வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் புவியரசு காலமானார்: 2 சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றவர்!

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோவையைச் சேர்ந்த மூத்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான புவியரசு, தனது 96வது வயதில் இன்று காலமானார். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள், நாடகங்கள், நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள புவியரசு, திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கமலுடன் தொடர்ந்து நட்புடன் இருந்த புவியரசு, அவருக்காக மருதநாயகம் படத்திற்கு 2 ஸ்கிரிப்ட்கள் எழுதியிருந்தார்.

தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசைப் பெற்றுள்ள புவியரசு, கேரள பண்பாட்டு மையத்தின் சாகித்ய புரஸ்கார் விருது, கலைஞர் பொற்கிழி விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இரு முறை சாகித்ய அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் படைப்பாளிகள் பலருக்கும் அவர் ஞானத்தந்தையாக இருந்தார் என்று கூறுகிறார் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான அவை நாயகன்.

தமிழகத்தின் மூத்த கவிஞர் புவியரசு, இன்று காலை கோவையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 96. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகேயுள்ள லிங்கவநாயக்கன் புதூர்தான் புவியரசுவின் சொந்தஊர். அவருடைய உண்மையான பெயர் ஜெகநாதன். சமஸ்கிருத வார்த்தை என்பதால் அதைத் தமிழாக்கம் செய்து புவியரசு என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதை, அவர் பல முறை பல மேடைகளில் பகிர்ந்துள்ளார். இதையே அண்ணா நூற்றாண்டு நூலக ஆவணமும் தெரிவிக்கிறது.

வானம்பாடி இயக்கம்...வசந்தத்தில் இடிமுழக்கம்...விலையிலா கவிமடல்!

சிறுவயதிலேயே இவருடைய குடும்பம், கோவைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் பேரூர் தமிழ்க்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் படித்து தமிழ் வித்வான் பட்டம் பெற்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 1950 களிலிருந்து இவர், தமிழில் கவிதை நூல்களை வெளியிடத்துவங்கி, தற்போது வரை 100க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.

ஷேக்ஸ்பியர், கலீல் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளை கவிஞர் புவியரசு தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஓஷோவால் பாராட்டப்பட்ட ''தி புக் ஆஃப் மிர்தாத்–மிகய்ல் நய்மா'' என்ற நூல் ''மிர்தாத்தின் புத்தகம்'' என்று தமிழில் இவரால் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நவீன நாடகம் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ள புவியரசு, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலிருந்தும் ஏராளமான நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இவருடைய பல்வேறு கவிதை நூல்கள், ஆங்கிலம், ரஷ்ய, ஹங்கேரி, சிங்களம் ஆகிய மொழிகளிலும், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டில் ''புரட்சிக்காரன்'' என்ற கவிதை நூலுக்காக, சிறந்த மொழிபெயர்ப்புக்கு ஒரு முறையும், 2009 ஆம் ஆண்டில் 'கையொப்பம்' என்ற தமிழ் கவிதை நூலுக்காக ஒரு முறையுமாக 2 சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றுள்ளார். கேரள பண்பாட்டு மையத்தின் சாகித்ய புரஸ்கார் விருது, கலைஞர் பொற்கிழி விருது, தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு ஆகியவையும் இவருக்குக் கிடைத்த வேறு சில அங்கீகாரங்களாகும்.

இவருடைய பேரன் புவி.அரவிந்தன், தமிழ்த்திரையுலகில் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அவருடைய இயக்கத்தில் ''எங்கே எனது கவிதை?'' என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. வேறு சில படங்களிலும் அவர் இணைந்து பணி செய்துள்ளார்.

''வசந்தத்தில் இடிமுழக்கம் என்று வர்ணிக்கப்பட்ட வானம்பாடி கவிதை இயக்கத்தை உருவாக்கிய முன்னோடி புவியரசு. அதிலிருந்துதான் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், தமிழன்பன், மு.மேத்தா ஆகியோர் உருவாகினர். அப்துல் ரகுமான், பிரபஞ்சன் என பல்வேறு எழுத்தாளுமைகளும் வானம்பாடி இதழில் எழுதியுள்ளனர். வானம்பாடிக்கு விலையிலா கவிமடல் என்று அவர் கொடுத்த சப் டைட்டில் எல்லோரையும் ஈர்த்து அதில் எழுத வைத்தது. நாடகத்துக்காகவும் காற்று என்ற தனி இதழை அவர் நடத்தினார்.'' என்றார் கவிஞர் அவை நாயகன்.

காடுறை உலகம், சூரியச்செதில்கள் உள்ளிட்ட பல்வேறு கவிதை நூல்களை எழுதியுள்ள அவை நாயகன், ஆன்டன் செகாவ், திரையில் மலர்ந்த சிறுகதைகள் உள்ளிட்ட பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவை நாயகன், ''நவீன நாடக நிறுவனர்களில் புவியரசு மிகமிக முக்கியமானவர். அவருடைய வாசிப்பு அசாத்தியமானது. அதேபோன்று அவருடைய மொழிபெயர்ப்பின் தரமும், சுவையும் பிரமிக்கத்தக்கது. கரமசோவ் சகோதரர்கள் (தஸ்தயேவ்ஸ்கி) அதில் உன்னதம் என்று சொல்லலாம். பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பிரியமுடன் பிரபு என்ற படத்தின் எல்லாப்பாடல்களையும் அவர்தான் எழுதினார். படைப்புகளைக் கடந்து ம.பொ.சிவஞானத்தின் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர். மொழிவாரி மாநிலம் பிரித்தபோது, தமிழகத்துக்காகப் போராடியவர்.'' என்றார்.

''நான் அவருடன் நீண்டகாலமாக நெருங்கிய நட்பில் இருப்பவன் என்பதால், அவருடைய உலக சினிமா, கவிதை பற்றிய அறிவைப் பற்றி நன்கு அறிவேன். வெஸ்டர்ன் கிளாசிக் மூவியைப் பற்றி அதிகம் அறிந்தவர். அதனால்தான் கமல் இவருடன் மிக நெருக்கமான நட்பில் இருந்தார். மருதநாயகம் படத்துக்காக அவர் 2 ஸ்கிரிப்ட்களை கமலுக்கு எழுதிக்கொடுத்தார். ஒன்று தமிழ் ரசிகர்களுக்காகவும் மற்றொன்று உலக சினிமாவுக்கான மேக்கிங் ஆகவும் எழுதிக்கொடுத்தார். எங்களைப் போன்ற படைப்பாளிகள் பலருக்கும் அவர்தான் ஞானத்தந்தை. அவருடைய மறைவு தமிழுக்கான பேரிழப்பு.'' என்றார் கவிஞர் அவை நாயகன்.

கமலின் மருதநாயகத்துக்காக 2 ஸ்கிரிப்ட்கள் எழுதிய புவியரசு!

கவிதை, நவீன நாடகம், நாவல், சினிமா, மேடைச்சொற்பொழிவு என பல்வேறு தளங்களில் பணியாற்றி வந்தாலும் இடையிடையே அவர் புதிய கவிதைத்தொகுப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதைப்பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா ''பல துறைகளையும் தொட்டுவிட்டு, இடையில் ஒரு அழகான கவிதைத் தொகுப்பை வெளியிடுவது புவியரசுக்கு மட்டுமே சாத்தியம்.'' என்று எழுதியுள்ளார்.

நவீன நாடகங்களின் வழியாக பசுமைச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கவிஞர் புவியரசு என்று கூறுகிறார் கவிஞரும், சூழலியல் சொற்பொழிவாளருமான ஓசை காளிதாசன்.

''கவிதை, நாடகம், திரைப்படம், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஆகச்சிறந்த ஆளுமையாக இருந்தவர் கவிஞர் புவியரசு. ஒரு கவிதையை எப்படி வாசிப்பது என்பதற்கான யுக்தியை நாங்கள் கற்றுக்கொண்டதே அவருடைய கவியரங்க மேடைகளிலிருந்துதான். நவீன நாடகங்களை எங்களுக்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். அந்த நாடகங்கள் வாயிலாக பசுமைச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அவர்தான் எங்களுக்கு சொல்லித்தந்தார்.'' என்றார் காளிதாசன்.

மேலும் தொடர்ந்த அவர், ''சில படைப்பாளிகள் களத்தில் இறங்கிப் போராடுவதற்கு யோசிப்பார்கள். ஆனால் அவர் தமிழ் மண்ணை, மொழியைக் காக்க தீவிரமாகப் போராடிய படைப்பாளி. எங்களின் கவியரங்கங்களுக்கு தலைமை தாங்குவார். நாடகங்களைத் துவக்கி உரை நிகழ்த்துவார். பசுமைப் பணிகளுக்கு பெரும் ஆதரவு கொடுப்பார். இப்படியாக இடைவிடாது இயங்கியவர் அவர். அவரைச் சந்தித்தபோதெல்லாம் உலக இலக்கியம் சார்ந்த அரிய தகவல்களைப் பெற்றுத் திரும்பியிருக்கிறோம்.'' என்றார்.

மரபு, புதுக்கவிதை இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர் கவிஞர் புவியரசு என்று கூறுகிறார், கோவை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம். தற்போது 96 வயதில் இறந்துள்ள புவியரசு , சமீபத்திய ஆண்டுகள் வரையிலும் மேடையேறுவது, புத்தகம் வெளியிடுவது, வாசிப்பது என எதற்குமே யாருடைய உதவியையும் நாடாமல் சுயமாக இயங்கி வந்ததாகக் கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய வேலாயுதம், ''அவரிடம் இலக்கியமும், சினிமாவும் கற்றுக்கொண்ட பலர், இன்றைக்கு இலக்கிய உலகத்திலும் திரைத்துறையிலும் வளர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவருடைய வீட்டில் எப்போதுமே விருந்தாளிகள் இருப்பார்கள்.'' என்றார்.

''அவருடைய கவிதைகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் அவரின் மிர்தாத்தின் புத்தகம், அமோகமான வரவேற்பைப் பெற்று மிகச்சிறப்பான விற்பனையிலும் இருக்கிறது. அதேபோன்று அவருடைய கரமசோவ் சகோதரர்கள் புத்தகமும் இன்று வரை பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இந்தியா–பாகிஸ்தான் போரின்போது, வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் படித்த ஒருவர், பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தியபோது, ''இந்திரா எழுதிய முதல் கவிதை.'' என்று புவியரசு எழுதிய கவிதை பிரசித்தம்.'' என்றார் வேலாயுதம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு