'வீடியோக்களை வைரலாக்கி ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதிக்கிறேன்' - வீடியோ கிளிப்பிங் மூலம் சம்பாதிக்க முடியுமா?

பட மூலாதாரம், Eknoor Singh/Getty Images
- எழுதியவர், கிறிஸ் மார்ஷல்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஆண்டுக்கு 1,20,000 பவுண்டுகளுக்கும் (சுமார் ரூ.1.5 கோடி) அதிகமாகச் சம்பாதிக்கத் தனக்கு ஒரு கைப்பேசியும், நல்ல இணைய இணைப்பும் இருந்தால் போதும் என்கிறார் எக்னூர் சிங்.
லண்டனைச் சேர்ந்த 22 வயதான அவர், சமூக ஊடகங்களுக்காகக் குறுகிய, வெர்டிக்கல் காணொளிகளை உருவாக்கும் 'கிளிப்பர்' ஆக பணியாற்றுகிறார். சமூக ஊடகங்களில் வைரலாகும் என்ற எதிர்பார்ப்பில், அவரது வாடிக்கையாளர்கள் அவருக்குப் பணம் கொடுத்து இத்தகைய காணொளிகளை உருவாக்கச் செய்கின்றனர்.
"ஒரு காணொளி அதிகப் பார்வைகளைப் பெறும்போது, நான் சம்பாதிக்கும் தொகையும் அதிகரிக்கும்," என்கிறார் அவர்.
பொதுவாக, ஆடை நிறுவனங்கள், இசை நிறுவனங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அல்லது சமூக ஊடகப் பிரபலங்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்கள், முதலில் நீண்ட காணொளி ஒன்றை கிளிப்பர்களிடம் வழங்குவார்கள்.
அவர்கள் அந்தக் காணொளியைப் பார்த்த பிறகு, அதிலிருந்து சிறந்த பகுதிகளாகத் தாங்கள் கருதும் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, 30 முதல் 60 விநாடிகள் கொண்ட குறுகிய காணொளிகளாக உருவாக்குவார்கள். பின்னர் அவை இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் அல்லது பிற சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றப்படும்.
பொதுவாக 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் கிளிப்பர்கள், அந்த வயதுப் பிரிவினரைக் கவரும் உள்ளடக்கம் எது என்பதை நன்றாகப் புரிந்துகொள்வார்கள் என்பதே இதன் அடிப்படை நோக்கம். இதன் மூலம், அவர்கள் உருவாக்கும் குறுகிய காணொளிகள் முடிந்தவரை அதிகப் பார்வைகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பாதிக்க என்ன செய்கிறார்?
பல்வேறு சமூக ஊடகத் தளங்களில், ஒவ்வொரு 1,000 பார்வைகளுக்கும் அதிகபட்சமாக 3 டாலர் வரை கிளிப்பர்கள் சம்பாதிக்க முடியும். எனவே, அவர்கள் உருவாக்கும் ஒரு காணொளி வைரலாகிவிட்டால், அதன் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கலாம்.
கடந்த ஆண்டு, பாப் பாடகி துவா லிபாவின் குறுகிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 300 டாலர் சம்பாதித்தபோது, கிளிப்பிங் பணியில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக சிங் கூறுகிறார்.
"ஒரு காணொளியைப் பதிவிடுவதற்காக இவ்வளவு பணம் கிடைக்கிறதே என்று நினைத்தேன். இந்தப் பணியின் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டேன்," என்கிறார் அவர்.
தற்போது மாதத்துக்கு குறைந்தது 10,000 பவுண்டுகள் சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார்.
நகைச்சுவையாகவும், விரைவாகப் பார்த்து முடிக்கக்கூடியதாகவும், பார்வையாளர்களைக் கவரக்கூடியதாகவும் இருக்கும் காட்சிகளைத் தேர்ந்தெடுப்பதாக சிங் கூறுகிறார்.
இதற்கு உதாரணமாக, மே மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற மெட்காலா நிகழ்ச்சியில், தனது உடையின் நீண்ட பின்பகுதியை ஒருவர் மிதித்தபோது பாடகி சப்ரினா கார்பென்டர் வெளிப்படுத்திய எதிர்வினையைப் படம்பிடித்த குறுகிய காணொளியை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதை உருவாக்குவதற்காகத் தன்னை பணியமர்த்திய வாடிக்கையாளர் யார் என்பதை சிங் தெரிவிக்கவில்லை.

பட மூலாதாரம், AFP via Getty Images
'மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்'
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விசிட்டா நகரைச் சேர்ந்த 24 வயதான ஈதன் வீம்சுக்கு, வீடியோ உருவாக்கும் பிற பணிகளுடன் சேர்த்து, கிளிப்பிங் ஒரு நல்ல வருமானம் தரும் கூடுதல் வேலையாக இருக்கிறது. இதன் மூலம் மாதத்துக்கு குறைந்தது 1,000 டாலர் சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார்.
யூடியூபரும் பாட்காஸ்டருமான காலெப் ஹேமருக்காக அவர் குறுகிய வீடியோக்களை உருவாக்குகிறார். ஹேமர், தனது ஃபைனான்ஷியல் ஆடிட் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதில் பங்கேற்பவர்களின் தனிப்பட்ட நிதி நிலைமை குறித்து அவர் அலசுகிறார்.
கிளிப்பிங் மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடிவதாகவும், இதனால் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் அதிக நேரம் செலவிட முடிவதாகவும் வீம்ஸ் கூறுகிறார்.
"தினமும் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய வழக்கமான 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலையை நான் விரும்பவில்லை" என்கிறார் அவர்.
இருப்பினும், கிளிப்பிங் மூலம் சிலர் நல்ல வருமானம் ஈட்டினாலும், அப்படிச் சம்பாதிப்பவர்கள் மிகக் குறைவானவர்களே என்று சமூக ஊடக ஆலோசகர் லியா ஹேபர்மன் எச்சரிக்கிறார்.
"படைப்பாளர்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதாரத்தின் நிலை எப்படி இருக்கிறதோ, அதே நிலைதான் கிளிப்பிங் துறையிலும் உள்ளது. பெரும்பாலானோர் மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் அல்லது வருமானமே ஈட்டுவதில்லை" என்கிறார் அவர்.
இதற்கிடையே, கிளிப்பிங் மூலம் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் நேரத்தையும் உழைப்பையும் பலரும் குறைத்து மதிப்பிடுவதாக ஸ்ட்ரீமிங் துறை ஆய்வாளர் டெவின் நாஷ் கூறுகிறார்.
வெற்றிகரமான கிளிப்பர்கள், "மணிக்கணக்கில் உள்ளடக்கங்களைப் பார்க்க வேண்டும். அந்த உலகத்திலேயே அவர்கள் மூழ்கியிருக்க வேண்டும்" என்று அவர் எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், Ethan Weems
கிளிப்பிங் வேலைகளைச் செய்ய விரும்புபவர்களையும், அந்தப் பணிக்காக ஆட்களைத் தேடும் நிறுவனங்களையும் இணைக்கப் பல இடைத்தரகர் இணையதளங்கள் உள்ளன. இவற்றில் கிடைக்கும் வீடியோ வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்படுகின்றன.
ரெடிட் , டிஸ்கார்ட் போன்ற பொதுவான இணையதளங்களில் உள்ள பக்கங்கள் முதல், கிளிப்பிங் கல்ச்சர் , வைரோ, வூப் , கிக் போன்ற கிளிப்பிங் பணிகளுக்கான பிரத்யேக இணையதளங்கள் வரை இவை பல வகைகளில் உள்ளன.
இந்த இணையதளங்கள், கிளிப்பிங் பணிகளைச் செய்ய ஆட்களைத் தேடும் நிறுவனங்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன. கிளிப்பிங் கல்ச்சர் இணையதளத்தில் கேபிடல் ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் குரூப் , எச்பிஓ மேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இத்தகைய நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்கள் படுக்கையறையில் இருந்தபடியே வேலை செய்யும் பதின்ம வயதினரையோ, 20 வயதுகளில் இருப்பவர்களையோ பணியமர்த்துவது, சமூக ஊடகங்களில் வழக்கமான விளம்பரங்களை வெளியிடுவதைக் காட்டிலும் மிகவும் குறைவான செலவாகும். அதேநேரத்தில், அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் இது உதவக்கூடும்.
அமெரிக்காவை சேர்ந்த மாடுலர் வீடுகளைத் தயாரிக்கும் நிறுவனமான பாக்ஸபிள் இதற்கு ஓர் உதாரணம். "இதுவரை நாங்கள் உருவாக்கிய கிளிப் வீடியோக்கள் சுமார் 100 கோடி பார்வைகளைப் பெற்றிருக்கும் என்று நினைக்கிறேன்" என்கிறார் அந்த நிறுவனத்தின் நிறுவனர் கலியானோ திராமணி. நிறுவனத்தின் பல வீடியோக்களில் அவரும் இடம்பெற்றுள்ளார்.
பிரிட்டன் பிரதமரின் முன்னாள் ஆலோசகரும், தற்போது' ஜிம்மிஸ் ஜாப்ஸ் ஆஃப் தி ஃபியூச்சர்' என்ற பாட்காஸ்ட்டின் தொகுப்பாளருமான ஜிம்மி மெக்லாக்லினும் கிளிப் வீடியோக்களை பயன்படுத்தி வருகிறார்.
"முக்கிய நிகழ்ச்சிகளுக்கான முன்னோட்டங்களைப் போலவே இந்தக் கிளிப் வீடியோக்கள் செயல்படுகின்றன" என்கிறார் அவர்.
உதாரணமாக, பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுடன் அண்மையில் அவர் நடத்திய பாட்காஸ்ட் நீண்ட நேரம் பார்க்கப்படும் முழு வீடியோவாக ஏறத்தாழ 50,000 பார்வைகளைப் பெற்றது. ஆனால், அதிலிருந்து உருவாக்கப்பட்ட குறுகிய கிளிப் வீடியோக்கள் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Eknoor Singh
கிளிப்பிங் கல்ச்சர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான இவான் ஸ்டான்ஃபீல்டுக்கு வயது வெறும் 21தான். கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
உலகம் முழுவதும் உள்ள 3.4 லட்சத்துக்கும் அதிகமான கிளிப்பர்களைத் தங்கள் இணையதளம் மூலம் நிறுவனங்களுடன் இணைப்பதாக ஸ்டான்ஃபீல்ட் கூறுகிறார்.
குறுகிய வீடியோக்கள் பிரபலமாவதற்கு அவர் கூறும் காரணம் எளிமையானது. "மக்களின் கவனத்தை ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் செலுத்தும் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது" என்கிறார் அவர்.
மேலும், குறுகிய வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் இளைஞர்கள்தான் என்பதால், கிளிப்பிங் என்பது இளைஞர்களுக்கு ஏற்ற வேலை என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையே, லண்டனில் இருக்கும் ஏக்னூர் சிங், தான் எங்கிருந்தாலும் கிட்டத்தட்ட இடைவிடாமல் கிளிப்பிங் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்.
"நான் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். விடுமுறைக்குச் சென்றாலும் பணம் சம்பாதிக்க முடியும்" என்கிறார் அவர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































