சிஜேபி முக்கிய தலைவர்கள் மூவரும் அடுத்த ஓராண்டுக்கு போராட்டங்களில் ஈடுபட முடியாதா? பிணைப் பத்திரத்தால் எழும் கேள்வி

சிஜேபி முக்கிய தலைவர்கள் மூவரும் அடுத்த ஓராண்டுக்கு போராட்டங்களில் ஈடுபட முடியாதா? பிணைப் பத்திரத்தால் எழும் கேள்வி
    • எழுதியவர், அர்ஷத் மிஸால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஞாயிற்றுக்கிழமை, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ராங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை டெல்லி காவல்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தியது. சில நிபந்தனைகளுடன் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் எந்தவொரு பிணைப் பத்திரத்திலும் தாம் கையெழுத்திடவில்லை என்று அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மூவரும் சனிக்கிழமை காலை விமானம் மூலம் டெல்லி வந்தனர். விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்பே அவர்கள் காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டனர்.

டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அபிஜித் தீப்கே , அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 126 மற்றும் 170-ன் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் எடுக்கப்பட்டனர். அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, அக்டோபர் 11 அன்று டெல்லி கேன்ட் பகுதியில் உள்ள எஸ்.இ.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்" என்று தெரிவித்தது.

"அமைதியைப் பேணுவதையும் நல்ல நடத்தையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஒரு ஆண்டுக் காலத்திற்கு செல்லுபடியாகும் ரூ.50,000 மதிப்புள்ள உத்தரவாதப் பிணைப்பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது" என்றும் காவல்துறை கூறியது.

சனிக்கிழமை டெல்லியில் போராட்டக்காரர்களைக் காவலில் எடுக்கும் போலீஸார்.
படக்குறிப்பு, சனிக்கிழமை டெல்லியில் போராட்டக்காரர்களைக் காவலில் எடுக்கும் போலீஸார்.

நடவடிக்கை எடுக்கப்பட்ட பிரிவுகள் 126 மற்றும் 170 ஆகியவை என்ன?

ஞாயிற்றுக்கிழமை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஆஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ்.
படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஆஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ்

மூன்று சிஜேபி தலைவர்கள் மீது, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 126 மற்றும் 170-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைதியைப் பேணுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிணைத்தொகை தொடர்பான 126ஆவது பிரிவின்கீழ், அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடும் அல்லது பொதுஒழுங்கைப் பாதிக்கக்கூடும் என்று கருதப்படும் ஒருவரிடம் விளக்கம் கேட்க நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது. அமைதியைப் பேணுவதற்கான உறுதிமொழியுடன் பிணைப் பத்திரம் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிடலாம்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நிபுண் சக்சேனாவின் கூற்றுப்படி, குறிப்பிட்ட காலத்துக்கு சம்பந்தப்பட்ட நபர் அமைதியைப் பேணுவதற்கான நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிணைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அவர் மீறினால், சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறையின்படி பிணைத்தொகை பறிமுதல் செய்யப்படலாம்.

சிஜேபி தலைவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்டுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அமைதியைப் பேணுவதாக உறுதியளிக்கும் பிணைப் பத்திரத்தை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.

"126 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றம் ஒன்றைச் செய்யக்கூடும் என்பதை போலீஸார் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு, அந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக அவர்களைக் தற்காலிகமாகக் காவலில் எடுக்க அனுமதி கோர வேண்டும்" என்று அவர் கூறினார்.

எனினும், இத்தகைய காவல் 24 மணி நேரத்துக்கு மேல் நீடிக்க முடியாது. எனவே, அபிஜித் தீப்கே , சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, 24 மணி நேரத்துக்குள் விடுவிக்கப்பட்டனர்.

மற்ற போராட்டக்காரர்கள் மீது எந்த சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது?

டெல்லியில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற போராட்டத்தின்போது ஐசா தலைவர் நேஹா போரா காவலில் எடுக்கப்பட்டார்.
படக்குறிப்பு, டெல்லியில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற போராட்டத்தின்போது ஐசா தலைவர் நேஹா போரா காவலில் எடுக்கப்பட்டார்.

அக்டோபர் 10ஆம் தேதி போலீஸாரால் காவலில் எடுக்கப்பட்ட மற்ற போராட்டக்காரர்கள் சில மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு முன்பு எந்தவிதமான பிணைப் பத்திரமும் பெறப்படவில்லை.

நிபுண் சக்சேனா கூறுகையில், "இத்தகைய வழக்குகளில் 172ஆவது பிரிவின்கீழ் காவலில் எடுக்கப்படுகின்றனர். 172ஆவது பிரிவின் உட்பிரிவு (2)ன்படி, போலீஸார் அல்லது நிர்வாகம் வழங்கும் சட்டப்பூர்வமான உத்தரவை ஒருவர் பின்பற்ற மறுத்தால், அவரைக் காவலில் எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது" என்றார்.

"காவலில் எடுத்த பிறகு, சம்பந்தப்பட்ட நபரை அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு விடுவிக்கவும் போலீஸாரால் முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய வழக்குகளில் பிணைப் பத்திரம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், இது எளிய தடுப்புக் காவல் என்றும் அவர் விளக்கினார்.

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஐசா தலைவர் நேஹா போரா உள்ளிட்ட பல போராட்டக்காரர்கள் இதே சட்டப் பிரிவின்கீழ் காவலில் எடுக்கப்பட்டனர்.

பிணைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகும் சிஜேபி தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியுமா?

ஆஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ்

நிபுண் சக்சேனாவின் கூற்றுப்படி, இந்தத் தலைவர்கள் இதற்கு முன்பு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபட்டதில்லை.

"எதையாவது உடைக்க வேண்டும், சேதப்படுத்த வேண்டும் என்று அவர்கள் இதற்கு முன்பு அழைப்பு விடுத்ததில்லை. தங்களது அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பயன்படுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றுதான் அவர்கள் மக்களிடம் கூறி வந்தனர்" என்று அவர் தெரிவித்தார்.

"முதலில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையே சட்டரீதியாக நியாயமானதாகத் தெரியவில்லை என்பது எனது கருத்து. இதை நீதிமன்றத்தில் எதிர்த்துச் சட்டப் போராட்டம் நடத்தலாம்" என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, அபிஜித் தீப்கே தலைமையிலான சிஜேபி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியிருந்தது. இதையடுத்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டியிருந்தது.

அபிஜித் தீப்கே , ஆஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் மற்ற குடிமக்களைப் போலவே எந்தவொரு பேரணியிலும் அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம் என்று நிபுண் சக்சேனா தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்ட பிறகு, சௌரவ் தாஸும் ஆஷுதோஷ் ரங்காவும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே அதில் பங்கேற்கவில்லை. அவரது பாட்டி உயிரிழந்ததால், அவர் தனது பூர்வீகக் கிராமத்துக்குத் திரும்பியிருந்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, தங்களைக் காவலில் எடுத்தது குறித்தும் சிஜேபி தலைவர்கள் பேசினர்.

பிரதமர் நரேந்திர மோதியைக் குறிவைத்துப் பேசிய ஆஷுதோஷ் ரங்கா, "இந்திய வரலாற்றிலேயே இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோதிதான் மிகவும் கோழைத்தனமானவர்" என்று கூறினார்.

"நீரவ் மோதி, விஜய் மல்லையா ஆகியோரை விமானத்தில் ஏற்றி நாட்டை விட்டு வெளியே அனுப்பிய அரசாங்கம் இது. ஆனால், எங்களை விமானத்துக்குள் இருந்தபோதே வெளியேற்றிக் காவலில் எடுத்துள்ளனர்" என சௌரவ் தாஸ் குற்றம்சாட்டுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு