்.

"சூழலைப் பொறுத்து, மக்கள் தங்களுக்குத் தேவையான மற்றும் விரும்பும் விஷயங்களுக்கு ஏற்ப சுருக்கிக் கொள்கிறார்கள். இது மிகவும் பன்முகத்தன்மை கொண்டது," என்று உல்ப்ரிக் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு